Friday, January 7, 2022

மீன் பிடி படலம்

 மீன் பிடிப் படலம்

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. நகரில் செய்வதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கையில் அங்கே ஓடும் போடொமாக் நதியின் மீன் பிடிக்கச் சென்றவன் நான் ஒருத்தனாகத்தான் இருப்பேன். ஒரு சனிக்கிழமை என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் உள்ளிட்ட பல மியூசியம்களையும் பார்த்துவிட்டேன். நியுயார்க், பென்சில்வேனியா நகரங்களுக்கு அதற்கு முந்தைய வார இறுதிகளில்தான் போய் வந்திருந்தேன். நான் தங்கியிருந்த கதீட்ரல் அவென்யூவில் மாலையில் பண்டிட் ரவிஷங்கரின் சிதார் கச்சேரியை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. எனக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. கச்சேரி கதீட்ரலில். நான் தங்கியிருந்த bed and breakfast விடுதிக்கும் கதீட்ரலுக்கும் நடுவில் அமெரிக்கன் ஃபோக்லைஃப் செண்ட்டரின் இயக்குனர் ஆலென் ஜபோரின் வீடு இருந்ததுஆலென் காலையில் ஃபோன் பண்ணி என்ன செய்கிறாய் பக்கத்தில் மிருகக்காட்சி சாலையில் பாண்டாக்கள் வந்திருக்கின்றன போய் பார்த்துவிட்டு வரவேண்டியதுதானே என்றார். அருகாமையில் இருந்த அந்த தேசிய மிருகக்காட்சி சாலையை நான் பலமுறை ஏற்கனவே பார்த்துவிட்டேன். எந்த ஊருக்குப் போனாலும்அந்த ஊரில் ஓடும் நதியைப் போய் பார்த்துவிடுவது எனக்கு வழக்கம். போடொமாக் நதியை இந்த முறை  வந்ததிலிருந்து பார்க்கவில்லை அதைப்போய் பார்க்கலாமென்றிருக்கிறேன் என்றேன். ஆலென் அப்படியென்றால் பொடொமாக்கில் மீன் பிடிக்கப் போகலாமா என்று கேட்டார்


அரை நிக்கரும் கேன்வாஸ் ஷூவும் அணிந்து நான், ஆலென், அவரது என் வயது ஒத்த மகன் மூவரும் கிளம்பினோம். ஆலென் எனக்கு ஒரு கௌபாய் தொப்பியும் தூண்டிலும் கொடுத்தார்அமெரிக்க தூண்டில்கள் கோல்ஃப் விளையாட்டில் பயன்படுத்தப்படும் உலோகமட்டைகள் போல உறுதியாக இருக்கும். கைப்பிடி அருகே உள்ள சக்கரத்தில் தூண்டிலை வீசுவதற்கான உறுதியான நைலான் கயிறு சுற்றியிருக்கும். அந்த தூண்டிலை எப்படிப்பன்படுத்துவது என்று ஆலெனும் அவர மகனும் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். மீன் பிடித்தல் என்பது ஒரு விளையாட்டு, மனதுக்கு சோர்வு நீக்கி உற்சாகம் அளிக்கக்கூடியது, பிடித்த மீனை திரும்ப ஆற்றில் வீட்டு விட வேண்டும்; ஆலெனின் மகன் சின்ன வயதிலிருந்து பிடித்த மீன்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆலெனின் வீட்டு வரவேற்பறையில் இருந்தன


பொதுவாக இந்திய நதிகளில் அவை சுழித்து ஓடும் விதம், தண்ணீரின் நிறம் போன்றவற்றை வைத்து சில குணாதிசயங்களை உடனடியாக உணரலாம். போடொமாக் நதிய குணாதிசியங்களற்று பெரிதாக அகலமாக ஆழமாக இருந்தது. வாஷிங்டன் நகர எல்லையில் ஓடும் பொடொமாக்கை பாலத்தில் கடந்தால் பாலத்தின் எதிர்க்கரை ஆர்லிங்டன், அங்கே இருக்கும் மேரியட் ஹோட்டலில் நான் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். நானும் ஹிந்துஸ்தானிப் பாடகர் சத்யஷீல் பாண்டேயும் ஒரே கருத்தரங்குக்கு வந்திருந்தபோது அங்கே தங்கியிருந்தோம். ஆர்லிங்டன் மேரியட் ஹோட்டலிலிருந்து பாலத்தின் வழி நடந்து போய் நானும் சத்யஷீலும் வாஷிங்டனின் ஜார்ஜ் டவுணில் விஸ்கி வாங்கியது , சத்யஷீல் குடித்துக்கொண்டே பாலத்தில் பாடியது, நடனமாடியது என முன்பு நடந்தவற்றை நான் சொல்ல ஆலென் அவருக்கு பாலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார்


போடொமாக் கரையில் நானும் ஆலெனும் எங்கள் தூண்டில்களை வீசிவிட்டு அமர்ந்திருக்கையில் ஆலெனின் மகன் நடந்து கொண்டே தூண்டிலை வீசிக்கொண்டிருந்தார்.


ஆலென் மீன்பிடிப்பது என்பது கவிதா தருணத்துக்கான உருவகம் என்று சொன்னார். காத்திருத்தல், எதிர்பார்ப்பு, அதிர்ஷ்டம், காலத்தின் கருணை, காலத்தின் இரக்கமின்மை, போராட்டம், ஏமாற்றம், வெற்றி என மீன் பிடிப்பில்தான் எத்தனை நுண்ணோக்குகள் அடங்கியிருக்கின்றன என வியந்தோம். ஆலென் அமெரிக்க இலக்கியத்தில் மீன் பிடிப்பு ஹெர்மன் மெல்வில்லின்மோபி டிக்என்ற செவ்வியல் நாவல் அமெரிக்கா என்ற நாட்டின் உருவாக்கத்தின் உருவகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். (  தமிழினி மின்னிதழில் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் மோபி டிக் பற்றி எழுதியிருக்கும் , ‘நீர் மேல் ஆடிய வேட்டை நாடகம்ஹெர்மன் மெல்வில்லின் மோபி டிக் என்ற அருமையான கட்டுரை பிரசுரமாயிருக்கிறது).


தமிழிலக்கியத்தில் மீன் பிடித்தலைப் பற்றி பேச்சு வந்தபோது எனக்கு உடனடியாக சா.கந்தசாமியின்தக்கையின் மேல் நான்கு கண்கள்சிறுகதையைச் சொன்னேன். பாதசாரியின்மீனுக்குள் கடல்என்ற கவிதை மீன் பிடிப்பதைப் பற்றி இல்லையென்றாலும் அந்த உருவகம் இந்திய தத்துவ சிந்தனையின் ஒரு பெரும் பிரிவின் சாராம்சத்தை உடனடியாக நமக்குச் சொல்லிவிடுகிறது என்று எடுத்துச் சொன்னேன். ஆத்மாநாமின் ஒரு சிறிய கவிதை மீன் பிடிப்பை வைத்து existential cruelty, dilemma எல்லாவற்றையும் சொல்லிவிடுவதைப் பற்றி பேசினோம். ஆத்மாநாமின் கவிதை:


"முத்தைப் பறிகொடுத்துக் கதறும்

சிப்பியின் ஓலம்

கடற்கரையில்

தூண்டில் மீன்களுக்கு

உண்டு ஒரு கூடை

என்றும் நிரந்தரம்


ஆலெனின் மகனுக்கு ஒரு மீன் சிக்கிவிட்டது. அவர் அதோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு தூண்டில் முள்ளை நீக்கி மீண்டும் அதை ஆற்றில் தூக்கிப் போட்டார். ஆலென் பார்த்தாயா கந்தசாமியின் கதை இப்போதும் நடப்பதை, நம்மை விட வயதில் இளையவனான என் மகனுக்குத்தான் மீன் மாட்டுகிறது என்று கூறி சிரித்தார்.


ஆலெனும் நானும் இந்தியாவில் பயணங்கள் மேற்கொண்டபோது நான் என் தினசரி அனுபவங்களை ஹைக்கூ கவிதைகளாக டைரி எழுதுவதை ஆலென் கவனித்திருந்தார். நான் ஹைக்கூ அந்த ஹைக்கூ கவிதைகளை பிரசுரம் செய்வதில்லை; அவற்றை நினைவுக்குறிப்புகளாகவோ அல்லது பிற நீண்ட படைப்புகளை எழுதுவதற்கானத் தீப்பொறிகளாகவோதான் பயன்படுத்துகிறேன் என்றும் அவருக்குத் தெரியும்


இப்பொது ஒரு ஹைக்கூ சொல்லேன் என்று ஆலென் தூண்டினார்நான் போடொமாக் பாலத்தில் நடந்த சத்யஷீல் சம்பவத்தை நினைத்து,


பிரிக்கும் நதி

இணைக்கும் பாலம்

பாலத்தில் குடிகாரக் கலைஞனின் இசை


என்பத்தைச் சொல்லி இது,


"அமைதியான களம்

பறக்கும் பட்டாம்பூச்சி

தூங்கும் பட்டாம்பூச்சி


என்ற புகழ் பெற்ற ஹைக்கூவை போலி செய்வது என்றும் சொன்னேன்.

ஆலென் இன்னொன்று என்று தூண்டினார்.


மாலை  வாஷிங்டன் கதீட்ரலில் நடக்கவிருக்கும் பண்டிட் ரவிஷங்கரின் கச்சேரி எனக்கு நினைவுக்கு வந்தது.


பழைய தேவாலயம்

பகல் வெளிச்சத்தில் இசைக் கச்சேரி

இரவின் இருட்டில் ஓநாயின் ஊளை


என்று நான் சொன்னவுடன் ஆலெனுக்கு சிரிப்பு தாளமுடியவில்லை, “ Where the hell the wolfes came from?”  என்று மேலும் சிரித்தார். நம் கதீட்ரல் அவென்யூவுக்கு எதிர்ப்பக்கத்திலுள்ள நேஷனல் மிருகக்காட்சிசாலையிலிருந்துதான் என்று நாங்கள் மேலும் சிரித்தோம்


ஆலென் நான் சொன்ன ஹைக்கூக்கள் இரண்டுமே இரண்டு எதிரிணைகளைச் சொல்லி அவற்றை சமன்படுத்துவதை கவிதையாக்குபவை இது ஐசன்ஸ்டையினின் சினிமா மொழியின் அடிப்படை அலகான  montage  போல ஆனால் இவை மிகச் சிறப்பான கவிதைகளை உருவாக்காது என்றார். எனக்கு அவர் அபிப்பிராயாத்தோடு உடன்ப்படில்லை என்றாலும் நான் ஒன்றும் சொல்லவில்லை


கொஞ்ச நேரம் கழித்து ரஷ்ய சினிமாப்பட இயக்குனர் தார்க்கொவ்ஸ்கி தன்னுடைய சினிமா மொழியின் அடிப்படையை விளக்க எடுத்துக்காட்டும் இரு ஹைக்கூக்களைச் சொன்னேன். அவை:


"அலைக்குள் நீண்டிருக்கும் தூண்டில்

மெலிதாக தீட்டப்பட்டிருக்கிறது

முழு நிலவின் ஒளியால்


"பனித்துளிகள் விழுகின்றன

முள் நுனிகளை நோக்கி

சில அந்தரத்தில்


ஆலென் இப்படி நிகழ்வுகளைக் காட்சிப்படிமங்களாக்கும் கவிதைகள் மிகவும் நுட்பமானவை உயர்வானவை என்றார். எனக்கு க்லாப்ரியாவின் எண்ணற்ற காட்சிப்படிமக் கவிதைகள் நினைவுக்கு வந்தன.


அப்போது என் தூண்டிலில் ஒரு மீன் சிக்கிவிட்டது. பழக்கமின்மையால் எனக்கு தூண்டிலின் சக்கரத்தை விரைவாகச் சுற்றத்தெரியவில்லை. ஆலென் என் தூண்டிலை வாங்கி சக்கரத்தைச் சுற்ற சிக்கிய மீன் மேலே துடித்தபடி வந்தது. மெரிய மீன். மூன்று மூன்றரைக் கிலோ எடை இருக்கும். நான் பதற்றமாக அந்த மீனைப் பிடித்து தூண்டில் முள்ளை வாயிலிருந்து எடுக்க முற்பட்டேன். நான் ஒரு மீனை கையால் தொடுவது அதே முதல் தடவை. மீனின் சொரசொரப்பும் அதன் வழவழப்பும் என்னுள் வித்திர உணர்வை ஏற்படுத்தின. மீன் துடித்துக்கொண்டே இருந்தது முள் ஏற்படுத்திய காயத்தை அதிகமாக்கியது. ஒரு வழியாக முள்ளை நீக்கி ஆற்றில் தூக்கி மீனை எறிந்தபோது அது ஆற்றில் ஒரு முறை துள்ளி மீண்டும் நீந்தியதைப் பார்த்தபோது மனம் அமைதியானதுமீனின் முள்ளை எடுக்க நான் முயற்சித்தபோது அதன் இமைகளற்ற கண் என்னை ஆத்திரக் கனலோடு உற்றுப்பார்த்ததாக நான் நினைத்துக்கொண்டேன்.


அறைக்குத் திரும்பிய பிறகு இந்தக் கவிதையை எழுதினேன்:


ஒரு கண் பார்ப்பதை மறு கண் பார்ப்பதில்லை மீன்களுக்கு


முகத்தோடு முகம் பார்த்து நிற்பதில்லை அவை

மற்றதன் முகம் நோக்கி நீந்துவதுமில்லை

முத்தத்தின் நிர்ப்பந்தமுமில்லை 

முற்றிய பகையில் முகம் திருப்புவதுமில்லை


ஒன்றன் வால் பிடித்து மற்றொன்று

ஒன்றன் முதுகில் மற்றொன்று 

கூட்டம் கூட்டமாய் 

ஒரே திசையில் துடுப்பசைத்துச் செல்கின்றன


ஒரு நொடி

ஒரு துடுப்பு

கனவெனவே 

விரிகிறது

கடலாழம்


(‘நீர் அளைதல்தொகுதியிலிருந்து)

No comments: