Friday, January 7, 2022

அடிஸ் அபாபாவில் நான்மீண்டும் கற்றுக்கொண்ட பிரார்த்தனை

 அடிஸ் அபாபாவில் நான்மீண்டும் கற்றுக்கொண்ட பிரார்த்தனை

—-
எத்தியோப்பியாவின் ஏழ்மையை நேரடியாகப் பார்த்தவர்கள் யாரும் மனம் கலங்காமல் இருக்க முடியாது. நான் தங்கியிருந்ததென்னவோ நட்சத்திர விடுதிதான் என்றாலும் அதைச் சுற்றிலும் ஏழைக்குடியிருப்புகள். பெரும் செல்வமும் கடும் வறுமையும் அடுத்தடுத்து இருக்கும். இந்தியாவிலும் நாம் ஏழ்மையைப் பார்த்திருக்கிறோம் என்றாலும் எத்தியோப்பியாவின் வறுமை இன்னும் நூறு மடங்கு அதிகமானது. இன்றைய எத்தியோப்பியாவின் பெரும்பகுதி ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்கத்துக்குள் வராதது. இத்தாலிய காலனி ஆதிக்கத்துள் வந்த பகுதியில் இத்தாலிய கட்டிடக் கலையில் அமைந்த பெரிய கட்டிடங்களைக் காணலாம். அடிஸ் அபாபா நகரம் தாண்டி கிராமங்களுக்குச் சென்றாலோ இன்னும் வறுமை தாளமுடியாதாய் இருக்கும். எத்தியோப்பியவிற்கும் அதன் அண்டை நாடான எரித்ரேயாவுக்கும் இடையில் அவ்வபோது நடக்கும் போர் வேறு எத்தியோப்பிய பொருளாதாரத்தை வெகுவாக சீரழித்திருக்கிறது.
எத்தியோப்பியாவில் 80 விதமான இனக்குழுக்கள் இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலோர் செமிடிக் குடும்பத்தைச் சேர்ந்த அம்ஹாரிக் என்ற மொழியைப் பேசுகிறார்கள். எத்தியோப்பிய கிறித்தவர்கள் அனைவரும் ஏசு கிறிஸ்துவானவர் ஒரு கறுப்பர் என்றும் அவருடைய தாய்மொழி அம்ஹாரிக் என்றும் நம்புகிறார்கள். இப்போது வரலாற்றாசிரியர்களும் ஏசுவானவர் அம்ஹாரிக்தான் பேசியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அடிஸ் அபாபாவின் நான் பார்த்த கிறித்துவ தேவாலாயங்கள் பழமைவாத கிறித்துவப்பிரிவைச் (Orthodox church) சார்ந்தவை; இந்தப் பிரிவு இப்போது எத்தியோபியாவைத் தவிர ரஷ்யாவிலும் (தாஸ்தோவ்ஸ்கி இந்தக் கிறித்தவப் பிரிவின் நம்பிக்கைகளின்படியே வளர்க்கப்பட்டார்) இலங்கையிலும் மட்டுமே இருப்பதாக அறிந்தேன். சுற்றுலாவாக அடிஸைச் சற்றி இருந்த பல தேவாலயங்களையும் சென்று பார்த்தேன்.
அடிஸ் அபாபாவின் தேவாலயங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று தாரை தாரையாய் கண்ணீர் வழிய பிரார்த்தனை செய்வதைப் பார்த்தபோது திகிலாகவும் பின் பெரும் மனக்கலக்கத்தை உண்டாக்குகிறதாகவும் இருந்தது. அப்படி கூட்டம் கூட்டமாய் அழுது அவர்கள் பிரார்த்தனை செய்தபோது ஒருவர் திடீரென அம்ஹாரிக் மொழியில் ஏதோ கூவினார் உடனே அங்கிருந்த அத்தனை பேரும் வெடித்துக் கதறி அழுதார்கள். நான் என் மாணவ உதவியாளரிடம் அவர் என்ன கூவினார் என்று கேட்டேன். சிலுவைப்பாதையில் ஏசுவானவர் கூறிய வாசகங்களையே, “ தந்தையே தந்தையே நீவிர் ஏன் என்னைக் கைவிட்டீர்” ( ஏலி ஏலி லாமா சபச்தானி) என்பதையே அவர் அம்ஹாரிக் மொழியில் கூவினார் என்று என் உதவியாளர் சொன்னார். மீண்டும் ஒரு முறை கூவல் பின்னர் கதறி அழுதல் எனப் பிரார்த்தனை தொடர்ந்த போது என் நெஞ்சும் விம்மி வெடித்துவிடும் போல இருந்தது. உடம்பெல்லாம் படபடத்தது. அரை மணி நேரத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் விடுதிக்குத் திரும்பி வந்துவிட்டேன்.
விடுதிக்குத் திரும்பியபின்பும் கூட என் படபடப்பு அடங்கவில்லை; தூக்கமும் வரவில்லை. எதையாவது படிக்கவோ எழுதவோ முயற்சி செய்து பார்த்து தோற்று உட்கார்ந்திருந்தேன். யாரோ ஒரு மனிதன் ரத்தக்களறியாய் அடித்து இழுத்துச் செல்லப்படுவது போன்ற துர்க்கனவுகள் வர அலறி விழித்தேன் .மறு நாள் கடும் காய்ச்சல் வந்துவிட்டது. நல்லவேளையாக அன்று பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை. அறையிலேயே அடைந்து கிடந்தேன். நான் அன்று முழு நாத்திகனாய் மாறியிருந்தேன்.
அடுத்த மூன்று நான்கு நாட்கள் விட்டேத்தியாக பல்கலைக்குச் செல்வதும் பாடம் நடத்துவதுமாய் எந்திரத்தனமாய் செய்து கொண்டிருந்தேன். சீக்கிரம் ஊர் திரும்பிவிட்டால் கொள்ளாம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
பல்கலையின் நிலைமையும் பரிதாபமாய் இருந்தது. நூலகம் என்ற பெயரில் யாரோ கொடுத்த நிதியில் கட்டிய பெரிய கட்டிடம் இருந்தது ஆனால் அதில் மருந்துக்குக்கூட ஒரு புத்தகம் இல்லை. பேராசிரியர் அசிஸ் ஃபெக்கெடெ போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பல துறைகளையும் நிர்வகிக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். என்னுடைய பணி ஒன்றரை மாதத்திற்குத்தான் அதற்குள்ளாகவே ஒரு செமஸ்டர் பாடங்களை முடிக்க வேண்டும். என் பணி ஆய்வு மாணவர்களோடு மட்டும்தான். ஃபெக்கெடெ சிரமப்படுவதைப் பார்த்து இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும் நானே கேட்டு வாங்கி வகுப்புகள் எடுத்தேன்.
மீண்டும் நான் என் சமநிலையை அடைய ஒரு வாரம் ஆனது. லத்தீன் அமெரிக்க கிறித்துவ விடுதலையிலாளரான எர்னெஸ்டோ கார்டினல் வேதாகமத்தின் அறிவிப்பை (proclamation of the gospel) பற்றி எழுதும்போது ஏசுவை மனிதராகவும் சிலுவைப்பாதையில் கைவிடப்பட்டவராகவும் பார்ப்பவர்கள் மரபான மதப் பார்வைகளை மறுத்து நாத்திகத்தையே விவிலியம் முன்வைப்பதாக வாசிப்பார்கள் என்று எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. அவரே According to some liberation theologians atheism is not the cause of the conflict between Christianity and Marxism, but is rather the link between them. என்று எழுதிருப்பதும் ஞாபகத்துக்கு வந்தது.
ஆனால் இவை எதுவுமே எனக்கு சாந்தியளிக்கவில்லை. ரவீந்தர நாத் தாகூரின் கீதாஞ்சலியை வாசித்தது என்னை அமைதிப்படுத்தியது.
அந்த அனுபவத்துக்குப் பிறகு ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் என்னுடைய பிரார்த்தனை ரவீந்திர நாத் தாகூரின் கீதாஞ்சலியில் வரும் இந்த வரியாக இருக்கிறது:
“Give me the strength never to disown the poor or bend my knees before the insolent might”
என்னுடைய ‘அனாதையின் காலம்’ நீள்கவிதையில் பின்வரும் கவிதையை எழுதினேன்:
சுவரிலிருந்து உதிரும் காறை போல
நான் சிதிலமடைந்துகொண்டிருக்கிறேன்
அதன் முனகல்களை வாஞ்சையோடு கேட்பீரா
ஒரு சில மிருக ஒலிகளை மட்டுமே
நான் எழுப்ப இயலும்
ஆம் அவ்வளவுதான் தெய்வத்தின் குமாரரே
விழி நரம்பை நாராய் உரித்து
நான் செய்த படிமங்கள் என்னிடத்தில் வற்றிவிட்டன
என் சொல் முந்திய கேவல்
உம் இதயத்தின் செவிகளை தீண்டும்தானே
நீவிர் வியாபித்திருக்கும் பெரு வெளியில்
நான் கூட்டும் ஓசைகளின் பிரார்த்தனை
பித்தன்றி வேறென்ன
தந்தையீர் நீர் அறிவீர்
என் சிதிலம் என்றுமே பிறர் பொருட்டு
என் பிறை என்றுமே முழு மதி

No comments: