Friday, April 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-2

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-2

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

—-

இயற்றியவர்: பதுமனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 6

திணை: நெய்தல் 

——

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவி ந்

தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று

நனந்தலை யுலகமுந் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

இடையிரவு செறிந்த இருளை உடையதாக இராநின்றது; மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர். அகன்ற இடத்தையுடைய உலகிலுள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றி துயிலால் நிற்கும்.  யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனானேன். 

—-

வாசிப்பு

——

நள்ளிரவின் மௌனம் (தலைவியின்) பேசுகுரலின் செயல்திறனை (agency) களைந்துவிடுதல்

——

கவிதையின் ஆரம்ப வரி, ‘நள்ளென் றன்றே யாமஞ்’ காலத்தை, நேரத்தை, நள்ளிரவை ஒரு அருவமான கருத்து என்பதாக இல்லாமல் அதை ஒரு நீள்கின்ற, நிலைகொள்கிற, ஒடுக்குகின்ற மௌனம் நிறைந்த, பௌதீகமாக உணரத்தக்க ஒன்றாக முன்வைக்கிறது. மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயிலும் அந்த நள்ளிரவில் தான் மட்டுமே பேசுவதாய் இருக்கும், அதனால் ஒரு செயல்த்திறனைப் (agency)  பெறுவதைப் போலத் தோற்றமளித்து, அந்தக் கணமே மௌனத்தின் ஒடுக்குதலில் தன் சக்தியை இழந்ததாக மாறிவிடுகிறது. அனைவருக்கும் தூக்கத்தினால் அருளப்பட்ட மௌனத்தின் இனிய வரம் தனித்த பேசுகுரலுக்கு இல்லாமல் தலைவி உளப்பாதுகாப்பற்று, பலவீனமாய் இருக்கிறாள்.  நள்ளிரவின் மௌனம் (தலைவியின்) பேசுகுரலின் செயல்திறனை, தனித்திருப்பதை சொன்ன வேகத்திலேயே (agency) அதைக் களைந்துவிடுகிறது.

——


தனிமையின் பதற்றம் சட்டகமிடப்படவில்லை

—-

எதனால் தலைவியின் பேசுகுரல் பதற்றத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்பதற்கான விபரங்கள் கவிதையினுள் இல்லை. மணம் செய்துகொள்வதற்கு இடையே பொருளீட்டுதற்காகப் பிரிந்த தலைவனைப் பற்றிய எண்ணத்தினால் ஏற்பட்ட பதற்றம் என தொல்காப்பியம் களவொழுக்கத்திற்கு  நச்சினார்க்கினியர் எழுதிய உரையைச் சுட்டும் உ.வே.சா. பொருள் விளக்கத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அதைச் சொல்வதற்கான வரிகள் கவிதையில் இல்லை. ஆனால் தலைவியின் பேசுகுரலின் தனிமையின் பதற்றம் பிரதியில் இல்லாத வேறொரு சட்டகத்தினால் (an absent frame) வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. அந்த சட்டகம் என்னவென்று தெரியாது எனப் பிரதியை மட்டுமே நம்பி அணுக்க வாசிப்பில் ஈடுபடும் என்னைப் போன்றோருக்கு கவிதை ஒரு உயிரியின் தனிமையை, தனித்திருப்பதன் பொங்குநிலையை, தூக்கமின்மையை அதன் ஏக்கத்தை, பரிதவிப்பை, ஒரு ஆறுதலுக்கான சக மனித வருடலை எதிர்பார்ப்பதை குரலுயர்த்தாமல் சொல்லிவிடுகிறது.

——

சொல்லாமல் விடுவதன் ஆழம்

——

பிற உரையாசிரியர்களின் துணைகொண்டு உ.வே.சா இந்தக் கவிதையின் தலைவி தன் தோழியை நோக்கி இக்கவிதையைப் பேசுகிறாள் எனக் கூறுகிறார். ஆனால் கவிதைப் பிரதியில் அதற்கான சான்றுகள் இல்லை; அப்படிப்பட்ட விளக்கமானது மரபான பொருள்கொள்ளும் முறைகளிலிருந்து வருவதாக இருக்கவேண்டும். ஏற்கனவே தலைவியின் நிலைமை என்ன என்று தெரிந்த தோழியிடம் ( அவளும் மற்றவர்களைப் போலவே இனிமையாகத் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்) அவள் பேசுவதாக எடுத்துக்கொண்டால் இந்தக் கவிதையின் பொருண்மை சுருங்கிவிடுகிறது. பிரதிக்கு உண்மையாக, யாரோடு இந்தக் கவிதையின் தலைவி பேசுகிறாள் என்பதை நிர்ணயிக்காமல் இருக்கும்போது, வெளியுலக அமைதிக்கு எதிராக அவளது உள்ளார்ந்த புயல், அவளது பதற்றம், தணியுமா இன்னும் விரக்திக்கும் தனிமைக்கும்  இட்டுச்செல்லுமா எனத் தெரியாமல் அர்த்த வெளியை திறந்து வைக்கிறது. சொல்லாமல் விடுதலின் அந்த ஆழம் இந்தக் கவிதையின் தனிமையும் ஏக்கமும் பதற்றமுமான உணர்வு நிலைக்கு நம்மை அணுக்கமாக்குகிறது.

—-

No comments: