Saturday, April 27, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-16

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-16

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பேரெயில் முறுவலார்

குறுந்தொகையில் பாடல் எண்; 17

திணை:  குறிஞ்சி

————-

மாவென மடலுமூர்ப பூவெனக்

குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப

மறுகி னார்க்கவும் படுப

பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே.

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காம நோயானது முதிர்வுற்றால் பனை மடலையும் குதிரையெனக்கொண்டு ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அருமப் உடைய எருக்கம் பூமாலையையும் அடையாள மாலை போல தலையில் அணிந்துகொள்வர். வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவரிக்கவும்படுவர்; தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயலையுடையவரும் ஆவர்.

———

வாசிப்பு

——-

காதல் நோயும் மடலேறுதலின் காட்சியும்

————

தான் மடலேற எண்ணியுள்ளதாகத் தலைவன் தோழியிடம் சொல்வதாக அமைந்துள்ள இக்கவிதை காதல் நோய் முற்றிய நிலையில் அது என்ன மாதிரியான கேலிக்குரிய நடத்தையை ஆண்மகனின் மேல் சுமத்தும் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. காதலன் தலைவியால் நிராகரிக்கப்பட்டவனாக  இருக்கும்பட்சத்தில் மடலேறுதல் தலைவியின் மனதை உருக்க, அல்லது சமூக அழுத்தத்தைக் காதலனின் பொருட்டு, காதலியின் மேல் உண்டாக்குதல் மடலேறுதலின் சமூகச்செயற்பாடாக இருந்திருக்க வேண்டும். பனைமடலால் குதிரையைப் போல ஒருருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையிலேந்தி அதன் மேல் ஊர்ந்துவருதல் மடலேறுதலாகும். இக்கவிதையில் தலைவன் மடலேறவில்லை; தன் காமம் முற்றியிருப்பதால் மடலேறிட இருப்பதாகச் சொல்கிறான். பனை மடலில் ஏறுதல், எருக்கம்பூ அணிதல் ஆகியவற்றை விவரித்து தன்னைத்தானே வெட்கமுறும் நடத்தைக்கு உட்படுத்திக்கொள்வதைக் காமம் காழ்கொளின் மடலும் ஊர்வேன், கண்ணியுஞ் சூடுவேன், ஆர்க்கவும் படுப்பேன், பிறவும் செய்வேன் என மடலேறுதலைக் காட்சிப்படுத்துகிறான்.  இதைத் தோழியிடம் தலைவன் கூறுவதை ஒரு அச்சுறுத்தலாக வாசிக்கலாம். இன்னொரு வகையில் காதல் என்பதையே ஒரு சமூக நியதிகளுக்கு எதிரான காட்சிப்படுத்துதலாக இக்கவிதை பொதுமைப்படுத்துவதாகவும் வாசிக்கலாம்.

——

எருக்கங் கண்ணியுஞ் சூடுதல்

——-

எருக்கங் கண்ணியும் சூடுவேன் என்பதிலுள்ள உம்மை விகுதி எருக்கம்பூ சாதாரணமாக அணியத்தக்கதல்ல என்பதைச் சொல்கிறது; அதையும் அணிவேன் என்றது அந்த அளவுக்குக் கீழிறங்கிச் செல்லத் தலைவன் தயாராக இருப்பதைச் சொல்வதாக அமைகிறது. உ.வே.சா., மடலேறும் தலைவன் நீறு, எருக்கமாலை, ஆவிரம்பூமாலை முதலிவற்றை அணிந்து வருதல் வழக்கமெனவும், மடலேற்றைக் குறித்த வேறு பலச் செய்திகளை திவ்யபிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல், சிறிய திருமடலென்பவற்றின் வியாக்கியானங்களால் உணரலாம் எனத் தெரிவிக்கிறார். காமம் முற்றும்போது சமூக நியதிகள் மீறப்படுவதற்கு மடலேறுதலைப் போலவே எருக்கம்பூ அணிதலும் குறியீடாகிறது. 

——-

காதல் எனும் சமூக மீறல் (Love as transgression)

————

குறுந்தொகைக் காதற்பாடல்களில் காதல் என்பதே சமூக மீறல் என்ற கருத்து அடியோட்டமாக இருப்பதை அவதானிக்கலாம். இந்தக் கவிதையிலும் அது அறுதியிடப்படுகிறது.  தலைவன் காமம் முற்றி அவனைப் பீடிப்பதால் அவன் எதற்கும், எந்த அவமானத்தை ஏற்கவும் தயராக இருப்பதை வெளிப்படையாகச் சொல்கிறான். இழிபு சிறப்பாகிறது. 

———————-

வலுவற்றமென்நிலையின் ஆளுமைத் திறம் (The Power of Vulnerability)

————

கேலிக்கும் அவமானத்துக்கும் உட்படத் தயாராக இருக்கும் தலைவனின் வலுவற்றமென்நிலை (vulnerability) காதலின் புனிதத்தின் வழி அவனுக்கு ஆளுமைத் திறத்தை அளிப்பதை இந்தக் கவிதையில் நாம் பார்க்கிறோம். எந்தவொரு வலுவற்றமென்நிலையும் ஆளுமைத் திறத்தினை நல்காது; அதற்கு ஒரு அற அடிப்படை இருக்கவேண்டும். அந்த அற அடிப்படை காதலின் வழி முற்றிய காமமாகத தலைவனை வந்தடைகிறது. இதைத் தமிழன்ணல் வைரம் பாய்ந்து முற்றுதல் எனவும்,  பொ. வே. சோமசுந்தரனார் நனி முதிர்ந்தல் எனவும், இரா. இராகவையங்கார்  முற்றிய பரலாகிய விதையைத் தம் முட்கொள்ளின் எனவும் உரை எழுதுகின்றனர். 


No comments: