கல்லூரி காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் ஜெர்ரி பாலாவின் பரதேசி படத்தில் கங்காணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் முதல் நாளே படத்தைப் பார்க்கப் போனேன். பரதேசி படமாகிக்கொண்டிருந்த மாதங்களில் ஜெர்ரியை சந்திக்கும்போதெல்லாம் காதில் கடுக்கன்களுடன், வழுக்கைத் தலையுடன், பாதி நரைத்த நீண்ட தாடியுடன் இருந்தார். படம் வெளிவந்தவுடன் பார்த்து ‘ஜெர்ரி இந்தக் காட்சியில் மேற்சொன்ன ஜோடனையில் சோபித்தார்’ என்று ஒரு வரியாவது எழுதிவிடவேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முக்கியமான பிம்பக்கோர்வையாய் இருந்தபடியால் படம் பார்க்கச் சென்றது நல்ல முடிவாகவே அமைந்தது.
அடிமைத்தனத்தின் உள்கட்டுமானங்களான உழைப்பு சுரண்டல், அதிகார படியமைப்பு, மருத்துவம், மாந்தரீகம், மதம், ஆண்மனம், பணத்தாசை ஆகியவற்றின் உறவுகளை காட்சிப்படிமங்களாக்குவதிலும் கதைக்காகக் கோர்வைப்படுத்துவதிலும் பாலாவின் பரதேசி பெரும் வெற்றியடைந்திருக்கிறது. இது குறைத்து மதிப்பிடக்கூடிய சாதனை அல்ல; இந்தப் படம் வணிகரீதியாக வெற்றியை சந்திக்குமானால் தமிழ் சினிமாவினையே புரட்டிப் போட்டுவிடக்கூடிய வல்லமை கொண்டதாகவும் மாறிவிடும். நான் இப்படி எழுதுவதினால் இந்தப் படம் குறைகளற்ற படம் என்று அர்த்தமில்லை. உண்மையில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான குறைகள் இந்தப் படத்தில் உள்ளன. குறைகளை முதலில் தொகுத்துவிடுவது நான் சொல்ல வருவதை சரியான கோணத்தில் பார்ப்பதற்கு உதவும்.
பரதேசி படத்திற்கு மூலக் கதை பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’ என்ற ஆங்கில நாவல் இது தமிழில் இரா.முருகவேளினால் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுல்ளது. 1969இல் வெளிவந்த பி.ஹெச் டேனியலின் நாவல் முல்க் ராஜ் ஆனந்தின் “Two Leaves and a bud” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவலுக்கு இணையானதாக கருதப்படுகிறது. டேனியலின் நாவல் அதிகம் விவாதிக்கப்படவில்லையென்றாலும் முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் உருவாக்கிய விவாதங்களையொட்டி டேனியலின் நாவலும் ஓரளவுக்கு கவனம் பெற்றது. முல்க்ராஜ் ஆனந்தின் நாவல் முதலாளித்துவ பொருளாதாரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவற்றினால் விளையும் கொடுமைகளை சாடுகின்ற அதே வேளையில் இந்திய சாதி அமைப்பினையும் அது தருகின்ற உலகப்பார்வையினையும் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனந்தின் கதாநாயகத்தனமையற்ற கதாநாயகனான கங்கு இறந்தவளை அடக்கம் செய்யக்கூட பணம் புரட்ட முடியாமல் கூலித்தொழிலாளி பிடிப்பவனிடம் அடைக்கலமாக நேரும்போது அது அவனுடைய முன் ஜென்ம வினைப்பயன் என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வதிலுள்ள உலகப்பார்வையினையும் ஆனந்தின் நாவல் விமர்சிக்கிறது. டேனியலின் நாவலிலும் கயத்தாறில் காணப்படும் இரட்டைக் குவளைகள், சாதிய அடக்குமுறையினால் கூலி கொடுக்கப்படாமை ஆகியன விவரிக்கப்படுகின்றன. டேனியல் நாவலின் கதாநாயகர்களான கருப்பனும் வள்ளியும் தலித்துகள். ஏன் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி சிறுகதையிலும் இலங்கைக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளிகளாக செல்கிற மருதியும் அவள் தாயாரும் தலித்துகள்தானே? புதுமைப்பித்தன் கதையில் அவர்களால் பண்ணையாரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலுவதில்லை; சாலைகளுக்கு கப்பி போடும் வேலையும் முடிந்து விடுகிறது. அவர்கள் அவ்வாறு வேறு வழியேயில்லாமல் சலித்து சோர்ந்திருப்பதை விவரிக்கையில் புதுமைப்பித்தன் எழுதுகிறார் “தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைசேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே! “ முல்க் ராஜ் ஆனந்த், டேனியல், புதுமைப்பித்தன் என தேயிலைத் தோட்டக் கூலிகளாக உள்நாட்டிலோ வெளி நாட்டிற்கோ புலம் பெயர்த்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தலித்துகள் என்பதினை வெளிப்படையாகச் சொல்லும்போது பாலாவின் படம் பரதேசி ஏன் இந்த உண்மையினை பூடகமாகவேனும் சுட்டுவதில்லை? மனிதாபிமானமற்ற வன்கொடுமைகள் காலனீயத்தினால் மட்டும் நடக்கவில்லை அவை நம் நாட்டின் உள்ளார்ந்த வன்முறையான சாதி அமைப்பினாலும் நடந்தேறின.
முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் வெளிவந்தபோது 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ‘ஸ்பக்டேட்டர்’ இதழில் ஆனந்தின் நாவல் சித்தரிக்கின்றபடிக்கு ஒன்றும் அசாம் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை இல்லை என்று கோல்ட்வின் என்ற தேயிலைத் தோட்ட முதலாளி எழுதினார். அவருக்கு செப்டம்பர் 3, 1937 இதழில் பதிலெழுதிய ஆனந்த் தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் வைட்லி ராயல் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கையே ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பாலியல், பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்துவதாகக் குறிப்பிடுவதை எடுத்துக்கூறினார். தானே நேரில் சென்று இலங்கை, அசாம் தேயிலைத் தோட்ட நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததாகவும் பதிலளித்தார். ஒரு நாவல் ஏற்படுத்திய தாக்கம் என்பது இங்கிலாந்தில் அப்படிப்பட்டதாக இருந்தது. மேலும் ஐரோப்பிய அளவிலும் நாவல்களைத் தொடர்ந்து சட்ட மாற்றங்களைக் கொண்டு வருவது, குடிமை சமூகத்தினை வலுப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது என்பது மரபுகளாகவே உருவாகியிருக்கின்றன. சுரங்கத் தொழிலாளிகளைப் பற்றிய எமிலி ஜோலாவின் நாவல் சுரங்கத் தொழில் குறித்த சட்டங்கள் சீரமைக்கப்படுவதற்கு வழிகாட்டியது, சார்ல்ஸ் டிக்கன்சின் நாவல்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய சட்டங்கள் இயற்றப்படக் காரணங்களாக அமைந்தன.
டேனியலின் நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் நரக வாழ்க்கையினை நேர்மையாகப் பதிவு செய்திருப்பது டிக்கன்சுக்கோ, ஜோலாவுக்கோ, ஆனந்துக்கோ எந்த விதத்திலும் குறைவுபட்டதல்ல; ஆனால் அது 1969 இல் சுதந்திர இந்தியாவில் வெளிவந்தபோது நம் குடிமை சமூகத்தில் எந்த விவாதத்தையும் உருவாக்கவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை மையமாக வைத்து நாவல் எழுத வேண்டிய அளவுக்கு டேனியலுக்கு ஏற்பட்ட அக்கறை அவர் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டராகவும் கிறித்தவராகவும் இருப்பதானால் ஏற்பட்டது. டேனியலின் நாவலினால் ‘இன்ஸ்பையர்’ ஆகி எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசியிலோ விஷக்காய்ச்சலினால் கொத்து கொத்தாக மக்கள் மடியும்போது பார்வையிட வருகின்ற டாக்டரோ கொள்ளை நோயினை தொழிலாளிகளை கிறித்துவத்திற்கு மதமாற்ற சந்தர்ப்பமாக பார்ப்பதாகக் காட்டப்படுகிறார். அவரும் அவருடைய வெள்ளைக்கார மனைவியும் ஜீஸஸ் குத்துப்பாட்டு ஆடி ரொட்டிகளை வீசியெறிய தொழிலாளிகள் அவற்றைப் பொறுக்கி எடுத்துக்கொள்கிறார்கள். மூலக்கதையை நாவலாக எழுதிய கிறித்தவ டாக்டரான டேனியலோ மருத்துவப்பணி செய்தது மட்டுமல்லாமல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உருவாகி அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். டேனியலின் நாவலால் உந்தப்பட்டு எடுக்கப்பட்டதாகக் கூறும் படம் இப்படியொரு துரோகத்தினை அந்த நாவலாசிரியருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இழைத்திருக்க வேண்டாம்.
பரதேசி படக் கதையில் இன்னொரு பெரிய ஓட்டை 48 நாட்களுக்கும் மேலாக கூலித்தொழிலாளிகளாக கங்காணியால் பிடிக்கப்பட்டவர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு நடந்து செல்வதாக காண்பிப்பது. தென் தமிழகத்திலிருக்கும் சாலூரிலிருந்து நடந்து தமிழகத்திற்குள்ளாக இருக்கிற எந்த மலையகத் தேயிலைத் தோட்டத்திற்கும் நடந்து செல்ல 48 நாட்களுக்கு மேலா பிடிக்கும்? என்ன கதை இது? 1939 என்பது என்ன கற்காலமா என்ன? வழியில் கோவில் குளங்கள். கிராமங்கள் எதுவுமே இல்லையா என்ன? இந்தியா முழுவதும் நடைபயணமாய் தீர்த்த யாத்திரை காலங்காலமாய் யாருமே சென்றதில்லையா? பரதேசி படத்தின் நம்பகத்தன்மையினை வெகுவாக பாதிப்பது இது. போதாக்குறைக்கு 48 நாட்களுக்கு மேலாக நடந்து சோர்ந்து தாடியெல்லாம் அடர்ந்துவிடுகிறவர்களுக்கு அதற்கேற்றாற் போல அப்ளாக்கட்டை கிராப்பில் தலையில் முடி வளர்வதில்லை. என்ன மாயமோ?
கொடி அடுப்பொன்றில் ஒட்டில் புட்டு அவித்தாற்போல நாஞ்சில் நாடனின் சிறுகதை ‘இடலாக்குடி ராசாவை’ படத்தின் முதல் பாதியில் செருகியிருக்கிறார்கள். அதனால்தான் கதை பாலாவுடையது ஆகிவிட்டது போலும். முதல் பாதியில் வேதிகாவின் படு செயற்கையான நடிப்பும் Tomboyish கதாபாத்திர சித்தரிப்பும் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துகின்றன. வேதிகாவுக்கும் தன்ஷிகாவுக்கும் கருப்பு மையைத்தான் பூசிவிட்டார்களே கூடவே தலையில் அரைப்படி வேப்பெண்ணெயையும் தலையில் தேய்த்திருக்கவேண்டுமே என்று யாரும் சொல்லவில்லை போலும். ஷாம்பூவின் பளபளப்பில் தலை முடி வேதிகாவுக்கும் தன்ஷிகாவுக்கும் மட்டும் மின்னுகிறது.
இசைக்கருவிகளும் இசைகளும் நிலப்பகுதிகளை ஆழ் அகத்தில் உணர்வலை அடையாளங்களாய் எழுப்பும் தன்மைகள் உடையன என்பதினைப் பற்றி பரதேசி படத்தின் இசையமைப்பாளர் பிராகாஷுக்கு கிஞ்சித்தும் தெரிந்திருக்கவில்லை. எல்லா நாடகீயமான காட்சிகளுக்கும் சஜாங் சாஜாங் என்று மேற்கத்திய சிம்ஃபொனி போலவோ இசை நாடகம் போலவோ மேலெழும்பும் வயலின் இசை காட்சிகளை நராசப்படுத்துகிறது; அந்நியப்படுத்துகிறது. தேவரீர் காட்சிகளுக்கு ஏற்ற இயற்கையான சப்தங்களையே விட்டுவைத்திருக்கலாமே என்று கெஞ்சத் தோன்றுகிறது. பாடல்கள் எந்த பாதிப்பையும் நம்மிடம் ஏற்படுத்துவதில்லை. கேட்டால் கேளுங்கள் மறந்தால் மறந்துவிடுங்கள் ரகம்.
மேற்சொன்ன அத்தனை குறைகளையும் தாண்டி நடிப்பினால், காட்சிப்படிமங்களால், கதைகோர்வைப்படுத்துதால், வசனத்தால் பாலாவின் பரதேசி அபூர்வமான படமாகியிருக்கிறது.
நடிப்பில் அதர்வா கதாபாத்திரத்தின் பாட்டியாக நடித்திருக்கும் மூதாட்டி என் மனதினைக் கவர்ந்தார். வேதிகா (அங்கம்மா) அம்மாவிடம் ஊர்ப்பஞ்சாயத்தில் கைச்சண்டையில் இறங்குவதிலிருந்து, சத்தியம் பண்ணச்சொன்ன எரியும் சூடத்தை அலட்சியமாக அணைத்துவிட்டு போவதாகட்டும் படத்தின் பிற்பகுதியில் அங்கம்மா கர்ப்பமாக இருக்கிறாள் என்பது அறிந்து அவள் அம்மா அவளை தலை முழுகி திட்டும்போது அங்கம்மாவை கையைப்பிடித்து தன் குடிசைக்கு அழைத்து வருவதாகட்டும் மூதாட்டி அசத்துகிறார். முழுப்படத்திலேயுமே வலுவான பார்வையும் தீர்மானமான செயல் ஊக்கமும் கொண்ட கதாபாத்திரமாக அந்த மூதாட்டியே இருக்கிறாள். அவளுக்கு தன் பேரன் இப்படி பொறுப்பில்லாமல் ஒட்டுப்பொறுக்கி என்று பெயரெடுத்து அப்பிராணியாக திரிகிறானே என்ற கவலையும் நியாயமாகவே இருக்கிறது. அங்கம்மாவுக்கு பிள்ளைப்பேறு பார்த்து திருமணத்திற்கு முன்பே பிறந்த அந்த சிசுவை தொப்புள்கொடி ரத்தத்தோடு கையில் ஏந்தி பெரிய சாதனை போல கொண்டாடும் அந்த மூதாட்டி நம் மரபின் வளமான மதிப்பீடுகளின் குறியீடு.
பேரன் ஓட்டுப்பொறுக்கி பலவீனங்களின் மொத்த உருவம். முட்டாளல்ல ஆனால் அப்பாவி யாசிப்பதற்கும் உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவதற்கும் வித்தியாசம் தெரியாதவனாய் இருக்கிறான். தன் இலைக்கு பந்தியில் யாரும் கவனிக்காமல் போகிறார்கள் என்றாலும் அழுகிறான் அடிபடும்போதும் அழுகிறான். தன்ஷிகா கதாபாத்திரத்தின் குழந்தையோடு விளையாடி விளையாடி உறவினை வளர்த்துக்கொள்ளும்போதும் தன் நண்பனின் மனைவி வெள்ளைக்காரனின் பாலியல் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி வருகையில் அவளை மௌனமாக ஒதுக்கி உதாசீனப்படுத்துவதிலும் அதர்வா பலவீனமான ஆணொருவனின் நல்ல கெட்ட பக்கங்களை நன்றாக வெளிப்படுத்துகிறார். அவர் பாட்டிக்கு இருக்கக்கூடிய செயலூக்கம் இவருக்கு இல்லாமல் இருப்பதே அவருடைய அடிமைத்தனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது பல சமயங்களில் சித்திரமாகிறது.
கங்காணி கதாபாத்திரத்திற்கு வேண்டிய குரூரம் ஜெர்ரியிடம் இல்லை என்று கங்காணி அதர்வாவை அடிக்கும் காட்சியை வைத்து நான் நினைத்தேன்; ஏனெனில் அந்தக் காட்சியில் அடி வாங்குபவனை விட அடிப்பவனின் வேதனை அதிகமாக இருப்பது போல ஜெர்ரியின் முகபாவம் இருக்கிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்தின் குரூரம் கங்காணி வெளிப்படுத்தும் அலட்சியத்திலும் அக்கறையின்மையிலும் மனிதாபிமானமற்ற சுயநலத்திலும் இருக்கிறது அடிப்பது அடி வாங்குவதில் இல்லை என்பது பின்னர் தெளிவாகியது. கால் நடைப் பயணத்தின் போது குற்றுயிரும் குலையுருமாய் விழுந்துவிட்டவனை சுமை கூலி முக்கா பணமா என்று அலட்சியமாக உதறிவிட்டு வருமாறு உத்தரவிடும்போது, தப்பி ஓட முயன்ற அதர்வாவைப் பிடித்து இழுத்து வந்து கங்காணி வீட்டின் முன் நிறுத்தும்போது ஏன்டா என்னைத் தொந்திரவு செய்கிறீர்கள் என்பது போல நிற்கும்போது என்று ஜெர்ரி அலட்சியத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து inheritance ஆக நம் அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் நாம் பெற்றது இந்த அலட்சியத்தோடு கூடிய சுய நலத்தையே. ஜெர்ரி கோவணாண்டியாக எண்ணெய் தேய்த்து குளிக்கிற காட்சியில் நடிப்பில் சோபிக்கிறார்.
தன்ஷிகாவின் நடிப்பும் அபாரம். வேதிகாவைப் போல மிகை நடிப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயமில்லையாதலால் நுட்பமான பாவனைகள் கைகூடி வருகின்றன. அதர்வா தன் குழந்தையுடன் விளையாடுவது, கால் கழுவி விடுவது என்பதயெல்லாம் பார்க்கும்போது தன்ஷிகாவின் முகத்தில் தெரியும் அபாரமான மலர்ச்சிகள் மின்னல்கள் போல திரையின் சட்டகத்தையே பிரகாசமாக்குகின்றன. அதர்வாவுக்கும் அங்கம்மாவுக்கும் திருமணமாகாமலே குழந்தை பிறந்திருப்பதை அறியவரும்போது அதர்வா அதை அங்கம்மாதான் என்று நியாயப்படுத்த முயல பெண்ணைக் குற்றம் சொல்லாதே என தன்ஷிகா சீறுவதும் கச்சிதமாக இருக்கிறது.
சிறு பாத்திரங்களில் நடித்திருக்கும் விக்கிரமாதித்யன் நம்பி முதல் கூட்டங்களில் வரும் குழந்தைகள் வரை பிசிறில்லாமல் நடித்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் வசனம் பிரமாதமாக இருக்கிறது. இயல்பான பேச்சு மொழி இவ்வளவு வலுவாக வேறெந்த தமிழ் படத்திலும் வெளிப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
செழியனின் கேமரா வழியாக பிடிக்கப்பட்டுள்ள பதினைந்து காட்சிப் படிமங்களையேனும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். இந்தப் படிமங்களின் நகர்வில்தான் பாலாவின் பரதேசி திரைப்படம் நம் ஆழ்மனத்தோடு அந்தரங்கமாகப் பேசும் படமாக மாறிவிடுகிறது.
- கச்சம்மாள் தன் பேரன் அதர்வா வாய் பிளந்து தூங்குவதை உயரத்தில் உட்கார்ந்து பார்த்திருப்பது
- அதர்வா கிராமக் கோவிலில் தலையை ஒரு புறமாய் சாய்த்து கைகளை இல்லையே என்பது போல வைத்துக்கொண்டு கண் மூடி நின்று பிரார்த்திக்கும் காட்சி
- கயிற்றுக்கட்டிலில் சம்மணம் போட்டு உட்கார்ந்து சம்மணக்காலோடு பின் சரிந்து கையில் கள் கலயத்தோடு விக்கிரமாதித்யன் உனக்கு எத்தனை பெரியம்மா தெரியுமா என்று சிரிப்பது
- சாரி சாரியாக இடம் பெயரும் கூட்டம். வானம் முக்கால்வாசி திரையை ஆக்கிரமிரத்திருக்க ஒற்றை மாட்டு வண்டி முன் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் அத்தனை பேரும் வரிசையாகப் பின் செல்லும் காட்சி
- நீர் நிலையொன்றில் இடம் பெயரும் கூலித் தொழிலாளிகள் அனைவரும் நடைபயணத்தின் போது மிருகங்களைப் போல தண்ணீரில் வாய் வைத்து நீர் அருந்தும் காட்சி
- குற்றுயிரும் குலையுயிருமாய் கைவிடப்பட்டவன் தரையில் கிடக்க அவன் கை மட்டும் தூக்கி நிற்க அவன் மனைவி கூட்டத்தினரால் இழுத்துச் செல்லப்படும் காட்சி
- பணப்பெட்டியை திறந்து வைத்து கங்காணி, மருத்துவர், பூசாரி உட்கார்ந்திருக்க அவர்கள் முன்னே தேயிலைத் தொழிலாளிகள் அனைவரும் குத்த வைத்து உட்கார்ந்திருப்பது
- தப்பி ஓடிய அதர்வாவை சிறைபிடித்து கைகால் கட்டி ஆஸ்பத்திரியில் குப்புறப்போட்டு கணுக்கால் நரம்பினை வெட்டுவது
- நாக்கை வெளியே நீட்டி வெள்ளைக்காரி சிலுவை போடுவதற்காக காத்திருக்கும் குள்ள உருவம் கொண்ட தொழிலாளி
- தேயிலைத் தோட்ட ஆங்கிலேய முதலாளி வீட்டின் முன்னால் மண்டி போட்டு கதறும் கங்காணி
- ஜீசஸ் குத்துப்பாட்டின் போது தொழிலாளிகளின் உணர்ச்சி மிகுந்த வெளிப்பாடுகளைப் பார்த்து கண்களை உருட்டி உருட்டி ஆனந்திக்கும் வெள்ளைக்காரி
- சிறு குன்றின் மேல் குழந்தையோடு உட்கார்ந்து வானம் நோக்கி கதறும் அதர்வா
- தினசரி அதி காலையில் கொம்பூத குடிசைகளிலிருந்து வேலைக்குக் கிளம்பும் கொத்தடிமைகள்
- பாறையின் மேல் தனித்து உட்கார்ந்து அழும் பெண் குழந்தை
- அதர்வா, வேதிகா, குழந்தை ஆகியோர் தரையில் கிடக்கும் கடைசிக் காட்சி
மேற்கண்ட காட்சிப்படிமங்களும் நான் இங்கே சொல்லாமல் விட்ட பலவும் இணைந்து, தொடர்புறுத்துதல்கள் பெற்று, நகர்ந்து நம் அகத்தில் இயங்குகின்ற காலத்தினை உருவாக்குகின்றன. அவ்வாறாக நகர்கிற திரை பிம்பக் கோர்வையில் பாலாவின் பரதேசி எங்கேயெல்லாம் மனிதர்கள் மனிதர்களை அடிமைப்படுத்துகிறார்களோ அவர்களை எல்லாம் பற்றி பேசுகிற கதையாக உலகப்பொதுமை பெறுகிறது. பாலாவின் பரதேசி தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் மகத்தான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை.
11 comments:
தலித்துக்கள் தவிர இன்ன பிற சாதியினரும்
அடிமை ஊழியர்களாக அழைத்துச் செல்லப்
பட்டுள்ளனரே.
இப்போதும் உடல் உழைப்பு அடிமை அல்லாது
அறிவுசார் உழைப்பில் அடிமைகளாக மென்பொருள் துறையில் அமெரிக்கவிற்கும்,
கட்டுமானத் துறைகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும்
எல்லா சாதி ஊழியர்களும் அழைத்துச் செல்லப் படுகின்றனர்.
தேயிலை துறையில் கால நரம்பை எடுக்கின்றனர். இன்ன பிற துறைகளில்
கடவுச் சீட்டை எடுத்துக் கொள்கின்றனர்
பரதேசியும் கிறிஸ்துவ மிஷநரிகளும் நடுநிலைமையும்
Nobel laureate Bishop Desmond Tutu //“When the missionaries came to Africa they had the Bible and we had the land. They said, 'Let us pray.' We closed our eyes. When we opened them we had the Bible and they had the land.”//
https://www.facebook.com/notes/sabarinathan-arthanari/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/10151488431234588
மிக அற்புதம் :)
கிறித்துவ மிஷனரிகளின் உள்நோக்கங்களை நாசூக்காக சொல்லியிருக்கலாம். அந்த நிலையில் அந்த மக்களுக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள். மதம் மாறினால் வேலை கிடைக்கலாம். மதம் மாறாமல் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை கிறித்துவ நிறுவனங்களில் என்பது அக்காலத்தில் சகஜமாக இருந்திருக்கிறது. தலித்துகளுக்கு வேறு வழியில்லை என்றால் மாறினது ஒன்றும் தப்பே இல்லை. பாலா அவசரப்பட்டுவிட்டார் என்றே தோணுது. டேனியல் நாவல் படிக்கவில்லை இன்னும். படித்தால் விளங்கும்அவரின் பங்களிப்பு. மற்றபடி நல்ல உருவாக்கம் இந்த படம்.நானும் இதையொட்டிதான் விமர்சனம் எழுதினேன்.இவ்வளவு விளக்கமாக இல்லாவிட்டாலும்...பாலாவின் ரத்தப்பழிவாங்கல் இல்லாதது ஆறுதல்.பெண்களை கிண்டல் அடிப்பதும் இல்லை...
என்னமோ அபோதெல்லாம் எல்லா மக்களும் ரொம்ப சந்தோஷமா இந்து மதத்தில் இருந்ததுப்போல பேசுவது அபத்தம். சாதி துவேஷத்தால் மனிதர்கள் சிறுமைப் படுத்தப்பட்டடதனாலேயே மற்ற மதத்துக்காரன் சுலபமாக உள்ளே நுழைந்தான். (அவனே வரவில்லைஎன்றால் இன்னும் கோமணம் கட்டிகொண்டுதான் அலைந்திருப்போம்.) இந்தியக் கிறிச்துவத்திலும் சாதி உள்ளது... ஆமாம்... இந்து மதத்தில் உள்ள சாதி அசிங்கம் இன்னும் இந்தியர்களை விடாமல் பிடித்துக்கொண்டுள்ளது. அது யார் செய்த தவறு...? அவர்கள் அவர்களின் வழிப்பாட்டுதலத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம். இந்துக் கோவிலில் எல்லோரும் பொய் சாமி சிலையைத் தொட்டுக் கும்பிட முடியுமா அல்லது விட்டுவிடுவார்களா ...?இப்ப என்ன ஆகிவிட்டது கிறித்துவனாகவோ முஸ்லீம் ஆகவோ மாறினால். அன்று இல்லையென்றாலும் என்றாவது வேறு மதத்துக்குகோ அல்லது நாத்தீகராகவோ மாறித்தான் இருப்பார்கள்.
இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் வழக்கமான படங்களில் ஒன்று அல்ல. இந்தப்படம் ஏற்படுத்தும் தூண்டல் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற வெறி ஏக்கம் தவிப்பு கிளைமாக்ஸில் கண்களில் நீர்த்துளிகளாகப் பனிக்கச் செய்கின்றது. இந்தப்படம் ஏற்படுத்தும் உணர்வினை விமர்சகர் சொல்லவில்லை. விடுதலை வேட்கையை இந்தப்படம் ஆழமாக ஏற்படுத்துகிறது. அந்த ஒரு காரணத்திற்காக பாலாவிற்கு வாழ்த்துகள்.
இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் வழக்கமான படங்களில் ஒன்று அல்ல. இந்தப்படம் ஏற்படுத்தும் தூண்டல் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற வெறி ஏக்கம் தவிப்பு கிளைமாக்ஸில் கண்களில் நீர்த்துளிகளாகப் பனிக்கச் செய்கின்றது. இந்தப்படம் ஏற்படுத்தும் உணர்வினை விமர்சகர் சொல்லவில்லை. விடுதலை வேட்கையை இந்தப்படம் ஆழமாக ஏற்படுத்துகிறது. அந்த ஒரு காரணத்திற்காக பாலாவிற்கு வாழ்த்துகள்.
இப்போதுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன்
சென்னை வாழ் அதர்வா / டப்பிங் கலைஞர் , கிராமத்துத் தமிழ் உச்சரிப்பும் சிறிது செயற்கையாக இருக்கிறது.
அந்தப் பாட்டியின், விக்ரமாதித்யனின் உச்சரிப்புக்கும்
அதர்வாவின் உச்சரிப்பிர்க்கும்
மிகப் பெரிய வித்தியாசம் தெரிகிறது
இடைவேளைக்குப் பிறகு உள்ள படம் மட்டும் பார்க்கலாமோ
Good capture. But we can see, in this time too, people go for in search of job and money bending backward leaving the native land in true Para Desi (international traveller)
ஆழ்ந்த நல்ல விமர்சனம் அருமை...
நன்றி...
இவளவு கவனித்த நீங்கள் , ஒரு இடத்தில் மேல் சாதியினர் அமரும் இடத்தில் அமர்ந்ததுகாக ,அதர்வ அடிவாங்குவதை கவனிக்க தவறியது ஏன் .........அந்த காட்சியே சொல்லிவிடுகிறது அவர் தலித் என்று .
Post a Comment