பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியம் |
கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு தல யாத்திரை போய் வந்ததைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா அதில் நண்பர் பாலாஜி ஶ்ரீனிவாசன் எனக்கு இன்னும் சரஸ்வதி ஓவியத்தைத் தரவில்லை என்று புலம்பியிருந்தேனல்லவா பாலாஜிக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. முந்தா நாள் இரவு நண்பர் காந்தியுடன் பாலாஜி ஶ்ரீனிவாசன் என் வீட்டிற்கு வந்து சரஸ்வதி ஓவியத்தைத் தந்தார். மேலே புகைப்படமாய் தந்திருப்பது பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியம்; இரண்டரை அடிக்கு மேல் உயரம். புகைப்படமெடுக்கும்போது இடது பக்கத்தில் என் மேஜை விளக்கின் ஒளி பிரதிபலிக்கிறது. அதை சரி செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். என் வீட்டு படிப்பறை-நூலகத்தின் களையே லஷ்மிகரமாக இந்த ஓவியத்தை என் எழுது மேஜையில் வைத்தவுடன் மாறிவிட்டது. என்னுடைய சரஸ்வதி பிரேமை கட்டுக்குள் வந்துவிட்டதான கற்பிதத்தில் மனம் அமைதியாகிவிட்டது. ஆராய்ச்சி நோக்கம் தவிர பெரிதாக கடவுள் நம்பிக்கை, மத ஈடுபாடு ஏதுமற்ற எனக்கு வழிபாட்டு முறைகள், மதம் சார் படிமங்கள், கோவில் குள தல யாத்திரைகள், பாராயணங்கள், என் மனதினை எப்படி நெறியாளுகின்றன என்பதை உற்று கவனிப்பதிலும் அவற்றை பாரபட்சமற்று பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்திருக்கிறது.
கிட்டத்தட்ட என்னைப் போன்றே மனப்பான்மையுடையவர்கள் நண்பர்கள் பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் என்பது என் எண்ணம். பாலாஜி ஶ்ரீனிவாசன் NFSC (National Folklore Support Centre) நடத்திய இந்திய மரபு ஓவிய பயிலரங்குகளில் கலந்து கொண்டபோது எனக்கு அறிமுகமானார். NFSC 14 இந்திய ஓவிய மரபு பயிலரங்குகளை இது வரை நடத்தியுள்ளது. ஒவ்வொரு மரபு ஓவிய பயிலரங்கிலும் மரபு ஓவியர்கள் கலந்து கொள்வபர்களுக்கு தங்கள் ஓவிய மரபின் நுட்பங்களை பயிற்றுவிக்க, கூடவே ஆராய்ச்சி உரைகளும் வழங்கப்பட்டன. நான் எல்லா மரபுஓவிய பயிலரங்குகளிலும் ஆராய்ச்சி உரைகளாற்றியிருக்கிறேன். எல்லா பயிலரங்குகளிலும் பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் கலந்து கொண்டிருக்கின்றனர். பயிலரங்குகளின் போதும் அவற்றைத் தொடர்ந்தும் என் உரைகளை ஒட்டி நடந்த உரையாடல்களில் பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கும் எனக்குமான நட்பு பலப்பட்டது. பாலாஜி ஶ்ரீனிவாசனை ஒரு ஓவியராக, பயணியாக, கோவில் கட்டிடக்கலை, புராணங்கள், ஆகியவற்றைப் பற்றிய சிறந்த அறிவுடைய படிப்பாளியாக நான் கொஞ்சம் கொஞ்சமாக அறியலானேன். NFSC இந்தியா முழுக்க மேற்கொண்ட வாய்மொழி நிகழ்த்துகலைகள் ஆய்வுத் திட்டமொன்றில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்ட ‘பிரகலாத சரித்திரம்’ நாடக நிகழ்த்துதல்களை ஆய்வுக்கும் ஆவணப்படுத்துதலுக்கும் உட்படுத்தும் பணியினை பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் செய்து தந்தனர். அவர்கள் இருவரும் 2002 இல் NFSC நடத்திய நாட்டுப்புற கலைகளின் விழாவிற்காக மகாராஷ்டிர மாநிலத்தின் சித்ரகதி ஓவிய மற்றும் கதை சொல்லல் மரபு கலைஞர்களைப் பற்றிய களப்பணியும் மேற்கொண்டனர்.
பாலாஜி ஶ்ரீனிவாசன் NFSC பயிலரங்குகளின் வழி அறிந்த மதுபனி ஓவியங்களின் கலாமரபினைப் பின்பற்றி மகாபலிபுரம் சிற்பங்களை வரைந்து ஒரு தனி நபர் கண்காட்சி நடத்தியுள்ளார். போன வருடம் தன் ஒன்பது மாணவர்களை வழி நடத்தி சித்ரகதி பாணியில் பாரதக்கூத்தினை வரைய வைத்து கண்காட்சி நடத்தியுள்ளார்.
மரபான ஓவியக்கலையின் எல்லைகளுக்குள்ளாகவே ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும், புதுமைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவைகள் பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியங்கள். பாலாஜி ஶ்ரீனிவாசன் எனக்குக் கொடுத்துள்ள தஞ்சாவூர் பாணியிலான சரஸ்வதி ஓவியம் அந்த மரபின் நீட்சியில் ஒரு முக்கிய கண்ணி என்பதினை தஞ்சாவூர் ஓவிய மரபினை அறிந்த எவருக்குமே பார்த்தவுடனேயே தெரியவரும். இம்மாதிரியான படைப்புகளை உருவாக்குகிற கலைஞர்களே நம் மரபுக் கலைகள் உயிர்ப்புடன் நீடித்திருப்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றனர். என் தினசரி வாழ்வின் பகுதியான என் படிப்பறையின் ecology-ஐயே மாற்றிவிட்ட பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.
நேற்றைக்கு முன் தினம் அமாவாசை. மாசி மாத அமாவசையன்று அங்காளபரமேஸ்வரி ஆலயங்களில் மயானக் கொள்ளை அல்லது மயான சூறை என்றழைக்கப்படும் திருவிழா நடைபெறும். நான் வேளச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் நடைபெறும் மயானக் கொள்ளையை வருடா வருடம் பார்த்து வருகிறேன். இரண்டு வருடங்களாகத் தப்பிவிட்டது. மயானக்கொள்ளை மகாசிவராத்திரிக்கு மறு நாள் வரும். மகாசிவராத்திரிக்குக் கண்முழிப்பதால் மறு நாள் நடு நிசியில் நடைபெறும் மயானக் கொள்ளை பார்ப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாகக் கண் முழிக்க இயலவில்லை. இந்த வருடம் சிவராத்திரிக்கு இரவு இரண்டு மணிக்கே தூங்கிவிட்டேன். அதனால் மறு நாள் மயானக் கொள்ளை பார்க்க சக்தியிருந்தது. சரஸ்வதி படம் வீட்டுக்கு வந்த உற்சாகம் வேறு. பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் திருவல்லிக்கேணி அங்காளபரமேஸ்வரி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டினை சூறையாடுவதைப் பார்க்கப் போய்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் வேளச்சேரியையும் சேர்த்துப் பார்க்கலாம் என்றேன். இரவு பத்தரை மணிக்கு வேளச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு போனபோது ஒன்பது மணிக்கே மயானத்துக்கு தேவி போய் வந்துவிட்டதாகக் கூறினார்கள். அங்கிருந்து திருவல்லிக்கேணிக்கு போனோம். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி அங்காளபரமேஸ்வரி ஆலயங்களிலும் மயான சூறை முடிந்து விட்டிருந்தது. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. காந்தியும் பாலாஜியும் என்னை வீட்டில் விடும்போது மணி ஒன்று இருக்கும். சரஸ்வதி படத்தையே பார்த்துகொண்டு உட்கார்ந்திருந்தேன். தூக்கம் கண்ணைக் கட்டுகையில் இந்தக் கவிதையை எழுதினேன்.
சரஸ்வதி வந்தனம்
நீர்க்கர்ப்பத்தின்
சுழுமுனை
இமை திறக்க
செவி குளிர
முதுமொழிக்காவிய தெளி பாடல்
வீணையின் மீட்டலுடன்
நாளொன்று எழ
முக்குணக் கடல் தாண்டி
முகிழ்க்கும் கமலப்பூ
உன் கால் விரல் தீண்டலால்
வெண்மைப் பேரொளி பரப்ப
புவியும் நீ
மறிபுனலும் நீ
கனலும் நீ
வளியும் நீ
வெளியும் நீ
மனமும் நீ
நீ நீயென
தானழிப்பாய் மாதோ
யாதோ உன்
நித்திய கிருபையென
உன் பிணை விழியால்
கலை பல அமுதத்தாரையாய்
அகிலம் நிறைக்க
மங்கல போகம் நகை வீச
பிராவகம்
இடுகாடு தாண்டியோட
மேனி முயங்கு தொறும்
தடுத்தாட்கொள்வாய்
என்
சாரதே
(சூட்சுமம்: 45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட கவிதையை அர்த்தம் புரிந்து 1000 தடவை ஜபித்து வந்தால் செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி ஏற்படும்; ராஜவசியமும், ஜன வசியமும், பெண் வசியமும், பொன், பொருள், மனைவி, மக்கள், வீடு, நோயற்ற வாழ்வு, வாகனம், ஐபேட், ஐஃபோன், பெரும் பதவி, ஆறிலக்க மாத வருமானம், மன நிம்மதி மற்றும் இந்தப் பட்டியலில் விட்டுப்போன சகலதும் கிடைக்கும். தமிழ் எழுத்தாளனாய் இருந்து தொலைக்காட்சி பேட்டிக்கும் சினிமா கதை விவாதத்திற்கும் போனால் ஆட்டோ கட்டணமும் சன்மானமும் கிடைக்கும். உபரிகளாய் கிடைப்பதைப் பற்றி எனக்கு கடிதமெழுதத் தேவையில்லை. உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எண்ணிக்கையையோ சொதப்பிவிட்டு பலன் கிடைக்கவில்லையென்றால் என்னைக் குற்றம் சொல்ல இயலாது; சொதப்பியது எது என்று தானே சுய பரிசோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டியதுதான்)
4 comments:
புகழப்படுவது பெருமையாகவும் இருக்கிறது மிகவும் கூச்சமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி உங்கள்பதிவிற்கு. கலைமகள்வந்தனம் அருமையாய் உள்ளது. தண்யோஸ்மி :) .
உங்கள் end note, "உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எண்ணிக்கையையோ சொதப்பிவிட்டு பலன் கிடைக்கவில்லையென்றால் என்னைக் குற்றம் சொல்ல இயலாது; சொதப்பியது எது என்று தானே சுய பரிசோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டியதுதான்)" மிகவும் அருமை ;)
உங்கள் end note, "உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எண்ணிக்கையையோ சொதப்பிவிட்டு பலன் கிடைக்கவில்லையென்றால் என்னைக் குற்றம் சொல்ல இயலாது; சொதப்பியது எது என்று தானே சுய பரிசோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டியதுதான்" மிகவும் அருமை ;)
Post a Comment