Monday, March 18, 2013

ஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள்


மாணவர் போராட்டங்களுக்கான இந்த வலைத்தளத்தைப் பார்க்க நேர்ந்தது
http://studentsprotest.blogspot.in 

நியுயார்க் டைம்ஸ் ப்ளாக் India Ink இல் செய்தி http://india.blogs.nytimes.com/2013/03/18/tamil-nadu-students-protest-alleged-human-rights-abuses-in-sri-lankatamil-nadu-protests/ஈழப்போரில் நடந்து முடிந்து விட்ட தமிழினப் படுகொலைக்காக நீதி கேட்டு தமிழகம் எங்கும் தன்னிச்சையாக பரவி வரும் மாணவர் அறப்போராட்டங்கள் தமிழ்நாட்டின், இந்தியாவின் அரசியலையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தவை. இது தாமதமான, காலங்கடந்து ஏற்பட்டிருக்கிற இளைய சமுதாய எழுச்சி என்றாலும் கூட பறவைக்கூட்டங்கள் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கையில் இளம் குஞ்சுகளே முன் பறந்து வழிகாட்டுவது போல பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் மதிக்கின்ற அரசியல் தமிழ்நாட்டிலும் அகில இந்தியாவிலும் உருவாக இந்த மாணவர் போராட்டம் வித்திடுமென்று நான் நம்புகிறேன். 

ஈழப்போரின் கடைசி கட்டத்தில் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் தமிழர்கள் பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இன்னொரு மூன்றரை லட்சம் தமிழர்கள் நிலை குலைந்து ஈழத்தில் வாழ்கின்றனர். கொல்லப்பட்ட அத்தனை ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் பேரும் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல என்பதினாலேயே இது இனப்படுகொலை என்றழைக்கப்படுகிறது.  இனிமேலும் மனித குல சரித்திரத்தில் சுய கௌரவத்தோடு வாழ நினைக்கும் எந்த இனக்குழுவுக்கும் இந்தப் பேரழிவு வந்து விடக்கூடாது என்பதற்காக வேணும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நியாயத்தை நாம் உலக அரங்கில் கேட்டே ஆக வேண்டும். அதற்கான வழி முறைகளை மாணவர்களின் போராட்டம் கண்டுபிடிக்கும் என்றே நம்புகிறேன்.  

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், 12 வயது பாலகன், பாலச்சந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்கள் ஹிந்து நாளிதழில் வெளிவந்த பின்னர் ஏற்பட்ட உணர்ச்சி அலைகளின் விளைவாகவே  தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தோன்றியுள்ளது. ஈழப்போரில் சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை ஏராளமாக தமிழகம் இதுவரை கண்டுதானிருக்கிறது. ஆனால் பாலகன் பாலச்சந்திரன் கையில் பிஸ்கட் பாக்கெட்டோடு, சட்டையில்லாமல், குழந்தையின் உப்பிய கன்னங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய உணர்வேயில்லாமல் உதட்டைச்சுழித்தபடி மணல் மூட்டைகளால் தடுக்கப்பட்ட பங்கருக்குள் உட்கார்ந்திருக்கும் புகைப்படமும், அதைத் தொடர்ந்தே அக்குழந்தை மார்பு குண்டுகளால் துளைக்கப்பட்டு பிணமாக அதே இடத்தில் கிடக்கின்ற புகைப்படமும் உருவாக்கிய அதிர்ச்சியில் தமிழகத்தின் நாடி நரம்புகள் பொடிந்துவிட்டன. மேலும், பிபிசி சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படங்கள், செய்தி ஆய்வு அறிக்கைகள் ஈழத் தமிழரின் இனப்படுகொலையும் இதர போர்க்கால குற்றங்களும் எப்படியெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்று  தெளிவாகச் சொல்கின்றன. இவற்றை உலக அரங்கு கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும்.

போரையும் போரின் அழிவுகளையும் என் தலைமுறையினர் தடுத்து நிறுத்த சக்தியற்றவர்களாய் இருந்தோம். அடுத்த தலைமுறையினரான மாணவர்களாவது அமைதியையும் அகிம்சையையும் நீதியையும் நிலைநிறுத்துகிற வல்லமையுடையவர்களாக இருக்கட்டும். No comments: