செம்மொழி ஆய்வு மையமும், கோழிக்கோடு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் ‘சங்க இலக்கியத்தின் வேர்கள்’ என்ற பயிலரங்கு கோழிக்கோடு பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் ஆய்வு பள்ளியில் மார்ச் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிலரங்கினை தொடங்கி வைத்து உரையாற்றும்படி அழைக்கப்பட்டுள்ளேன். இந்தப் பயிலரங்கின் நோக்கங்களுள் ஒன்று சங்க இலக்கியத்தின் வழி நாம் அறியவரும் பண்டைய தமிழகத்தின் வாழ்வியல் கேரளத்தையும் உள்ளடக்கியது என்பதினை எடுத்துரைப்பது என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்கு முக்கியமாகப்பட்டது.
‘மேலும்’ இதழில் ‘சங்க இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியல்’ என்ற கட்டுரையை எண்பதுகளில் எழுதினேன். அக்கட்டுரையைத் தொடர்ந்து பல ஆங்கில கட்டுரைகளை தமிழ் இலக்கண நூல்களை மையப்படுத்தி தமிழரின் பண்டைய அறிவுத்தோற்றவியல் காலந்தோறும் என்னென்ன அழுத்தங்களைப் பெற்று வந்துள்ளது என்று எழுதியுள்ளேன். தமிழில் அவற்றை இன்னும் எழுதவில்லை. இலக்கண நூல்களின் வழி நான் அடைந்த முடிவுகளை ராஜ் கௌதமன் ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ் சமூக உருவாக்கமும்’ ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’ ஆகிய நூல்களில் இலக்கிய பனுவல்களை ஆராய்வதன் மூலம் அடைந்த முடிவுகளாக முன்வைப்பனவோடு ஒப்பிட்டு என்னுடைய உரையை தயார் செய்து வருகிறேன். இது தொடர்பாக தமிழவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘சிற்றேடு’ இதழில் (எண் 2 எப்ரல் 2011) கோவை ஞானி எழுதியுள்ள ‘மார்க்சிய நோக்கில் பேராசிரியர் ராஜ்கௌதமனின் சங்க இலக்கிய ஆய்வுகள்’ என்ற ஆகச் சிறந்த கட்டுரையை கவனமாக வாசித்துள்ளேன். இந்தப் பொருள் தொடர்பாக நான் கவனப்படுத்தவேண்டிய கட்டுரைகள் நூல்கள் ஆகியனவற்றை நண்பர்கள் சுட்டிக்காட்டினால் மகிழ்வேன். என்னுடைய உரை ஆங்கிலத்திலேயே இருக்கப்போகிறது ஆனால் அதை விரைவில் தமிழில் எழுதி பகிர்ந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன்.
பயிலரங்கின் ஏற்பாட்டாளர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் கோவிந்தராஜ வர்மாவும் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் எம். ராமகிருஷ்ணனுன் ஆவர். கோவிந்தராஜ வர்மா பயிலரங்கின் தொடக்க நாளான மார்ச் 23 ஆம் தேதி மாலை தெய்யம் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார். கோழிக்கோடு நண்பர்கள் வரலாம்.
No comments:
Post a Comment