போர்ஹெஸ் 1967, 1968 ஆகிய ஆண்டுகளில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கவிதை பற்றி ஆற்றிய உரைகள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆவணக்காப்பகங்களில் தற்செயலாய் கண்டுபிடிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞரும், சிறுகதையாளரும், இலக்கிய சிந்தனையாளரும், பெரும் படிப்பாளியுமான போர்ஹெஸின் ஆங்கில உரைகள் இப்போது இணையத்தில் நேரடியாகக் கேட்கக் கிடைக்கின்றன. இந்த உரைகளை ஆற்றியபோது போர்ஹெஸ் முழுமையாக கண்பார்வையிழந்திருந்தார். பிளேட்டோ, போ, பைரன், ஜாய்ஸ், ஹோமர் என்று ஏரளமானோரின் படைப்புகளிலிருந்து உதாரணங்கள் காட்டி பேசும் போர்ஹெஸ் கவிதையை மட்டும் மையமாகத் தன் உரைகளில் கொண்டிருக்கவில்லை; உரைநடை வடிவங்கள், இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்புக் கோட்பாடு, இலக்கியம் சார்ந்த தத்துவார்த்த பிரச்சனைகள் என முக்கியமான பலவற்றையும் பற்றி பேசுகிறார். இந்த உரைகளில் போர்ஹெஸ் இலக்கிய நுண்ணுணர்வு என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்டுவதாக நான் உள்வாங்கினேன். இந்த உரைகளை கேட்டுப்பாருங்கள். இந்த ஆங்கில உரைகளைக் கேட்பது கவிதை, இலக்கியம் குறித்த நம் விவாதங்களை மேம்படுத்தக்கூடும்.
No comments:
Post a Comment