Tuesday, July 16, 2013

நாங்கள் கோபியை மிரட்டினோம் | சிறுகதை


நாங்கள் கோபியை மிரட்டினோம் | சிறுகதை

நாங்கள் கோபியை அடித்துப் பிடித்து இழுத்து வந்தபோது அவன் எங்கள் கண்ணுக்குப் புலப்படாத முள்ளம்பன்றிகளை கவனித்துக்கொண்டிருந்தான்.  பிரபாதான் அவன் மண்டையில் ஒன்று போட்டான் “என்னலே அங்க முறச்சு முறச்சு பாக்க?” கோபி திகைத்து வேறு உலகிலிருந்து இறங்கி வந்தவன் போல  “பன்னி, முள்ளம் பன்னி” என்றான். மோகன் ஜிப்பை அவிழ்த்து “இதாலே முள்ளம் பன்னி” அப்படின்னு கேட்டபோது கோபி “இதுக்கு முள் இல்லைலா” என்றான். அப்போதே எங்களுக்கு பொறி தட்டியிருக்கவேண்டும் சரியான வட்டு கேசிடம் மாட்டிக்கொண்டோமென்று. பிரபா இன்னொரு அறை விட்டதில் கோபி சுருண்டு விழுந்துவிட்டான். அவனை எழுப்பி தோளோடு தோளாக சாய்த்து நிறுத்தி நடத்தி ஐந்தாவது மாடியிலிருந்த எங்கள் அபார்ட்மெண்டுக்கு மெதுவாகத் தள்ளிக்கொண்டு வந்தபோது நான்காவது மாடி ஸ்டேட்பேங்க் நரசிம்மன் எதிரில் வந்தார். அவருக்கு படிக்கட்டில் வழி விட்டு ஓரமாய் ஒதுங்கும்போது கோபி ‘பன்னி, முள்ளம் பன்னி” என்று முனகினான். நரசிம்மன் எங்களை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே கீழே போனார். அவர் குடித்து மயங்கிவிட்ட நண்பனை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வருகிறோம் என்று நினைத்திருக்க வேண்டும்.  பிரபா எரிச்சலோடு தன் தலை முடியை கோதிக்கொண்டான்.

எங்கள் நண்பர் குழாத்தினை ஒரு நீர்த்தொட்டியில் வசிக்கும் மீன்கள் என்று கொண்டோமானால் கோபி அதன் அடியாழத்தில் நீந்தும் தங்க மீன். சீட்டைக் கலைத்து போட்டோமென்றால் செலவாணியாகமல்  தங்கி மீந்துவிடுகிற இஸ்பேடு ராஜா. கோபி எப்போதும் தன்னை ‘நான்’ என்று விளித்து பேசுவதில்லை; தன்னைத்தானே கோபி என்றுதான் அழைத்துக்கொள்வான். கோபிக்கு அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது, கோபிக்கு இப்போ பசிக்கிறது, கோபிக்கு மனசு சரியில்ல என்றெல்லாம் அவன் பேசுவதை கேட்க அலாதியாக இருக்கும். ஆரம்பத்தில் எங்களுக்கு சில குழந்தைகளின் விளையாட்டு போல அவனுடைய பேச்சு பட்டதால் நாங்களும் அவனை அப்படியே பேச ஊக்குவித்தோம் என்பது உண்மைதான். ஆனால் சில தருணங்களில் கோபியின் பேச்சு முறை கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரபா “ங்கோத்தா ஒளுங்கா பேசித் தொலையேண்டா” என்று கோபியை பல முறை திட்டியிருக்கிறான். மோகன் கோபியை ஏதாவது டாக்டரிடம் காட்டலாமா என்று ஒரு முறை கேட்டபோது கோபி அவனை அடிக்க போய்விட்டான். அவனை அவ்வளவு கோபமாக நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அவன் முகம் பொதுவாக எந்த உணர்ச்சியையும் காட்டாத ஜடம் போலத்தான் இருக்கும். “கோபி இப்ப சந்தோசமா இருக்கான்” அப்படின்னு அவன் சொன்னால் நாங்கள் அவன் சந்தோசமா இருக்கான் என்று புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஆனால் அவன் மோகனை அடிக்க போனபோது அவனுக்கு வலிப்பு வந்தது போல கையும் காலும் இழுத்துக்கொண்டன. முகம் கோணிவிட்டது. பற்களை நறநறத்துக் கடித்தான். நாங்கள் பயந்து போனோம். மோகன் வெலவெலத்து போய் “ வேண்டாம் கோபி எந்த டாக்டரிடமும் போக வேண்டாம்” என்று திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தான். கோபி அமைதியடைய அரை மணி நேரத்திற்கும் மேலானது.

கோபிக்கு அவன் வேலை பார்த்த ஐ.டி. கம்பெனியில் நல்ல மரியாதை இருந்தது. அவன் கோட் எழுதுவதில் கில்லாடி. யாருடனும் அதிகம் பேசமாட்டான். கணிணி முன்னால் உட்கார்ந்தானென்றால் வேலையை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டான். ப்ராஜக்ட் மானேஜராக பல முறை பதவி உயர்வு அளிக்க அவன் கம்பெனி முன் வந்தபோதெல்லாம் அவன் தீர்மானமாக “கோபி ஒரு புரோகிராமர். கோட் எழுதுவதுதான் அவனுக்கு சாகசம், நிர்வாகம் அவன் துறையல்ல” என்று மூன்று வரி கடிதம் எழுதி பதவி உயர்வுகளை மறுத்துவிட்டான். ஒரு கலைஞனைப் போல அவன் கோட் எழுதுகிறான் என்று அவன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் கிறங்கியது. அலுவலகத்தில் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. ஸ்வேதாவை கோபிக்கு பிடிக்கும் என்று ஒரு முறை சொன்னான். நாங்கள் கேட்டுக்கொண்டோம். கோபியை ஸ்வேதா விசித்திரமான பிராணிகளிடம் பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வாஞ்சையுடன் நடத்தியிருக்கவேண்டும். கோபி ஸ்வேதாவை இன்னும் கோட் எழுதி முடிக்கப்படாத ப்ரோக்ராம் என்று நினைத்திருக்கவேண்டும். அவன் அவ்வபோது ஸ்வேதாவைப்பற்றி எங்களிடம் சொன்னவற்றிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டது அவ்வளவுதான். கோபி எங்கள் அபார்ட்மெண்டில் வைத்திருந்த கணிணியில் ஸ்கிரீன் சேவராய் ஸ்வேதா புகைப்படத்தை வைத்திருந்தான். அந்த புகைப்படத்தில் ஸ்வேதா நடிகை பிரியா மணியின் ஒல்லியான பிம்ப வடிவு போல இருந்தாள். சிவப்பு நிற ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தாள். இமைகள் கனத்திருந்தன. அவளுடைய கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருப்பது கோபிக்கு பிடிக்கும் என்று கோபி சொல்லுவான். அரையளவுதான் படம் என்பதால் ஸ்வேதாவின் இடுப்பு தெரியவில்லை. பிரபா கோபியிடம் ஸ்வேதாவின் இடுப்பு இந்த அளவு இருக்குமா என்று காற்றில் கைகளால் வரைந்துகாட்டி  கேட்டான். கோபி கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு அளவை டேப்பை எடுத்து கையில் பிடித்து ஸ்வேதாவின் இடுப்பு இவ்வளவு அகலம் என்று பிராபாவிடம் காட்டினான். பிரபாவுக்கு உற்சாகமாகிவிட்டது. " நீ சொள்ளமாடன் இல்லலே" என்று சிரித்தான். "நீ அவளுக்க இடுப்ப பிடிச்சயா இல்ல இன்னும் கீழ பிடிச்சயா?" "கோபி இன்னும் கீழதான் பிடிச்சான்" என்றான் கோபி. மோகனும் இப்போது கோபியை சீண்டுவதில் சேர்ந்துகொண்டான். மோகன்தான் முதலில் ஸ்வேதாவை பிரியா மணி பிம்பத்தோடு ஒப்பிட்டவன். அலுவலகத்தில் மேலே கப்போர்டில் இருந்த ஒரு ஃபைலை எடுக்க மேஜை மேல் ஸ்வேதா ஏறியிருக்கிறாள் அப்போது கோபி அவள் கீழே விழாமல் பிடித்து இறக்கிவிட்டிருக்கிறான்.

கோபியாய் இருந்தவன் 'நாங்களாய்' 'நாமாய்' மாறியபோது இதே சம்பவத்தை கோபி விவரித்த முறைதான் எங்களுக்கு கலவரத்தை ஏற்படுத்திய  சம்பவமாய் அமைந்தது. "ஸ்வேதா மேஜ மேல ஸ்டூல் போட்டு ஏறினாளா, ஸ்டூலுக்கு கால் சரியில்லையா, கிடு கிடுன்னு ஆடுச்சா நாம அவள ஓடிப்போய் பிடிச்சமா, அவ கீழ விழாம தப்பிச்சா" என்ற கோபியைப் பார்த்து "லேய் அவ குண்டிய நாங்க எங்கலெ பிடிச்சோம்? நீதாம்ல பிடிச்ச" என்று பிரபா கத்தினான். மோகன் 'விடுரா இப்பத்தான் இவன் நாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கான். சீக்கிரமே நான்னு சொல்லிருவான். இல்லையா கோபி" என்று நைச்சியம் பேசினான். "நாளைக்கே இவன் ஏதாவது ஒரு கொலய கிலைய பண்ணிட்டு வந்து, நாங்க அன்னிக்கு கொல பண்ணினமான்னு ஆரம்பிக்கப் போரான் பாரு அப்பத் தெரியும் இந்த அர வட்டு நமபள என்ன பிரச்சனையில மாட்டிவிடுதான்னு" அப்படின்னு பிரபா சொன்னது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. நல்லவேளையாக கோபி கொலை எதுவும் செய்யவில்லை ஆனால் அவன் முள்ளம் பன்றிகளை பார்த்துவிட்டான். அவன் நாங்கள் மூவருமே முள்ளம் பன்றிகளைப் பார்த்ததாய்ப் பேச ஆரம்பித்தான்.

நாங்கள் முள்ளம் பன்றிகளை தண்டவாளத்துக்கு அருகே பார்த்தபோது இரவு மணி எட்டு இருக்கும். அந்த முள்ளம்பன்றிகள் கூட்டமாக ஆணுரு ஒன்றை துரத்திக்கொண்டு வந்தன. ஆணுரு ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தது. பன்றிகள் சிலிர்க்கும்போதெல்லாம் அவற்றின் முட்கள் விர்விர் என்று கூரிய ஈட்டிகள் போல வெளி வந்தன. ஒவ்வொரு பன்றியாய் துள்ளிக் குதித்து காற்றில் பறந்து வந்து ஆணுருவைக் குத்திக் கிழித்துவிட்டு முட்பந்தாய் சுருண்டு விழுந்தது. பறந்து குத்திக் கிழிக்கத் தயாராய் இருக்கும் பன்றிகள் தங்கள் நாக்குகளை சப்புக்கொட்டின. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு... நாங்கள் பன்றிகளை எண்ண எண்ண அவை எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே இருந்தன. சமூகம் மொத்தமுமே முள்ளம்பன்றிகளாய் மாறிவிட்டது போல அவற்றின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. நாங்கள் எங்கே திரும்பினாலும் நாங்கள் முள்ளம் பன்றிகளைக் கண்டோம். தூரத்தில் ரயில் வரும் ஓசை கேட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் ரயில் நிறைய பன்றிகள் வரப்போவதாய் சொல்லிக்கொண்டோம். ரயிலில் பன்றிகள் வந்து சேர்ந்தனவா இல்லையா என்று தெரியாது ஆனால் மறு நாள் செய்தித்தாள்களில் தண்டவாளத்திற்கு அருகே பன்றித் தாக்குதலில் இறந்த மனிதனின் உடல் கிடப்பது தலைப்பு செய்தியாக வந்தது.  நாங்கள் கோபி ஒரு கொலையைப் பார்த்திருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தோம்.

பிரபா கெட்டவார்த்தைகளோடுதான் எப்போதும் பேசுவான். அதை கோபி ரசிக்கிற மாதிரி நடிக்கிறான் என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டு. மோகன் கெட்டவார்த்தைகளே பேசமாட்டான் ஆனால் அவன் பிரபாவைவிட வக்கிரமானவன் என்று கோபிக்கு ஒரு நினைப்பு உண்டு. கோபி இது போல எங்கள் மூவரைப் பற்றியுமே மோசமான அபிப்பிராயங்கள் கொண்டவனாக இருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் தண்டவாளத்துக்கு அருகே நடந்த கொலையை நாங்களும் பார்த்தோம் என்று அவன் சொல்லி வருகிறானோ?

பிணம் கண்டுபிடிக்கப்பட்ட தண்டவாளத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்களிடம் கோபி பேச முயற்சி செய்தபோது நாங்கள் அவனை அடித்து இழுத்து வரவேண்டியதாயிற்று. நாங்கள் அவனை எங்கள் அபார்ட்மெண்ட்டுக்குள் கொண்டுவந்து தரையில் தள்ளினோம். தரையில் தள்ளியதுதான் தாமதம் கோபி துள்ளிக் குதித்து கத்தலானான். “இங்க வந்திருச்சு இங்க வந்திருச்சு ரூம் முழுக்க இருக்கு ஆமா ரூம் முழுக்க இருக்கு” மோகன் தன் தலையில் அடித்துக்கொண்டான். பிரபா “ஒனக்கு ஒன்னும் இல்லடா; அமைதியா இருடா எதுவும் இங்க இல்லடா”

பன்றிகள் அபார்ட்மெண்ட் முழுக்க நிறைந்திருந்தன. அவற்றிலேயே மிகவும் பெரிய பன்றியை கோபிக்கு நன்றாகத் தெரியும். அதுதான் தண்டவாளத்துக்கு அருகே ஆணுருவை பாய்ந்து பாய்ந்து தாக்கியது. அதன் முட்களில் ரத்தம் இன்னும் காயமலிருக்கிறது. சாக்கடையில் படுத்து உருண்டிருந்த அந்த பன்றிகளின்  உடலில் இருந்து எழும் துர்நாற்றம் எங்கள் அபார்ட்மெண்ட் முழுக்க நிறைக்கிறது.  நிணவாடையும் கூவத்தின் சாக்கடை நாற்றமும் அறையை நிறைக்க கோபிக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. கோபி பெரும் சத்தத்துடன் வாந்தி எடுத்தான். மோகன் ஓடிப்போய் சமயலறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கோபியின் முகத்தை கழுவி துடைத்துவிட்டான். மோகனும் பிரபாவும் கோபியைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு கூடத்தைக் கழுவி விடத் தலைப்பட்டனர்.

பிரபா கோபியின் கணிணியை எழுப்பினான். ஸ்க்ரீன் சேவரில் சிரித்த ஸ்வேதாவை கட்டிலில் படுத்திருக்கும் கோபி பார்க்கும்படிக்கு கணிணியைத் திருப்பி வைத்தான். நாங்கள் அந்தக் கணிணியின் கொண்டையில் எலி போல உட்கார்ந்திருந்த சிறு முள்ளம் பன்றியை கவனிக்கத் தவறிவிட்டோம். கோபிக்கு அந்த சிறு பன்றியையும் தெரியும். அது ஆணுருவின் குறியை எட்டிப்பிடிக்க தீவிர முயற்சி செய்தது கோபியின் கண்களுக்குள் காட்சியாய் விரிந்தது. அது கணிணியின் கொண்டையிலிருந்து மேலே சட்டகத்தின் மேல் ஏறி தன் நீண்ட நாக்கை நீட்டியது. ஸ்வேதாவின் புகைப்படத்தில் அவளுடைய முலைகளின் மேல் முள்ளம் பன்றியின் நாக்கு அருவருப்பாய் அலைந்து துழாவியது.

வாயில் அழைப்பு மணி ஒலித்தது. மோகன் கதவைத் திறந்தபோது நான்காவது மாடி ஸ்டேட்பாங்க் நரசிம்மன் நின்றிருந்தார். மோகன் அவரை உள்ளே கூப்பிட்டு உட்காரவைத்தான். பிரபா “கெழ்ட்டு கூதியான் வண்ட்டான்” என்று முணு முணுத்தான். “பேச்சிலர்ஸுக்கு இந்த காம்ப்ளெக்ஸில் இடமே தரமாட்டா. நீங்கல்லாம் வேலை பாக்கறவா. ஸ்டூடண்ட்ஸ் இல்ல” என்று ஆரம்பித்த நரசிம்மனை மோகன் இடைமறித்து “நீங்க நெனைக்க மாரியெல்லாம் எதுவும் இல்ல சார். கோபிக்கு ஒடம்பு சரியில்ல” என்றான். “அப்பா அம்மா, சொந்தகாரா இருக்காளோ இல்லியோ” “இருக்கா சார். துபாய்ல. பிரபா இன்னைக்கு ஃபோன்ல கூப்பிடப்போறான்” “என்ன ஒடம்புக்கு?” “எதயோ பாத்து பயந்திருக்கான்.” “பேயா? நம்ம காம்ப்ளெக்ஸ்ல பேயெல்லாம் கெடையாதே” “பேயில்லை சார். பன்னி. முள்ளம் பன்னி” சிறு முள்ளம் பன்றியின் நாக்கு ஸ்வேதா புகைப்படத்தில் அவள் முலைகளுக்குக் கீழே நீண்டது. “முள்ளம் பன்னியா!” நரசிம்மன் ஹாலில் இருந்து இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் கோபி படுத்திருந்த அறைக்குள் எட்டிப்பார்த்தார். “தல வேதன சார். ரெண்டு அடி கூட கொடுத்துப் பாத்துட்டேன். ஒன்னுக்கும் மசியாம ‘பன்னி பன்னி’ங்கிறான்” பிரபாவுக்கு சொல்லும்போதே தொண்டை அடைத்தது. நரசிம்மன் பார்த்திருக்கவே பிரபா கோபியை அணுகி, அவன் நெற்றியைத் தடவி, தலையைக் கோதிவிட்டு “ஒன்னும் பயப்படாதடே. ஒன்னும் ஆகாது கேட்டியா? லேய் கேட்டியா?” என்றான். கோபி கணிணியை நோக்கி கையை நீட்டி சிறு முள்ளம் பன்றியைக் காண்பித்தான். அறை  முழுக்க சிறிதும் பெரிதுமாய் பன்றிகள் நிறைத்துக்கொண்டிருந்தன. நரசிம்மன் கிளம்பத் தலைப்பட்டார். போகிற போக்கில் “ஏதோ இண்டெர்கேஸ்ட் லவ் அஃபேராம். கொன்னு ரயில் தண்டவாளத்துக்கிட்ட போட்டுட்டா. நம்ம காம்ப்ளெக்ஸுக்கு பக்கத்துல. நியுஸ் பேப்பர்ல எல்லாம் வந்திருந்தது. பாத்தேளோ? தம்பிக்கு லவ் அஃபேரெல்லாம் ஒன்னும் இல்லியே” “இல்ல சார்” “பேர் என்ன சொன்னேள்?” “கோபி. ஜி.ஆர்.கோபாலகிருஷ்ணன்” “ கோபி, வரட்டா” என்றவர் “கோபி என் பெயரில்ல சார்" என்று மோகன் சொல்வதைக் காதில் வாங்காமல் இறங்கிப் போனார்.

“முள்ளம் பன்னி உண்மைல  பன்னி இல்ல. அது ஒரு வகை எலி. தெர்யுமா ஒனக்கு” என்றான்பிரபா. கோபியின் கண்கள் அகல விரிந்தன. கிட்டத்தட்ட மயக்கமானவன் போல படுத்திருந்தவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். "பிரபா நீயும் முள்ளம் பன்னிகளைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்ட இல்ல. அது பன்னி இல்ல எலி வகதான் நீ சொன்னது கரெக்டு. அது பெருச்சாளி வக" பிரபா என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவன் போல ஒரு விநாடி நின்று மீண்டான். "பிரபா எல்லா எடமும் முள்ளம் பன்னி நிக்கி. அதான் நீ கூட எப்பப்பாரு கெட்ட வார்த்தயா பேசர. மோகனுக்கு மனசு பூரா விசமா இருக்கு"

நாங்கள் கோபியை ஒரு வழியாய் தூங்க வைத்துவிட்டு துபாயிலிருக்கும் அவன் அப்பாவை தொலைபேசியில் அழைத்து பேசினோம். கோபியின் ரயில் தண்டவாளத்துக்கு அருகே நடைபெற்ற வன்கொலையொன்றைப் பார்த்து சித்தம் கலங்கிவிட்டது போல பேசுகிறான் செயல்படுகிறான் அவன் கண்களுக்கு எங்கே பார்த்தாலும் முள்ளம் பன்றிகளாய் தெரிகின்றன என்று மோகனும் பிரபாவும் மாறி மாறி சொன்னபோது ராமநாதன் ஃபோனில் கடகடவென்று சிரித்தார். நீங்கள் இரண்டு பேரும் கூட அவனுக்கு முள்ளம் பன்றிகளாய் தெரிகிறீர்களா என்று கேட்டு பெரிய ஜோக்கை சொன்னவர் போல வெடித்துச் சிரித்தார். எங்களுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டோம். ஒரு வேளை கோபி நார்மலாய் இருக்க எங்களுக்குத்தான் தண்டவாளத்துக் கொலையைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து புத்தி பேதலித்துவிட்டதோ? ராமநாதன் என் பையன் ஒரு ஜீனியஸ். மேதைகளுக்கே உரிய கிறுக்குத்தனம் அவனுக்கும் உண்டு. நீங்கள்தான் அவன் சொல்வதை கவனிக்கவேண்டும் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார்.

அன்றிரவு நாங்கள் சரியாகத் தூங்கவில்லை. கோபி மட்டும் நன்றாக உறங்கினான். அரைகுறைத் தூக்கத்தில் மோகன் எழுந்து தொலைக்காட்சியை முடுக்கி மிட் நைட் மசாலா பார்க்க யத்தனித்தான். தொலைக்காட்சி திரையெங்கும் முள்ளம் பன்றிகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தன. மோகன் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிட்டு படுக்கக் கிளம்பியபோது பிரபா கட்டிலுக்கடியில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். "என்னவாக்கும் தேடுத?" என்று கேட்டான் மோகன். "கொளுத்த ஆட்டுக்குட்டி போல ஒரு.." "ஒரு?" "பன்னி ஓடிச்சு பாத்துக்க"

மாறுநாள் நாங்கள் யாரும் ஆஃபீசுக்கு போகவில்லை. எல்லோரும் சிக் லீவ் சொல்லிவிட்டோம். மோகன் காலையிலிருந்து யார் யாருக்கோ ஃபோன் பண்ணி பேசிக்கொண்டே இருந்தான். பிரபாவுக்கு நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கோபி தன் முள்ளம் பன்றிகளுடன் ஒத்திசைந்து போய்விட்டது போல இருந்தது; அந்த பன்றிகள் அவன் தோள் கை கால் என்று மேலே ஏறி விளையாடுவதும் அவன் அவற்றை இயல்பானதாக எடுத்துக்கொள்வதுமாய் ஆகிவிட்டிருந்தது. ஒரே இரவில் ஏற்பட்ட அன்னியோன்யம் என்பதாலோ என்னவோ உறவு சீராக இருக்கவில்லை. பன்றிகளின் முட்கள் கிழித்து கோபியின் உடலில் ஆங்காங்கே ரத்தக் கோரைகள் ஏற்பட்டன. என்றாலும் கோபி சிவனே என்றிருந்தான்.

மோகன் ஃபோன் பேசிய நண்பர்களிலொருவர் ஜோதிடர் ஒருவரின் முகவரியைக் கொடுத்து போய்ப் பார்த்துவிட்டுவரச் சொன்னார். அவர் பிரசன்னம் பார்த்து பரிகாரம் சொல்லுவாராம்.

மோகன் ஃபோனிலேயே ஜோதிடரிடம் எங்களின் சமீபத்திய முள்ளம் பன்றி பிரச்சனையைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னான். அவர் எங்களை உடனடியாகக் கிளம்பி வரச் சொன்னார், நாங்கள் அவரை நேரில் சென்று பார்த்தபோது ஜோதிடர் ஆயிரத்து ஒரு ரூபாய் தட்சிணை கேட்டார். மோகன் எந்த சலனமும் இல்லாமல் அவர் கேட்டதை எடுத்துக்கொடுத்தான். பிரபா யாருக்கும் கேட்காவண்ணம் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தான். கோபிக்கு பிரபா தன் மனசுக்குள் என்ன கெட்ட வார்த்தை போட்டான் என்று அறிய ஆவலாயிருந்தது.

"ஒங்கள்ள யாருக்கும் பன்னிமாடசாமி குல தெய்வமா?"

மோகனும் பிரபாவும் கோபியைப்பார்த்தார்கள். கோபி அப்போதுதான் தன் தோளிலிருந்து ஒரு முள்ளம் பன்றியை தரையில் இறக்கிவிட்டான்.

"முள்ளம் பன்னி பன்னி இல்ல. எலி. பெருச்சாளி இனம். இல்லடா பிரபா?"

ஜோதிடர் "தம்பி என்ன சொல்லுதாரு" என்றார்.

"ஜோசியர் சார் கோபி என்ன சொல்லுதாருன்னா, நீங்க நெனைக்க மாரி எங்களுக்கு பன்னி மாட சாமி குல தெய்வமாட்டு இருந்து அத நாங்க கவனிக்காம வுட்டு அதனால இப்ப முள்ளம் பன்னியா கோபிக்கு முன்னால மாடசாமி சுத்துதுன்னு இல்ல. முள்ளம் பன்னி ஒரு எலி. பெருச்சாளி வகயறா. அதனால எலி மாடசாமி குல தெய்வமான்னுதான் கோபிகிட்ட கேட்கனும்"

"கோபி யாரு?"

"அவனேதான் சார், தன்னைத் தானே அவன் பேர் சொல்லி கூப்ட்டுக்குவான்"

ஜோதிடர் எங்களை விநோதமாகப் பார்த்தார். கோபியைக் கூப்பிட்டு சோவிகளைக் குலுக்கிப் போடச் சொன்னார். கோபி சோவிகளை முள்ளம்பன்றிகளிடம் காட்டி அவைகளிடம் அனுமதி வாங்கிவிட்டு குலுக்கிப் போட்டான். ஒற்றைச் சோவி மட்டும் மேல் நோக்கி திறந்து விழுந்தது.

"மாகாளில்லா தம்பிய கண் தொறந்து பாக்கா!" முள்ளம் பன்றிகள் சுற்றும் முற்றும் கும்மாளமிட்டு குட்டிக்கரணம் போட்டன.

"திருப்பதிக்கு போங்க. கீழ அடிவாரத்துலேயே வராகமூர்த்தி இருக்கார். அவருக்கு ஒரு சகஸ்ரநாமம் பன்னிட்டு வந்துருங்க. எல்லாம் சரியாப் போவும். இல்லய இங்க பக்கத்துல திருவிடந்தைக்குப் போங்க வராக மூர்த்திக்கு தொளசி மால வாங்கி சாத்திட்டு மூனு தடவ சுத்திட்டு வந்துருங்க"

"கோபிதான் அப்பவே சொன்னானே முள்ளம் பன்னி பன்னி இல்லன்னுட்டு. பன்னி தொந்தரவு தருது அதனால வராகம், பன்னி அவதாரத்த கும்புடு அப்டின்னு பரிகாரம் சொல்றீங்க. கோபி சொல்றான் பிரபா சொல்றான் முள்ளம் பன்னி பன்னி இல்ல பெர்ச்சாளி"

"தம்பி, சாதிய வச்சு ஆளா, ஆள வச்சு சாதியா? சாதிய வச்சுதான ஆளு. அது மாதிரிதான் இதுவும். பெருச்சாளி வகயறாக்கு எதுக்கு பெரியவங்க பன்னின்னு பேர் வச்சாங்க? குலத்தளவே ஆகுமாம் குணம். பன்னியால தொந்திரவுன்னா பன்னி அவதாரத்துக்குத்தான் பிரீதி செய்யனும். போய்ட்டு வாங்க, நல்லா இருங்க"

நாங்கள் சோர்வாக எங்கள் அபார்ட்மெண்டுக்குத் திரும்பினோம். வழியெல்லாம் பிரபாவும் மோகனும் கோபியைத் திட்டிக்கொண்டே வந்தனர். "எல்லாத்தையும் கெடுக்கிறாம்பா இவன்" என்றார்கள், கோபி தன் முள்ளம் பன்றிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே கோபி போய் தன் கணிணியில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். "என்ன வேலயா?" "இல்ல கத" "கதயா! என்ன தலப்பு?" "நாங்கள் கோபியை மிரட்டினோம்".















No comments: