Friday, July 26, 2013

Avant garde இலக்கியம், இசை, படங்கள், ஓவியம் ஆகியவற்றுக்கான வலைத்தளம்

போர்ஹெஸின் உரைகளை நான் இந்தத் தளத்தில் பகிர்ந்ததை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். என் தளத்துக்கு வருவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழில் Avant garde இலக்கியத்திற்கான  சாத்தியப்பாடுகளை பழைமைவாதிகளும் பத்தாம் பசலி அம்மாஞ்சிகளும் இன்னும் முழுமையாக குழி தோண்டிப் புதைத்துவிடவில்லை என்பதற்கான அறிகுறியாகவே போர்ஹெஸின் உரைகளுக்கான வரவேற்பினை நான் கண்டுகொண்டேன். ஒரு மொழியின், கலாச்சாரத்தின் வளம் கலை இலக்கியத்தில் துணிச்சலாக மேற்கொள்ளப்படுக்கின்ற பரிசோதனை முன்னோடி முயற்சிகளினாலேயே சாத்தியமாகிறது. அறுதப் பழசான, சந்தையில் விலை போகிற, கற்காலத்தில் செத்த மூளைகளினால் உற்பத்தி செய்து நிரப்பப்படுகின்ற அம்மாஞ்சி, மடிசஞ்சி எழுத்துக்களை காலத்தின் ஓட்டம் அலட்சியமாக அழித்துவிடும். எதிர்கால சந்ததியினர் மடிசஞ்சிகளின் வெளிப்பாட்டு குப்பைகளைப் படித்து இவற்றையா நம் முந்தைய தலைமுறையினர் வாசித்துக் கொண்டாடினர் என்று வியப்பர். நம் சமகாலத்தில் ஓரமாக விளிம்புகளில் சிறு குழுவினரிடம் மட்டுமே செல்வாக்கு பெற்று விளங்கும் Avant garde கலை இலக்கிய படைப்புகள் எதிர்காலத்தில் canonical literature ஆகக் கொண்டாடப்படும். உலகம் முழுவதும் நடப்பது இதுதான் என்றாலும் உலகின் பிற பகுதிகளில் avant garde கலை இலக்கியங்களை  தீர்க்கதரிசனம் உடைய இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் விழிப்புடன் இருந்து பரிசோதனைகளை தொடர்ந்து அடையாளம் காட்டி, ஆதரித்து தங்கள் பண்பாட்டிற்கு வளம் சேர்த்து வருகிறார்கள். பழமைவாதிகள் அடைக்கும் avant garde கலை இலக்கிய வாசல்களை அவர்கள் தொடர்ந்து முட்டி மோதி உடைத்துவருகிறார்கள்.  அப்படிப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகவே http://www.ubu.com  வலைத்தளம் செயல்பட்டு வருகிறது. போர்ஹெஸின் ஹார்வர்ட் பல்கலைக்கழக உரைகளையும் நான் இந்தத் தளத்தில்தான்  கேட்டேன். Avant garde இலக்கியம், இசை, திரைப்படங்கள், தத்துவம், ஓவியங்கள், 'வெளியாள் கலைகள்' (outsider arts), ethnopoetic arts ஆகியவை இந்தத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பாருங்கள்.


No comments: