Thursday, January 16, 2014

அழாதே மச்சக்கன்னி!| நாவல் | அத்தியாயம் 3

கடிகாரங்களாலான வனமனமிருகம் உறுமியது:


Jacek Yerka's painting. Courtesy website http://mayhemandmuse.com/jacek-yerkas-surrealist-paintings-suspend-belief/ 

கடிகாரங்களாலான வனமனமிருகம் உறுமியது:

சூனியம் நிரம்பிய வரி என்பது ஷேக்ஸ்பியரின் லியர் அரசன் கேட்கும் “How much do you love me?” என்பதே என்று சஞ்சய் தான் சொன்னதை கண்ணுக்குப் புலப்படாத மனக்கடிகாரம் ஒன்று தீர்மானித்ததாக நினைத்தான். எல்லோருடைய கடிகாரத்தின் முட்களும் டிக், டிக், டிக் என்று சீராக நகரும் என்றால் சஞ்சயின் மனக்கடிகாரம் மட்டும் டி-டாக்-டிக் என்று உயர்ந்து தாழ்ந்து ஒடும். அதன் சீரொலி டிக்குக்கு பதிலாக அது டாக் என்ற உயர்ந்து ஒலித்தபோது அவன் வேறொரு அகத்தூண்டலை அடைவதாக நினைத்தான். ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளாகவும் சிறிதும் பெரிதுமாக பல கடிகாரங்கள் ஓடுவதாகவும் அவையனைத்தும் சேர்ந்து வன்முறையான வனவிலங்காக இருப்பதாகவும் அவன் கற்பிதம் செய்து வைத்திருந்தான். பல கடிகாரங்களின் பல நேரக்கோடுகள் சந்திக்கும் மனித வாழ்க்கையின் சம்பவங்களை ஒரே நேர்கோட்டின் புள்ளிகளாக்கி அறிய முடியாது என்று அவன் உறுதியாக நம்பினான்.  சிறுவனாக இருந்தபோதிலிருந்தே தனிமை அவனை பலிகொண்டுவிட்டது; வயதாக வயதாக பகற்கனவுகளில் ஆழ்ந்திருக்கும் பழக்கம்  அதிகரிக்க கடிகாரங்களால் ஆன தன் மன வன மிருகமே தன் துணை என்று அவன் நம்பத் தலைப்பட்டான். 

சஞ்சய்க்கு ஏழு வயதாக இருக்கும்போது அவனுடைய அம்மா விசாலாட்சி அவனை சென்னை பொருட்காட்சித் திடலில் நடந்த கண்காட்சிக்குக் கூட்டிச்சென்றாள். ‘கடற்கன்னி காட்சி’ என்று தட்டி எழுதி அறிவிக்கப்பட்ட கூடமொன்றில்  பச்சை நிற மீன் செதில்களாலான இடுப்பும் வாலும் அசைத்து கண்ணாடித் தொட்டி நீரினுள் கிடந்த மச்சக்கன்னி சஞ்சயை வெகுவாக கவர்ந்தாள். கடற்கன்னி கூடத்தில் கோமாளி வேடமணிந்த காவலாளி ஒருவன் குழந்தைகள் கடற்கன்னி படுத்திருந்த கண்ணாடித் தொட்டியினருகே வராமலிருக்க கையிலிருந்த கம்பினால் தரையில் அடித்துக்கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும், குட்டிக்கரணங்கள் போட்டுக்கொண்டும் இருந்தான். கோமாளி பாடிய

“தட்டாமாலை தாமரைப்பூ
சுற்றிச் சுற்றி சுண்ணாம்பு
கிட்ட வந்தால் குட்டுவேன்
எட்டப்போனால் துப்புவேன்”

என்ற பாடலுக்கு கூடியிருந்த குழந்தைகள் கும்மாளமிட்டுச் சிரித்தார்கள். சஞ்சயின் மனதில் அப்போது உருவாகிக்கொண்டிருந்த கடிகார வன மிருகத்தில் புதிய அங்கமாய் ஒரு கடிகாரம் சேர்ந்தது; அது டி-டிக்-டாக்-டிக் என்பதினையே ‘கிட்டவந்தால் குட்டுவேன், எட்டப்போனால் துப்புவேன்’ என்ற பாடலின் லயம் போல ஒலித்தது. 

சஞ்சய் கடற்கன்னிகளைப் பற்றியே பொருட்காட்சிக்கு சென்று வந்ததிலிருந்து பேசிக்கொண்டிருந்ததால் விசாலாட்சி அவனுக்கு ஒரு வீடியோ விளையாட்டு வாங்கித் தந்தாள். கூந்தலை அவிழ்த்துவிட்டு தண்ணீருக்குள் வீடியோ திரையில் நீந்தும் மச்சக்கன்னிகளை  கூம்பு வடிவ வலைக்குள் பிடிக்க வேண்டும் என்பது விளையாட்டு. மச்சக்கன்னிகளை வலையில் பிடிக்கும்போது வலை பாறைகளிலோ, நீந்தும் முள் மீன்களின் மேலோ உரசிவிடக்கூடாது. கொரிய மச்சக்கன்னி என்று பிரிக்கப்பட்ட பிம்பங்கள் வீடியோ திரையின் அடியாழத்தில் நீந்துபவையாக இருந்தன; அவை சஞ்சயின் வலையில் சிக்குவதாக இல்லை. விசாலாட்சி சஞ்சயைத் தன் மடியில் தூக்கி வைத்து அந்த மச்சக்கனியை பிடிப்பதற்கு அவன் கூட சேர்ந்து விளையாடினாள்.

கொரிய மச்சக்கன்னியை வலையுடன் துரத்தி கடலின் ஆழத்துக்குள் செல்லச் செல்ல புதிது புதிதாய் உயிரினங்கள் பல வண்ணம் காட்டி ஓடின. தன் சித்திரக்கண்களைச் சிமிட்டி வா வா என்றழைத்து வாலாட்டிய அவள் ஆக்டோபசின் பின்னே மறைந்தாள். ரத்த வேட்கை கொண்ட கோரைப் பற்களை வாய் பிளந்து காட்டிய சுறா மீன்கள் வலையைக் கடித்துக் கிழிக்க சீறி வந்தன. சஞ்சயின் கையைப் பிடித்து வலையை அவற்றின் பற்களிடமிருந்து லாவகமாக சுழற்றி தப்பித்தபோது வனமிருக கடிகாரம் டிக்-டாக்-டிக் என்றது.  அடுத்து வந்த காட்சி விசாலாட்சிக்கு அதிர்ச்சியளித்தது. மச்சக்கன்னி இன்னும் கடலின் அடியாழத்துக்குச் செல்ல பல கடற்பசுக்கள் கூட்டமாய் வந்தன. அந்தக் கடற்பசுக்கள் தங்கள் மீன் வால் துடுப்பினை மேல் நோக்கி அசைத்து தங்களின் மனித யோனிக்களை விரித்துக் காட்டி பரிகாசம் செய்தன. விசாலாட்சி என்ன விளையாட்டை வாங்கிக்கொடுத்திருக்கிறோம் என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள். சஞ்சய் அறிந்தும் அறியாமலும் கடற்பசுக்களைப் பார்த்து கைகொட்டி சிரித்தான். எங்கோ ஒரு கடிகாரக்குருவி குக்கூ குக்கூ என்று ஒன்பது முறை கூவ அதைத் தொடர்ந்து ஆலயமணி ஒன்பது முறை நிதானமாக அடித்து ஓய்ந்தது. விசாலாட்சி சஞ்சயின் கை வழி வலையை வேகமாக வீசி கொரிய மச்சக்கன்னியைப் பிடித்தாள். “கிட்டப்போனால் குட்டுவேன், எட்டப்போனால் துப்புவேன்” என்று பாடியபடியே குழந்தை சஞ்சய் கொரிய மச்சக்கன்னியை கடலின் மேற்பரப்புக்கு கொண்டுவர அவள் தன் மீன் உடுப்பினை அவிழ்த்து எறிந்து மனித யோனி காட்டி, வுய் என்று நீண்ட விசிலடித்து, கைவிரல்களை உதட்டில் வைத்து காற்றில் முத்தமொன்றை பறக்கவிட்டு, முத்துமாலையொன்றினை சஞ்சயை நோக்கி வீசி எறிந்துவிட்டு மாயமாய் மறைந்துபோனாள்.

விசாலாட்சி அவனை அந்த விளையாட்டினை அதற்கப்புறம் விளையாட அனுமதிக்கவேயில்லை. சஞ்சய் பெரியவனாகி கல்லூரியில் படிக்கும்போது தற்செயலாய் அறிவியல் கலைக்களஞ்சியத்தைப் புரட்டிக்கொண்டிருந்தபோது கடற்பசுக்களுக்கு மனித யோனியைப் போன்றே தோற்றமுடைய பிறப்புறுப்புகள் உண்டு என வாசித்தான். கடற்பசுக்களை அதனால் மச்சக்கன்னிகள் என்று நினைத்து அவற்றுடன் உடல் உறவில் ஈடுப்பட்ட மாலுமிகளே மச்சக்கன்னி என்ற புராதன தொன்மம் உலகெங்கும் உருவாகக் காரணமாயிருந்தவர்கள் என்றும் அவன் வாசித்துத் தெரிந்து கொண்டான். தான் சிறு வயதில் விளையாடிய வீடியோ விளையாட்டின் ஆபாசம் என தன் தாய் கருதியது உண்மையில் சில அறிவியல் உண்மைகள் சார்ந்தது என்ற விபரம் அவனுக்கு ஆச்சரியமளிப்பதாய் இருந்தது.

விசாலாட்சி சஞ்சய்க்கு அவனுடைய தந்தையைப் பற்றி எதுவுமே சொல்லாமல் வளர்த்தாள். சஞ்சய் கர்ப்பத்தில் இருந்தபோது விமான விபத்தொன்றில் தென் கொரியாவைச் சேர்ந்த சேஜோ தீவின் அருகே இறந்துவிட்டதாக மட்டுமே அவன் அறிந்திருந்தான். தந்தை நஞ்சுண்டன் அவனுக்கு ஒரு மங்கலான புகைப்படமும் பெயரும் மாத்திரமே. கொரிய மச்சக்கன்னிகள், கடற்பசுக்கள் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் வழக்காறுகளை வாசித்துத் தெரிந்து கொண்டபோது நஞ்சுண்டன் சேஜோ தீவருகே மரண்மடைந்தார் என்ற செய்திக்கும் மச்சக்கன்னிகளுக்கும் இடையே ஏதோ ஒரு அறிய இயலாத உறவு இருப்பதாக சஞ்சய் நினைக்க ஆரம்பித்தான். விசாலாட்சியுடன் தன் தந்தையைப் பற்றி அவன் அதிகமும் தெரிந்து கொள்ளவிரும்பிய கல்லூரி நாட்களில் அவன் தொடர்ந்து கடல் வாழ் உயிரினங்களைப் பற்றியும் அவன் மேலும் மேலும் வாசித்தான். 

விசாலாட்சிக்கு நஞ்சுண்டனைப் பற்றியும் அவன் மரணத்தையும் பற்றி பேசுவது வேதனை நிரம்பிய நினைவுகளைத் தூண்டுவதாயிருந்தது. விதவையாய் தான் இறந்த கணவனின் குழந்தையினைப் பெற்றெடுக்க வைராக்கியமாய் இருந்ததை அவள் கொடுங்கனவெனவே மறக்க விரும்பினாள். நஞ்சுண்டன் ஒரு விமான ஓட்டி அவன் விமான விபத்தில் இறந்தபின் அவன் உடல் கூட கிடைக்கவில்லை என்பதைத் தவிர அவள் சஞ்சய்க்கு வேறெதுவும் சொல்லவில்லை; சொல்ல விரும்பவும் இல்லை. வீடியோ விளையாட்டுக்களிலும், புத்தகங்களிலுமே சஞ்சயின் குழந்தைபருவம் கழிந்துவிட்டதாக இருந்தால் விசாலாட்சியின் தனிமை அவளுடைய வங்கி வேலையிலேயே கழிந்துவிட்டது. 

சஞ்சயை அவன் வேலை பார்த்த கம்பெனி கொரியாவுக்கு அனுப்பப்போகிறது என்று தெரியவந்தபோது நினைவுகளின் கடிகாரங்கள் அவர்கள் நனவுகளில் துடிப்புடன் இயங்க ஆரம்பித்தன. மார்கழிமாதத்தின் குளிர் உடலில் உறைக்கும் முன்னிரவில் சாப்பாட்டுத் தட்டின் முன் உட்கார்ந்திருக்கையில் விசாலாட்சியிடம் ஏதோ சட்டினியில் உப்பு போதவில்லை என்பதைச் சொல்வது போல “அம்மா, கொரியாவுக்கு போகிறேன்” என்றான் சஞ்சய். விசாலாட்சி நீர்த்தொட்டியின் அடையிலிருந்து மேலெழும்பி வரும் மீன் போல மெதுவே வெளியே வந்து “என்ன?” என்றாள். சஞ்சய் ஒருகையில் கை பேசியில் குறுஞ்செய்திகளைப் பார்த்துக்கொண்டே, மறுகையால் தோசை விள்ளலை வாயில் போட்டவாறு இருந்தான். விசாலாட்சிக்கு இப்போதுதான் சற்று முன்புதான் தன் முலைகளில் முட்டமுட்ட பாலருந்திய குழவி இது  அதற்குள்ளாகவா இப்படி வாலிபனாய், அந்நியனாய் வளர்ந்து நிற்கிறது  என்று தோன்றியது.

“கொரியா போரேன்மா. ஒரு மாசம். அங்கே டிரைய்னிங். நானும் சின்னச்சாமியும் போறோம்”

விசாலாட்சியின் வலது இமை தன்னிச்சையாய் துடிக்க ஆரம்பித்தது. இமைத்துடிப்புகளை அளக்கும் கடிகாரங்கள் இருக்கின்றனவா என்று அவள் தனக்குள் கேட்டுக்கொண்டாள். 

“கொரியாவா?”

“யெஸ்மா. அங்கதான எங்க ஹெட்குவார்ட்டர்ஸ் இருக்கு?”

“அப்பவோட தெவசம் வருதேடா, அடுத்த மாசம்”

“ஹேங் ஆன். அம்மா நீ கொரியாலதான அப்பா போனதா நீ சொல்லுவ? அங்கயே திதி பண்ணிடவா”

விசாலாட்சியின் இரு இமைகளும் கடகடவென்று துடித்தன. பெரும் வலியில் ஒரு உடல் வானில் வெடித்து சிதறுவதாய் அவள் கண்ட கொடுங்கனவு மீண்டும் ஒரு முறை மனத் திரையில் ஓடி மறைந்தது. டிக்-டாக்-டிக்.

“அப்பா திதிக்கு வருவாரில்லையா அந்த குருக்கள்கிட்ட கேட்டுச் சொல்றேன்”

அவர்கள் அதற்குப் பின் அமைதியாய் சாப்பிட்டு முடித்தார்கள். சீக்கிரமே அவர்கள் தத்தம் அறைகளுக்கு உறங்கச் சென்றார்கள். தூக்கம் பிடிக்காமல் சஞ்சய் கொரியா, கடற்பசுக்கள், ஆழ்கடல் உயிரினங்கள் என்று இணையத்தில் வாசித்திருந்து விட்டு, கட்டிலில் விழுந்து கிடந்தான். ஏதேதோ கொடுங்கனவுகளைக் கண்டு அம்மா பக்கத்து அறையில் விசும்பும் சப்தம் இரவு முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது.

எப்போது உறங்கினான் என்று சஞ்சய்க்கு ஓர்மையில்லை; ஆனால் அவனும் மனித யோனியை தன் பிறப்புறுப்பாய் தூக்கிக்காட்டிவிட்டு கடலாழத்தில் நீந்தி மறையும் கடற்பசுவைக் கனவில் கண்டு மெலிதாய் விசும்பல் போலொரு ஒலியெழுப்பினான். அறியப்படாத தாபங்களோடு உறுமியது கடிகாரங்களாலான மனவனமிருகம்.


   

No comments: