Tuesday, January 14, 2014

அழாதே மச்சக்கன்னி! | நாவல் | அத்தியாயம் 2

கைமுகக்கண்ணாடி கண்டதும் குமுறியதும்:
கைமுகக்கண்ணாடி கண்டதும் குமுறியதும்:

மேற்புறங்களின், தோற்றங்களின் விஞ்ஞானி கண்ணாடி என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. கண்ணுக்குப் புலனாகாதவை அல்ல கண்ணுக்குப் புலனாகுபவையே ரகசியங்கள் நிறைந்தவை. தோற்றங்களின் ரகசியங்களை எளிதில் அவிழ்த்துவிட முடியாது என்பதையே கண்ணாடிகள் உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதிலும் வெண் மெழுகுப்பதுமை போன்ற அழகுப்பதுமைகளான கொரியப் பெண்களின் முகங்களில் என்ன ரகசியங்கள் இருக்கின்றன என்று யாரால் சொல்ல முடியும்? கைமுகக்கண்ணாடிக்கு நினைவுகளும் கிடையாது. இன்று இப்போது இங்கே இந்த கணத்தில் தன் அளவுக்கு உட்பட்டு தெரிவதே உச்சபட்ச உண்மை; அதில் அழிந்த முந்தைய கணமும் இல்லை அறியப்படாத அடுத்த கணமும் இல்லை. அழகின் தர்க்கமும் அதுதான். அந்த அழகின் தர்க்கத்தில் கரையாத பெண் முகமும் உண்டோ?

ஒளியின் பேராழத்தில் மறைந்திருக்கும் உதரக்கோது என பெண் முகத்தில் மறைந்திருக்கும் வேட்கையின் ரகசிய சமிக்ஞையினை கணமேனும் பிடித்து விசிறுவதற்காகப் படைக்கப்பட்டது கை முகக் கண்ணாடி; தானற்றது எனவே அதுவானது.

கள்ள இந்தியன் யுங் மின்னுக்குக் கொடுத்த கைமுகக்கண்ணாடி போகிற போக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. விரைத்த வளப்பமான ஆண்குறியின் மரச்சிற்பம் அதன் கைப்பிடி. செந்தேக்கு மரத்தில் வேலைப்பாடுகளுடன் ஆனது. அந்த மரச்சிற்பத்தின் கைக்கொள்ளலில் விநாடியேனும் முகம் சிவக்கும் பெண்முகம் காட்டும் கண்ணாடி.  யுங் மின்னுக்கு அந்தக் கண்ணாடி இந்தியனின் பரிசாய்ப் போய் சேர்வதற்கு முன் அதன் பழைய பொதியிலிருந்து விடுவிக்கப்படாமலேயே இருந்தது. இந்தியனின் முகத்தினை பிடிப்பதற்கான சந்தர்ப்பம் அதற்கு கிடைக்காமலேயே அது வரை இருந்தது.  புதியப் பரிசுப்பொதியில் அதை வைப்பதற்காக அவன் இசையரங்கில் வெளியில் எடுத்தபோதே பெண் முகங்களுக்கான ஏக்கத்துடன் வெளியுலகம் கண்டது அது. பட்டுச்சிட்டு அப்போது அறிவித்து பாடியது “ பார் பார் பாரங்கே நட்சத்திரங்களின் சிற்றலைகளை சுந்தரவதனங்களில் பிடிக்கக்காத்திருக்கும் காலத்தின் ஆடி” என்று.

இந்தியனின் முழ நீளப் பெயரினை சொல்வதேயில்லை பட்டுச்சிட்டு. இசையரங்கத்தின் மேற்கூரையில் இறந்தோர் பாடலிலிருந்து நிகழ்காலத்திற்குள் தப்பி வந்து வால் சிலுப்பி அமர்ந்தபோது கதை சொல்வதில் தன் போட்டியாளர் இந்தக் கண்ணாடிதான் என்றும் சொன்னது பட்டுச்சிட்டு. விருட் விருட் என கிம் கி வோனும் இந்தியனும் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு மேல் இரு முறை பறந்து கைமுகக்கண்ணாடிக்கு நல்வரவு முகமன் கூறியபோது பொறாமையில் சமைந்தது கண்ணாடி. பட்டுச்சிட்டின் பருத்த சிறு  வயிற்றினையும் அதன் சிலுப்பு கொண்டையினையும் வாலினையும் கணங்களில் அழியும் சித்திரங்களாய் பிடித்ததால் உண்டானதல்ல கண்ணாடியின் பொறாமை. தான் ஓரிடத்தில் உறைந்திருந்து தன்னில் பதியும் காட்சிகளை மட்டும் கதையாய் சொல்ல, பட்டுச்சிட்டோ பறந்து பறந்து எவ்வளவு பார்க்கும் எவ்வளவு கதை சொல்லும் எனக் குமுறியது கண்ணாடி. அந்த சமயத்தில்தான் நீல நிறப் பாவாடைப் பெண்கள் கூட்டாக ஏதோ உச்சாடனம் ஒன்றை கொரிய மொழியில் ஓதினார்கள். என்ன பாடுகிறார்கள் என்று கேட்டான் இந்தியன் தன் கையிலிருந்த கண்ணாடியை சிறிது மேலே தூக்கிப்பிடித்தவாறு. இந்தியனுக்கு விஷமம் சொட்டும் அகண்ட ஆழமான விழிகள், மெல்லிய உதடுகள், கனத்த கரிய மீசை, தனித்த குணங்களற்ற மூக்கு. கவி கிம் கி வோன் “மொழிபெயர்ப்பது கடினம் ஆனால் மேக்பத் நாடகத்தில் சூனியக்காரிகள் பாடுவார்களே “fair is foul, foul is fair” என்று, அதற்கு நிகரான வரிகள் இவை” என்றான். இந்தியனின் கண்களில் விஷமம் மேலும் ஏறியது. “மேக்பத்தில் சூனியக்காரிகள் பாடுவது நடைமுறை; சூனியத்தின் அடர்த்தி ஏறிய வரியினை லியர் அரசனே சொல்கிறான்” என்று சொன்ன இந்தியன் மேலும் கண்ணாடியை உயர்த்திப் பிடித்தான். எந்த வரி அது என்று கேட்ட கிம் கி வோன் பெண்களைப் போல நீண்ட கூந்தல் வளர்த்திருந்தான்; ஒடுங்கிய கன்னம், இடுங்கிய கண்கள். ஆனால் அந்தக் கண்களில் வானில் அனாதையாய் விரைந்தழியும் எரிகல்லின் தீவிரம் இருந்தது. “கவியல்லவா நீ உனக்குத் தெரியாததா” என்ற இந்தியன் கண்ணாடியை உயர்த்தி மேடையில் இருந்த யுங் மின்னை நோக்கி காட்டியவாறே “How much do you love me?” என்றான்.    

யுங் மின் தற்செயலாய் நிமிர்ந்து பார்த்தாள். காயக்வத்தை வாசிப்பதிலும் பாடுவதிலும் ஆழ்ந்திருந்த அவள் பார்வை விலகிச் செல்லும் படகுகளைப் பார்க்கும் கரைவாசிகளின் அலட்சியத்தை ஒத்திருந்தது. ஆனால் கண்ணாடியிலோ யுங் மின்னின் பார்வை, ஒளி ஊற்று ஒன்றின் இமை திறந்த அமிழ்தாயிற்று. “என் ஆத்மாவைக் கரைத்து நான் உன் கண்களுக்கு அஞ்சன மை தீட்டவா” என்று தமிழ்க் கவியொருவனின் வரியொன்றினை தன்னிச்சையாய் சொல்லியபடியே கண்ணாடியை பரிசுப்பொதியினுள் வைத்தான் இந்தியன். 

பட்டுச்சிட்டு “அந்தரத்தில் பறக்கிறது பார், அதிசயத்தைப் பார்” என்று காயக்வம் காற்றில் மேலெழும்பி பறந்ததை அண்டரண்ட பட்சி போல கூவி கூப்பாடு போட்டு உலகுக்கு அறிவித்தபோது இருள் அடர்ந்த பரிசுப்பொதிக்குள் அசைவற்றிருந்தது கண்ணாடி. “ஒரு கதையைச் சொல்வதால் ஏற்படும் மனப்பதிவு போன்றதே உலகம்” என்ற யோகவசிஷ்டத்தின் வாக்கியத்தை முணுமுணுத்துக் கிடந்தது அது.

யுங் மின் பரிசுப்பொதியைத் திறந்து அதன் கைப்பிடியைப் பற்றியபோது அவள் விரல்களின் மெலிதான நடுக்கத்தை குஷாலாக ஏற்றபடியே இருளிலிருந்து வெளிவந்தது கண்ணாடி. யுங் மின் முந்தைய நாள் மேடை நிகழ்ச்சியின் ஒப்பனைகள் ஏதுமற்று துடைத்த வெண்பளிங்கென இருந்தாள். அவள் முகம் மட்டுமே பிம்பமாய் கண்ணாடியின் சட்டகத்தினுள் அடங்கியபோது இந்தியனும் கிம் கி வோனும் பேசுவது வேறொரு உலகத்திலிருந்து வரும் சப்தங்கள் போல கேட்டுக்கொண்டிருந்தன. தன் முகத்தின் மோகன பிம்பத்தை வேறெந்த கண்ணாடியும் இவ்வளவு துல்லியமாகக் காட்டியதில்லை என்று நினைத்த யுங் மின் தன் பிம்பத்தின் மேல் மையல் கொண்டாள். தன் போட்டி கதை சொல்லியான பட்டுச்சிட்டு இந்த கணத்தை என்றுமே அறியமுடியாது என்று கண்ணாடி பெருமிதம் அடைந்தது.

தன் நீண்ட கூந்தலை அவிழ்த்துவிட்டு தன் முகத்தை மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள் யுங் மின். கண்ணாடியின் சட்டகத்திற்குள் அவள் முகம் பழமையான தைல ஓவியம் போல் இருப்பதாகச் சொன்னான் அவள் பின்னால் நின்ற இந்தியன். ஆதி குகைகளில் முதலில் வரைந்த அப்சரசின் வண்ண தைல ஓவியம் போலத்தான் உண்மையில் இருந்தது கண்ணாடியில் தெரிந்த யுங் மின்னின் முகம். ஒளியின் ஊற்று போன்று ஆழம் பெற்ற கண்கள்; நேர்கோட்டில் விழுந்து நீளும் கூந்தல். அவள் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்று யாராலுமே அறிய முடியாது.

இந்தியாவின் மிகச் சிறந்த ஆசாரிகளால் தேக்கு மரத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன; பேரழகிகளும் அரசிகளும் பயன்படுத்திய கலைப் பொருள் இந்த கண்ணாடி என்று தொடர்ந்தான் இந்தியன்.

“உங்கள் பெயரை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள்” என்ற யுங் மின்னின் உதடுகளில் செவ்வரிகள் ஓடின; வெண்பளிங்கு கழுத்து மெலிதாக நடுங்கியது. 

“சஞ்சய்”

“சஞ்சய்” என்று மீண்டுமொருமுறை அவள் உச்சரிப்பதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான் கிம் கி வோன்.

யுங் மின் இயல்பாகத் தன் கைமுகக்கண்ணாடியை இடுப்பின் பின் கச்சையில் சொருகிக்கொண்டாள். யுங் மின்னின் பின்பாகத்தில் பளிங்கின் வழவழப்பினை எதிர்பார்த்து இடுப்பு கச்சையின் வழி இறங்கிய கண்ணாடியின் கைப்பிடிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. மீனின் சிறு சிறு சொர சொரப்பான செதில்களால் நிறைந்திருந்தது யுங் மின்னின் பிருஷ்டங்கள்.  அவளுடைய கீழ் முதுகில் முகம் பதித்த கண்ணாடி பெருவெளியின் எல்லையின்மையை ரோமக்கால்களற்ற பெண் சருமமாகக் கண்டது.

யுங் மின்னின் பிருஷ்டங்களின் சிறு சிறு செதில்கள் லேசான பிசுபிசுப்புடைய கடற்பாசி போல அடர்ந்திருந்தன. கடலாழத்தின் நினைவுகளை அவை சுமந்திருக்குமா என்பதை அறியமுடியாமல் தவித்தது கைப்பிடி. கடலா பாலையா என அறிய முடியாதவாறு விரிந்திருக்கிறதே எனக் குமுறியது கண்ணாடி. பரிசுப்பொதியின் அந்தகார இருளின் எல்லையின்மை ஒரு ரகம் என்றால் இந்த சரும வெண் கடல் இன்னொரு வகை எல்லையின்மை என்று சொல்லிக்கொண்டது கண்ணாடி.

யுங் மின்னின் பின்பாக மீனின் செதில்கள் வெல்வெட்டின் மென்மையைக் கொண்டிருந்தன. அவள் நடக்கும்போது அவற்றின் விசித்திர சலனம் அபூர்வ கிளர்ச்சியை உண்டாக்குவதாயிருந்தது. ஆண் விரல்களின் தாபத்துடன் யுங் மின்னின் இடுப்புக் கச்சையில் அலைவுற்ற கண்ணாடியின் கைப்பிடி  பட்டுச்சிட்டு இவ்வனுபவத்தை எப்படிச் சொல்வாள் என்று நினைக்காமலில்லை.

கண்ணாடிக்கு அன்றிரவு இவையெல்லாவற்றையும் விட பெரிய அனுபவம் காத்திருப்பதை அது அறிந்திருக்கவில்லை. ஜிண்டோவின் கடற்கரையில் யுங் மின்னை துரத்திய கிம் அவளுடைய நீலப்பாவாடையைக் கிழித்தபோது கண்ணாடி தவறி கீழே விழுந்ததில்லையா அப்போது அது கொரிய மண்ணின் மேல் விரிந்திருந்த வானத்தைக் கண்டது. ஒரே நாளில் யுங் மின்னின் முகம், சருமம், வானம் என மூன்று வகை எல்லையின்மைகளைக் கண்டு திகைத்து சம்பவங்களற்று உறைந்திருக்கையில் கண்ணாடியின் மேற்பரப்பில் விழுந்தது ஒற்றை ரத்தத்துளி.

மேற்புறங்களின் எல்லையின்மைகளில் நாம் தொலைந்துவிடாமல் காப்பாற்றுவது ரத்தத்துளிகளின்றி வேறென்ன? 

No comments: