Wednesday, January 1, 2014

ஜெயமோகனின் மகாபாரதத்திற்கு வாழ்த்துகள்

ஜெயமோகன் வியாசர் பாதங்களைப் பணிந்து மகாபாரதத்தை மீண்டும் நவீனமாக எழுதப்போவதாக நேற்று இணையத்தில் வாசித்த அறிக்கையும் அதற்குத் துணையாக ஜெகசிற்பியன் அல்லது சாண்டில்யன் நாவலுக்கு போடப்பட்ட படம் போல வரையப்பட்டிருந்த படமும்  எனக்கு எதிர்மறை எண்ணங்களையே தோற்றுவித்தன. ஆனால் இன்று அவருடைய மகாபாரதத்தின் ‘முதல் கனல்’ என்ற முதல் அத்தியாயத்தை படித்தவுடன் என் எண்ணம் அடியோடு மகிழ்ச்சியாக மாறிவிட்டது. எண்பதுகளில் எழுதத் தொடங்கிய நான், கௌதம சித்தார்த்தன்,  ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலருக்கும் மகாபாரதத்தை மீண்டும் எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பாரதக்கூத்து ஆராய்ச்சியிலேயே என்னை இழந்துவிட்டேன். கோணங்கியும் சித்தார்த்தனும்  வேறு திசை நோக்கி பயணம் செய்துவிட்டனர். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’ சோபிக்கவில்லை. இந்நிலையில் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் இன்றும்  உயிர்ப்புடன் வாழும் மகாபாரதத்தின் பல நாட்டுப்புற கலை வடிவங்களிலும் ஆகச் சிறந்தது தமிழ் பாரதக்கூத்து. அந்த கூத்து சார்ந்து இந்தியத் துணைக்கண்டம் முழுக்க உள்ள பல கலை வடிவங்களை நான் சேகரித்திருக்கிறேன்; நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறேன். மகாபாரதத்தின் பல ரகசிய கதை மடிப்புக்களுக்குள் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான இனக்குழுக்களின் வரலாறுகள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன. பஞ்ச பாண்டவர்களைத் தங்களுடைய இனக்குழுக்களின் மூதாதைத் தந்தையராக மதித்து வழிபடக்கூடிய பல பழங்குடிகள் இன்றும் ஒடிஷா, மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்கள் வாழ்கின்றனர். மகாபாரதத்தையும் அதை போன்றே வடிவ, கருத்து, ஒப்புமைகளுடன் இந்தியா முழுக்க பாடப்படுகின்ற, நிகழ்த்தப்படுக்கின்ற வாய் மொழிக் காப்பியங்களின் புராணக் கதைகளுக்குள்ளும், கிளைக்கதைகளுக்கும் இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறுகள் ஒளிந்திருக்கின்றன. அந்த வரலாறுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பல இனக்குழுக்களுக்கும், சாதிகளுக்கும் இடையில் நடந்த மோதல்களில் பழங்குடிகள் எப்படி அடிமட்ட விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் சொல்கின்றன. ஆனால் அவை அனைத்தும் குறியீடுகளுக்குள்ளும் நமக்கு பரிச்சயமில்லாத கதை வடிவங்களுக்கும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. 

மகாபாரதத்தின் முதல் காண்டமான ஆதி பருவத்தில் ஜனமேஜயன் நடத்திய சர்ப்பயாகம் எதற்காக யாருக்கு எதிராக நடத்தப்பட்டது ஏன் அந்த யாகத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள் விழுந்து சாகின்றன போன்ற கேள்விகளுக்கு நம்மிடையே இன்று விடையில்லை. ஆனால் மேற்கு வங்காளத்திலும் அஸ்ஸாமிலும் மானசாதேவி வழிபாடும் அந்த வழிபாட்டில் ஈடுபடும் மக்களின் வரலாறுகளும், தென்னிந்தியா முழுக்க விரவியிருக்கும் நாகர் வழிபாடுகளும், நாகங்களை மையப்படுத்தியிருக்கின்ற புராண பிரபஞ்சக்குறியீடுகளும் ஏதோ ஒரு வகையில் ஆதிபர்வத்தின் சர்ப்ப யாகத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருக்கவேண்டும். எனவே ஜெயமோகன் தன் முதல் அத்தியாயத்தினை மரபான மகாபாரதம் ஆரம்பிப்பது போல சர்ப்பயாகத்திலிருந்து ஆரம்பிக்காமல் நாகர் குலத்தின் ஆதி அன்னை மானசாதேவி தன் மகனுக்கு சொன்ன கதையாக ஆரம்பித்திருப்பது பல மாற்று வரலாறுகள் மறைக்கப்பட்ட வரலாறுகள், குறியீடுகளுக்கு பின்னுள்ள சமூக தர்க்கங்கள் அவற்றின் அழகுகள்  மகாபாரதம் முழுக்க ஜெயமோகனால் சொல்லப்படும் என்ற எதிர்பார்ப்பினை என்னிடம் உருவாக்கியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு என்னிடத்தில் மிகுந்த மகிழ்ச்சியினையும் உண்டாக்குகிறது.

வணிக சினிமாவின் காட்சி அமைப்புகளாகவோ, தொலைக்காட்சித் தொடருக்கான கதைகளாகவோ மகாபாரதத்தினை எழுதிவிடாமல் அடுத்த பத்து ஆண்டுகள் ஒரு பொற்கொல்லனின் கவனத்துடன் ஜெயமோகன் ஒவ்வொரு வரியையும் எழுதுவாரேயென்றால் அது உலக இலக்கியத்தில் நிகழக்கூடிய மிகப் பெரிய சாதனையாகிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.  அதற்கான சக்தியும் திறனும் ஜெயமோகனுக்கு இருக்கின்றன என்பது தமிழ் இலக்கிய உலகு அறிந்ததுதான். அது அவ்வாறாகவே கனிய ஜெயமோகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


No comments: