Sunday, January 5, 2014

பேரழிவிற்கான சங்கல்பம்: நடேஷின் ஓவியங்களில் காணப்படும் பதற்றம்

ஓவியர் மு.நடேஷ்

நடேஷின் ஓவியங்கள் என்னை எப்பொழுதுமே திகைப்பில் ஆழ்த்துபவை; ஏனெனில் நடேஷின் ஓவியங்கள் பதற்றம் நிறைந்தவை; அவற்றின் கோடுகளும் நிறங்களும் நமது மென் உணர்ச்சிகளை கீறிக் காயப்படுத்துபவை. நடேஷின் ஓவியங்கள் கச்சாவாக, முழுமையாக்கப்படாமலேயே கைவிடப்பட்டவை என்ற தோற்றங்களைக் கொண்டவை; அந்தத் தோற்றங்களே அவற்றின் நோக்கங்கள் என்பது நமக்கு உடனடியாகப் புரிவதில்லை என்பது நடேஷின் குறைபாடல்ல. நடேஷின் ஓவியக்கண்காட்சிகளின் போதோ, அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை வைத்தோ, அவருடைய ஃபேஸ்புக் பதிவுகளைப் படித்தோ அல்லது நேர்பேச்சிலோ அவருடைய ஓவியங்களுக்கான விளக்கங்களை முழுமையாகப் பெறமுடியாது; ஏனெனில் அவை அவருடைய ஓவியங்களின் பதற்றத்திற்கு தொடர்புற்ற  வேறு தளங்களைப் பற்றி சொல்வதாக இருக்கும்.  நடேஷின் ஓவியங்கள் மற்றும் கோட்டுச் சித்திரங்களின் வசீகரம் அவை பார்வையாளர்களை நான் உங்களைப் புண்படுத்துகிறேன் பார் என்று சொல்லி புண்படுத்துவதால் ஏற்படக்கூடியவை. அவை பலமுறை  நம்மிடையே மெல்லிய நகைச்சுவையுணர்ச்சியைத் தூண்டும் , நம்முடைய புத்திசாலித்தனத்தினை குறைத்து மதிப்பிடும், வெகுஜனப் பண்பாட்டின் தேய் வழக்குகளை நம் மேல் திணிக்கும், அந்தத் தேய் வழக்குகளை வைத்தே நமக்குப் புதிதாக ஒன்றையும் சொல்ல முற்படும். நடேஷையும் அவருடைய ஓவியங்களையும் எளிதில் வகைப்படுத்த முடியாது. 

நடேஷின் சமீபத்திய ஓவியங்களின் வரிசையொன்றைப் (நடேஷ் இந்த வரிசையை 'கஜினி சீரீஸ்' என்று அழைக்கிறார்) பார்க்கும் வாய்க்கும் எனக்குக் கிடைத்தது. வெகுஜன பண்பாட்டின் தேய் வழக்கின் சைகை ஒன்றினை எடுத்துக்கொண்டு நடேஷ் வரைந்த ஓவியங்கள் அவை. இரு கைவிரல்களையும் இணைத்து  கோர்த்து வைத்துக்கொள்ளக்கூடிய சைகை அது. தியான மரபுகளில் சங்கல்பத்திற்கான முத்திரைகளுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது. இரு கைவிரல்கள் இணைந்த முத்திரையினை நடேஷ் கஜினி திரைப்பட போஸ்டர் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறார்; அதே படத்திலிருந்து சதைநார்கள் இறுகி உடல் வலிமை காட்டும் சூர்யா கதாநாயக பிம்பத்தினையும் references ஆகக் கொண்டு நடேஷின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வெகுஜனப் பண்பாட்டின் விமர்சனமாகவும் நடேஷின் ஆன்மீகப்பயணமாகவும் இந்த ஓவிய வரிசை அமைந்திருக்கிறது.

இங்கே ஆன்மீகம் என்பதினை விளக்கிச் சொல்லவேண்டும். நம்மூரில் ஆன்மிகம் என்பது பூஜை புனஸ்காரம் என்று இருப்பது, பட்டையும் கொட்டையுமாய் அலைவது, மதவாதங்களை முன்வைப்பது என கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கிறது. மதங்கள் சார்ந்தோ சாராமலோ ஆன்மிகம் எனப்படுவதன் முக்கிய அம்சங்களில் ஒன்று மனித குலத்தின் பேரழிவு மற்றும் முழுமுற்றிலுமான அழிவு பற்றிய கவலை, பயம், பதற்றம் நம் படைப்பியக்கத்தின் வழி செயல்பட அனுமதிப்பது; முழுமுற்றிலுமான மனித குல அழிவு  பற்றிய பதற்றத்தினை ஊற்றுக்கண்ணாகக் கொண்டு மனிதனின் சிறு சிறு செயல்களிலும் இதர வெளிப்பாடுகளிலும் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் கூறுகளை அடையாளம் காண்பது. இந்த ஆன்மீகம் மத நம்பிக்கை உடையோரிடத்தே apolocalyptic visionஆக வெளிப்படுமென்றால் எந்த மதங்களையும் சாராதவர்களிடம் பெண்ணிய சுற்றுச்சூழலியலாக (feminist environmentalism) வெளிப்பாடு அடைகிறது. நடேஷின் ஓவியங்களில் பெண்ணிய சுற்றுச்சூழலியலே ஆன்மீகமாக அதுவே கண்ணால் பார்த்து தரிசிக்கக்கூடிய பதற்றங்களாக வெளிப்பாடு பெறுகின்றன.  

நடேஷின் பெண்ணிய சுற்றுச்சூழலிய ஆன்மீகத்தில் பெண்ணே ஆணின் ஒற்றை உண்மையாக உணரவைக்கப்படுகிறாள். சங்கல்பத்தின் முத்திரை ஒரு visual motif ஆக ஒவ்வொரு ஓவியத்திலும் வெவ்வேறு காட்சிப்பிம்பங்களோடு இணைக்கப்படும்போது ஒவ்வொரு ஓவியமும் ஒரு புது வகை visual syntaxஐ உருவாக்குகிறது. அந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக்கப்படும்போது நமக்கு பெண்ணிய சுற்றுச்சூழலிய ஆன்மீகம் கலை அனுபவமாகிறது. ஆணின் தசைநார் முறுக்குதல்களை அழகாகக் கொண்டாடுவதற்கான உறுதிப்பாடு (சங்கல்பம்) நடேஷின் ஓவிய வரிசையில் மிருகரூபம் அடைகிறது; இயற்கையின் அங்கமான பெண்ணுடலினை வசீகரிக்க, அடக்க, அழிக்க, ஆள்கையின் கீழ் வைக்கும் எந்திரமாகிறது. பேரழிவின் சங்கல்பத்திற்கான முத்திரைகளை நடேஷ் எந்தச் சூழல்களிலெல்லாம் வைக்கிறார் என்று அவருடைய ஓவியங்களின் வழி பார்த்தோமென்றால் துருவக் கரடிகளின் அழிவு, எகிப்திய பாரோக்களின்கொடுங்கோன்மை முதல் தமிழ் சினிமாவின் அன்றாட அனுபவம் வரை அவை விரிந்திருக்கின்றன. மனித குல பேரழிவுக்கான யத்தனங்களாக அவை பெரும் பதற்றங்களைத் தொற்றவைக்கின்றன.  வாடாமல்லி நிறமாக,  நீலமாக, சிகப்பாக, ஆங்காங்கே வழியும் சாயங்களாக நடேஷின் ஓவியங்களின் வழி பதற்றங்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன, கவனிக்க வைக்கின்றன, சுயபரிசோதனைக்கு அழைப்பிதழ் விடுக்கின்றன. நடேஷ் நம் காலத்தின் அதி முக்கிய பெண்ணிய சூழலியல்சார் ஆன்மீகக் கலைஞன். 

நடேஷின் ஓவியங்கள்: 
























ஓவியங்களைத் தந்து உதவிய நடேஷுக்கு நன்றி.






No comments: