கடந்த ஆறுமாதங்களாக நான் எந்த பயணங்களையும் மேற்கொள்ளவில்லை. பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரிக்கு இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் கருத்தரங்கு ஒன்றிற்குக்கூட வர இயலாது என்று மறுக்கக்கூடிய நிலையே என் மைத்துனனுக்கு மூளையில் புற்று நோய் இருப்பது தெரிந்து மருத்துவ சிகிக்சை ஆரம்பித்ததிலிருந்து எனக்கு இருந்து வந்திருக்கிறது. பலமுறை கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலைத் தொட்டுத் திரும்பிய அவன் இப்போது கதிரியக்க சிகிக்சைக்குப் பின் தேறி வருகிறான். ஒரு பக்க கையும் காலும் சிறிது விளங்கவில்லை,தேற நாட்களாகும் என்பது தவிர பிழைத்துக்கொண்டான். ஆறுமாத அழுத்தத்தால் உடனடியாக எங்கேயாவது போய்வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றிய இந்நாளிலேயே சிக்கிம் போவதற்கான வாய்ப்பு வந்தது என் அதிர்ஷ்டம்.
மார்ச் 1 முதல் மார்ச் 5 வரை சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் நடைபெறும் பழங்குடி பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றில் மத்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காகச் செல்கிறேன். இதே போல் ஆதிவாசி பள்ளி ஆசிரியர்களுக்காக மத்திய அரசாங்கம் நடத்திய பயிற்சிபட்டறைகளில் முன்பு மத்தியப்பிரதேசம், ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கலந்துகொண்டு பயிற்றுவித்திருக்கிறேன் என்றாலும் சிக்கிமிற்கு இந்த நோக்கத்தின் பொருட்டு செல்வது இதுதான் முதல் முறை.
சிக்கிமிற்கு இதற்கு முன்பு வேறு காரணங்களுக்காகச் சென்றிருக்கிறேன்: பௌத்த கைவினைப் பொருட்களின் தயாரிப்பு, பரவலாக்கம், அவற்றில் நிகழும் புதுமைகள் மாற்றங்கள் ஆகியவற்றை படிப்பதன் பொருட்டு ஒரு முறை; பௌத்த தாங்க்கா ஓவியங்களையும், சுவரோவியங்களையும் படிப்பதற்காக இன்னொரு முறை; ‘மஞ்சள் தொப்பி’ பௌத்த மடாலயங்கள், ‘சிவப்பு தொப்பி’ பௌத்த மடாலயங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள், தியான முறைமைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்விற்காக மூன்றாவது முறை. இரண்டாம் மூறை கேங்டாக்கிற்கு சென்றபோது ஷெர்ப்பா மக்களிடையே அவர்களிடம் புழங்கும் நாட்டுப்புற கதைகளையும் சேகரித்தேன். கேங்டாக்கிலிருந்து இன்னும் மேலேறி மலையுச்சியில் இருக்கும் ஏரியை திபெத்திய காட்டெருதுவின் மேல் ஏறி சுற்றி வந்திருக்கிறேன். காட்டெருது சவாரியே உலகின் மிகச்சிறந்த தியானப் பயிற்சி என்று என்னிடத்தில் பயின்ற புகழ் பெற்ற சாமியாரின் மகளுக்கு என் சிக்கிம் அனுபவத்தை வைத்தே என்னால் ஒருமுறை சொல்ல முடிந்தது.
கேங்டாக்கிலுள்ள திபெத்திய ஆய்வியல் நிறுவனத்தில் அபூர்வமான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். நான் அங்கே சென்றபோது , பௌத்த தத்துவவாதிகளான தர்மகீர்த்திக்கும் நாகார்ஜுனருக்குமிடையில் நடந்த கடிதப்போக்குவரத்து சுவடிகளை காட்டினார்கள்.
ஆதிவாசி பள்ளி ஆசிரியர்களிடையே என்னுடைய உரைகள், குழந்தைகளும் ஆசிரியர்களுமாய் தங்கள் மொழிகளை சேகரிப்பது, தாய்மொழி உள்ளிட்ட மும்மொழிக் கல்வியின் அவசியம், மும்மொழிக்கல்விக்கு நாட்டார் வழக்காறுகளை சேகரிப்பதால் ஏற்படும் பயன், வெவ்வேறு வகைப்பட்ட அழகியல்களும் உலக நோக்குகளையும் அறிந்துகொள்வது எப்படி என்பனவாக இருந்து வந்திருக்கின்றன. இந்த முறை நான் சேகரித்து வைத்திருக்கும் ஷெர்ப்பா கதைகளைப்பற்றியும், பயிற்றுவிப்பதில் கதை சொல்லுதலின் அத்தியாவசியம் பற்றியும் கூடுதலாய் பேசலாம் என்றிருக்கிறேன்.
திபெத்திய காட்டெருது சவாரியை மேற்கொண்டு சிக்கிமின் பிராணி வர்க்கத்தை பீதிக்குள்ளாக்கும் எண்ணம் இந்தத் தடவை இல்லை. வரும்போது அமிர்தகலசத்தினை கையிலேந்திய வைத்திய புத்தர் ஓவியம் ஒன்றையும், தியானக்கிண்ணம் ஒன்றையும் வாங்கிவரவேண்டும். பௌத்தமடாலய சிறுவர் பிக்குகளுடன் கால்பந்து உதைத்து விளையாடிவிட்டு வரவேண்டும்.
No comments:
Post a Comment