Friday, February 27, 2015

கோணங்கியின் கிடாவெட்டு வைபவம்



கோணங்கி விளக்கு விருது பெற்றதை கொண்டாடும் முகமாகவும், அவரின் பாட்டனார் பாஸ்கரதாஸினை கௌரவிப்பதாகவும் கோவில்பட்டியில் கிடாவெட்டும் உண்டாட்டும் நாளை 28-2-2015 அன்று ஏற்பாடாகியிருக்கிறது. நேற்று கோணங்கி தொலைபேசியில் அழைத்து நான் இந்த கிடாவெட்டு வைபவத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விளக்கு விருது ஐம்பதினாயிரம் ரூபாய் என்றால் கிடாவெட்டு கொண்டாட்ட வைபவத்திற்கு அதைப்போல இரட்டிப்பு செலவாக வாய்ப்பிருக்கிறது. முன்னூறு பேர் வரை உண்டாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் எழுதிக்கொண்டிருந்த முத்துக்குமாரசாமியாக இருந்திருந்தால் இந்த கோவில்பட்டி கொண்டாட்டத்தை கடுமையாக நக்கலடித்து எழுதியிருப்பேன். உண்மையில் ‘மர்மநாவல்’ சிறுகதையில் ‘கோவில்பட்டி இண்டெலெக்சுவல்ஸ்’ பிரபஞ்சத்தை நகர்த்தி செல்லும் பதினான்கு சக்திகளில் ஒன்று என கிண்டலடித்து எழுதியிருக்கிறேன். ‘நாடகத்திற்கான குறிப்புகள்’ கதையில் கோணங்கி, இளங்கோ என்ற தன்னுடைய இயற்பெயரின் கதாபாத்திரமாக வருகிறார். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

‘கல்குதிரை’யில் கோணங்கி, நகுலன், மார்க்வெஸ், தாஸ்தாவ்ஸ்கி, உலக சிறுகதைகள் ஆகிய சிறப்பிதழ்கள் கொண்டு வருவதற்கு காரணமான பல நண்பர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். என்னுடைய சிறுகதை, கட்டுரைகள் கல்குதிரையில் பிரசுரமாகியிருக்கின்றன. இன்னும் பிரசுரமாகாத என்னுடைய ‘அழாதே மச்சக்கன்னி’ நாவலின் முதல் அத்தியாயங்களை கோணங்கி கல்குதிரையில் பிரசுரித்திருக்கிறார். நான் எழுதாமல் ஒதுங்கியிருந்த காலத்திலும் என்னுடைய சிறுகதைகளை தொடர்ந்து குறிப்பிடுபவராகவும், சிலாகித்து சொல்பவராகவும் கோணங்கி இருந்து வந்திருக்கிறார். ஆனாலும் நான் அவருடைய எழுத்துக்களின் முதல் வாசகனாகவும், கடுமையான விமர்சகனாகவுமேதான் இருந்து வருகிறேன். கோணங்கிக்கும் எனக்குமான ஆரம்பகால நட்பில் என் விமர்சன கருத்துக்களின் காரணமாக எனக்கும் அவருக்கும் விரிசல்கள் ஏற்பட்டாலும் அவருக்கு என்னுடைய கருத்துக்களை அறிவதில் ஆர்வம் குறைந்ததில்லை. இப்போது வயதான கோணங்கியைப் பார்க்கும்போது எனக்கு பாசமே மேலிடுகிறது.

ஜிகினா கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு, நடிகைகள், நடிகர்களை அழைத்து இலக்கிய விழாக்கள் நடத்துவது ஒரு பாணி என்றால் கிடாவெட்டி ஜாதி ஜனத்தை  அழைத்து உற்றாரையும் உறவினைரையும் அழைத்து உண்டாட்டு நடத்துவது இலக்கிய விழா நடத்துவதில் இன்னொரு பாணி. அவ்வளவுதான். இரண்டுவகைகளுமே என்னைப் பொறுத்தவரை பொருளற்றவை. கிடாவெட்டு கொண்டாட்டத்தில் கைவிடப்பட்ட காதலியின் அழுகுரலில் எப்போதும் பேசும் மனுஷ்யபுத்திரனின் உரையோ, திராவிட மேடைப்பேச்சு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கல்லூரி வகுப்பறையில் தூக்கம் வரவழைப்பதற்கான  ஏற்பாடோ என எண்ண வைக்கும் தமிழச்சி தங்கபாண்டியனின் உரையோ இருக்காது என்பது கலந்துகொள்ளக்கூடியவர்களுக்கு ஆசுவாசமளிக்கக்கூடியது. ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன் கண்டிப்பாகக் கலந்துகொள்வார். அவருக்கு இப்போதெல்லாம் Joker was here ஜேக் நிக்கல்சன் போல தோற்றம் உண்டாகியிருக்கிறதா, அவர் சிரித்து சிரித்து பேசுவதைப் பார்க்க அலாதியாக இருக்கும். நான் சிக்கிம் செல்லவிருப்பதால் உண்டாட்டு கேளிக்கையில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருப்பதை கோணங்கியிடம் தெரிவித்துவிட்டேன்.

இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் தலையாய துறைகளில் ஒன்று. புத்தக வெளியீடுகள், இலக்கிய பரிசு பெறும் தருணங்கள் எல்லாம் காத்திரமான விமர்சனங்களையும் நுட்பமான புதிய வாசிப்புகளையும் நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பங்கள்.  வாசிப்புகளும் விமர்சனங்களும் கோணங்கியின் எழுத்துக்கும் கூடிவரும் என்றே நான் நம்ப விழைகிறேன்.

கோணங்கி நேற்று என்னிடத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது நாளை வெட்டப்பட இருக்கும் கிடாக்களின் கழுத்துமணிகள் ஒலிப்பது பின்னணியில் கேட்டது. குஸ்டாவ் மெஹ்லரின் ஐந்தாவது சிம்ஃபொனியில் நீண்ட வயலின் இசைக்கோவைக்குப் பின் மாட்டுக்கழுத்து மணிகள் ஒலிப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. குருதி தொடுவதன் சடங்கியல் புனிதம் இலக்கியத்திற்கு தேவையில்லை என்றே அவை ஒலிப்பதான பிரேமையடைந்தேன். கோணங்கியோ உண்டாட்டில் கலந்துகொள்ளும் அத்தனை எழுத்தாளர்களின் ரத்த நாளங்களின் வழி, கிடாக்கறியின் வழி, அவர் மொழியின் அறியப்படாத வசீகரம் தொற்றும் என நம்பக்கூடும்.

எங்கள் இருவரின் அக உலகங்களும் வேறு வேறானவை என்பதைத் தவிர சொல்ல ஏதுமில்லை.




No comments: