Monday, May 4, 2015

பொறுப்பற்ற தற்காதலின் டாம்பீகமும், பித்தலாட்ட கலையும்: உத்தம வில்லன்




உத்தம வில்லன் திரைப்படத்தில் நாட்டுப்புறகலைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள், தெய்யம் வேடத்தில் கமல் ஹாசனின் போஸ்டரை நீங்கள் பார்க்கவில்லையா, பிஹைண்ட்தவுட்ஸ் வலத்தளத்தில் பூஜாகுமார் பேட்டியில் (பார்க்க: https://www.youtube.com/watch?v=cCu75pAu_2A ) தெய்யத்தினை நவீன இசையோடு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதை பார்க்கவில்லையா என்றெல்லாம் என் நண்பர்கள் சொல்லப்போக அவர்களின் விருப்பத்திற்கிணங்கி அவர்களுடன் உத்தமவில்லன் திரைப்படத்தை முதல் நாளே பார்த்தேன். தெய்யம், படையணி, ஆகிய கேரள சடங்கியல் நிகழ்த்து கலைகளையும் தமிழகத்தின் தொல்கலையான கூத்தையும் கலந்து கட்டி வகைதொகையில்லாமல் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம்  என்னுள் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியது. எதற்காக சடங்கியல் நிகழ்த்துகலைகளை வணிகத் திரைப்படத்தில் தப்பும் தவறுமாக பயன்படுத்த வேண்டும்? அதற்கான தேவை கதையில் என்ன இருக்கிறது? உத்தம வில்லன் படத்தின் முதல் பாடல் காட்சியில் கமல் ஹாசன் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து அதன் முன் சக்கரத்தை தூக்கி காட்டுவது போல, கவட்டையை எக்கி எக்கி தொந்தி குலுங்க இடுப்பை முன் நோக்கி ஆட்டுவது போல, தெய்யத்தின் (தெய்வத்தின்) வேடம் தாங்கி துள்ளி எட்டி சாடி வாயிலிருந்து தீப்பிழம்பை உமிழ்வது இன்னொரு நடிப்பின் வகைமைதானா? தெய்யம் ஒரு மத நம்பிக்கை சார்ந்த நிகழ்த்து கலை இல்லையா, அதற்கென்று ஒரு பவித்திரமும் சூழலும் இருக்கின்றனவே அவற்றை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா என்ற அடிப்படைக் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். திரைப்படத்தினுள் திரைப்படமாக வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் தெய்யம், படையணி, கூத்து, திரை இசை அனைத்தும் கலந்த வினோதமான ஆட்டத்தில் பிரகலாதன் கதையை நாடகமாக நடிக்கிறார்கள். முதலில் ஹிரண்யகசிபு வேடத்தை நாசரும், நரசிம்மர் வேடத்தினை கமலும் ஏற்பதாக இருக்கிறது. கமல் நரசிம்மர் வேடம் தாங்கும்போது தன்னுடைய விஷம் தோய்ந்த கூரிய நகங்களால் உண்மையிலேயே ஹிரண்யகசிபு வேடம் தாங்கும் நாசரை (கொலை பாதக அரசனை) கொன்றுவிட வேண்டும் என்று ஏற்பாடு. ஆனால் ஹிரண்யகசிபு வேடம் தாங்கிய நாசர் வசனமெல்லாம் பேசமுடியாது வெறுமனே உறுமி கர்ஜிக்கிற நரசிம்மர் வேடம் வேண்டும் என்று கமல் ஏற்கவிருக்கும் நரசிம்மர் வேடத்தை கடைசி நிமிடத்தில் மாற்றிக்கொள்கிறார். ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது? படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா? என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? நம் தொல்கலைகளோ அவற்றின் சடங்கியல் புனிதமோ பவித்திரமோ அரிச்சுவடி கூட தெரியாமல்  உத்தமவில்லன் படத்தில் தெய்யமும் அதன் அலங்காரங்களும் முகமூடியும் அவற்றின் exotic மதிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

    உண்மையில் திரைப்படத்தினுள் திரைப்படமாக வருகின்ற உத்தம வில்லனைப் போல கொடுமையான பித்தலாட்டமான படத்தினை நாம் வேறெங்கிலும் பார்த்திருக்கமுடியாது. இந்த லட்சணத்தில் பிரதான திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற நடிகனான மனோரஞ்சன் (கமல் ஹாசன்), தான் மூளைப் புற்று நோயினால் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தன் குருநாதரான மார்கதர்சியை  (கே.பாலச்சந்தர்) வைத்து இயக்கி நடிக்கும் லட்சிய நகைச்சுவை படம் இது. இந்த திரைப்படத்தினுள் திரைப்படம் ஆரம்பிக்கும்போது வில்லுப்பாட்டு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் வில்லுப்பாட்டாக கதையை ஆரம்பித்து வைக்க கதை  தெய்யம், தமிழ் கூத்து எல்லாம் கலந்த ஃபூயூஷனாக சொல்லப்படும் என்று வேறு தைரியமாக அறிவிக்கிறார்கள். நாட்டுப்புற கலைகளைத்தான் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்தானே யார் கேட்பது? திரைப்படத்தினுள் திரைப்படமான உத்தம வில்லனில் வசன கவிதை போன்ற நடையும், பிராமண பந்தியில் இறந்து போனவனாகக் கருதப்பட்ட உத்தமன் வந்து பீதியூட்டும் காட்சியும் மலையாளத் திரைப்படம் ‘நோக்குகுத்தியை’ மெலிதாக நினைவுபடுத்துகிறது. அதனால் வேறு இந்த நகைச்சுவை உள்க்கதையின் பொருக்கோடிப்போனதன்மை மேலும் அசிங்கமாய் தெரிகிறது. ‘நோக்குகுத்தி’ முழுக்க முழுக்க கவிதையினால் கதை சொன்ன படம். கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞரும் சிந்தனையாளருமான எம்.கோவிந்தனின் நீள் கவிதையை படம் முழுக்க பயன்படுத்திக்கொண்ட மிக உயரிய படம். அந்தப்படம் எனக்கு நினைவு வந்து தொலைத்தது என் தனிப்பட்ட துரதிர்ஷ்டம். கூத்துமில்லாமல் சபா நாடகமுமில்லாமல் விசித்திர ஆடைகள் அணிந்து விசித்திரமான தமிழில் பேசி நாசர், பூஜாகுமார், ஞானசம்பந்தம், ஷண்முகராஜன், கமல்ஹாசன் என்று பெரும் நடிக நடிகையர் கூட்டம் நம்மை நகைச்சுவை என்ற பெயரில் இம்சிக்கிறது. இடையிடையே தையா தக்கா என்று தெய்யம் ஆட்டங்கள் வேறு.  இந்தப்படத்தின் ரஷ்ஷினை அவ்வபோது போட்டுப்பார்த்து மார்கதரிசி (கே.பாலச்சந்தர்) பிரமாதம், என்னமா நடிச்சுருக்கான் பாரு என்றெல்லாம் புல்லரித்து பாராட்டும்போது அவர் நம் அசோகமித்திரன் போல ஏதாவது உள்குத்து வைத்து பேசுகிறார் போல என்று நினைக்கிறோம்; அப்படி எதுவுமில்லை என்று புலப்படும்போது நமக்கு சோர்வும் கொட்டாவியும் வருகிறது. போதாக்குறைக்கு முத்தரசனின் காதை கடித்து துப்பிவிடும் கற்பகவல்லி, அவள் சொல் கேட்டு நடக்கும் புலி, எனக் கொடூரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா!

    பிரதான படமான உத்தமவில்லன், ஆரம்ப விலுக் விலுக் ஆட்டத்திற்கும் பாட்டிற்கும் பிறகு, உள்க்கதையை ஒப்பிடும்போது நன்றாகத்தான் ஆரம்பிக்கிறது. தலைவலிக்காக டாய்லெட்டில் தண்ணியடிக்கும் மனோரஞ்சன், அவன் பையன் படத்தின் ப்ரிவியுவினை பார்த்துவிட்டு தன் கேர்ள்ஃபெரெண்டிடம் தொலைபேசியில் கொடுமையான படம் இதையெல்லாம் மக்கள் எப்படித்தான் பார்க்கிறார்களோ என்று சொல்வதை கேட்கும்போது ஆகா இதோ நம் தலைமுறையைச் சேர்ந்த பையன் பேசுகிறான் என்று குதூகலித்து நிமிர்ந்து உட்கார்கிறோம். மயங்கி விழுந்த மனோரஞ்சனை  டாய்லெட்டில் வைத்து அடைத்து, செக்யூரிட்டி பஞ்சாபியை தன்னை தூக்க சொல்லி மேல் கதவு வழியே நுழைந்து உள்தாழ்ப்பாளைப் போடும் காரியதரிசி சொக்குச்செட்டியார் (எம்.எஸ்.பாஸ்கர்) உண்மையில் நடிப்பில் சோபிக்கிறார். ஒரு பெரிய வணிகத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவினை அதன் நாயகனுக்கு அவனுடைய குடும்பத்தோடு சேர்ந்து பங்கேற்பது என்பது எவ்வளவு கொடுமையான விஷயமாக இருக்கிறது என்பதைக் காண நமக்கு உற்சாகமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. படத்தில் கவட்டையை எக்கி எக்கி ஆடிய மனோரஞ்சன் பட விழாவில் களைப்பாகவும் சலித்துபோயும் இருப்பதைக் காணும்போது தமிழ்சினிமா நவீனமாகிவிட்டதோ என்ற நல்லெண்ணத்தையும் நம்மிடம் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிகளெல்லாம் அதிக நேரம் நீடிப்பதில்லை. நமக்கு சீக்கிரமே இது நவீன படம் என்கிற மாதிரி ஒரு சுக்கும் கிடையாது இது கமல்ஹாசனின் இன்னொரு தற்காதல் மற்றும் தற்பெருமையினை பறை சாற்றுகின்ற படம் என்று தெரிந்துவிடுகிறது. கே.பாலச்சந்தர் மார்கதர்சி கதாபாத்திரம் ஏற்றிருப்பதிலிருந்து, அவர் அலுவலகத்தில் சின்ன வயது கமல்ஹாசனின் புகைப்படங்களைப் பார்ப்பதிலிருந்து, கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிக நடிகையர், கமல்ஹாசனின் முந்தைய பட வேடங்களைச் சுட்டிக்காட்டும் ஏராளமான குறிப்புகள் வரை நமக்கு இது ஏதோ ஒரு வகையில் கமல்ஹாசனைப் பற்றிய படம் என்றும் சொல்கிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் தங்களைப் பற்றி  தாங்களே பேசி தங்கள் உலகத்தில் தாங்கள் எப்படிப்பட்ட மகோன்னதமான பேர்வழிகள் என்பதை திரையில் அறிவிக்காவிட்டால் தமிழ் சினிமா என்று எதையாவது நம்மால் அடையாளம் காண முடியுமா, என்ன? உத்தமவில்லன் கமல்ஹாசன் சாகாவரம் பெற்ற கலைஞர் என்று நமக்கு சொல்லும் படம். அதில் நமக்கு எப்பொழுதேனும் எந்த சந்தேகமாவது இருந்திருக்கிறதா என்ன? புதிதாக ஒரு படத்தை எடுத்துக்காட்டியா நிரூபிக்க வேண்டும்? ஆனாலும் விட்டேனா பார் என்று முயற்சி செய்திருக்கிறார்.

    தன்னுடைய உடலின் பயன்மதிப்பு தவிர வேறெதுவும் இல்லாத மனோரஞ்சன் மாமனார் மனைவிக்கு அடங்கி வணிகக் குப்பைபடங்களின் நடித்து புகழும் பணமும் சம்பாதித்ததை நாம் கழிவிரக்கத்துடன் புரிந்துகொள்கிறோம். சாவு துரத்தும்போது அந்த பூமியில் அதிக காலமில்லாத கலைஞன் பணத்தையும் புகழையும்  நோக்கங்களாகக் கொள்ளாமல் கடைசியாக தன் குருநாதருடன் சேர்ந்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்து சிரித்துக்கொண்டே உலகிடமிருந்து விடைபெற வேண்டும் என்ற எண்ணமும் கூட உன்னதமாகவே இருக்கிறது. ஆனால் எடுக்கின்ற படம் எண்ணத்திற்கும் நோக்கத்திற்கும் சம்பந்தமில்லாமல் போங்காட்டமாய் முன் பத்திகளில் சொன்னது போல இருக்கிறதென்றால் மனோரஞ்சனின் வாழ்க்கையும் சாரமற்று இருக்கிறது. மனோரஞ்சனின் தனிப்பட்ட வாழ்க்கையும் மார்க்கதரிசியின் இயக்கத்தில் நடிக்கும் சினிமாக் கதையும் அடுத்தடுத்து சொல்லப்படுகின்றன. எங்கே தெய்யம் வேடத்தில்  கமல்ஹாசன் அடுத்துவந்து தீப்பந்தை நம் முகத்தில் உமிழ்ந்து கர்ணகடூரமாய் கர்ஜித்துவிடுவாரோ என்ற பயத்தில் நாம் சீக்கிரமே மனோரஞ்சனே தேவலாம் அப்பா என்று அவர் காலில் விழுந்துவிடுகிறோம்.

    மனோரஞ்சன் யாமினி என்ற பெண்ணுக்கு இளமையில் செய்த துரோகமாக அவர்களுக்கு பிறந்த பெண் மனோன்மணி (பார்வதி மேனன்) கருதுவதை வெகு சீக்கிரமே ஒரே ஒரு கடிதம் அவர்களுக்கிடையே பரிமாறப்படாததுதான் காரணம் என்று சொல்லி தீர்த்தாகிவிட்டது; கடிதம் போகாதாதற்கு காரணம் காரியதரிசி சொக்கு செட்டியார். அவரே மனம் திருந்தி உண்மையைச் சொல்லிவிடுகிறார். அவரையும் மனோரஞ்சன் மன்னித்துவிடுகிறார். ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தையே விமர்சகர்கள் a tragedy of handkerchief என்று நக்கலடித்திருக்கிறார்கள் இது ஒரு tragedy of undelivered letters அவ்வளவுதான். மனோரஞ்சனும் மனோன்மணியும் சந்திக்கும் காட்சியில் கோபமாக இருக்கும் மகளிடம் தந்தையின் அடங்கிய தொனி உணர்ச்சிகளை மனோரஞ்சன் வெளிப்படுத்துகிறாரா மூளைக் கேன்சரால் மயங்கி விழுந்து புனிதராகிவிடுகிறாரா அந்த பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.

    மகனோடு கிரிக்கெட் பந்தினை வீசி விளையாடி கூடவே தன் நோயைச் சொல்லி, அவன் கொலம்பியா யுனிவர்சிட்டிக்குப் போய் திரைக்கதை எழுதப் படிக்கவேண்டும் என்று சொன்னவுடன் கழுத்தைக்கட்டி அழுதாயிற்றா பையனோடு உறவும் சுமுகமாகிவிட்டது. சினிமா நடிகர் மகன் சினிமாவுக்குத்தானே வந்தாகவேண்டும், அதுதானே உலக வழக்கு? அதற்குத்தானே உணர்ச்சிவசப்படமுடியும்?

    மருத்துவமனையில் படுத்திருக்கும் மனைவியுடன் (ஊர்வசி)  மனோரஞ்சன் இரண்டு வார்த்தை அன்பாகப் பேசியவுடன் தூக்க மருத்தினால் அவர் தூங்கிப் போகிறாரா அங்கேயும் சுபம். தூக்க மருந்து எப்படிஎப்படியெல்லாம் காட்சிகளையும் வசனங்களையும் சிக்கனமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும் நமக்குத் தெரிந்து விடுகிறது.

    பின்னே மகள் வயதிலிருக்கும் ரகசிய காதலி அர்ப்பணா (ஆண்டிரியா) டாக்டராகவும் இருப்பது மனோரஞ்சனுக்கு கூடுதல் வசதி. மெழுகுபொம்மை போல வந்து மனோரஞ்சனுக்கு எல்லா விதங்களிலும் சிகிட்சை அளித்து, பேசாமடந்தையாய் இருந்து அர்ப்பணா கௌரவம் காக்கிறார்.  இது பாசாங்கில்லையா, பொய் வாழ்க்கையில்லையா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் மனோரஞ்சனின் வாழ்க்கை இல்லையா இது? யார் பாசாங்குத்தன்மை என்பதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப முடியும்? தவிர, மனோரஞ்சனுக்கு மூளையில் கேன்சர், சிக்கிரம் சாகப் போகிறார் என்பது தெரிந்தவுடன் டிரைவரும் கண்ணீர் விட்டு அழுது ரகசியங்கள் காப்பதாக உறுதி அளிக்கிறார். அவருக்கு துபையில் வேலை வாங்கித் தருவதாக மனோரஞ்சன் உறுதியளிக்கிறார். அதன் பிறகு மனோரஞ்சனும் அர்ப்பணாவும் காரிலேயே கட்டியணைத்துக்கொள்கிறார்கள். முத்தங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு குழப்பமும் இல்லை. 

    படத்தில் பின்னணி இசை இருந்தது பாடல்கள் இருந்தன என்றெல்லாம் நமக்கு நினைவில் இருப்பதில்லை. கடப்பாடுகள் எதுவுமே இல்லாமல் வாழ்ந்த மனோரஞ்சன் தான் சாகப் போகிறோம் என்று தெரிந்த கொஞ்ச நாட்களிலேயே தன் கடமைகள் பரிகாரங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றியாகிவிட்டது. சினிமா வியாதியான மூளைப் புற்று நோய்க்கு பல உபயோகங்கள் உண்டு என்று நாம் தெரிந்துகொள்கிறோம். குடும்பமே தெய்யம்  நடனத்தில் மனோரஞ்சன் உத்தமனாக வித விதமாக நடிப்பதை பார்த்துக்கொண்டிருக்க, அவர் உயிர் பிரிகிறது. நாமும் நிம்மதியாக திரை அரங்கை விட்டு வெளியே வருகிறோம். அப்பாடா.

    கமல்ஹாசன் சாகாவரம் பெற்ற கலைஞர் என்பதற்கு எனக்கு இன்னொரு நிரூபணம் தேவையில்லை. அதுபோலவே ரமேஷ் அரவிந்துதான் உத்தம வில்லன் படத்தின் இயக்குனர் என்பதற்கும் எனக்கு எந்த நிரூபணமும் தேவையில்லை. படத்தை எம்.எஸ்.பாஸ்கரின் அபாரமான நடிப்பிற்காக நினைவில் வைத்திருக்கலாம்.

No comments: