Wednesday, May 6, 2015

ஜெயமோகன் என்னை தகுதியிழக்க செய்துவிட்டார், என்னவொரு கொடுப்பினை!

திடீரென்று 2013 இல் நான் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு இன்று ஜெயமோகன் என்னை திட்டியிருப்பதைப் பார்த்து (பண்பாட்டாய்வும் எம்டிஎம்மும்) அவருக்கு கடிதமெழுத என் மின்னஞ்சலை திறந்தபோது அவர் எனக்கு 10.11.2014 அன்று எனக்கு எழுதியிருந்த கடிதமும் அதற்கு நான் எழுதிய பதிலும் கிடைத்தது. 10.11.2014 அன்று நான் மகாபாரதத்தை பற்றி,   பாரத பிரசங்கிகளைப் பற்றி அதிகமும் அறிந்த ஆய்வாளனாக, நாட்டாரியல் அறிஞராக ஜெயமோகன் பார்வையில் இருந்திருக்கிறேன்.  இந்த வாரம் சினிமா விமர்சன கட்டுரை ஒன்றை நான் எழுதியதும் நான் அவர் மதிக்கும் நாட்டாரியல் அறிஞர்கள் பட்டியலில் இல்லாமல் போய்விட்டேன். மேற்சொன்ன கட்டுரையில் அவர் எழுதியிருக்கிறார் :"ஆனால் அவரது சினிமா விமர்சனங்களைக் காணும்போது இவரது உண்மையான எல்லை இதுதானோ என்ற எண்ணமும் எழுகிறது". அதாவது நான் 2013இல் எழுதிய கட்டுரைக்கு 2015 இல் ஜெயமோகன்பதில் எழுதுவதற்கான காரணம் தெரிந்துவிட்டது. நீ நாட்டரியல் பார்வையிலிருந்தா உத்தம வில்லனை விமர்சிக்கிறாய் நீ ஒரு நாட்டாரியல் ஆய்வாளனே இல்லை போ என்று வணிக சினிமாவுக்கு அடியாளாக மாறியிருக்கும் ஜெயமோகன் என்னை தகுதியழக்க செய்துவிட்டார். என்ன ஒரு கொடுப்பினை! நான் பெரும் பாக்கியம் செய்தவன்.  இதுவல்லவோ ஜென்ம சாபல்யம்!

மற்றபடி, நீலியைப் பற்றி அவர் எழுதிய அபத்தக் கட்டுரைக்கும் அதற்கான என்னுடைய பதிலுக்கான சுட்டியும் ஜெயமோகனின் தளத்திலேயே இருக்கின்றன. தகுதிகளை விடுத்து, தர்க்கம் என்ன என்று பார்ப்பது அவரவர் விழைவையும், தேடலையும் பொறுத்தது.

கடிதங்களை கீழே தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் 10.11. 2014 அன்று எனக்கு எழுதிய மின்னஞ்சல்:

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம்.டி.எம் அவர்களுக்கு,

வெண்முரசு வரிசையில் முதற்கனல் மழைப்பாடல் வெளிவந்துள்ளது. வண்ணக்கடல் நீலம் வெளிவரப்போகிறது

இந்நாவல்வரிசையை இன்னும் அதிகமாக கொண்டுசெல்லாவிட்டால் அதை தொடரமுடியாது. மிகப்பெரிய முயற்சி. ஆகவே ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடுசெய்திருக்கிறோம்

ஏற்கனவே உங்களிடம் அரங்கா சொல்லியிருந்தார்.. அப்போது நிதிச்சிக்கல். தேதிச்சிக்கல். இப்போது மீண்டும் உறுதிசெய்திருக்கிறோம்

வரும் நவம்பர் 9 அன்று. சென்னையில். மியூசியம் தியேட்டர் அரங்கில்

நீங்கள். கமலஹாசன் இளையராஜா, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் ஆகியோரை தமிழில் இருந்து அழைக்கிறோம்

எஸ்.எல்.பைரப்பா, எம்.டி வாசுதேவன் நாயர் இருவரையும் கன்னடம் மலையாளம் மொழிகளில் இருந்து. அவர்கள் இருவரும் மகாபாரதம் பற்றி எழுதியவர்கள்.

ஐந்து மகாபாரத நாட்டுப்புற கதைசொல்லிகளை கௌரவிக்கவிருக்க விரும்புகிறோம். அவர்களைப்பற்றி அதிகம் உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் ஐந்துபேரை தேர்ந்தெடுத்து அவர்களைப்பற்றி ஒரு சிறிய குறிப்பையும் விழாவில் வாசித்து உதவவேண்டும் .

நீங்கள் விழாவுக்கு வந்து  கதைசொல்லிகளை கௌரவிக்கவேண்டும்

இது என் விண்ணப்பம்

உங்களை நேரில் சந்தித்து நண்பர்களும் நானும் விரிவாக பிற தகவல்களைச் சொல்கிறோம்

ஜெ
நான் அவருக்கு எழுதிய பதில்:
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
‘வெண்முரசு' நாவல் வரிசைக்கான வெளியீட்டு விழா நடத்துவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மகாபாரத பிரசங்கியார்களை கௌரவிப்பது மிகவும் நல்ல விஷயம்; அவர்கள் இப்போது எண்ணிக்கையில் அருகி வருகிறார்கள்.  ஐம்பது பேர்கள்தான் இப்போது மொத்தமாக இருக்கிறார்கள். அவர்களில் ஐவரை பிரபலங்கள் கூடும் சபையொன்றில் கௌரவப்படுத்துவது மிகவும் உன்னதமான காரியமாகும். ஆனால் ஐவரைத் தேர்ந்தெடுப்பது அவர்களை அறிமுகம் செய்து பேசுவது ஆகியவற்றுக்கு என்னை விட பொருத்தமான நபர் இரா.ஶ்ரீனிவாசன்தான்.  அவர் ‘நல்லாப்பிள்ளை பாரத’த்தினை இரண்டு பாகங்களாக பதிப்பித்தவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிகிறார். ‘புதிய பனுவல்’ என்ற கல்விப்புல தமிழ் இதழின் ஆசிரியர். அவர் மகாபாரத பிரசங்கியார்கள் கூடும் கூட்டத்தினை வருடந்தோறும் நடத்தி அவர்களுடைய மேம்பாடுக்காக உழைத்து வருகிறார். ஶ்ரீனிவாசனின் சில முயற்சிகளுக்குப் பின்னணியில் நான் இருந்தாலும் கூட அவரை அழைப்பதுதான் முறையானது. அவருடைய தொலைபேசி எண் 9841838878 மின்னஞ்சல் முகவரி: panuval@gmail.com 

நீங்களும் நண்பர்களும் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வாருங்கள். என் மனைவி ஆங்கியோவிடம் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தினைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். அவளுக்கும் குழந்தைகளுக்கும் நண்பர்களின் வருகை எனக்கிருப்பது போலவே மிகவும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கிறது.

நன்றியும், வணக்கங்களும்
அன்புடன்,
எம்டிஎம்

————————————————
எம்.டி.முத்துக்குமாரசாமி

No comments: