Sunday, August 2, 2015

சாக்ரடீஸ் நகைப்பாரா?
தத்துவ ஞானிகள் என்றாலே நீண்டதாடியும் இறுகிய மோவாயும் பல்லை இறுக்கிக் கடித்துக்கொண்டிருக்கும் பாவனையும் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுப்புத்தியில் எப்போது நிலைபெற்றது என்பது பற்றிய சரியான வரலாற்று ஆய்வுகள் இல்லை. ஆனால் தத்துவஞானிகளின் ஆதிஉருவான சாக்ரடீசிடமிருந்துதான் இந்த பொதுபிம்பம் மேற்கிலுலும் சரி நம்மூரிலும் சரி உருவாகியிருக்க வேண்டும்.   பழைய தமிழ்ப்படங்களில் ஒரு தோளைச் சுற்றி போடப்பட்ட கிரேக்க மாராப்பு சீலையுடன் சிவாஜி கணேசன் கண்கள் சிவக்க வீர வசனம் பேசி விஷக்கோப்பையை வாங்கிக்குடித்துவிட்டு சாவதை பார்த்தவர்கள்  தத்துவ ஞானிகள் யுகாந்திரத்திற்கும் சிரித்திருக்கவே மாட்டார்கள் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்உண்மை அதற்கு நேர் எதிர்மாறானது; சாக்ரடீஸ் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் உரக்க வாய்விட்டு நகைக்ககூடியவராகவும்தான் வாழ்ந்திருக்க வேண்டும். தன்னுடையகுடியரசில்கவிஞர்களுக்கு இடமில்லை என்ற   பிளேட்டோவை நினைத்தாவது சிரித்திருக்க வேண்டும்தானே
சாக்ரடீஸ் சோகம் ததும்பும் விழிகளோடு ஏதென்ஸ் நகர தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கவில்லை,அவர் தன்னுடன் உரையாடியவர்களையெல்லாம் அங்கதத்துடன் எதிர்கொண்டார். உள்ளபடிக்கு மேற்கத்திய இலக்கியத்தில் அங்கதம் என்பதே சாக்ரடீசிடமிருந்துதான் உருவானது என்று கருத இடமிருக்கிறது. பண்டைய கிரேக்கத்தின் வரலாற்று ஆசிரியர்கள் சாக்ரடீஸ் தன்னைப்பற்றிய நகைச்சுவை நாடகமொன்றை வெகுவாக ரசித்துப் பார்த்தார் என்று பதிவு செய்துள்ளனர். சாக்ரடீசை விட இன்னும் அதிகமாக நகைக்ககூடியவராக டெமாக்ரிடஸ் என்ற தத்துவஞானி இருந்தாராம். டெமாக்ரிடஸ் ஒரு வேளை பைத்தியமோ என்று பரிசோதித்துப் பார்க்கும்படி கிரேக்கத்தின் மருத்துவர் ஹிப்பாகிரடீஸ் நியமிக்கப்பட்டார். சிரிக்கும் தத்துவஞானி என்ற அரிய பெயரைப் பெற்றிருந்த டெமாக்ரிடஸ் போல அதிகமான எதிரிகளைக் கொண்டிருந்த வேறொரு ஞானி இருந்திருக்க முடியாது. பிளேட்டோ டெமாக்ரடசின் நூல்களையெல்லாம் கொளுத்தவேண்டும் என்று எழுதினார். மார்கஸ் ஆருலியஸ், டெமாக்ரடஸ் புழுத்து செத்தார் என்று எழுதி வஞ்சம் தீர்த்தார்(?). இத்தனைக்கும் டெமாக்ரடீஸ் அணுக்களால் ஆகிய உலகினை முதன்முதலில் கற்பிதம் செய்த தத்துவஞானியாவார். ஹிப்போகிரட்டீஸ் ஒரு போலி மருத்துவராய் இருந்து டெமாக்கிரட்டஸை பைத்தியம் என்று சான்றிதழ் வழங்கியிருப்பாரேயென்றால் பண்டைய கிரேக்கம் டெமாக்கிரட்டஸையும் மனித கீழ்மைகளைக் கண்டு நகைத்தமைக்காக பைத்தியம் என்று கொன்றிருக்கும். நகைச்சுவையும் நகைப்பும் இவ்வளவு கடுமையான கசப்புணர்வினை ஏன் ஏற்படுத்துகின்றன? ஏன் சீரிய தளங்களிலிருந்து வழுவியவர்களாக நகைப்பவர்களை பாவிக்கின்றோம்

உண்மையான நகைச்சுவை எல்லா வகையான அதிகாரங்களுக்கும் எதிரானதாக இருக்கிறது. தத்துவவாதிகளின் நகைப்போ அடிப்படை நம்பிக்கைகளை கலைத்துபோட வைப்பதாகும். பிளேட்டோவின்உரையாடல்களில்சாக்ரடீசும் இதர தத்துவஞானிகளும் பல இடங்களில் வாய்விட்டு நகைக்கின்றனர். பிளேட்டோவை ஒரு நகைச்சுவையாளராக கற்பனை செய்வது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும் அரசியல் நீதி என்பதை விவாதிக்கும்போதே சாக்ரடீசும் பிற ஞானிகளும் நகைக்கின்றனர் என்பதை பிளேட்டோ பதிவு செய்திருக்கிறார். அதை பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்கொம்புகள் அவருக்கு இருந்திருக்கின்றன என்பதே எனக்கு பிளேட்டோவின் மேல் மரியாதையை அதிகப்படுத்துகின்றன. இறப்பிற்கு பின்பு செய்யப்படுகின்ற சடங்குகளைப் பற்றிய விவாதங்களில் பிளேட்டோவின்உரையாடல்களில்நாம் அதிகமும் சிரிக்கின்ற சாக்ரடீசைப் பார்க்கிறோம். சாக்ரடீசைப் பார்த்தும் பிறர் நகைக்கின்றனர். விவாதங்களின் போக்கினை திசைதிருப்பும் சாக்ரடீசின் உத்திகளைப் பார்த்து தார்சிமாக்கூஸ் நகைக்கிறார்

தன் உரையாடல்களின் வழி நீதி என்பது அநீதியை விட இயல்பிலேயே உயர்ந்தது என்பதை விளக்கும் நகரம் ஒன்றினை நிர்மாணிக்க சாக்ரடீஸ் முயற்சி செய்யும்போது அவருடைய வாதத்தினை இடைமறிக்கும் கிளௌகான் நீதியின் இயல்பென்பது வெறும் மரபுதான் என்று வாதிடுகிறார். மரபைக் கைப்பற்றும் பலகீனர்கள் அதிகாரம் மிக்க மனிதர்கள் தங்களுக்கு இழைக்க சாத்தியப்பாடுள்ள அநீதியினை தடுத்துவிடமுடியும் என்றும் சொல்கிறார். பிறருக்கு அநீதியை இழைப்பது எல்லோருக்குமே மகிழ்ச்சிதரக்கூடியது தாம் அநீதியினால் துன்புறுவதே கொடுமையானது என்பதை அனைத்து தத்துவ ஞானிகளும் சபையில் ஒத்துக்கொள்கின்றனர். உரிய பாதுகாப்பு இருக்குமானால் அநீதியை பிறருக்கு இழைக்க நீதிமானும் குற்றவாளியும் ஒன்றுபோலவே தயங்கமாட்டார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகாரத்தைத் தரக்கூடிய மந்திர மோதிரம் ஒன்று இருக்குமானால் அதை அணியும் எவருமே எந்த அநீதியையும் இழைக்கத் தயங்கமாட்டார்கள் என்று சொல்லி சிரிக்கிறார்கள். தத்துவ ஞானிகள் அனைவரும் கூடி சிரித்த சம்பவங்களிலேயே மிகவும் ஆழமான சிரிப்பு அது. அநீதியை இஷ்டத்துக்கு இழைப்பதன் மூலமே மனிதன் கடவுளுக்கு நிகரானவன் ஆகிறான் என்றும் உரையாடல்கள் தொடர்கின்றன.

நகைச்சுவையாளராக இருந்தாலும் கூட நீதியை நிலைநாட்டும் தன்னுடைய லட்சிய நகரில் பெரும் சப்தத்துடன் நகைத்தல் தடை செய்யப்படவேண்டும் என்றே சாக்ரடீஸ் சொல்கிறார். அத்தகைய நகைப்பு வன்முறையைத் தூண்டிவிட்டுவிடும், நகரத்தின் அமைதி சீர்குலைந்துபோகும் என்றும் சாக்ரடீஸ் வாதிடுகிறார். பிளேட்டோவின்குடியரசில்தடை செய்யப்படவர்கள் கவிஞர்கள் என்றால், சாக்ரடீஸிற்கு என்று ஒரு குடியரசு அவருடைய லட்சியங்களின்படி அமையுமென்றால் அதில் தடை செய்யப்பட்டவர்களாக அரிஸ்டோஃபேன்ஸ் போன்ற நகைச்சுவை நாடக ஆசிரியர்களே இருப்பர்

இன்றைக்கு அரிஸ்டோஃபேன்ஸின் நாடகங்களை வாசிக்கும்போது அவை தங்களுடைய வரலாற்று காலகட்டத்தினுள் சிக்கித் தவிக்கின்றன; சோஃபகிளிசின் துன்பியல் நாடங்களைப் போல காலத்தை விஞ்சி நிற்கின்ற தன்மை அவற்றுக்கு இல்லை. ‘தவளைகள்’, ‘குளவிகள்போன்ற அரிஸ்டோஃபேன்ஸின் நாடகத் தலைப்புகள் கூட ஈசாப்பின் நாட்டுப்புறகதைகளுக்கு கடன்பட்டவை போல தோன்றுகின்றனவே தவிர தன்னளவில் வசீகரமானவையாக இல்லை. உண்மையில் நகைச்சுவையின் தன்மையும் இதுதான்; அது வரலாற்று காலகட்டத்துக்குள் மட்டுமே இயங்கும். இத்தனைக்கும் அரிஸ்டோஃபேன்ஸின் நாடகங்களில் பல கவித்துவமான படிமங்கள் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக முப்பதாயிரம் நாரைகள்  கற்களை தங்கள் கால்களில் கவ்விக்கொண்டு நகரம் ஒன்றினை அமைப்பதற்காக பறந்து வரும் காட்சி அரிஸ்டோஃபேன்ஸின் காட்சிகளில் ஒன்று. பறவைகளையும் மிருகங்களையும் வைத்து எழுதப்படுகிற நகைச்சுவை கீழே விழுந்துவிட்டவனைப் பார்த்து நகைப்பது போன்றது ஆனால் அதனால் தப்பொன்றுமில்லை என்றே பண்டைய கிரேக்கத்திலும் கருதப்பட்டது

நம்முடைய நாட்டிய சாஸ்திரமும், தொல்காப்பியமும் கூட நகைச்சுவையினை உயர்வாகக் கருதுவதில்லை. நாட்டிய சாஸ்திரம் ஹாஸ்யம் தாழ்ந்த குலத்தவருக்கான ரசம் என வரையறுக்கிறது. தொல்காப்பியமோ நகை, இளிவரல் போன்ற சுவைகள் கீழானவை என மெய்ப்பாட்டியலில் சூத்திரமாக்குகிறது. ஆனால் பழம் இந்திய மரபுகள் நகைச்சுவையை அரசு அதிகாரத்திற்கு எதிரானதாக கணித்ததாக தெரியவில்லை. ஆதி நகைச்சுவை நாடகப் பிரதிகளில் ஒன்றானமத்த விலாச பிரகசனத்தை எழுதியவனே அரசனாகிய மகேந்திர பல்லவன். அரசனும் விதூஷகனும் எனவே அரசு அதிகாரமும் நகைச்சுவையும் இரட்டைகள் என்ற கருத்தே இந்திய மரபுகளில் காணப்படுகிறது. சமஸ்கிருத நாடகங்களில் வருகின்ற விதூஷகன் கதாபாத்திரமும் தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற நாடகங்களில் வருகின்ற கட்டியங்காரனும் அரசனின் இரட்டை கோமாளி, அரசு அதிகாரத்தின் இரட்டை நகைச்சுவை, என்பதை அறுதி செய்கின்றன. அக்பர்-பீர்பால், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் கதைகள் அரசு அதிகாரத்தையும் நகைச்சுவையையும் ஒன்றன் ஆடிபிம்பமாக மற்றதைக் கருதிய மரபின் தொடர்ச்சிகளே ஆகும். அரசனின் ஆடிபிம்பமாக கோமாளி ஷேகஸ்பியரின் நாடகங்களில் தோன்றுவதற்கு பதினாறாம் நூற்றாண்டாகிறது.

துன்பியல், அரசு அதிகாரத்தை அறுதிசெய்வதற்கான உணர்ச்சி உத்தி என்பதைகவிதையியலா விவரித்து எழுதிய அரிஸ்டாட்டில் நகைச்சுவைக்கான அழகியல் ஒன்றையும் எழுதினார் ஆனால் அது கிடைக்காமல் போய்விட்டது என்றொரு வழக்காறு உண்டு. இந்த செவிவழிக்கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே உம்பர்டோ ஈகோவின்ரோஜாவின் பெயர்என்ற நாவல். பதினான்காம் நூற்றாண்டு இத்தாலியில் கதை நிகழும் இந்த நாவலில் வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் என்ற ஃபிரான்ஸிஸ்கன் பிரிவைச் சேர்ந்த பாதிரியார் இறையியல் விவாதம் ஒன்றிற்காக தன்னுடைய சீடன் அட்ஸோவுடன் மடாலயம் ஒன்றிற்கு பயணம் செய்கிறார். அந்த மடாலயத்தில் தொடர்கொலைகள் நடைபெறுவதால் அவற்றினை துப்பறியும் பணி வில்லியமுக்குக் கொடுக்கப்படுகிறது. வில்லியம் கொலைகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும் சிறு குறிப்புகளைக் கொண்டு துப்பறிந்து மடாலாயத்தின் நூலகரான குருட்டு ஜோர்ஜ் என்பவரே கொலையாளி என்று கண்டுபிடிக்கிறார். மடாலய நூலகத்தில் இருக்கும் அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியல் நூல் யாருடைய கையிலும் கிடைத்துவிடாமல் பாதுகாக்கும்பொருட்டே ஜோர்ஜ் அந்த புத்தகத்தை பற்றி யாரெல்லாம் அறிய வருகிறார்களோ அவர்களையெல்லாம் கொல்கிறார் என தெரியவருகிறது. அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியல் எல்லொருடைய கையிலும் கிடைத்துவிட்டால் எல்லா அதிகாரங்களும் அழிந்துவிடும் குறிப்பாக அதிகாரங்கள் எல்லாவற்றையும் விட பெரிய அதிகாரமான கடவுளின் அதிகாரம் அழிந்துவிடும் மத்வாதியான ஜோர்ஜ் நம்புகிறார். பிளேட்டோவின்உரையாடல்களில்சாக்ரடீஸ் நகைச்சுவை அரசு அதிகாரத்திற்கு எதிரானது என்று வாதிடுகிறார் என்றால் அதுவே கடவுளின் அதிகாரத்துக்கு எதிரானதாக எனவே அழிக்கப்படவேண்டியதாக ஈக்கோவின் கதாபாத்திரமாகிய ஜோர்ஜ் நம்புகிறார் எனவே தன் நம்பிக்கையின் பொருட்டு தொடர்கொலைகளையும் செய்கிறார். மதவாதிகள் எந்தக் காலத்திலும் நகைப்பதில்லை.

உண்மையைச் சொல்லப்போனால் முற்றுமுழு அதிகாரமான கடவுளுக்கு எதிரான நகைச்சுவை என்ன என்பது இன்றைக்கும் கூட மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வருகிறது. அரிஸ்டாட்டிலின் நகைச்சுவையின் அழகியல் தொலைந்து போனது தொலைந்து போனதாகவே இருக்கிறது அதை மீட்டெடுக்கவோ புதிதாக எழுதவோ கற்பனையற்றவர்களாகத்தான் மனித குல வரலாறு நகர்கிறது. ‘ரோஜாவின் பெயர்நாவலின் இறுதி வரி கவித்துவமானது; “ ஆதி ரோஜா அதன் பெயரிலேயே வாழ்கிறது நாம் வைத்திருப்பதோ பெயர்களற்றதுஅதாவது பண்டைய கீரேக்கத்தின் கண்டுபிடிப்பான அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியலை (பெயருடைய ரோஜா) நாம் திரும்பபெற முடியாதவாறு இழந்துவிட்டோம். நாவலில் நூலகத்தின் அழிவும் கள்ளமற்ற குடியானப்பெண்ணின் மரணமும் கூட நகைச்சுவைக்கான உந்துதல்களை இழந்துவிட்டதைத்தான் சொல்கின்றன.

உம்பர்டோ ஈக்கோவின்ரோஜாவின் பெயர்நாவலின் இறுதி வரியை சாக்ரடீஸ் படிக்க நேர்ந்திருந்தால் தனக்கு அளிக்கப்பட்ட விஷக்கோப்பையை தூக்கி எறிந்துவிட்டு ஏதென்ஸ் நகரை விட்டு சிரித்துக்கொண்டே வெளியேறியிருக்கக்க்கூடும். ஏன் உயிரை விட்டு ஏதென்ஸ் நகரின் அதிகாரத்தை சாக்ரடீஸ் நிலைபெறச் செய்திருக்கவேண்டும்? இல்லை எந்த அதிகாரத்தையுமே யாரும் நிலைபெறச் செய்ய வேண்டும்? விஷக்கோப்பையை மனமொப்பி அருந்திய சாக்ரடீஸ் தன் கடைசி விநாடியில் வாய்விட்டு நகைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். Power is, after all, a joke. 
       No comments: