Monday, February 22, 2016

பாரதி விவாதம்- பெருந்தேவி கட்டுரை

நான்கு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பாரதி விவாதம் பற்றி பெருந்தேவி  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அந்தக்கட்டுரை 'மலைகள்' இணைய தளத்தில் பிரசுரமாகி இருக்கிறது. அதை எனக்கு கவனப்படுத்திய பெருந்தேவிக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெருந்தேவியின் கட்டுரையை http://malaigal.com/?p=7891 என்ற சுட்டியில் வாசிக்கலாம்.

பாரதியின் கவிதைகளை நவ வேதாந்தத்திற்குள் வைத்து வாசிக்க வேண்டும் என்று வாதிடும் பெருந்தேவி நான் ஏற்கனவே பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு அவை அவரை எப்படி வேதாந்தத்திலிருந்து வேறு பட்ட மெய்யியல் பார்வையை பெற காரணங்களாக இருந்தன என்று எழுதியிருப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

நான் முன்பு எழுதியது:

"சமணமும், பௌத்தமும், சைவமும், வைணவமும் தங்கள் மெய்யியல் உண்மைகளை ஒன்றினை வைத்து மற்றொன்றினை மறுத்து, உரையாடியே தங்களை புதுப்பித்துக்கொண்டன, அவையனைத்தும் தங்கள் வழிமுறைகளையும் தர்க்கவிவாதங்களையும் செயல்வடிவங்களையும் வெளிப்படையாகவே வைத்திருக்கிண்றன. எதையும் பூடகமாக்கவில்லை. பாரதியாரே தன்னுடைய மெய்யியல் மரபை கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்கியே தன் கவிக்குரலில் ஆத்மார்த்தமும் அந்தரங்க சுத்தியும் ஏறச்செய்தார். பாரதியின் தத்துவ மரபு என்ற கட்டுரையில் முப்பால் மணி எழுதியுள்ளதை வாசியுங்கள்
 “தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள். இந்நிலையில் மேற்கூறிய அத்வைதக் கருத்தியல் பின்னணியிலேயே முதலில் பாரதியார் இருந்தார். அப்போது “தேகம் என்பது யான் அன்று, மேலும் அகவயமான யானும் பிரம்மம் அன்று, வாழ்வு என்பது கனவு” என ஏற்றிருந்தார். அதாவது சார்வாகம், உலகாயதம் போற்றியுரைத்த தேகாத்மம் என்பதை அப்போது இயல்பாகவே தமது சுயமரபு காரணமாக மறுப்புக்கொண்டிருந்தார், தேகமே ஆத்மாவாக உள்ளது, ஆத்மா எனத் தனியாக ஒன்றும் இல்லை என்பது தேகாத்ம வாதம், ஆனால் பாரதி இதை ஏற்கவில்லை, அவர் தேகம் வேறு, ஆத்மா வேறு, அவை தனித்தனி என்பதையே மேற்கொண்டு இறுதிவரை இப்படியே திகழ்ந்தார், "அகவயமான யான் என்பதே பிரம்மம் மற்றும் வாழ்வு என்பது கனவு" என்பன சங்கரரின் அகவய-அத்வைதம், இது அவருடைய சுயமரபு. இதிலிருந்துதான் அவர் மாறுபாடு அடைகிறார்.

1906 முதல் 1913 வரை அவரது வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. சொந்தக் குடும்பம், அரசியல், பத்திரிகை-எழுத்து என அவை பொலிவுபெற்றன. 1912-ஆம் ஆண்டில் அரசியல், பத்திரிகை ஆகியன தொடர்ச்சியற்றுவிட்டன. 1911-ஆம் ஆண்டில் குள்ளச்சாமி பழங்குப்பை, பழம்பொய் எனச் சுட்டிக்காட்ட, பாரதியார் கடந்தகாலத்திலிருந்து விடுதலை பெற்ற புதியவன் ஆனார். புதிய காற்றால் புதிய உயிராய்ப் பிறந்துவிட்டார். கோவிந்த ஞானியின் தொடர்பு கண்ட பின் எல்லாமுமே அனைத்துமே பிரம்மம், பரம்பொருள். தெய்வம், பரசிவம் எனத் தெளிந்தார். இதனோடு நிற்காமல் சம்சார விருத்திகள் பரம்பொருளின் விருத்திகள், செயல்கள் எல்லாம் சிவன் செயல்கள் எனத் தெளிந்து பகவத் கீதைக்கு முன்னுரை எழுதினார். விருத்தி என்பது இல்லையெனில் அழிவு, காதல் போயின் சாதல், விருத்தி என்றால் பிறப்பு-செயல்-மாற்றம்-இன்னொரு பிறப்பை ஈன்று விட்டு ஏகமாதல், இதுவே அத்வைத நிலை, முக்தி ஆகும் என்ற உறுதிக்கு வந்தடைந்தார். இதுவே அவரது மாற்றம், இயலுலக வாழ்வில் விருத்தி என்பது சமூக விருத்தி ஆகும்.” தன் மரபு மெய்யியலை விமர்சித்ததால்தான் பாரதிக்கு நம் அகத்தோடு பேசுகின்ற கவிக்குரல் கூடி வந்தது." பார்க்க: http://mdmuthukumaraswamy.blogspot.in/2011/10/blog-post_23.html 


பாரதியின் மெய்யியல் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் பெருந்தேவி வாதிடுவதால் அவருடைய மொத்த வாதமும் பிழைபட்டதாக இருக்கிறது. 


இரண்டாவதாக ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரலை ஒரு வரலாற்று காலகட்டத்தில் கவிஞர்கள் எப்படி அடைகிறார்கள் என்பதை விளக்கத்தான் என்னுடைய பாரதி, டி.எஸ்.எலியட் ஒப்பீடே தவிர இரு கவிகளின் நவீனத்துவத்தை நேரடியாக ஒப்பிடுவதல்ல.


இன்னும் அணுக்கமாக பெருந்தேவி வாசிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். 

No comments: