ஜி.பி.இளங்கோவனின் கவிதைத்தொகுதி “நிகழ்தகவு” குறித்து நேற்று பேசச்செல்வதற்கு முன்பு இளங்கோவனைப் பற்றி எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. அவரை நான் சந்தித்திருக்கவும் இல்லை. என்னை “நிகழ்தகவு” குறித்து பேச அழைத்த மார்க்கண்டன், இளங்கோவன் சமீபத்தில் மறைந்த என் நண்பர் ஶ்ரீரங்கம் டி.கண்ணனுக்கு நண்பர் என்று சொன்னது எனக்கு இளங்கோவனின் தொகுதி பற்றி பேசச் செல்வதற்கு போதுமான காரணமாக இருந்தது. செப்டம்பரில் ஒரு நாள் டி. கண்ணன் என்னை ஃபோனில் அழைத்திருந்தார். நான் வேறொரு வேலையில் இருந்தபடியால் என்னால் ஃபோனை எடுக்க இயலவில்லை. கண்ணனுடன் பேசுவதற்கான வாய்ப்பு இனி எனக்கு என்றும் கிடைக்கப்போவதில்லை என வருந்தியிருந்தேன்.
இளங்கோவனைப் பற்றிய, அதாவது, ஆசிரியரைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல், ஒரு கவிதை நூலைப் பிரதியை வைத்து மட்டுமே வாசிப்பதற்கான விமர்சன முறையைத்தானே நான் இலக்கிய விமர்சனத்தில் வலியுறுத்தி வருகிறேன், அந்த முறைமையை நிகழ்த்திக்காட்ட நேற்றைய என் உரை ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.
மொழி என்பது ஒரு ஒழுங்கமைவு என்றால், கவிதை அதற்குள்ளாக அதற்கே உரிய அறிதல் முறைகளால் ஒரு துணை அமைப்பை (supplementary system) உண்டாக்குகிறது. கவிதையின் அறிதல் முறை உருவகம் (metaphor), ஆகுபெயர் (metaonymy) அணிகள் ( குறிப்பாக தற்குறிப்பேற்ற அணி) ஆகியவற்றால் இன்னொரு உள்மொழியாகத் திரள்கிறது. ஒவ்வொரு கவிஞனும் இந்த உள்மொழிக்குள்ளாக தன் பிரதிகளுக்கான reading protocols ஐ உருவாக்குகிறான். இந்த protocolsகளே வாசகனுக்கும் பிரதிக்கும் இடையிலான வாசிப்பு உறவின் negotiations ஐ தீர்மானிக்கின்றன. பிரதி- வாசக உறவினை ஜனநாயக மாண்பு மிகுந்ததாக, வாசக பங்கேற்பினை அதிகப்படுத்தும் பிரதிகளை நாம் நல்ல இலக்கியம் என்றும், உணர்ச்சி சுரண்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மேலாண்மைகளிலும் வாசகனை ஈடுபடுத்துகிற பிரதிகள் மோசமானவை எனவும் வகைப்படுத்துகிறோம். மேற்சொன்ன குறியியல் ( semiotics), கட்டவிழ்ப்பு ( deconstruction) வாசிப்பு முறைமைகளின் அடிப்படைகளை விளக்கிவிட்டு நான் ஜி.பி.இளங்கோவன் என ஆசிரிய அடையாளமிடப்பட்ட “நிகழ்தகவு” தொகுப்பில் இயங்குகின்ற reading protocols என்னனென்ன என்பதையும் எடுத்துச் சொன்னேன். அந்த protocolsகளுக்கு உள்ளாக எந்தக் கவிதைகள் சிறந்த கவிதைகளாக இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டேன்.
நேற்றைய நிகழ்ச்சியில், மார்க்கண்டன் முத்துசாமி, யவனிகா ஶ்ரீராம், குடந்தை ஆடலரசன், ரெங்கையா முருகன், லார்க் பாஸ்கரன், சுந்தரபுத்தன், ஜி.பி.இளங்கோவன், வடலூர் ஆதிரையும் அவருடைய மகனும், ஆர்.காளிப்பிரசாத், சிவா, பா.சரவணக்குமார், சிவக்குமார் முத்தையா, மீனா சுந்தர், மகேஸ்வரன் ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி. வேறு சில பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்.

No comments:
Post a Comment