Tuesday, December 6, 2011

ஜூலியா கிறிஸ்தவாவின் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ பகுதி 1

Julia Kristeva photo from http://en.wikipedia.org/wiki/Julia_Kristeva

பேசும் உடலை கவிதையின் மொழிக்குள்ளும் கவிதையைப் பற்றிய சிந்தனைக்குள்ளும் எப்படி கொண்டு வருவது என்ற கேள்விக்கு புதிதாக விடையளித்ததன் மூலமாக மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைத்துறைகளை முற்றிலும் புதியதாக்கியவர் ஜூலியா கிறிஸ்தவா. அவருடைய ‘கவித்துவ மொழியில் புரட்சி’ (Revolution in poetic language) என்ற நூலை சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் வாசித்தேன். கவிதை எழுத, வாசிக்க, விமர்சிக்க, அறிய, கிறிஸ்தவாவின் இந்த ஆரம்ப காலகட்ட நூல் எனக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் என்று தோன்றியது.
1984இல் ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ‘கவித்துவ மொழியில் புரட்சி‘ அதுவரைக்கும் மொழி பற்றியுள்ள தத்துவங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. கிறிஸ்தவாவே இது பற்றி  குறிப்பிடுகையில் ‘கருத்தின் வெளியுருவங்களே மொழி என்று சொல்லும் நம் மொழி பற்றிய தத்துவங்கள், ஆவணக்காப்பாளர்கள், தொல்லியலாளர்கள், பிண ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் எண்ணங்களே ஆகும்’ என்கிறார். அதாவது பேசும் மனித உடல்களையும், மொழியையும் அவற்றின் இயங்குதன்மையிலிருந்து பிரித்து நிலையானதாக எனவே செத்ததாக, ஆவணப்படுத்தக்கூடியதாக, 
மக்களிடமிருந்து பிரித்த மொழியினை ஆய்வுக்குட்படுத்தக்கூடியதாக பின் நவீனத்துவத்திற்கு முந்தைய மொழி பற்றிய மேற்கத்திய தத்துவம் இருந்தது. இதிலிருந்து முற்றிலும் விலகி கிறிஸ்த்வா, பேசும் உடல்களின் உந்துதல்களாலும், சக்தி வெளிப்பாடுகளினாலும் உருப்பெறும் மொழி பொருளுணர்த்துவது மட்டுமல்லாமல் அனுபவங்களையும் தன்னிருப்புகளையும் வடிவமைக்கிறது என்கிறார். மற்ற ஃப்ரெஞ்சு பின் நவீன சிந்தனையாளர்களான லகான், தெரிதா, ஆகியோரோடு சேர்த்து கிறிஸ்தவாவை வாசிக்கும்போது கிறிஸ்தவா மொழியை சகல மனித பொருளுணர்த்தும் செயல்பாடுகளின் அங்கமாகவே பார்க்கிறார் என்பது தெரியவரும். மொழியில் ஏற்படும் மாற்றங்கள் தன்னிருப்பு, தன் உடலோடு, மற்றவர்களோடு, பொருட்களோடு கொள்கின்ற உறவில் ஏற்படும் மாற்றங்களை கட்டமைக்கின்றன. மொழியின் சக்தியென்பது மனித உடலுயிரியின் சக்தி மொழிக்குக் கடத்தப்பட்டதால் உண்டாவதாகும். உடலுயிரியின் சக்தி உணர்ச்சி வெளிப்பாடுகளினால் அன்றி மொழிக்கு வேறெவற்றினால் கடத்தப்படக்கூடியதாகும்?
தினசரி நாகரீக மொழி உணர்ச்சி வெளிப்பாடுகளையும் அவற்றின் மிகைகளையும் மீறல்களையும் ஒடுக்கி ஒழுங்கிற்குகொண்டு வருகிறது. தொடர்புறுத்துதல்களின் அமைப்புகள் சமூக ஒழுங்கமைப்புகளாகின்றன. ஆனால் கலைகள், கவிதைகள், மதச் சடங்குகள், பல விதமான மத வெளிப்பாடுகள் உடலுயிரியின் மொழிக்கு தங்குதடையற்ற இடமளிப்பது மூலம் சமூக ஒழுங்கை கலைத்துப்போடுகின்றன. 
பொருளுணர்த்தும் செயல்பாடாக மொழியை நாம் கவனிக்கும்போது அதனுள்ளே இரண்டு இயங்கு தளங்களை அவதானிக்கலாம் என்கிறார் கிறிஸ்தவா; ஒன்று தெளிவான ஒழுங்குக்குட்பட்டது, மற்றொன்று தன்னிருப்பின் உந்துதல் சக்தியாகவோ, உணர்ச்சியாகவோ, வேறொன்றினைத் தூண்டக்கூடியதாகவோ வெளிப்படுவது. இந்த இரண்டு பாங்குகளையும் குறியீட்டுப்பாங்கு (Symbolic) குறிப்புணர்த்தும் பாங்கு (Semiotic) என்று கிறிஸ்தவா அடையாளப்படுத்துகிறார். 
குறிப்புணர்த்தும் பாங்கின் வழியாகவே உடலுயிரியின் சக்தி மொழிக்குள் இயக்கம் பெறுகிறது; அது வார்த்தைப்படுத்தப்படும்போது கூட வாக்கிய அமைப்பின் ஒழுங்கினை நிராகரிப்பதாக இருக்கிறது. இதற்கு எதிரிடையாக குறியீட்டுபாங்கில் மொழி ஒழுங்குக்குட்பட்டதாக இலக்கண சுத்தமாக இருக்கிறது. மேற்கத்திய மொழி பற்றிய தத்துவம் இந்த இரண்டு பாங்குகளையும் நனவு-நனவிலி, கலாச்சாரம்-இயற்கை, அறிவு-உணர்ச்சி என்ற எதிரிடை இருமைகளாக பார்ப்பதை மாற்றி கிறிஸ்தவா இவற்றை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாகப் பார்க்கிறார்.
ஒழுங்கு, இலக்கணம் ஆகியவற்றிற்கு முந்தைய குறிப்புணர்த்தும்பாங்கினை, இன்னும் மொழியைக்கற்றுக்கொள்ளாத சிசு உடலுயிரியின் மொழியாக விரிக்கும் கிறிஸ்தவா,இதனை பிளேட்டோவிடமிருந்து கடன் பெற்ற சொல்லான chora என்ற பதத்தினால் அழைக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பினையொட்டி chora வை நாம் கருவறை என அறியலாம். உலகில் பிறந்தபின்னும்
கருவறையின் மொழியாக தன் முழு உடலாலும் தற்காலிக பொருளுணர்த்துதல்களால், வெவ்வேறு விதமான லயங்களோடு,  இயக்கம் நிரம்பியதாக, உடல் சக்தியின் வெளிப்படாக சிசு மொழி இருப்பதை சுட்டும் கிறிஸ்தவா ஒழுங்கின் மேற்பரப்பிற்குக் கீழே கவிதையில் இயங்கும் சிசுமொழியையே கவித்துவமொழியாக அடையாளம் காண்கிறார்.
பிளேட்டோவிடமிருந்து chora என்ற பதத்தினை கிறிஸ்தவா கடன் பெற்றாலும் அதை அப்படியே பிளேட்டோ பயன்படுத்தியதுபோல கிறிஸ்தவா பயன்படுத்துவதில்லை. பிளேட்டோவின் கருவறை எந்த கருத்தினாலும் நிரப்பப்படக்கூடியது. கிறிஸ்தவா அதற்குத் தன்னிச்சையான இயல்பு உண்டென்கிறார். வேறொன்றாவதற்கான உந்துதல், ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலுடன் உரையாடுவது, தாய்மையும் சிசுமையும் கொஞ்சிக் குலாவுவது, ஒன்றையொன்று அறிந்து கொள்வது, புரிந்துகொள்வது, தத்துவ அரசியல் நிலைப்பாடுகளுக்கு முந்தையது என்றெல்லாம் choraவை கிறிஸ்தவா விளக்குகிறார். தாயும் சிசுவும் ‘உரையாடும் மொழி’ ஒற்றை எழுத்தொலிகளால் ஆனதென்பதையும் கிறிஸ்தவா சுட்டத் தவறவில்லை.
[இந்திய தாந்திரிக மரபுகள், குறிப்பாக சாக்த மரபு சக்தி/தாய்/தெய்வ வழிபாட்டிற்காக உண்டாக்கிய மந்திரங்கள் ஒற்றை எழுத்தொலி மந்திரங்கள் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட வேண்டும். பீஜாக்ஷர மந்திரங்கள் என இதர மந்திரங்களுக்குள் உள்வாங்கப்பட்ட சாக்த மரபின் கண்டுபிடிப்புகள் உடலாற்றலை வலுப்படுத்துபவனாகவும், உடலாற்றல் வெளியுலக ஆற்றல்களோடு லயப்பொருத்தம் காண வல்லமையுடையனவாகவும் கருதப்பட்டன. தாந்திரிகம் பற்றி எழுதும்போது இந்த சரடினை பின்னர்  எழுதுகிறேன்.]
அர்த்த உருவாக்கம் இலக்கணமாக முழுமைபெறாத நிலையில் உடல் சைகைகளாக, பாவனைகளாக,  நிகழ்த்துதல்களாக, ஆற்றல்களாக, பேசா மொழியாக, உடலின் மொழி கவிதையின் மேற்பரப்பிற்கு கீழே கவித்துவ மொழியாக இயங்குகிறது.
கிறிஸ்தவாவின் choraவை விளக்க மேற்கத்திய விமர்சகர்கள் ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசஸ் நாவலில் கடைசிப்பகுதியிலுள்ள மாலி ப்ளூமின் தனிப் பேச்சினை உதாரணம் கொடுக்கிறார்கள். அதற்கு நிகரான பத்தி தமிழிலிருந்து எடுக்க வேண்டுமென்றால் நாம் நகுலனின் நாவல்களிடத்தில்தான் எடுக்க வேண்டும். 

No comments: