Thursday, December 8, 2011

ஜுலியா கிறிஸ்தவாவின் 'கவித்துவ மொழியில் புரட்சி' பகுதி 3

"Mirror" from haberarts.com 


வடிவ ஒழுங்கு, செய் நேர்த்தி, கவிதா தர்க்கம் ஆகியவற்றின் உள்ளார்ந்த மற்றதாக கவிதையின் லயம், சப்தம், தொனி, பவனைகள், சைகைகள் ஆகியனவற்றை அடையாளப்படுத்தியதன் மூலமும், மற்றதினை பெண்மையின் குணனலன்களாக விவரித்ததன் மூலமும் கிறிஸ்தவா மொழிக்கும் மனிதனுக்குமான உறவையே தன்னிருப்பு கட்டமைக்கப்படுவதன் செயல்பாடாக மாற்றுகிறார். மேற்கத்திய தத்துவ பாரம்பரியத்தில் தன்னிலை-மற்றது ஆகியவற்றிற்கிடையிலுள்ள உறவு முக்கிய பங்கு வகிப்பதாக இருந்து வந்திருக்கிறது. தன்னிலை என்பது தன்னிருப்பாக கட்டமைக்கப்படக்கூடியது அதிலும் அந்த கட்டமைதல் மொழி மூலமாக நடைபெறுகிறது என்பதை சுட்டியது கிறிஸ்தவாவின் முக்கிய பங்களிப்பாகும்.
பல்கேரியாவில் பிறந்து ரஷ்ய உருவவியல் கோட்பாடுகளில் தேர்ச்சிபெற்றவராக ஃபிரெஞ்சு தத்துவ சூழலுக்குள் காலடி எடுத்து வைக்கும் கிறிஸ்தவாவுக்கு, ரஷ்ய உருவவியலை மிக முக்கியமான இலக்கிய கோட்பாடாக மாற்றி அமைத்த மிகைல் பக்தினின் தாக்கம் இருந்தது. பக்தினே தன்னிலைக்கும் மற்றவைக்குமான (Self and Other) உறவினை அறம் சார் உறவாக தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்களில் அடையாளப்படுத்தியிருந்தார். இலக்கியம், கலை ஆகியனவற்றை ஆசிரிய தன்னிலையின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்கப் பழகியிருந்த மேற்குலகிற்கு பக்தின் தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்கள் கலை உச்சத்தினை அடைவதற்குக் காரணம் அவை தாஸ்தாவ்ஸ்கியென்ற ஆசிரிய தன்னிலையின் வெளிப்பாடாக இல்லாமல் அவர் நம்பியிருந்த கிறித்தவ உலக நோக்கிற்கு நேர் எதிரான கதாபாத்திரங்களையும் கதைச் சூழல்களையும் கற்பனை செய்ய முடிந்தது என்று எடுத்துச் சொன்னார். அத்தகைய எதிர்மறை கதாபாத்திரங்களுக்கான ஜீவித நியாயத்தையும் அவரால் தன் நாவல்களில் எடுத்துச் சொல்ல முடிந்தது என்பது மற்றவையோடு உரையாடுகின்ற கற்பனை (Dialogic imagination) என்றும் பக்தின் விளக்கியிருந்தார். பலகீனர்களையும் பாவிகளையும் ரட்சியுங்கள் என்று உண்மைக் கிறித்தவரான தாஸ்தாவ்ஸ்கி தன் நாவல்களில் இறைஞ்சவில்லை; மாறாக அத்தகைய மனிதர்களுக்கும் உலகிருப்பிற்கான நியாயம் என்ன என்பதினை வெளிச்சொல்வதாகவே தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்கள் அமைந்திருக்கின்றன இந்த குணமே தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்களை ஐரோப்பிய நாவல் வரலாற்றிலேயே உச்சகட்ட படைப்புகளாக மாற்றுகின்றன என்றும் பக்தின் வாதிட்டார். தன் நியாயத்தைவிட பிறர் நியாயம் என்ன என்பதை புனவிற்குள் கொண்டுவருவதே கலை என்றும் தாஸ்தவ்ஸ்கியை முன்னிறுத்தி பக்தின் வாதிட்டார்.
பக்தினின் தன்னிலை- மற்றவை உறவு பற்றிய சிந்தனை, மொழி பற்றிய தத்துவம், இலக்கியக் கோட்பாடு என்று மட்டுமில்லாமல், மானிடவியல், சமூகவியல், அரசியல், காலனீய நீக்க சிந்தனைகள், அறவியல் என பல துறைகளிலும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. எட்வர்ட் சேடின் ‘ஓரியண்டலிசம்‘, உதாரணமாக, கீழைத்தேயத்தினை மற்றதாக ஐரோப்பிய சிந்தனை கற்பிதம் செய்கிறது என்று விளக்குகிறது. ஆனால் பக்தினின் சிந்தனையின் பல துறை தாக்கங்கள் அமெரிக்க இலக்கியக் கோட்பாட்டாளர்களும் தத்துவவாதிகளும் பக்தினை 1950-1960களில் கண்டுபிடிக்கும்வரை நிகழவில்லை.
கிறிஸ்தவா உள் நுழையும்போது இருந்த ஃபிரெஞ்சு தத்துவச்சூழலோ இருத்தலியலின் பாதிப்பினால் தன்ன்னிலையைக் கொண்டாடும் சிந்தனையாக இருந்தது. இந்த தன்னிலைக் கொண்டாட்டத்தின் மிக மோசமான வெளிப்பாடாகவே சார்த்தரின் மற்றவையெல்லாம் நரகம் என்ற வாசகம் விவாதத்திற்குள்ளாகியது. சார்த்தரின் ‘No Exit’ நாடகத்தில் வரக்கூடிய இந்த வாசகத்தினை காம்யூ, சிமோன் தி பூவா ஆகிய சிந்தனையாளர்கள் உடனடியாக கடுமையாக எதிர்த்தனர்; சார்த்தரே தன்னுடைய இந்த வாசகம் சார்ந்த தத்துவ நிலைப்பாடு தவறானது என்று ஒப்புக்கொண்டு எழுத்தாளனின் கடப்பாடு என்ன என்பதினை விளக்கும் கட்டுரைகளை பின்னர் எழுதினார். இருப்பினும்   தன்னிலையை விடுத்து மற்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தத்துவத்தையும், இலக்கிய கோட்பாட்டினையும் வளர்த்தெடுத்தது பின் நவீனத்துவ சிந்தனையாளர்களாலேயே சாத்தியப்பட்டது. லகானுக்கும் கிறிஸ்தவாவிற்கும் இந்த பங்களிப்பில் மிக முக்கியமான இடமிருக்கிறது.
மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை-மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைத்ததையே கிறிஸ்தவாவின் முக்கிய பங்களிப்பாக சொல்லலாம். ஆண்-பெண் என்ற ஆசிரியர்களின் பால் நிலை மீறி, இலக்கியம்- இலக்கியமற்றது என்ற பகுப்பு மீறி, பேச்சுமொழி- எழுத்துமொழி என்ற வேறுபாடு மீறி மேற்புறத்து ஒழுங்கும், அடிப்பரப்பு ஒழுங்கின்மையும் எல்லா மொழி வெள்ப்பாடுகளிலும் செயல்படுவதை கிறிஸ்தவா விளக்குகிறார். அதாவது மற்ற தத்துவவாதிகளும் மொழியியல் அறிஞர்களும் தன்னிலையை நிலைத்த ஒழுங்குடையதாகக் கருதும்போது கிறிஸ்தவா தன்னிலையினை தொடர்ந்த மொழி ஊடாட்டத்தின் மூலமாக தற்காலிகமாக கட்டமைக்கப்படுகின்ற தன்னிருப்புகளாகப் பார்க்கிறார். உருவாகியும், சிதைந்தும், ஒன்று சேர்ந்தும், பிளவுபட்டும் என மொழி ஊடாட்டத்திற்குத் தக்க தன்னிலை என்பது தன்னிருப்புகளின் தொகுதியாகாவே அறியப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையென்பது பல தன்னிருப்புகளின் தொகுதிதானே தவிர நிலைத்த ஒரு தன்னிலை அல்ல.
கண்ணாடி நிலையிலிருந்து சிறிது சிறிதாக மொழியினைக் கற்றுக்கொள்ளும் குழந்தை மொழியின் வாக்கிய அமைப்பு, இலக்கணம் என்று அறிந்து பயன்படுத்தத் தொடங்கும்போது அந்த மொழி வாயிலில் கிறிஸ்தவா ஒரு விரிசலை அடையாளப்படுத்துகிறார். சசூரின் மொழியியலின்படி இதை விளக்கவேண்டுமென்றால் குறிப்பானுக்கும் குறிப்பீடிற்கும், சப்தத்திற்கும் அர்த்தத்திற்கும் உள்ள இடைவெளி என்று இந்த விரிசலைச் சொல்லலாம். விரிசல்களின் தொடர்ச்சியாகவே தன்னிலை (self) இயக்கம் பெறுகிறது.
தன்னிலை-மற்றவை என்ற எதிர் இருமையாக இதர தத்துவவாதிகள் கட்டமைத்ததை மொழி ஊடாட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொண்டுவந்ததன் மூலம் தன்னிருப்பினை அரசியலுக்கான களனாகவும் கிறிஸ்தவா மாற்றிவிடுகிறார். தன்னிருப்பு (Subjectivity) மனத்தின் உள்ளார்ந்த தளத்திற்குள் எடுத்துச் செல்லப்படுவதால் அரசு, அதிகாரம், அடையாளப்படுத்தும் செயல்பாடு ஆகியனவும் மனம்-மொழி சார்ந்த மனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளாகிவிடுகின்றன. தன்னிருப்புகளின் தொகுதிகளாக தன்னிலையை கணிக்கும்போதே எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன தொகுதிகள் உருவாகி கலைகின்றன என ஃபூக்கோவினால் வரலாறுகளை புது விதமாக எழுதமுடிந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அரசும் அதிகாரமும் ஒருவனிடத்து மேற்பரப்பின் ஒழுங்காக தன்னிலையில் செயல்படுகிறதென்றால் அதன் மற்றதான எதிர் நிலை அரசு, அதிகார எதிர்ப்பும் அடிப்பரப்பில் செயல்படுவதாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் நீதியும்-குற்றமும், அறமும்-விகாரமும், எழுச்சியும் -வீழ்ச்சியும், ஒவ்வொரு தன்னிருப்பிலிருந்தும் கிளம்புவதாகவே ஒவ்வொரு வரலாற்றுக்கட்டமும் அமைவதாக இருக்கிறது. வெகுஜன தளத்திலிருந்து வரலாற்றினை ஒவ்வொரு குடிமகளின் தன்னிலைக்குமாக கிறிஸ்தவா நகர்த்தியது நீட்ஷேயிடம் தொடங்கி ஃபூக்கோ, தெல்யூஸ் என்று நீளும் தத்துவ பாரம்பரியத்தின் பகுதியாகும். கிறிஸ்தவா கவிதை வாசிப்பிலிருந்து இந்த இடத்தை அடைகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் கிறிஸ்தவாவினுடையது ஆரம்ப கால பங்களிப்பாகும்.
கவிதை வாசிப்பு என்பது இதனால் தனியான, விசேஷமான வாசிப்பு செயல்பாடென்று மட்டும் கொள்ளலாகாது. ஒவ்வொரு பேசும் உடலின் மொழிச்செயல்பாட்டு சந்தர்ப்பத்திலும் கவிதை உள்ளார்ந்து இருக்கிறது. எழுதப்பட்ட கவிதை இந்த மொழிச் செயல்பாட்டு சந்தர்ப்பங்களை அழுந்தக்கூறி கவனத்தை ஈர்க்கிறது. கவிதை வாசிப்பே வாழ்தல்.
  

No comments: