Thursday, December 22, 2011

விமலாதித்த மாமல்லனின் பொறுக்கி மொழி


மேற்கண்ட கட்டுரையில் என்னை தன்னுடைய வழமையான பொறுக்கி மொழியால் அவதூறு செய்து எழுதியிருக்கும் மாமல்லன் அடிப்படையான விபரங்கள் அறியாமல் எழுதியிருக்கிறார்.
நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?
லும்பன் மொழியென்றால் என்ன என்ற உரையாடலில் லும்பன் மொழி என்பது பொறுக்கி மொழி என்று மொழிபெயர்க்கப்படவேண்டும் அது மாமல்லன் குறிப்பிட்டது போல விளிம்பு நிலை மக்களின் மொழி அல்ல, வட்டார வழக்குகளோ ஜாதீய வழக்குகளோ அல்ல என்று விளக்கி பொறுக்கி மொழி  வெகுஜன மொழியாக  தமிழில் எப்படி தோற்றம்பெற்றது என்பதை ஃபேஸ்புக், டிவிட்டர் உரையாடல்களின் போது மாமல்லனிடமும் உரையாடலில் பங்கேற்ற மற்றவர்களிடமும் சொன்னேன். பொறுக்கி மொழியிலேயே தன்னுடைய தவறான புரிதலை தொடர்ந்து முன் வைத்த மாமல்லன் பிராமணீய பிள்ளைவாளான நான் சென்னை வட்டார வழக்கினை இளக்காரமாகப்பார்ப்பதாகச் சொன்னார். நரிக்குறவர் மொழிக்கும், ஜேனு குறுபர் ஆதிவாசி அகராதி உள்ளிட்ட பல ஆதிவாசி மொழிகளுக்கும் அகராதி தயாரிப்புகளில் ஈடுபட்டவன் எப்படி வட்டார வழக்குகளை இளக்காரமாகப் பார்க்கக்கூடிய பிள்ளைவாளாவான் என்று திரும்பிக் கேட்டதற்கு மாமல்லன் மேற்கண்ட பதிவினை எழுதியிருக்கிறார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் வரவில்லை என்பது மட்டுமல்ல வெவ்வேறு மொழியியலாளர்களோடு சேர்ந்து  அகராதிகள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு ஒருவனுக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, பணம் கொடுத்துவிட்டால் ஒருவனால் செய்துவிட முடியுமா, பணம் கொடுத்துச் செய்யச் சொன்னாலுமே தன் வாழ் நாளின் சிறந்த வருடங்களை எந்தவித எதிர் காலமோ, அங்கீகாரமோ இல்லாத இந்த மாதிரியான பணிகளில் யாரேனும் ஈடுபடுவார்களா என்பதையெல்லாம் ஒருவர் யோசித்துப்பார்க்கவேண்டும். இந்த உழைப்பிற்கு பின்னாலுள்ள நுட்பமான படிப்பறிவின் தேவையை, இலக்கியத்துறையில் செயல்படும் மாமல்லன், கேவலப்படுத்தினாரென்றால் அவரை என்னவென்று அழைப்பது? ஒரு எழுத்தாளனுக்கு எல்லா சிந்தனைத்துறைகளைப் பற்றிய அறிவு இருக்கவேண்டியதில்லை; ஆனால் சிந்தனைத்துறைகள் பற்றிய மரியாதை கூடவா இருக்காது?
கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி என்ற என்னுடைய பதிவில் சினிமாப்பாடல்களை உதாரணம் காட்டியதில் ஆண்டுகள் தப்புத்தப்பாகிவிட்டதாம். இவர் கண்டுபிடித்துவிட்டராம். தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்  நான் நினைவிலிருந்து எழுதுகிறேன் என்று. இந்த மாதிரியான பாடல்வரிகளை இந்த மாதிரியான செய்திகளுக்கு தலைப்பாக வைப்பது போன்ற, இந்த மாதிரியான ஒலிகளை பயன்படுத்துவது போன்ற உதாரணங்களைக் கொடுத்து விளக்கினார் என்று எழுதினால் அவர் பேசிய வருடத்தில் இந்தப் பாடல்கள் திரைக்கு வரவில்லையே என்று மாமல்லன் எழுதினால் என்ன செய்வது?  உதாரணங்கள் கொடுப்பது நான். இந்தமாதிரியான உதாரணங்களைக் கொடுத்து நம்பி பேசினார் என்று எழுதினால் அந்த உதாரணங்களை விக்கிரமாதித்யன் நம்பியே கொடுத்தார் என்று எப்படி பொருள்படும்? யார் வேண்டுமென்றாலும் என் பதிவினைப் படித்துப்பார்க்கலாம்.  மேலும் உரை நடைகளின் வகைகளைப் பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் யார் யார் எந்தெந்த உரை நடைகளின் உருவாக்கத்திற்கு பங்காற்றினார்கள் என்று சொல்லத்தானே வேண்டும்? ஒரு மொழியிலுள்ள பலவேறு வகை நடைகளையும் அவை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும் எப்படி ஆராய்வது?
விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய நிர்ப்பந்தத்தினால் தன் கவிதை மொழிக்கு சம்பந்தமில்லாத நேரெதிரிடயான வெகுஜன பத்திரிக்கை உரைநடை உருவாக்கத்தில் பங்குபெற்றார். கேள்வி நம்பியைப் பற்றி அல்ல. மேலும் அவர்கள் அந்த உரைநடையை உருவாக்கியதும் பயன்படுத்தியதும் ஊழல் அரசியல்வாதிகளையும், திரை மறைவு செயல்பாடுகளையும் அம்பலமாகுவதற்காக. இருப்பினும் நம்பிக்கு அப்படிப்பட்ட மொழி நடை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய அவதானம் இருந்தது. ஆனால் குறிப்பிட்ட வெகுஜனப் பத்திரிக்கை உரை நடையிலிருந்து உருவான பொறுக்கி மொழியை மாமல்லன் எதற்கெடுத்தாலும் பயன்படுத்துவதன் ‘நிர்ப்பந்தம்’ என்ன என்பதுதான் கேள்வி. 'சிறுமி கொண்டு வந்த மலர்', 'முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள்' ஆகிய கதைகளை எழுதிய மாமல்லனா இது? இல்லை சுந்தர ராமசாமி இப்போது இருந்திருந்தால் மாமல்லன் வகைதொகையில்லாமல் பயன்படுத்தும் உரைநடையை ஆதரித்துதான் இருப்பாரா?
மாமல்லன் தன் பதிவில் கொடுத்திருக்கும் விக்கிரமாதித்யன் கவிதையில் உள்ள மொழியும், மாமல்லனின் பதிவிலுள்ள பொறுக்கி உரை நடையின் மொழியும் ஒன்றா? 


நாகார்ஜுனனின் புத்தக அட்டையை தன் பதிவில் கொடுத்திருக்கிறாரே மாமல்லன், பொறுக்கி மொழி நாகர்ஜுனன் கடுமையாக விமர்சிக்கும் அ-கலாச்சாரத்தின்பாற்பட்டது, எதிர்கலாச்சாரம் சம்பந்தப்பட்டதல்ல என்பது கூடவா தெரியவில்லை மாமல்லனுக்கு? இல்லை எல்லாருடைய சாமானமும் ஒன்றுதானே என்ற அ-கலாச்சார பதில்தானா அதற்கும்?
ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் மாமல்லனுக்கும் தகராறு இருந்தால் அதை எதற்கு இந்த விவாதத்தில் கொண்டுவருகிறார் மாமல்லன்?
கல்யாணராமனுக்கும் எனக்கும் நிகழ்ந்த டிவிட்டர் உரையாடல் முழுவதையும் மாமல்லன் ஏன் தன்னுடைய பதிவில் தரவில்லை?
தமிழ் உரை நடைகளின் வகைகள், அவற்றின் உருவாக்கம், பொருத்தப்பாடு, பயன்பாடு, ஆகியவற்றைப் பற்றிய ஆக்கபூர்வமான விவாதமும் உரையாடலும் மீண்டுமொருமுறை மாமல்லனின் பொறுக்கி உரை நடையால் திசை திருப்பப்பட்டிருக்கிறது. 

2 comments:

Anonymous said...

He is a nitpicker-in-chief, just ignore him.

Anonymous said...

தரமான வாதங்களுக்கு எதிர்வினை புரியலாம். ஆனால் சர்ச்சையில் இருப்பது ஒன்றே குறிக்கோள் என்றிருப்பவருடன் பயனுள்ள வாதங்கள் நிகழ்த்துதல் சாத்தியமில்லை. உங்களுடைய "மு" குட்டிகதைத்தொடரின் அடுத்த பதிவு எப்போது?