Saturday, December 29, 2012

கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள் | சிறுகதை


ஒன்றுமே நடக்காதது போல நினைவுகளைச் சப்புகொட்டிக்கொண்டு குத்த வைத்து உட்கார்ந்திருந்தாள் கல்யாணி ஆச்சி. சீவலப்பேரி சுடலைமாடன் அவள் கனவில் வந்து இட்லி சுடவேண்டாம் என்று மிரட்டியதிலிருந்து அவள் கடந்த வாரங்களில் பன்ணி வரும் கலாட்டா கொஞ்ச நஞ்சமல்ல. அவள் உட்கார்ந்திருந்த இயல்பையும் அவளருகே நின்ற அவளுடைய கோட்டிக்கார மகனின் தோரணையும் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது சுப்பிரமணிக்கு. ‘கிழட்டு சவத்துக்கும் கோட்டிக்கார மூதிக்கும் நாலு பொடதில போட்டாத்தான் சரியா வரும். இட்லி சுட மாட்டாளாமே இட்லி. காத்தக் குடிச்சிட்டா காலத்த கழிக்க முடியும்?’ என்று முணுமுணுத்த சுப்பிரமணியை ஆச்சி முறைத்தாள்.

“என்னலே அங்க வாய்க்குள்ள முணுமுணுக்க?”

“ஒண்ணுமில்ல ஆச்சி. எல்லாம் என் கிரகத்தச் சொல்லனும்”

என்ன செய்வான் அவன் பாவம்! ஆச்சியை நம்பித்தான் அவன் பிழைப்பு நடந்துகொண்டிருந்தது. திருநெல்வேலி ஜங்ஷனில் இரவு நேர இட்லிக்கடை ஒன்றை அவர்கள் நடத்தி வந்தார்கள். ஆச்சிக்கடை இட்லி ரொம்பவும் பிரசித்தம். ஒவ்வோர் இட்லியும் வெள்ளை வெளேர் என்று மிருதுவாயும் சுடச்சுடவும் இருக்கும். சாப்பிடுகிற ஒவ்வொருத்தனும் கூடவே பயரும் ஆம்லெட்டும் வாங்கிவிட்டான் என்றால் போதும். வியாபாரம் கொழித்துவிடும். குஷியில் வெள்ளிக்கிழமை லீவு விட்டு விடலாம். அத்தனையும் கிழவி கண்ட கனா கெடுத்துவிட்டது. அரச மரத்தப் பிடிச்ச சனி பிள்ளையாரையும் பிடிச்சது மாதிரி கிழவிக்கு வந்த கேடு சுப்பிரமணிக்கு லபித்த பட்டினி என்று நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. கொஞ்ச நாட்களாகவே கல்யாணி ஆச்சியின் நடவடிக்கைகள் எல்லாம் குளறுபடியாய் மாறியிருந்தன. ஆச்சிக்கு வயது எழுபதுக்கு மேலிருக்கும். ஆனால் இந்த வயதிலும் அதிகாலையில் எழுந்து குறுக்குத்துறை தாமிரபரணியில் குளித்து துணி துவைத்து பிள்ளையார், முருகன் கோவில்களில் நான்கு தங்க அரளிப் பூக்களைப் போட்டு கும்பிட்டுவிட்டு வந்தால்தான் ஆச்சிக்கு பொழுது புலரும். ஆச்சி பெரிய உழைப்பாளி. தன் வேலைகளை மிகவும் மகிழ்ச்சியாகச் செய்வாள். இத்தனைக்கும் அவள் வாழ்க்கையில் சந்தோஷப்படும்படியாக ஏதுமில்லை. பதினெட்டு வயதில் சொந்தக்கார கிழவன் ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். இருபத்தி நான்கு வயதில் விதவையானாள். நாற்பத்தி ஏழு வயதில் வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் அனாதைப் பயலான கோட்டிக்கார சங்கரவேலு அவளுடன் ஒட்டிக்கொண்டான். ஆச்சி அவனைத் தன் சொந்த மகன் என்றே எல்லோரிடமும் சொல்லி வந்தாள். தள்ளாத காலத்தில் சுப்பிரமணியும் அவளுடன் ஒட்டிக்கொண்டான். மூவரும் சேர்ந்ததுதான் இட்லிக்கடை. ஆச்சிதான் கிட்டத்தட்ட எல்லா வேலையும் செய்வாள்.

இந்த வயதிலும் ஒரு பெரிய குத்துப்போணிக்கு மாவரைத்து இடுப்பில் தூக்கிக்கொண்டு கைலாசபுரத்திலிருந்து ஜங்ஷனுக்கு வந்துவிடுவாள். மடக்கு மேஜை, நான்கு நாற்காலிகள் இவற்றைத்  தூக்கிப்போடுவது, பரிமாறுவது, பில்தொகை சொல்லி கணக்குப் பார்த்து பணம் வாங்கிக் கல்லாவில் போடுவது இவ்வளவுதான் சுப்பிரமணிக்கு வேலை. சங்கரவேலு ஆச்சிக்கு எடுபிடி. உண்மையில் அவன் எந்த வேலையும் செய்யமாட்டான். வாட்ட சாட்டமாய் இருப்பான். முப்பதோ, நாற்பதோ, ஐம்பதோ எது வேண்டுமானாலும் அவன் வயதாய் இருக்கலாம். அவன் மாதிரி உடல்வாகு உள்ளவர்களைச் சாதாரணமாகத் தீவெட்டித் தடியன் என்றழைப்பார்கள். தொப்புளுக்குக் கீழே லுங்கியை இறக்கிக் கட்டிக்கொண்டு மேலே ஒரு அழுக்குத் துண்டை இறுக்கி பெல்ட் மாதிரி கட்டியிருப்பான். சட்டை போடமாட்டான். சும்மாவே உடாகார்ந்திருப்பான். திருச்செந்தூர் முருகனின் தெய்வீக அருள் இருப்பதால்தான் அவனுக்கு சாப்பிடுகிற சாப்பாடு செமிக்கிறது என்பாள் ஆச்சி. சங்கரவேலுவுக்கு எது தெரிகிறதோ இல்லையோ சதா நேரம் என்ன என்று தெரிந்தே ஆகவேண்டும். அதையும் மற்றவர்களிடம் சரியாகக் கேட்கத் தெரியாது. சாப்பிடுகிறவர்கள், சாப்பிடாதாவர்கள், போகிறவர்கள், வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவனுக்கு நேரம் தெரியவேண்டும்போது அவர்களை வழி மறித்து ‘காலம் என்ன?’ என்று கேட்பான். அதற்கு பதிலாய் சரியான மணிதான் சொல்ல வேண்டுமென்பதில்லை. உண்மையில் என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணத்துக்கு இப்போது நடக்கிற கூத்தை பாருங்கள்:

‘காலம் என்ன?’

“காலம் அழிவு காலம்டா சங்கரவேலு. சீவலப்பேரி சுடலைமாடசாமி எங்கிட்ட சொல்லுச்சு. சீவனுள்ள மேகம் ஒண்ணு தரையெறங்கி கூத்தாடும் அந்தன்னைக்கு எல்லாம் அழியும்னு மாடன் துடியான தெய்வம்லா. காலம் அழிவு காலம்டா சங்கரவேலு”

‘ஏ ஆச்சி, ஒன் சொள்ள மாடன் பேச்ச விடமாட்ட? சதா இதே பேச்சு ஆறுமுவத்துமங்கலத்துல போயி பேயோட்டுனாத்தான் சரியா வருவ ஆத்தாவும் பிள்ளையும் வந்துட்டாங்கய்யா பொளப்ப கெடுக்க”

“எங்கிட்ட சாமி சொன்ன நாலாமத்து நாளு திருநெல்வேலிக்கு பொயலும் வெள்ளமும் வந்துச்சே அதுக்கு என்ன சொல்லுத நீ? கைலாசபுரம் முழுக்க முங்கிப்போச்சு. ஆத்துல பாலத்துக்கு மேல தண்ணி போச்சு. மேகம் தரையிறங்கி கூத்தாடல? கடைசி அம்பது வருசத்துல இப்டி ஒரு வெள்ளம் உண்டுமாலே? உண்டுமா? ஏலே உண்டுமா? ஏதோ பேச வந்துட்டான். மாடசாமியைப் பத்தி பேசின நாக்க இழுத்து வச்சு அறுத்துப் போடுவேன் ஆமா”

“பெரிய குறிகாரி இவ. போ ஆச்சி. சும்மா இருப்பியா. ஒனக்கு வேல செஞ்சு மடுத்துருச்சு. ஏதுடா சாக்குன்னு பாத்த. வெள்ளம் வந்த பெறவு வேல செய்ய மாட்டேங்கிர. ஒன்னச் சொல்லியும் குத்தமில்ல. வாழ்க்கைல ஒழைச்சு ஒழைச்சு நீயும்தான் என்னத்தக் கண்ட?”

ஆச்சி பதில் பேசவில்லை. சுப்பிரமணிதான் அவனுடைய வழக்கமான கடைசி அஸ்திரமான ‘வாழ்க்கைல நீ என்னத்த கண்ட?’ என்பதைப் பிரயோகித்துவிட்டானே, இனி எப்படி அவள் பதில் சொல்லுவாள்? சுப்பிரமணி அடிக்கடி ஆச்சியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பான். எந்தவித சுயபிரக்ஞையும் இல்லாமல் வேலை வேலை என்று மட்டுமே இருந்த ஆச்சியை இந்தக் கேள்வி பல சமயம் நிலை குலைய வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இதுவெல்லாம் என்ன கேள்வி என்பதுபோல அலட்சியமாய் இருந்தாள். சுப்பிரமணி அடிக்கடி கேட்க கேட்க யோசித்து பதில் சொல்லவேண்டும் என்று மனத்திற்குள் சங்கல்பம் எடுத்துக்கொண்டாள்.

ஒரு நாள் விடை கிடைத்துவிட்டது போல தோன்றியவுடன் உடனடியாக சுப்பிரமணியிடம் சென்று பெருமையாக, “ஏலே சுப்பிரமணி, வாழ்க்கைல நான் என்னத்தக் கண்டேன் என்னத்தக் கண்டேன்னுட்டு சும்மா நீ கேப்பிலா. நா நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் பாத்திருக்கன்லாலே?” என்றாள். சுப்பிரமணி அதற்கு அப்படி விழுந்து விழுந்து சிரித்திருக்கத் தேவையில்லைதான். அவனோடு கிட்டத்தட்ட ஒரு மாசம் அவள் முகங்கொடுத்தே பேசவில்லை. சுப்பிரமணி தனக்குத் தெரிந்த அத்தனை தகிடுத்தத்தங்களையும் கருவிகளாய் பயன்படுத்திதான் ஆச்சியை சமாதானம் செய்ய முடிந்தது. நெல்லையப்பர் கோவில் தேரோட்டம், திருச்செந்தூர் சஷ்டி விழா, பாஞ்சாலங்குறிச்சி ரேக்ளா பந்தயம், சுடலைமாடனுக்குரிய பங்குனி உத்திரக் கொடை ஆகியவற்றை ஆச்சி வாழ்க்கையில் கண்ட பெரிய விஷயங்களாக சுப்பிரமணி ஏற்றுக்கொண்டான் அல்லது ஒரு சமயம் ஏர்றுக்கொள்வது போல நடித்தான். ஆச்சிக்கு உள்ளுக்குள் அவன் தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நன்றாகவே தெரியும். அவன் ஒப்புக்கொண்டிருந்தான் என்றால் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி கேட்பானேன்? உண்மைக்கும் பெரிய திருவிழாவில் பங்கேற்பதை விட வேறென்ன பெரிய விஷயம் வாழ்க்கையில் இருக்க முடியும் என்று ஆச்சிக்குப் புரியவில்லை. கோபத்தில், உன் சங்காத்தமே வேண்டாம் என்று சுப்பிரமணியை விரட்டி விட்டு விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் கதை நடக்கவேண்டுமே! சங்கரவேலுத் தடியனை வைத்துக்கொண்டு தனியாக வியாபாரம் செய்ய முடியுமா என்ன? இது தவிர தன்னை அங்கீகரிக்க மறுக்கின்ற இன்னொருவனின் வன்முறைக்கு ஆட்பட்டு வாழ்வதுதானே நம் எல்லோருடைய வாழ்க்கையும்? ஆச்சி மட்டும் இந்தப் பொது விதிக்கு விலக்காக முடியுமா? இல்லையென்றால் தன்னை அங்கீகரிக்காத மற்றவனைக் கொன்று தீர்த்துவிடவா முடியும்? ஒருவரின் ஜீவித நியாயத்தை கேள்விக்குள்ளாக்க இன்னொருவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி சத்தியமானதுதான். ஆனால் நம் சரித்திர விபரீதங்கள் எல்லாம் ஒருவரின் ஜீவித நியாயத்தை மற்றொருவர் மறுக்கப் போய்  விளைந்த விபத்துக்களின் தொகுதிதானே? ஆச்சி இந்த மாதிரியெல்லாம் சிந்திக்காமலேயே, மௌனமான நாகரீக உடன்படிக்கைக்கு உடபட்டவளாய் சுப்பிரமணியைத் தொடர்ந்து வேலைக்கு வைத்துக்கொண்டாள். அதே சமயத்தில் தான் கண்டுபிடித்த உண்மையின் பல பரிமாணங்களையும் சுப்பிரமணிக்கு உணர்த்தவே ஆச்சி பல தடவை முயன்றாள். இரவு கண் முழித்ததன் அயர்ச்சி நீங்கக் காலை முழுவதும் தூங்கிவிட்டு மதியம் மூன்று மணி வாக்கில் ஆச்சி வழக்கமாக மாவாட்ட உட்காருவாள். அப்போதெல்லால் சுப்பிரமணி முழித்துக்கொண்டே தூங்குவது போல ஒரு கள்ளத் தூக்கம் போட்டுச் சோம்பேறித்தனமாய் படுத்துக் கிடப்பான். மாவை ஒதுக்கி உதவி செய்யும் சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன‘ என்று படுத்த ஆரம்பித்த உடனேயே ஆச்சி ‘நீயாவது கேளுடா சங்கரவேலு’ என்று ஆரம்பித்து திருவிழாக்களின் அருமை பெருமைகளை அளப்பாள். வருடா வருடம் திருவிழா பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், பக்தி பரவசம், ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தெய்வத்திற்கு அதிகரிக்கின்ற சக்தி நின்று கொல்லும் சக்தியாகச் செயல்படுவது என ஆச்சியின் வளவளப்பு நீண்டுகொண்டே போகும். 

சுப்பிரமணி  கிட்டத்தட்ட ஒரு வாரம் பொறுத்துப் பார்த்தான். அதற்கு மேல் அவனுக்கு சகிக்கவில்லை. முதலில் தன்னைத் தூங்கவிடாமல் கிழவி அறுக்கிறாள் என்று கத்திப்பார்த்தான். பிறகு அவள் சங்கரவேலுவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே சினிமாப் பாடல்களை பெருங்குரலில் பாடிப்பார்த்தான். எதற்கும் ஆச்சி அசரவில்லை. சுப்பிரமணியை ரெண்டு அதட்டல் போட்டுவிட்டு அவள் பாட்டுக்குத் திருவிழாப் பெருமை பேசினாள். இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்ற வீறாப்பு சுப்பிரமணிக்கு வலுத்துவிட்டது. ஒரு நாள் சங்கரவேலுவைப் பிடித்து வைத்து ‘என்னாலே தேரோட்டம், கொடைன்னு ஒங்கம்மா கத அளக்கா? திருவிழான்னா மொற மாப்பிள்ள பசங்க மொறப்பொண்ணுங்கள பாப்பானுங்க. ரௌடிப் பயலுக நாலு பொம்பளகள கையப் புடிச்சு இளுப்பானுக’ என்று சுப்பிரமணி சொன்னதற்கு சங்கரவேலு கிளுகிளுவென சிரித்தான். “பாரு, ஒனக்கே சிரிப்பாணி பொங்குது. ஒங்க ஆத்தா ஏன் ஒனக்கு தேரோட்டக் கத சொல்லுதான்னு இப்பல்ல புரியுது” ஆச்சி காது படத்தான் அவன் இப்படிச் சொன்னான். ஆச்சிக்குத் துணுக்கென்றது. “என்னலே சொல்லுத?” என்றான் கோபமாக. “ சங்கரவேலுவுக்கு கலியாணம் வேண்டாமா ஆச்சி? அதான் ஆச உண்டாக்குதேன்” இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுப்பிரமணி நிம்மதியாக மத்தியானங்களில் படுத்துக்கிடந்தான். ஒரு முறை சங்கரவேலு “ காலம் என்ன?” என்றதற்கு ஆச்சி “ சும்மா கிட சவமே” என்றாள்.

ஆச்சி அதன் பிறகு மௌனமாக இருந்தாளே தவிர அவளுக்கு சுப்பிரமணி மேல் உள்ளுக்குள் கடுங்கோபம் கனன்றுகொண்டிருந்தது. இந்த சனியன் பிடிச்ச பயல ஒழிச்சுக் காட்டிவிடணும்னு மனத்திற்குள் கருவிக்கொண்டாள். ஆனால் சுப்பிரமணி இல்லாவிட்டால் யார் இட்லிக்கடைக்கு வரும் குடிகாரர்களையும் ரௌடிப்பசங்களையும் சமாளிப்பது? அதிகாலையில் இட்லிக்கடையில் இருந்து திரும்பிய பின் அந்த ஆயாசத்திலும் ஆச்சிக்குத் தூக்கம் வருவது சிரமமாக மாறிவிட்டது. சுப்பிரமணியை எப்படியாவது கதறக் கதற அடித்துவிடவேண்டும் என்று ஒரு சமயமும் தெய்வம் அவனை சரியானபடி தட்டிக்கேட்கும் என்று இன்னொரு சமயமும் நினைத்துக்கொள்வாள்.

ஆனால் சுப்பிரமணிக்கோ தான் ஆச்சியின் வாழ்க்கையின் ஆதார மையங்களை குறி வைத்துத் தாக்கி வருகிறோம்  என்று சத்தியமாகத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சலித்துக்கொள்ள வேண்டும். சலிப்பே ஏற்படாத அளவுக்கு திருப்தியோடு  எப்படி ஒருவர் வாழமுடியும்? அதிலும் இளம் வயதில் விதவையான இந்தக் கிழவி, வெந்ததைத் தின்று விதி வந்தபோது சாவோம் என்றிருக்கக்கூடிய இந்தக் கிழவி, உழைப்பைத் தவிர வேறெந்த இன்பத்தையும் அடையாத இந்தக் கிழவி ஒரு முறை கூட சலித்துக்கொள்ளாமல் இருப்பது ஏன்? இப்படியெல்லாம் சுப்பிரமணி யோசிக்கவில்லையென்றாலும் ஆச்சி பெரிய கர்வி என்று அவன் நினைத்ததில் அவன் அறியாத இந்தப் பின்புலம் இருந்தது. அந்தப் பின்புலம் சோதிடம், சூதாட்டம், விதி ஆகியவற்றின் மேல்  சுப்பிரமணி வைத்திருந்த நம்பிக்கையால் உருவானது என்று சொல்லலாம்.

திருநெல்வேலி ஜங்ஷனில் நன்னாரி சர்பத் விற்றுக்கொண்டிருந்தவனெல்லாம் நான்கடுக்கு மாளிகை கட்டியது எப்படி? எல்லாம் லெக்கினாதிபதி அருள். மூலைக்கு இரண்டு அல்வாக் கடை இருந்தும் ஒரே கடையில் போய் அத்தனை கூட்டமும் சாரச் சரிய நிற்பதேன்? புதன் அருளால் கிடைத்த ஜன வசியம். பண்ணையார் குடும்பத்தில் பிறந்த சங்கரவேலு கோட்டிக்காரனாய் திரிவது ஏன்? நீசமடைந்த சந்திரனின் கொடுப்பினை. இது போல பலவாறாக சுப்பிரமணி தனக்குள்ளே பேசிக்கொள்வான். ஆச்சியின் நிம்மதியான திருப்திதான் எந்த கிரகத்தின் சதி என்று அவனுக்கு விளங்கவேயில்லை. ஆச்சி மிகப் பெரிய அதிர்ஷ்டக்காரி என்று முதலில் நம்பிய அவன் அவள் கையால் நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, பொங்கல் பம்பர், அஷ்டலட்சுமி என்று பல லாட்டரி டிக்கெட்டும் வாங்கிப் பார்த்தான். பெருத்த நஷ்டம் ஏற்பட்டதுதான் மிச்சம். தாயக்கட்டம் விளையாடினால் கூட ஆச்சியின் காய்கள் கிடந்து தெவங்கும். காய்கள் கொத்துப் பட்டால் திகையவே திகையாது. ஒரு சிவராத்திரி கண் விழித்து விளையாடினாலும் ஆச்சி ஒரு காய் கூட பழமேற்ற மாட்டாள். ஆனால் ‘காலமென்ன’ என்று முணுமுணுத்துக்கொண்டே கட்டைகளை சங்கரவேலு உருட்டினானென்றால் விருத்தமாய்க் கொட்டும். முதலில் பழம் போவான். மற்றவர்களின் காய்களை நிசாரமாய்க் கொத்தித் தள்ளிவிடுவான். தன் ஜாதகத்தின் தசாபுத்திக்கேற்ப கிரகங்களைக் குளிப்பாட்டி தன் எதிர்காலத்தை சுபிட்சமாக்க முடியுமென நம்பிய சுப்பிரமணியின் வாரந்திர அர்ச்சனை போன்ற செயல்களை கல்யாணி ஆச்சி, சங்கரவேலு ஆகியோரின் இயல்பான வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் அர்த்தமற்றதாக மாற்றிக்கொண்டிருந்தது. தன்னுடைய செயல்களின் அர்த்தமற்ற தன்மையில் விளைந்த சோகத்தை மறப்பதற்கே ஆச்சியின் வாழ்க்கை அபத்தமானது என்ற பொருள்பட பேசி ஆச்சியை சுப்பிரமணி நோகடித்து வந்தான் என்று விளக்கம் சொல்ல இடமிருக்கிறது. ஒரு வேளை இப்படிப்பட்ட விளக்கங்கள் எல்லாமே பொய்யோ என்னவோ யார் கண்டார்கள்? ஒரு வேளை சுப்பிரமணி ஆச்சியின் மேல் உண்மையான கரிசனத்தினால் அவளைத் துன்புறுத்துகிறோம் என்ற உணர்வேயில்லாமல் இப்படியெல்லாம் பேசி வந்திருக்கலாம். உண்மைக்குத்தான் எப்பொழுதுமே பல பரிமாணங்கள் உண்டே?

தன் திருவிழாப் பெருமைகள் சுப்பிரமணியிடம் தோற்றுவிட்டதைத் தொடர்ந்து ஆச்சி தன் சமையல் திறனைப் பற்றி வளவளக்க ஆரம்பித்தாள். இந்தப் பெருமையின் அவல முடிவு சங்கரவேலு தலையில் போய் முடியும் என்று அப்போது யார்தான் நினைத்திருக்க முடியும்? இட்லிக்கடைக்குக் கூட்டமே தன்னுடைய சமையல் திறனால்தான் என்று ஆச்சி அளந்து கொட்டியதை சுப்பிரமணி அந்த நேரம் சகித்துக்கொண்டிருக்கலாம் அவன்தான் பிசாசுப் பையல் ஆயிற்றே! சும்மாவா இருப்பான். அவன் நிதானமாக எப்படி இரவு நேரத்தில் வேறு கடைகள் இல்லாததால் ஆச்சி கடைக்குக் கூட்டம் வர நேர்கிறது என்பதை விளக்கிச் சொன்னான். ஆச்சியின் கைத்திறமையை பாராட்டுகிறவர்கள் அனைவருமே துட்டு ஒழுங்காகத் தராதவர்கள் என்பதையும் அவன் திட்டவட்டமாக நிரூபித்தான். இச்சம்பவத்திற்கு மறுநாள் ஆச்சி முற்றிலுமாக நிதானமிழந்தாள். என்ன செய்கிறோம் என்ற ஓர்மையே இல்லாமல் ஒரு நாள் மதியம் சின்ன தவறு ஒன்றிற்காக சங்கரவேலுவை விறகுக்கட்டையால் அடி அடியென்று அடித்துத் நொறுக்கித் தள்ளிவிட்டாள். ஆச்சியின் கோபத்தையே அறியாத சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன’ என்று கதறி அழுதான். சுப்பிரமணிதான் ஆச்சியிடமிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. அப்போதும் அவன் ஆச்சியை வாழ்க்கைல நீ என்னத்த கண்ட என்று திட்டினான். மனம் வெம்பி ஆச்சி நொறுங்கிப் போனாள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஆனாலும் ஆச்சி விடவில்லை. சாப்பிட வருகிறவர்களிடம் சரியான பாக்கித் தொகையைக் கொடுக்காமல் சுப்பிரமணி ஏமாற்றுகிறான் என்று ஒரு நாள் கூச்சலிட்டாள். சுப்பிரமணி பதிலுக்கு கத்தினான். விவகாரம் பெரிதாகிவிட போலீஸ், லஞ்சம், கேசு, அடிதடி என்றாகிவிட்டது. முழு வியாபாரத்தையும் ஏறக்கட்ட வேண்டியதாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரத்தை அவர்கள் அரை வயிற்றுக் கஞ்சியுடனும் பட்டினியோடும் கழிக்க வேண்டியதாயிற்று. பசி பொறுக்காத சுப்பிரமணி எரிச்சலின் உச்சகட்டத்தில் இருந்தபோது ஆச்சி சங்கரவேலுவிடம் அளக்க புதுப்பெருமை ஒன்றைக் கண்டுபிடித்தாள். 

“ஏலேய் சங்கரவேலு, அரளில எத்தன அரளி உண்டு தெரியுமாலே? நா சொல்லுதன் கேள். வெள்ளரளி, வெள்ள அடுக்கரளி, செவ்வரளி, செவ்வடுக்கரளி, கஸ்தூரி அரளி, ஆத்தரளி, வெள்ளக்காசரளி, சிவப்புக்காசரளி, தங்கரளி, சிறு தங்கரளி, மலையரளின்னுட்டு அரளி பதினோரு வகை. அரிசி எத்தன உண்டு தெரியுமா? “புழுங்கலரிசி, பச்சையரிசி, கறுப்பு நெல்லரிசி, மட்டை நெல்லரிசி, மலை நெல்லரிசி, அருணாவரிசி, உலுவாவரிசி, ஏலவரிசி, கார்போக அரிசி, விளவரிசி, வெட்பாலை அரிசி… கடச்சரக்கு என்னவெல்லாம் தெரியுமா? இஞ்சி, ஏலம், கடுகு, சாதிக்காய், நீர்வெட்டிமுத்து, ரோசாமொட்டு, வெந்தயம், அதிமதுரம், காசுக்கட்டி, கோரோசனை, மஞ்சள், லவங்கப்பத்திரி …..” பட்டியல் நீண்டு கொண்டே போனது. தூக்கமின்மையால் சிவந்த கண்களோடு தலைவிரி கோலமாய் உட்கார்ந்திருந்த ஆச்சி பட்டினியால் கரகரத்த குரலில் தொடர்ந்து விதவிதமான பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போனாள். வாழ்வின் அந்தி முற்றத்தில் தனக்குத் தெரிந்த பட்டியல்களையெல்லாம் வாரி இறைத்துவிட்டு அடங்கிவிட வேண்டும் என்ற வெறியில் அவள் பேசுவது போலத் தெரிந்தது.

முதலில் போனால் போகிறது என்றிருந்த சுப்பிரமணி நேரம் ஆக ஆக பொறுமையிழந்தான். பக்கத்து வீட்டிலிருந்து சுடலையாண்டியை கூட்டி வந்து ஆச்சியின் பட்டியல்களை விட நீண்ட பட்டியல்களை மனப்பாடமாக ஒப்பிக்க வைத்தான். சுடலையாண்டி நாலாங்கிளாஸ்தான் படிக்கிறான். கெட்டிக்காரப் பயல். ஆச்சி முதலில் மனம் தளரவில்லை. ஆனால் சுடலையாண்டி உரங்களின் வீரியத்திற்கேற்ப ஓங்கி வளரும் விதவிதமான வாயில் நுழையாத ஆங்கிலப் பெயர்கள் கொண்ட அரிசி வகைகளை அடுக்கியபோது ஆச்சிக்கு புறவுலகம் விளங்கிக்கொள்ள இயலாததாய்ப் போயிற்று. சுடலையாண்டி கூறிய அரிசி வகைகள் பயிரிடப்படும் முறைகளை அறிய  ஆச்சி பிரம்மப் பிரயத்தனம் செய்தாள். ரசாயன உரங்களின் தன்மையை அவளுக்கு யாராலும் விளக்க இயலவில்லை. அவளுக்குப் புரிந்ததெல்லாம் பயிருக்கு அடிக்கிற பூச்சிக்கொல்லி மருந்தெல்லாம் விஷம் என்பதுதான். சுப்பம்மாள் மகள் பாப்பா அந்த விஷத்தைக் குடித்துதான் செத்துப்போனாள் என்பது கைலாசபுரத்தில் பிரபலமான கதை.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப்பின் கடையைத் திறந்தபோது எல்லாமே சுமுகமாக நடக்கும்போலத்தான் இருந்தது. ஆனால் ஆச்சிக்குத் திடீரென்று இளகிவிட்டது. கடையில் நல்ல கூட்டம். ஆச்சி திடீரென்று விஷ அரிசி விஷ இட்லி என்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டாள். கடைத்தெருவெங்கும் ஒரே களேபரமாகிவிட்டது. 

இனிமேல் திருநெல்வேலி ஜங்ஷனில் கடை வைத்து பிழைக்க முடியாது என்றாகிவிட்டது நிலைமை. சுப்பிரமணி தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டான். புயலடிப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு இச்சம்பவம் நடந்த இரவில்தான் ஆச்சிக்கு அந்தக் கனவு மீண்டும் வந்தது. 

அந்த விசித்திர கனவையும் விவரித்துதான் ஆக வேண்டும். தங்க அரளிப்பூக்களைப் போல சூரியன் பிரகாசித்துக்கொண்டிருக்கிற முன் மாலை நேரம். சங்கரவேலு தன் விகார இளிப்புடன் சூரியனை மறைத்து மேற்கு நோக்கி ‘காலமென்ன காலமென்ன‘ என்று நடந்துகொண்டிருக்கிறான். அவன் காலடியில் முன்பொரு காலத்தில் மூன்று போகம் விளைந்த வயற்காடு நெருஞ்சிமுள் தோட்டமாய் விரிந்து கிடக்கிறது. நெருஞ்சி முள்புதர்களைச் சுற்றித் தேள்களும் பூரான்களும் கருநாகங்களும் மண்டிக்கிடக்கின்றன. சூரியனை நோக்கி தலைவிரிகோலமாய் தன்நிர்வாணம் மறைக்க நாதியற்று சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன‘ என்று ஓலமிட்டு ஓடுகிறான். ‘விஷம் பூக்கும் காலமடா‘ சங்கரவேலு என்கிறாள் ஆச்சி. இவ்வாறு கதறி கதறி அழுதுகொண்டே சங்கரவேலுவை அடி அடியென்று அடிக்கிறாள். சங்கரவேலு கெஞ்சுகிறான். அழுகிறான். அவன் உடலெங்கும் ரத்தம் பீறிடுகிறது. ஆச்சி விடுகிறாளில்லை. திருவிழாக்கள் காணாத சுடலைகளின் பீடங்களின் வழி அவர்கள் ஓடுகிறார்கள். ‘சீவனுள்ள மேகம் ஒண்ணு தரையெறங்கிக் கூத்தாடும்‘ என்று வீறிடுகின்றன சுடலை பீடங்கள். ‘விழு தாயம்‘ என்று சொக்கட்டான் உருட்டுகிறான் சுப்பிரமணி. அவன் நெருஞ்சி முட்களையெல்லாம் டிராக்டரினால் உழுது போடுகிறான். உடைமர விதைகளை எல்லா இடங்களிலும் அவன் தூவத் தூவ ஆச்சி கழி கொண்டு சங்கரவேலுவை அடிக்கிறாள். ‘விஷம் பூக்கும் காலமடா சங்கரவேலு‘ என்று தொடர்ந்து அழுகிறாள். ஆச்சி இக்கனவின் நடுவில் பலமுறை எழுந்து எழுந்து உட்கார்ந்தாள். சங்கரவேலு படுத்திருக்கும் இடத்திற்குப் போய் போய் பார்த்துவிட்டு வந்தாள். பெரும் குரலெடுத்து சில நேரம் கேவிக்கேவி அழுதாள். ஏன் எதற்கு என்று அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. கனவு அவளை விடவில்லை. தீக்கனவின் தீராத வேதனை அவளை கடுஞ்சுரத்தில் தள்ளியது. சுடலைமாடசாமி அவளை இட்லி அவிக்க வேண்டாம் என்று சொல்லியதுதான் இக்கனவின் பொருள் என்று அவள் உறுதியாக நம்பினாள். சுப்பிரமணியும் சங்கரவேலுவும் அவள் நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் அவள் எதிர்பார்த்தாள். 

புயலடித்தபின் இரு வாரங்கள் அவள் பிடிவாதமாய் எந்த வேலையும் செய்ய மறுத்துவிட்டாள். கடைசி ஒரு நாள் எதுவுமே பேசாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தி வேளையில் குத்த வைத்த வாக்கிலேயே கண்மூடாமல் மரித்துப் போனாள் கல்யாணி ஆச்சி. வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத சுப்பிரமணிதான் கொள்ளி வைத்தான். சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன‘ என்றபடி இன்னும் திருநெல்வேலி ஜங்ஷனில் திரிந்துகொண்டுதான் இருக்கிறான். 


-------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: ஸில்வியா என்ற புனை பெயரில் நான் எழுதிய இந்தக் கதை தமிழ் ‘இந்தியா டுடே‘ இதழில் 1990 இல் வெளிவந்தது. பிறகு பல தொகுப்புகளில் நான் அறிந்தும் அறியாமலும் சேர்க்கப்பட்டு விரிவான வாசக தளத்தினை இந்தக் கதை எட்டியிருக்கிறது. காவ்யா பதிப்பகம் வெளியிட்ட பேராசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரத்தினால் தொகுக்கப்பட்ட ‘நெல்லைச் சிறுகதைகள்’  தொகுப்பில்  இக்கதை பிரசுரமாகியிருக்கிறது. ‘நெல்லைச் சிறுகதைகள்’ தொகுப்பு முதல் பதிப்பு  2000 ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 2011 ஆம் ஆண்டிலும் வெளிவந்திருக்கிறது. ‘நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பினை எனக்கு அனுப்பித் தந்து இந்தக் கதையை இங்கே வெளியிட உதவி செய்த நண்பர் சண்முகசுந்தரத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். 


No comments: