Saturday, December 15, 2012

பாகேஶ்ரீ ராகம்


என் நண்பர் பண்டிட் சத்யஷீல் தேஷ்பாண்டேதான் எனக்கு இந்துஸ்தானி இசையில் பாகேஶ்ரீ ராகத்தை எப்படி நுட்பமாக ரசிக்கலாம் என்று சொல்லிக்கொடுத்தவர். பல வருடங்களுக்கு முன் வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கு ஒன்றிற்காகப் பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது விமானத்தில் சத்யஷீலை சந்தித்தேன். அவரும் நான் பங்கேற்க இருந்த அதே கருத்தரங்கில்தான் பங்கேற்க பயணப்படுகிறார் என்பது தெரியவர பேச்சு உற்சாகமாக இந்துஸ்தானி இசையைப் பற்றி திரும்பியது.  ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் அடுத்த விமானத்தைப் பிடிக்க எங்களுக்கு ஆறெழு மணி நேரம் இடைவெளி இருந்தது. விமானத்தில் ஆரம்பித்த சத்யஷீலின் பேச்சு ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்திலும் தொடர சத்யஷீல் வசதியாக விமான நிலையத்தில் தரையில் சப்பணக்கால்போட்டு உட்கார்ந்துகொண்டார்.  ஒரு lecture demonstration போல அவர் பாடி பாடி விளக்கம் சொல்ல நான் ரசித்து ரசித்து உருதுகவிஞர்கள் சம்மேளனத்தில் கலந்து கொள்பவன் போல சபாஷ் பேஷ் வாரேவா என்று புளங்காகிதம் அடைந்து கத்த எங்களைச் சுற்றி ஒரு சிறு ஆடியன்ஸ் சேர்ந்துகொண்டது. சத்யஷீல் பண்டிட் குமார் கந்தர்வாவின் மாணவர். சத்யஷீல் பாகேஶ்ரீ ராகத்தின் மூன்று வகையான உணர்ச்சிகளை, மனோநிலைகளை எப்படி சாகித்யம் செய்வார்கள் என்று பாடிக்காட்டினார். அன்று ஃப்ராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் அவருக்குக் கிடைத்த ராஜமரியாதையைப் பார்க்கவேண்டுமே!  அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பின்னாளில் அன்றைக்கு சத்யஷீலை டேப்பில் பதிவு செய்யாமல் போய்விட்டேனே என்று வருந்தியதுண்டு. இணையத்தில் சத்யஷீலின் அந்த lecture demonstration முழுமையாகக் கேட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கேளுங்கள்: http://www.juzp.net/Ov5ES0aBd2P6E 

பாகேஶ்ரீ ராகம் பின்னிரவின் ராகம்.  நள்ளிரவு தாண்டி படித்துக்கொண்டிருக்கும்போதோ  அல்லது எழுதிக்கொண்டிருக்கும்போதோ பாகேஶ்ரீ ராகத்தில் அமைந்த இசைக்கோவைகளைக் கேட்கும்போது அன்பிற்கு அல்லது காதலுக்கான ஏக்கம், அந்த ஏக்கம் விளைவிக்கின்ற காத்திருத்தலில் பண்பட்டு அடைகின்ற மன எழுச்சி ஆகிய மனநிலைகளை வேறெந்த ராகமும் தருவதில்லை என்று தோன்றும். பண்டிட் குமார் கந்தர்வா பொதுவாகவே கீழ்ஸ்தாயியில் பாகேஶ்ரீயை சாதிப்பதில்லை. மத்திய ஸ்தாயியில் ஆரம்பிக்கும் குமார் கந்தர்வாவின் பாகேஶ்ரீ இசைக்கோவை அன்பின் கசிவில் இளகிய இதயத்திற்கும்,  கரங்களின் தழுவலுக்கும் ஏங்க வைத்துவிடும். அந்த குறிப்பிட்ட குமார் கந்தர்வாவின் முழுக்கச்சேரியை என்னால் இணையத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலியாக உஸ்தாத் ரஷீத் கானின் பாகேஶ்ரீயில் அமைந்த முழுக்கச்சேரியை இங்கே http://www.juzp.net/_LnFPjIpzRUqr கேட்கலாம். 

பண்டிட் குமார் கந்தர்வா எந்த காரனாவையும் சேர்ந்தவரில்லை என்பதால் அவர் பாகேஶ்ரீயை எடுத்தாள்வது தனித்துவமும் அதற்கென்று ஒரு கம்பீரம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஒரே ராகத்தை பல கலைஞர்கள் பாடுவது அல்லது வாசிப்பதை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பது சீக்கிரத்தில் ஒரு வகையான தியானமாகிவிடுகிறது. அவ்வகை தியானம், அனுபவத்தில் கண்ட நிலப்பகுதிகளையோ, உள்மன கற்பனை நிலப்பகுதிகளையோ கண்ணுக்குள் கொண்டுவந்துவிடும். எம்.டி.ராமநாதனின் இசைக்கோவையை கே.வி.நாரயணசாமி பாடுவதைக் கேட்கும்போது (கேட்க: 
http://www.parrikar.org/music/bageshree/kvn_bageshree.mp3 ) குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே அநாமதேயமாகக் கிடக்கும் சிறு சிறு தாமரைக்குளங்கள் என் மனம் நிறைக்கும். கே.வி.நாரயணசாமியின் குரலோடு சுண்டுவிரல் பிடித்து தாயோடு துள்ளிக்குதித்து ஓடும் சிறுவனைப் போல ஓடுவேன். அவ்வபோது குளங்களில் தாமரை மொட்டுக்கள் முகிழ்த்து வெடித்து மலரும். பின்னே எம்.டி.ராமநாதனே பாடும்போது  மனம் நிறைக்கும் அந்தத்தருணங்களை என் தினசரி அனுபவத்தில் இழந்துவிட்ட நிலப்பகுதிகளுக்கான ஏக்கமாகவும் திரும்பப்பெற்றுவிட்ட திருப்தியாகவும் மீண்டும் மீண்டும் உணர்வேன். எம்.டி.ராமநாதனின் சாஹர சஹாயன விபோ, க்ஷேத்ராஞ்சலி என்ற ஆல்பத்தில் உள்ளது இணையத்தில் எனக்கு கிடைக்கவில்லை. அவருடைய இதர பாடல்கள் இங்கே http://www.youtube.com/watch?v=WvVlSx8bJ6I&list=PL267FED667AB2EC2B&index=87   தொகுக்கப்பட்டுள்ளன. அவருடையது கிடைத்தால் இங்கே இணைக்கிறேன். ( இந்தக் கட்டுரை எழுதி சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் மீண்டும் இக்கட்டுரையைப் பகிர்ந்தபோது நண்பர் ராமனுஜன் கோவிந்தன் எம்.டி.ராமநாதன் பாடிய சாஹர சஹாயன விபோவிற்க்கான யூடூப் இணைப்பை பகிர்ந்துகொண்டார். அவருக்கு நன்றியுடன் அந்த சுட்டியை இங்கே சேர்க்கிறேன் https://www.youtube.com/watch?v=qT5EJkPa37M ஆகஸ்ட் 4, 2014)


கங்குபாய் ஹங்கல், பர்வீன் சுல்தானா, ஷுபா முக்தல், குவாலியர் கரானா பாடகர்கள் பாகேஶ்ரீயை எடுத்தாள்வதைக் கேட்டுப்பருங்களேன் என்று  என் இசையுலக நண்பர்கள் வற்புறுத்துவார்கள். அவர்கள் பொருட்டு பலமுறை இவர்களைக் கேட்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அம்முயற்சிகளில் தோல்வியையே சந்தித்திருக்கிறேன். பலமுறை பாதியிலேயே விட்டுவிட்டு வேறெதுவாவது கேட்கப்போய்விடுவேன். இது என்ன மர்மம் என்று எனக்கு விளங்குவதில்லை. ஏதோ வகையில் பாகேஶ்ரீ இவர்களுக்கு ஆத்மார்த்தமாக வசப்படுவதில்லை என குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறேன். அதே சமயத்தில் இதே பாடகர்கள் பாடும் வேறு ராகங்களை கேட்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதும் உண்மை. கங்குபாய் ஹங்கலிடமும் பர்வீனா சுல்தானாவிடமும் கற்பாறைகளும் கரைந்துவிடுமே என்றுதான் நானும் நம்புகிறேன். 

ராஜன் பரிக்கார் இந்துஸ்தானி இசை ஆவணக்காப்பகத்தில் பாகேஶ்ரீ ராகம் என்று மட்டுமில்லமல் பல ராகங்களுக்கு எளிமையான விளக்கங்களும் முறையாகத் தொகுக்கப்பட்ட இசைக்கோவைகளும் உள்ளன. பார்க்க http://www.parrikar.org/hindustani/bageshree/  இந்தத் தளத்தில் நான் வேறெங்கும் கேட்காத படே குலாம் அலி கானின் பாடலைக் கண்டுபிடித்தேன் http://www.parrikar.org/music/bageshree/bgak_bageshree.mp3 

அப்புறம் சத்யஷீல் கதையை முழுவதுமாகச் சொல்லாமல் விட்டுவிட்டேனே. வாஷிங்டனில் நானும் அவரும் கீ பிரிட்ஜ் மேரியட் ஹோட்டலில் ஒரே தளத்தில் எதிரெதிர் அறைகளில் தங்கிருந்தோம். கருத்தரங்க நேரம் போக மிச்ச நேரங்கள் எல்லாம் ஒன்றாக ஊர் சுற்றுவது பாடுவது என்று கழிந்தது. ஆறாவது நாள் காலை நான் ஹார்வர்ட் பல்கலைக்கும் அவர் பால்டிமோருக்கும் செல்வதாகத் திட்டம். காலையில் எழுந்து நான் கிளம்பிவிட்டு சத்யஷீலிடம் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்று அவர் அறைக்கதவை தட்டினேன். வேறொருவர் கதைவத் திறந்தார். சத்யஷீல் இரவே அறையைக் காலி செய்துவிட்டு பால்டிமோர் போய்விட்டார் என்றார்கள் ஹோட்டல்காரர்கள. அதன்பிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏழு வருடங்கள் கழித்து வீட்டு வாசல் அழைப்பு மணி ஒலிக்க கதவைத் திறந்தால் சத்யஷீல் நின்றுகொண்டிருந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக என் வீட்டுக்கு வந்திருந்தார். பாகேஶ்ரீ ராகத்தைப் பற்றிய உரையாடலை வாஷிங்டனில் எந்த இடத்தில்  விட்டாரோ அதே இடத்திலிருந்து துல்லியமாகத் தொடர்ந்தார். அவர் பெட்டியை எடுத்து வீட்டிற்குள் வைத்து அவரை ஆசுவாசப்படுத்த எனக்கு இரண்டு நிமிட அவகாசம் கூட அவர் தரவில்லை. பழைய உரையாடலுக்கும் இப்போதைய தொடர்ச்சிக்கும் இடையில் ஏழு வருடங்கள் கழிந்துவிட்டன என்ற நினைப்பே அவருக்கு இருக்கவில்லை. 

இசையை இடையறாத பிராவகம் என்றுதானே சொல்கிறோம்.

3 comments:

சுராகா/SURAKA said...

அற்புதம்.. தேஷ்பாண்டே அவர்களின் குரல் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.. KVN பாடிய கீர்த்தனையையும் கேட்டேன்.. MDR பாடிய லிங்கும் கிடைத்தது
https://soundcloud.com/sruthirk/md-ramanathan-sagara-sayana

mdmuthukumaraswamy said...

MDR பாடிய லின்க் என்று நானும் முன்பு இதே லிங்கினை கொடுத்திருந்தேன். பாடுவது MDR இல்லை வேறொருவர். காம்ப்போசிஷன் மட்டும்தான் MDR. தவறினை நண்பர் சஷிகாந்த் சுட்டிக்காட்டினார்.

சுராகா/SURAKA said...

தகவலுக்கு நன்றி!! விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் "ஆரோமலே" பாடல் இந்த ராகத்தில் அமைந்திருப்பதாக வாசித்தேன், உண்மையா என தெரியவில்லை.. தங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும்..