Wednesday, December 26, 2012

சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” | சிறுகதை


“மு என்ற இராமதாசு” என்ற சீர் மிகு கதையை சில்வியா என்ற அய்ரோப்பிய அம்மையார் பெயருடையவர் திருவள்ளுவர் ஆண்டு 2043 மார்கழித் திங்கள் எழுதினார் என்பது கெட்டியான சமக்காளத்தினால் வடிகட்டிய பொய். இந்தப் பரியை நரியாக்கிய படலம் முத்துக்குமாரசாமி என்ற புலவரால் இயற்றப்பட்ட சிற்றிதழ் ஓத்து ஒன்றில் புறனடைத் தகவலாகக் கொடுக்கப்பட்டு அதுவே உருசியன் மொழிபெயர்ப்புக்குள்ளாகி அதிலிருந்து சப்பானிய பாசைக்குச் சென்று மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து நீரில் உப்பைச் சேர்த்துக்கொண்டே போனால் மண்ணூறல் எடுவித்த நீரினை யார்தான் உலகுக்குக் காட்டுவது என்ற குமுகாய அக்கறையினால்தான் இந்த உலத்தத்தினை திண்ணைப் பள்ளி வழக்கின்படி இடுகிறேன்.

“மு என்ற ராமதாசு” புனைவு பழைய வைணவத் தொன்மம் ஒன்றில் மீனவப் பெண்ணாக சீதேவித் தாயார் தோற்றரவம் எடுக்க  சௌரிராசப் பெருமாள் அவரைக் கைத்தலம் பற்ற மீனவனாய் ஊருலவுத் திருமேனி கொண்டு செல்லும் நிகழ்வினையும்  இராமதாசு என்ற வழுக்கைத் தலை முதியவர் தான் கல்லூரி மாணவராய்  இருந்தபோது தனக்குப் புரையில்லாத திருமகள் ஒருவரின்பால் பொருந்தாக் காமத்தின்பால் ஈர்க்கப்பட்டு சிற்றுந்து ஒன்றில் சென்ற நிகழ்வின் நினைவலைகளையும் இணைக்கிறது. 

இதற்கு ஓத்து எழுதுகிற புலவர் முத்துக்குமாரசாமி இராமதாசு வேடம் தாங்கியிருக்கும் மு உண்மையில் கம்ப நாடன் இயற்றிய ஒப்பிலா இராமகாதையின் தலைமகனே உலகளந்த உத்தமனே இராமபிரானே என்று விளம்புகிறார். இந்தத் தலை கீழ் வவ்வலுக்கு திருகு தாளப் பெருமானன் முத்துக்குமாரசாமி “இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ!” என்ற கம்பனின் வரியையும் “ அத்தேவர் தேவர் அவர் தேவரென்றிங்ஙன், பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே, புத்தேதுமில்லாதென் பற்றரப் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பி” என்ற மாணிக்கவாசகர் பாடலையும் கொண்டு கூட்டி பொருள் சொல்கிறார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன முடிச்சு என நல்லுள்ளங்களில் வினா எழுமா எழாதா? இதைத்தான் பரியை நரியாக்கிய படலம் என்று முன்னிகையில் குறித்தேன். ஆவுடையாருக்கு நாமம் சாற்றுதலும், எம்பெருமானின் ஊருலவுத் திருமேனிகளுக்கு உத்திராக்கம் அணிவிப்பதுமே தன் கடன் பணி செய்து கிடப்பது என்று இறும்பூதியிருக்கிறாரோ புலவர் முத்துக்குமாரசாமி? அய்யா! ஒரு கண்ணால் தில்லை கனகசபாபதியின் நடனம் மறு கண்ணால் கோவிந்தசாமியின் கிடந்த திருக்கோலம் என்ற சிதம்பரத் திருக்காட்சி தற்கால இலக்கியப் பனுவலுக்கு திறனாய்வு ஓத்து எழுத ஒத்து வருமோ?

 முதலில் மீனவ பத்மினி நாச்சியாரைப்  பார்க்க மீனவ சரமும் (கைலி), கறுப்புக் கண்ணாடியும், கழுத்தில் வண்ணக் கைக்குட்டையும் அணிந்து மீனவக் குமுகாயத்தினர் சுற்றிக் கும்மாபம் போட மாசித் திருவிழாவின்போது சௌரிராசப் பெருமாள் ஊருலா போவதையும் சிற்றுந்தில் கறுப்புக் கண்ணாடி அணிந்து சீன்சு கால்ச்சட்டை அணிந்து குப் குப் என ரயில் வண்டி போல புகை விட்டுச் செல்லும் மு என்ற இராமதாசினையும் ஒப்பிடுவதே இமாலயக் குற்றம்.  இந்த முவன்னா ராவன்னாவைப் பார்த்தா பாடுவாள் எவளும் ‘கைத்தலம் பற்றக் கனா கண்டேன் தோழி’ என்று? 

பொய்யுரைப் புலவர் முவன்னா குவன்னா சாவன்னா இதற்குக் காட்டும் தருக்கம் என்ன? சமசுகிருதத்தை தெருமுனை சிற்றங்காடியில் தேத்தண்ணீர் வாங்குவதற்குக் கூட பயன்படுத்துபவர் அல்லரா அவர்? வேத காலத்திற்கு சென்றுவிடுகிறார். பாற்கடலைக் கடைந்தபோது ஆலாகால விசம் தோன்றியதே அதை உருத்திரன் இனிப்புருண்டை விழுங்கியது போல விழுங்கினாரே அப்போது உருத்திரனை பாத்திரமாகக் கொண்டு உண்மையில் விடமருந்தியவர் திருமாலே என வைணவ உரையாசிரியர்கள் சாத்தமுது படைத்திருக்கிறார்களாம். அது சாத்தமுதா திருக்கண்ணமுதா என்ற குடுமிப்பிடிச் சண்டை இப்போது வேண்டாம். இதை வைத்து முவன்னா குவன்னா சாவன்னா என்ன சில்லடிக்கும் வேலையை செய்கிறார் என்று பார்ப்போம். விடமருந்தி கண்டம் கருத்த உருத்திரனே திருமாலாகிவிட்டபடியால் அதே தருக்கத்தின்படி மீனவப் பாத்திரம் தரித்த சௌரிராசப் பெருமாளே மீனவன் என்று வாதிடுகிறார். எங்கே போய் முட்டிக்கொள்வது? இதைத்தான் கேட்பார் செவி சுடு கீழ்மை என நம்மாழ்வார் சுட்டினரோ? வானிலிருந்து நிலம் நோக்கிப் பொழிகிறது மாரி என்றால் விழுந்த துளி சலமே மாரி, வான் என்று எதிர் ஓத்து எழுதுகிறவரிடம் எங்களுக்கெல்லாம் காதுகுத்தி நெடுநாட்கள் ஆகிவிட்டன என்று மட்டுமே மறுமொழி தரஇயலும்.

கறுப்புக் கண்ணாடி அணிந்த இராமதாசு கதையில் மீனவப் பெண்ணுடன் கடற்கரையில் கலவி கொள்ளுமிடத்தே அந்த மீனவப் பெண் அப்பப்ப கிருட்டிண கிருட்டிண அம்மம்ம இராம இராம என்று ஒலியெழுப்புகிறாள். அய்ரோப்பிய இலக்கியங்களிலோ அய்ரோப்பிய நாரீமணிகள் உயர் குதிகுளம்பு சப்பாத்துக்கள் அணிந்த தங்கள் கால்களை உயரத் தூக்கி சேசுவே சேசுவே என்று ஒலியெழுப்புகிறார்களாம். கலவியின்போது அய்ரோப்பிய நாரீமணிகள் தங்கள் சப்பாத்துக்களை களைவதில்லை என்பதை 219 புறனடைகள் கொடுத்து நிறுவுகிற முவன்னா குவன்னா சாவன்னா இராமதாசு கதைப் பனுவலில் வரும் மீனவப்பெண்ணும் தன் மிதியடியை கலவியின் போது கழற்றவில்லை என்ற வெள்ளிடைமலை தகவலை உற்று நோக்கச் சொல்கிறார். அப்பப்ப அம்மம்ம என்று நாமே கத்தத் தோன்றுகிறதல்லவா? ஆனால் இந்த ஒரே ஒரு  பனுவல் உள்க் குறிப்பினை வைத்து மட்டுமேதான் இக்கதையின் ஆசிரியர் வெளி நாட்டு இலக்கியம் பயின்ற சில்வியா அம்மையார் என்ற முடிவுக்கு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மிதியடி கழற்றா கலவி என்பதுதானே அவருடைய கட்டுரைத்  தலைப்பு? என்னவொரு நெஞ்செழுத்தம்! என்னவொரு தலைக்கனம்! இந்த அம்மம்ம அப்பப்ப உரைக்கு ஆச்சு செல்லம்மா ஆச்சு என்ற ஆண்குரல் மூச்சிரைப்பினை சேர்க்கவில்லை என்று எதிர் எக்கு வைக்கும் புலவர்காள் மடல்களை யான் விரிவஞ்சி தவிர்த்தனன்.

குழம்பி ஒரு மிடறு தேத்தண்ணீர் மறு மிடறு எனக் குளகம் எழுதும் புளுகன் தற்காலத் திணைக்குறிப்புகள் தருகிறேன் பேர்வழி என சிற்றுந்தில் செல்லும் இராமதாசு காணும் கவின் காண் காட்சிகளில் வரும் மஞ்சள் நத்தி மலர்களை வேங்கை மலர்கள் என திரிப்பதன் உள் நோக்கம் என்ன? சங்கப் பாடலிலே குறிஞ்சிக் கலியினிலே  குன்றுகளிலிருந்து கொட்டும் அருவியில் நிறைந்திருக்கும் வேங்கை மலர்களைக் கண்டால் யானைகள் இரண்டு திருமகளின் மேல் நீரைச் சொரிவது போல இருக்கிறது என்றொரு குறிப்பு வருகிறது. நன்று. இதை எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் போல சிவந்த பொன்போன்ற நிறத்தவனாய் சீராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர் என்ற ஞானசம்பந்தர் பதிகத்தோடு இணைப்பதன் தேவை திருமகளே எரியொடு ஆடிய ஈசனின் பெண் வடிவே என நிறுவுவதற்குத்தானே?  இதற்குத்தானே மஞ்சள் நத்தி மலர்கள் வேங்கை மலர்களாய் மாறின? அய்யா முத்துக்குமாரசாமி பெருமகனாரே மாலுக்கு மூத்தவன் ஈசன்  அவனே முழு முதற் கடவுள் என நிறுவி என்ன கண்டீர்? 

புற சமயிகளான நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் என ஞானசம்பந்தர் அதே திருச்சிராப்பள்ளி பதிகத்திலே பாடுகிறாரே அவர்கள் வைணவ சைவ சண்டைகளைப் பார்த்து, கேட்டு எள்ளி நகையாடுவதற்கான நொறுக்குத் தீனி வழங்கியது அன்றி என்ன சாதித்தீர் நீர்? தற்கால இலக்கியத் திறனாய்வு ஓத்து எழுதுவதற்கு மரபிலக்கிய புறனடைகள் எதற்கு என தமிழ்க்குரவர் கேட்டே ஆக வேண்டிய சூழல் சூல் கொண்ட மேகமாய் நம் தலைகளின் மேல் உலவுகிறது.

ஒரே இதழ் அச்சாக்கம் பெற்று பிறகு காணாமல் போன ‘வைரசு’ என்ற இலக்கிய சிற்றேடே “மு என்ற ராமதாசு” கதையினை வெளியிட்டிருக்கிறது. வேறு எந்த பொத்தகங்களையும் வைரசு வெளியிட்டதாகவும் தகவல் இல்லை. இப்படிப் பெயர் கொண்ட இலக்கிய ஏட்டில் வெளிவரும் கதைகளுக்கு கிருமி நாசினியாய் திறனாய்வு எழுதுவதே சாலப் பொருந்தும். அதைச் செய்தாரா குதிரையிட்டது எத்தனை முட்டையெனெ கணக்கு எழுதும் மீயென்னா தெயென்னா முத்துக்குமாரசாமி என்றும் பார்த்து விடுவோம். 

இராமதாசு ஓட்டிச் செல்லும் சிற்றுந்தின் இலக்கம் த. நா. கஎகூஅ என்று முதல் பத்தியில் வருகிறது. இராமதாசு சௌரிராசப் பெருமாளாகவும் செல்லம்மா செம்படவ நாச்சியாராகவும் உருவு மாறி சீவாத்மா பரமாத்மாவோடு வருணம் மேயும் பெருமணல் உலகில் கலக்கின்ற பத்தியிலே தூரத்திலே நிற்கிறது அந்த சிற்றுந்து. இங்கே நான் எந்த முன்னூகத்தையும் முன்னிறுத்தவில்லை. பனுவலினுள் உள்ள சான்றுகளை மட்டுமே குவி ஆடி கொண்டு காண்கிறேன். அங்கே காணப்படுகிற இலக்கமோ த.நா. ககூஎஅ இராமதாசு முதல் பத்தியில் உதைத்து  எழுப்பி, சீழ்கை ஓலி எழுப்பி, மஞ்சள் நத்தி மலர்களைக் கம்பு தோறும் கண்டு களித்து தன் செம்படவத் தலைவியைக் காணத் துள்ளி வந்த சிற்றுந்து வேறு கடைசியில் கடற்கரையில் நிற்கின்ற சிற்றுந்து வேறு! வந்தவர் கதைத் தலைவன் இராமதாசுதானா என்ற அய்யம் எழுகிறதல்லவா? அங்கேதான் இருக்கிறது சூக்குமம். கடற்கரைக்கு வந்து சேர்ந்து தலைவியோடு கலந்த தலைவன் இராமதாசு அல்லன். செம்படவக் குமுகாயத்தினைச் சேர்ந்த கட்டிளம் காளை. பொருந்தும் காமம். தலைவனும் தலைவியும் ஒரே குமுகாயத்தினர் என்பதை சிற்றுந்தின் இலக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி என விளம்பிவிடுகிறது. எனவேதான் ‘மு என்ற ராமதாசு” கதையை சீர் மிகு கதையென கணித்தேன். செந்நாப்புலவன் நுதலியது தமிழ். காமாலைக் கண்ணர்கள் விரிக்கும் வஞ்சக வலை தாண்டி சூக்குமம் வெளிப்படும் விதத்தினை ஈண்டு காணும் தமிழ்கூறும் நல்லுலகம். இப்போது சொல்லுங்கள் எழுதியது சில்வியாவோ கில்வியாவோ என்ற வெளிநாட்டு அம்மையாராய் இருக்க இயலுமா? கண்டிப்பாய் இது உள்ளூர் சரக்குதான். சஞ்சலம் கொள்ளற்க. முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே எனக் கூறி அமைகிறேன். தெளியட்டும் முத்துக்குமாரசாமியின் சிந்தை. 

8 comments:

Venkatesan said...

// கோவிந்தசாமியின் நின்ற திருக்கோலம்

கோவிந்தசாமி கிடந்த திருக்கோலம் அன்றோ?

மற்றபடி, கதை மெல்லிய புன்னகையை வரவழைத்தாலும் இது எதை/யாரை பற்றிய பகடி என புரியவில்லை. இந்த கதைக்கு கோனார் நோட்ஸ் கிடைக்குமா?

mdmuthukumaraswamy said...

ஆமாம் தவறாக எழுதியிருந்தேன் நீங்கள் சுட்டிக் காட்டியவுடன் திருத்திவிட்டேன். நன்றி. கதை தனித் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. சைவ வைணவ தகறாறுகளின் உள்ளடக்கத்தையும் பாணியையும் போலி செய்கிறது. எந்தெந்த வார்த்தைகளுக்கு பொருள் தெரியவில்லை என்று எழுதுங்கள் பதிலிடுகிறேன்.

Venkatesan said...

"சைவ வைணவ சண்டை" என்ற திணை-துறை குறிப்பு கண்டபின் ஒரு தெளிவு கிடைத்தது. மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். இன்னும் அதிகமாக ரசிக்க முடிந்தது. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு வருடம் ஒரு முறை மீனவர்கள் செய்யும் பூஜை பற்றிய துணுக்கு ஒன்றை முன்பொருமுறை படித்திருக்கிறேன் அதன் பின்புலம் உள்ள தொன்மம் இப்போதுதான் புரிகிறது. நன்றி.

mdmuthukumaraswamy said...

தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் பல வார்த்தைகள் புரியவில்லை என வாசகர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பொருட்டு கீழ்க்கண்ட பட்டியலை வெளியிடுகிறேன்.

சமக்காளம்- ஜமுக்காளம்
ஓத்து- உரைத் தொகுப்பு
புறனடைத் தகவல் - external information
உருசியன் - ருஷ்யன்
சப்பான் - ஜப்பான்
பாசை- பாஷை
மண்ணூறல் எடுவித்த நீர்- mineral water
ஊருலவுத் திருமேனி- உற்சவ மூர்த்தி
சிற்றுந்து- சிறிய உந்து , ஸ்கூட்டர் அல்லது பைக்
முன்னிகை- முன்னுரை
உத்திராக்கம்- ருத்ராட்சம்
குமுகாயம்- சமூகம்
உலத்தம்- உரை
சீன்சு- ஜீன்ஸ்
சீவாத்மா- ஜீவாத்மா
முவன்னா குவன்னா சாவன்னா- மு(த்துக்) கு(மார) சா(மி)
உயர் குதிகுளம்பு சப்பாத்து- High heel shoes
எக்கு- பார்வை, கோணம்
குழம்பி- காபி
குளகம்- தொடர்ச்சி
வைரசு- வைரஸ்
ஒரே குமுகாயத்தினர்- ஒரே சமுதாயத்தினர் அல்லது ஒரே சாதியினர்
இலக்கம்- எண்
சூக்குமம்- சூட்சுமம்


இந்தக் கதை தனித்தமிழை பகடி செய்யவில்லை. இந்தக் கதையினைச் சொல்லும் கதாபாத்திரம் தனித்தமிழை பாவிப்பவர். அவ்வளவுதான்.

Venkatesan said...

மூலத்தை தானே பார்த்து அறிவது என்ற கொள்கை உடைய வாசகர்கள் வசதிக்காக கதையில் குறிக்கப்படும் சிராப்பள்ளி பதிகப் பாடல்கள் இதோ :-) (நன்றி : www.thevaaram.org)

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.

mdmuthukumaraswamy said...

முழுப்பாடலையும் உரையோடு தருவது இன்னும் சிறப்பானது (நன்றி: www.thevaaram.org)


திருச்சிராப்பள்ளி

பாடல் எண் : 1

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.
பொழிப்புரை :

நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.
குறிப்புரை :

சிராப்பள்ளி நாதரைச் சொல்ல என்னுள்ளம் குளிரும் என்கின்றார். நன்றுடையான், தீயதில்லான் இவை யிரண்டும் இத்தலத்துத் தீர்த்தங்கள். நரைவெள்ளேறு - மிக வெள்ளிய இடபம். சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து அடையாத இயற்கையேயான திரு.
பாடல் எண் : 2

கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.
பொழிப்புரை :

சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?
குறிப்புரை :

பெண் குரங்கு ஆண் குரங்கோடு ஊடி, குட்டியையும் தூக்கிக் கொண்டு மூங்கிலில் பாய்வதற்காக மலைமிசையேறும் சிராப்பள்ளி நாதா! நாகத்தையும் மதியையும் உடனாக வைத்தல் உனக்குப் பழியாகுமல்லவா?. கைம்மகவு - கைக்குழந்தை. கடுவன் - ஆண் குரங்கு. கழை - மூங்கில். செம்முக மந்தி - சிவந்த முகத்தோடு கூடிய பெண் குரங்கு. பெண் குரங்கின் முகம் சிவப்பாயிருக்குமென்ற குரங்கின் இயற்கையையும் ஈண்டு எண்ணுக. வெம்முக வேழம் - கொடுந்தன்மையுடையயானை.
பாடல் எண் : 3

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே.
பொழிப்புரை :

மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.
குறிப்புரை :

சிராப்பள்ளி நாதனின் அடியார்க்கு அல்லல் இல்லை என்கிறது. மந்தம் முழவம் - மந்தஸ்தாயியில் அடிக்கப்படும் முழவம். மழலை - பொருள் விளங்காத ஒலி.
பாடல் எண் : 4

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.
பொழிப்புரை :

பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.
குறிப்புரை :

நீலகண்டன், எரியாடுங் கடவுள், பிறைச் சென்னியன் எங்கள் கடவுள் என்கின்றது. வண்டும் தும்பியும் நீலப் பூவில் தங்கிப்பாடும் என்ற சுனையியற்கை முதல் இரண்டடிகளில் குறிக்கப் பெறுகிறது. கறை - விடம்.
பாடல் எண் : 5

கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.
பொழிப்புரை :

கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?
குறிப்புரை :

சிவபெருமான் முழுமுதற் கடவுளல்லர் என்பார்க்கு உண்மை உணர்த்துவது இப்பாடல். கொலைவரையாத கொள்கையர் - கொலையை நீக்காத கொள்கையினை உடைய திரிபுராதிகள். நிலவரை நீலம் - நிலவுலகில் நீலநிறம் ஊட்டப்பட்ட துணி. வெள்ளை நிறம் ஆமே - வெண்மை நிறம் உடையதாதல் கூடுமா? நீலநிறத்துக்கு மட்டும் உரிய பண்பு இது. அதுபோல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றல் இயலாது. (பழமொழி - 168.)

mdmuthukumaraswamy said...

தொடர்ச்சி:

பாடல் எண் : 6

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.
பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.
குறிப்புரை :

சிராப்பள்ளிமேவிய செல்வர் பெண்ணொரு பாக மாகுவர், ஆகாத நஞ்சை அருந்துவர், பிரம கபாலத்தில் பிச்சையும் எடுப்பர், இவர் செயல்கள் ஒன்றோடொன்று ஒத்திருந்தனவல்ல என்றபடி. வெய்ய - கொடிய; விரும்பத்தக்க என்றுமாம். வேங்கைப்பூ பொன்சேரும் சிராப்பள்ளி என்றது, வேங்கை மலர்கள் பொன்போன்ற நிறத்தனவாய் நிலத்தைச் சேரும் மலை என்க. ஐயம் - பிச்சை.
பாடல் எண் : 7

வேயுயர்சாரற் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.
பொழிப்புரை :

கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.
குறிப்புரை :

தாயுமானவர், பேயின் கையிலுள்ள கொள்ளியைக் கை விளக்காகக் கொண்டு ஆடுதல் திருவுளக் குறிப்பாயின் அது ஆகாது என்கின்றது. வேய் - மூங்கில். கருவிரலூகம் - கருங்குரங்கு. சேய் - தூரம். கைவிளக்கு - சிறியவிளக்கு.
பாடல் எண் : 8

மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.
பொழிப்புரை :

மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?
குறிப்புரை :

தலையே கலனாகப் பலி ஏற்றுண்பார்; சொல்லவல்ல வேதத்தையும் பாடலையும் சொன்னால் சிராப்பள்ளியார் செய்கை சில அல்லாதன போலும் என்கின்றது. மல்கும் - நிறைந்த, வேதங்களையும் பாடல்களையும் சொன்னால் அவற்றில் சில அல்லாதன என்பதை அவர் செய்கைகளிலிருந்து அறிகிறோம் என்பது கருத்து.

mdmuthukumaraswamy said...

பாடல் எண் : 9

அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா லிகழாரே.
பொழிப்புரை :

பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?
குறிப்புரை :

அயனும் மாலும் உம்மைக் காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப் புறப்படாதீர்; உம்மை யாவரும் இகழார்கள் என்கிறது. அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால். கரப்பு உள்ளி - இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி, ஏதிலர் - அயலார்.
பாடல் எண் : 10

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.
பொழிப்புரை :

நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.
குறிப்புரை :

புத்தரும் சமணரும் உரைக்கும் சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த விரும்புபவர்களே! சிராப்பள்ளி சேர்மின் என்கின்றது. நாணாது - வெட்கப்படாமல். கஞ்சியை விடியலுணவாகவும், பகலிலும் உண்டு ஓதுபவர்கள் புத்தர்கள். பேணாது - போற்றாது. உறுசீர் - மிக்கபுகழ். சேணார் கோயில் - ஆகாயமளாவிய கோயில்.
பாடல் எண் : 11

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்த னலமிகுபாட லிவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.
பொழிப்புரை :

தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.
குறிப்புரை :

சிராப்பள்ளியானைத் துதித்த ஞானசம்பந்தன் பாடலிவை வல்லார் தேவரொடு சேர்ந்து வாழ்வர் என்கின்றது. தேன் - வண்டு. கானல் - கடற்கரைச் சோலை. வானசம்பந்தத்தவர் - வானுலகிற் சம்பந்தமுடைய தேவர்கள்.