Saturday, December 22, 2012

தமிழ் மறமகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை | சிறுகதை


ஓ முனிபுங்கவர்களே! எனக்கு ராஜ்யமும் தனதான்யம் முதலிய செல்வங்களும் பரிகரிதேர் முதலிய நால்வகைச் சேனைகளுமுள்ளன. நல்ல சுந்தரிகளான மனைவியரோ நூறு பேருள்ளார். எனக்கு மூன்று லோகத்திலும் பகைவருள்ளாரென்பதே கிடையாது. உலகினரேயின்றி அரசரெல்லோரும் என்னுடைய ஆணையைக் கடவாதவர் மந்திரிகளோ எனக்குக் கவசமாயுள்ளவர்; சந்தானமொன்றுதானில்லாதவனாயிருக்கிறேன். இஃதொன்றில்லாமையினாலேயே துக்கமென்பதையறியாத நான் அதை நன்றாயறியலானேன். மறுமைக்கும் வேண்டிய கதியை கருதாவதாயின் அந்த துக்கமும் நானடைய வேண்டியதில்லை. அத்துக்கமும் உங்களையொத்த பெரியோர்கள் மகப்பேறற்றவனுக்கு மறுமை கதி கிடையாதென்றதனால் வந்ததேயாகும். ஆகவே நீங்கள் வேத சாஸ்திரங்களின் இண்மையறிந்தவர்களாயும் தவசிரேஷ்டர்களாயும் காணப்படுகின்றபடியால் அத்துன்பமகலுமாறு யான் சந்தானமுடையவனாக நீவிர் ஓர் யாகத்தைச் செய்வீர்களென்று பிரார்த்திக்கின்றேன். ஓ மஹரிஷிகாள்! என்னிடத்தில் உங்களுக்கு கருணையிருக்கும் பட்சத்தில் எனது வேண்டுகோளின்படி யாகத்தைச் செய்ய முயலுவீர்கள் என்றான். அவ்வரசனுடைய இரக்க மொழிகளைக் கேட்ட மஹரிஷிகள் கருணாசாலிகளாயும் சந்துஷ்டர்களாயும் இந்திராதி தேவர்களுக்குப் பிரீதியான யாகத்தைச் செய்யத் தொடங்கி கும்ப ஸ்தாபனஞ் செய்து வேத மந்திரங்களால் நாடோறும் மந்திரித்து வந்தனர். ஒரு நாள் அரசன் மிகத் தாகமுள்ளவனாய் நீர் எங்கும் காணப் பெறாமல் ராத்திரியில் யாகசாலைக்குச் சென்று அங்கு அந்தணர்களெல்லாம் உறங்குவதைக் கண்டு தாகவிடாயினால் ஒன்றும் யோசிக்காதவனாய்க் கும்பத்திலுள்ள தீர்த்தத்தைக் குடித்துவிட்டான். பின்னரந்தணர் பூஜிப்பதற்குக் கலசத்தைப் பார்க்க, அதில் தீர்த்தமில்லாமை கண்டு மிகவும் பயமடைந்தவர்களாய் எழுந்திருந்து, அரசனைப் பார்த்து இத்தீர்த்தத்தை யார் குடித்தது என்று கேட்க, அரசனும் பயந்து நடந்த செய்தி சொல்ல, அந்தணர்கள் தெய்வச் செயலை நாடி தெய்வ பலமென்று நிச்சயித்துக் கொண்டு யாகத்தை முடித்துவிட்டுத் தங்கள் தங்கள் ஆச்சிரமம் போய்ச் சேர்ந்தனர். பின்னர் அரசனுக்கு நாளுக்கு நாள் கருவினால் வயிறு பெருத்து வலது பக்கங் கிழிபட புத்திரன் வெளிவந்தனன். அங்ஙனம் அரசன் வயிறு கிழிபட்டானாயினும் தேவர்களுடைய கிருபையினால் மரணமடையாமல் பிழைத்திருந்தனன். அப்போது மந்திரிகள் யாரிடத்தில் இக்குழந்தை முலைப்பாலுண்ணுமென்று விசாரப்படும்பொழுது, இந்திரன் இவன் என்னையூட்டுகின்றவன் என்னும் பொருள்பட மாந்தாதா என்று சொல்லிக்கொண்டே அச்சிசுவின் விரலை வாயில் வைத்து சுவைக்கக் கொடுத்தான். 

இதுவுமது 

“தாய், சகோதரி, மல்லிகைப் பூ, வெள்ளிக்கிழமை, பூஜை, புனஸ்காரம், சடங்குகள், குமுதம், தொலைக்காட்சி, அடுப்படி, உணர்ச்சி வேகம், கற்பு, வம்பு, பொறுமை வேறு சில இத்தியாதிகள் கொண்ட நும்காலத்து தமிழ் மறப்பெண் கலவை வெறுப்பூட்டுவதாக இருக்கிறது” என்றான் மாந்தாதா

“ பெண்ணின் வயிற்றில் உதித்திருந்தால்தானே” என அசரீரீ வக்கணை கொழித்தது.


வேறு

தம்பி வீரா! மரப்பாச்சிப் போர் வீரா! என்ன செய்ய?  என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய அதுவுமிது இதுவுமது என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய எதுவுமது அதுவுமிது இதுவுமது இதுவுமெது என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய வாழ்வு மிக நீளமாயிருக்கிறது என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய தம்பி வீரா மரப்பாச்சி போர் வீரா என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்ன செய்ய என்னதான் செய்ய?

குளகம் 

“ அவ்வளவுதானா கதை?”

“சிறுகதைதானே… அவ்வளவுதான்”


“வேண்டுமென்றே கதை சொல்ல மறுக்கிறாய்”

“உண்மைதான் அப்பனே. கதை சொல்வதிலிருந்து விடுதலை வேண்டும் எனக்கு. ஆனால் அது அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது போலிருக்கிறது. எதை எதையெல்லாமோ சொன்னாலும் கதையாகிவிடுகிறது”

“அப்புறம் எதற்காக எழுதுகிறாய்?”

“காகிதத்தின் மேல் வார்த்தைகளைக் கோர்த்தல் என்ற பௌதிகச் செயல் அவசியமற்றதுதான். ஆனால் எழுத்தின் வெளிப்பாடுகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் எழுத்தே மனிதன் அல்லது இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் எழுதும் ஜீவியே மனிதன்”

“சரி இந்தக் குறிப்பிட்ட செயலின் நோக்கமென்ன?”

“ஒரு புதுப் பொருளை/ ஜடத்தை உருவாக்குதல்”

“என்ன”

“ஆமாம். சக்தியை ஜடமாக்குவதே சிருஷ்டி. ஜடத்தை சக்தியாக்கினால் பேரழிவு, ஊழிக்கூத்து. ஹிரோஷிமா. ஊர்த்தவ நடனம். அழிவின் இயக்கம் அனைவருக்கும் புலப்படும். சிருஷ்டியின் இயக்கம் தேடுபவனுக்கே புலப்படும். நான் படைக்கும் சொற்கூட்ட ஜடத்தின் இயக்கத்தை வாசகனேதான் கண்டுபிடிக்கவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கும் வாசகனே வாழ்வியக்கத்தை முழுவதும் புரிந்துகொண்டு ஆழமாக வாழ்பவன். நுட்பமான தமிழ் மொழி இதனாலேயே அர்த்தம், செல்வம். ஜடம்  ஆகிய மூன்றையுமே ‘பொருள்’ என்ற சொல்லால் குறிக்கிறது”

“சக்தியை ஜடமாக்கும் வித்தையின் சூத்திரமென்ன?”

“அது பிரம்மரகஸ்யம். கால வெளி முரண்பாட்டுச் சூழலைப் பொறுத்தது அது”

“சரி போகட்டும். பொருளின் இயக்கத்தை எப்படி அறிந்து கொள்வது?

“அதற்கு ஒருவன் பொருளின் வடிவத்தை அறிந்துகொள்ளவேண்டும். வடிவத்தினை உள்ளலகுகளின் உறவு எனலாம். உதாரணமாக தோசையை எடுத்துக்கொள். தோசையின் வடிவம் என்பது என்னவெனில் அரிசி, உளுந்து, உப்பு, அரிசி உளுந்து ஊறும் நேரம், அரை படும் நேரம், தண்ணீரின் அளவு, தோசைக்கல்லில் மாவு வேகும் நேரம் இவையனைத்திற்கும் ஏற்படும் உறவு. தோசையை ருசிப்பவன் இவ்வுறவையே ரசிக்கிறான். இதுபோலவே இலக்கியப் பொருளின் உள்ளலகுகளின் உறவைப் புரிந்துகொண்டால் இயக்கத்தை அறியலாம்.”

“கதை சொல்வதை விட்டுவிட்டு சமையல் குறிப்பு எழுதுகிறான் அற்பப் பதர்”

“தப்பிக்க நினைக்காதே மகனே எந்த அபத்தமாயினும் அதில் உனக்கும் சம்பந்தமிருக்கிறது”

“இவ்வபத்த தமிழ் வாழ்க்கையில் என்ன செய்ய உத்தேசம்?”

“அர்த்தமுள்ளதைச் செய்ய உத்தேசம்”

“எது அர்த்தமுள்ள செயல்?”

“வர்ணாசிரம தர்மத்திற்கேற்ப கொலை செய்வது”

“அடப்பாவி”

“ஆம் நானொரு கொலை செய்யப்போகிறேன்”


இதுவுமது 

தலைவனைக் கண்ட தலைவி ஒருத்தி தனது வேட்கையை அவன் முன்னே சொல்லி இரந்து அவன் பிரிந்த காலத்து ஆற்றியிருந்து அவன் வருதலை எதிர்பார்த்திருப்பாள். அவனது வரவை எதிர்நோக்கிப் பார்க்கும் நிமித்தங்கள் வேறுபடுவதையறிந்து வாரானென்று என்ணி வருந்துவாள். பின்பு அவனைக் காண வேண்டுமென்னும் ஆசையினால் தனது வீட்டை விட்டுச் செல்வாள். அவன்பால் இல்லவை கூறி நகைத்து ஊடிப் பிறகு வருந்துவாள். மாலைக்காலத்தில் இரங்குவாள். தலைவனோடு புனல் விளையாடும் பரத்தையை ஏசுவாள். தலைவன் பரத்தையை நீங்கித் தன் பால் வந்த காலத்தில் அவனுடைய கோலத்தைக் கண்டு சினங்கொள்வாள். அவனோடு அளவளாவி மகிழ்வாள். அவனை மாலையினாற் கட்டிக் கொணர்ந்து தன் வீட்டில் புகுவாள். தலைவனோடு அளவளாவுங் காலத்திற் குழைவாள். ஊடலினால் நெகிழ்ந்து மிக்க துன்பத்தோடு தங்கி இருக்கும்போது அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்து அவன் தன் அடியிலே பணிந்த காலத்தில் மனமிரங்குவாள். இரவில் தன் பாயலினின்றும் நீங்கி அவன் உறங்கும் இடத்திற்குச் செல்வாள். தலைவன் இரவில் வேறொரு மகளை எண்ணித் தனை நீங்கும் காலத்தில் அதனைக் கண்டுகொண்டு ‘செல்வாயாக’ என விடுப்பாள்.


இதுவுமது  

இந்தியா சுதந்திரம் பெற்றபின் ஐம்பதுகளில் தமிழகத்தில் ஓரளவு தொழில் வளர்ச்சி ஏற்பட்டதென்றே சொல்லவேண்டும். ஆனால் இக்காலத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் என்ணிக்கை மிக அதிகமான அளவில் வளர்ந்தது. அரிசி, நவதான்யங்களில் முதன்மை பெற்றதாக மாறி தமிழக மக்கள் பெரும்பான்மையோரின் முக்கிய உணவு தான்யமாக மாறியது. இருபதுகளிலும் முப்பதுகளிலும்   பலகாரமாகவும், வசதி படைத்தோரின் உணவாகவும் மட்டுமே கருதப்பட்ட இட்லி, தோசை ஆகியவை தமிழகத்தின் முக்கிய உணவுவகைகளாயின. கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற புரதச் சத்து மிகுந்த தான்ய வகைகள் வழக்கொழிந்து போயின. அதிலும் சோளத்திற்கு ஏற்பட்ட அதோகதியை என்னென்பது! உணவுத் தொழிற்சாலைகளுக்குள் அனுப்பட்ட சோளம் cornflakes என்ற பெயரில் டப்பாக்களுக்குள் அடைக்கப்பட்டு வெளிவந்தது. இப்போது இது மேட்டுக்குடியினரின் உணவு. கம்மர் கட்டையும் தேங்காய் மிட்டாயையும் போல வறுத்த சோளக்கதிர் பள்ளிக்கூட வாசல்களிலும் சாலைகளிலும் கொறிக்கும் தின்பண்டமாக விற்கப்பட்டது. பற்பசை விளம்பரங்களில் பல்லின் உறுதியை வறுத்த சோளக்கதிரைக் கடித்துத் துண்டாக்குவதன் மூலம் நிரூபித்தனர். அறுபதுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் பத்தினிப் பயிர்கள் கூடப் பொய்த்துவிட்டன. அப்போதிருந்த தமிழக அரசாங்கம் விளைந்த அரிசியை கேரளாவுக்குக் கள்ளத்தனமாக விர்றுவிட்டதாலும் பர்மாவிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியைக்கொண்டுவர மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாலும் வேறு வழியின்றி, மைதா மாவையும், கோதுமை மாவையும் அதிக அளவில் விநியோகித்தது. இவ்வாறாகவே ‘பரோட்டா’, ‘பரோட்டா’, என்றழைக்கப்படும் விசித்திர வடக்கத்திய மைதாவஸ்து தமிழரின் உணவுப் பொருளாகியது. ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, தேசிய நெடுஞ்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை என முளைத்த என்ணற்ற டீக்கடைகளில் பரோட்டா செய்யப்படுவதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி. கறுகறுவென்று கட்டு மஸ்தான உடம்புடனும் புஜ பலத்துடனும் விளங்கும் ஒரு தமிழரே பரோட்டா செய்யத் தகுதியானவர். அவர் மைதாமாவுடன் தண்ணீரும் எண்ணெயும் கலந்து இரண்டு கால்பந்துகள் இணைந்திருக்கும் அளவில் உருண்டையாக உருட்டி டமீர் டமீரென கல்லில் அடித்து மாவைப்பக்குவப்படுத்துவார். பின் அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையாகக் கையிலெடுத்து அதை மென்மையாக வசியப்படுத்தி லாகவமாக காற்றில் வீச, மந்திரத்தால் கட்டுண்டது போல துணியென விரியும் மாவு. இவ்வாறாக அது காஷ்மீரப் பட்டின் மெல்லிசான தன்மையை அடைந்தவுடன் அதை லேசாக மடித்து வட்டமாகச் சுற்றி வைப்பார். இவ்வளவு நுணுக்கமான செயற்பாடுகளுக்கு பரோட்டா சிருஷ்டியில் உட்பட்டாலும் அதை உண்பதற்கு அசுர பலம் வேண்டும். பரிசாரகரே பெரும்பாலும் பரிமாறும்போது பரோட்டாவைப் பிய்த்துப் போட்டு பேருதவி செய்வார். சேவலின்றி முட்டையிடும் வொயிட் லெக்கான் என்ற அதிசயப் பறவையின் முட்டைகளாலான முட்டைக்கறி பரோட்டவிற்கு சரியான இணை. பசித்த வயிற்றில் கல்லென நிறையும் பரோட்டாவை சாப்பிட்டு சாப்பிட்டுப் பழகிப்போன தமிழர்களுக்கு ஐயகோ வீட்டில் இப்பலகாரத்தை ருசிக்கும் வாய்ப்பு லபிக்கவேயில்லை. ஏனெனில் புஜகீர்த்தியற்ற தமிழ் மறமகளிரால் இவ்வடக்கத்திய உணவுப்பண்டத்தைச் செய்ய முயற்சித்தபோதெல்லாம் ஏமாற்றமும் தோல்வியுமே மிஞ்சியது. பெரும்பான்மையான நேரங்களில் வெந்த மைதா களியையே அவர்களால் உருவாக்க முடிந்தது. பொருளாதார மாற்றத்திற்கும் கலைக்கும் உள்ள தொடர்பை நம் பெண்களால் எக்காலமும் உணரமுடியாது என்பதே இதனால் பெறப்படும் கருதுகோள். பல்கலைக் கழகங்களில் கலாநிதி பட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ளும் பெண்டிர் இக்கருதுகோளை செவ்வனே நிறுவி கோட்பாடாக மாற்றமுடியும்.

இதுவுமது 

என்னுடைய உற்பத்தியின் மூலதனமோ எழுத்து. எழுத்தை காசாக்கும் வித்தை எங்ஙனம்? இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அப்படியொன்றும் அம்பாரம் அம்பாரமாய் எழுதிக்குவித்துவிடவில்லையென்றாலும் நான் ஒன்றும் குறைவாக எழுதுகிற ஜாதியைச் சேர்ந்தவனில்லை. தொழில் எழுத்து என்றாகிவிட்டபின் அதை காசாக்குவது எப்படி என்று தெரியவேண்டாமா? நாற்பத்தாறு கதைகள் கைப்பிரதியாகவே கிடக்கும்பொழுதுதான் இந் நல்புத்தி வருகிறது. பிரம்மப் பிரயத்தனதிற்குப் பின் ஒரு மாபெரும் தற்காலிக நிவாரணத் திட்டம் தீட்டியிருக்கிறேன். அத்திட்டத்தை வெளியே சொல்லக்கூடாது என்றாலும் நீங்கள் வாசகர்தான் திருட்டு சக எழுத்தாளனில்லை என்பதினால் ரகஸ்யமாகக் காதுக்குள் சொல்கிறேன். குமுதம் பத்திரிக்கைக்கு கதை எழுதப் போகிறேன். சிறுகதை. குமுதத்தை யார் அதிகம் படிக்கிறார்கள்? பெண்கள். 65 சதவீதம் பெண்கள். தொட்டிலை ஆட்டிக்கொண்டே, அடுப்பை கவனித்துக்கொண்டே இதர வேலைகளைச் செய்துகொண்டே படிப்பதற்கு ஏதுவாக எழுதவேண்டும். மூலையை எந்த விதத்திலும் சங்கடப்படுத்திவிடக்கூடாது. நாற்பது வயது மாமியார்க்காரி. அவளுக்கு ஒரு மருமகள். மகன் சாந்த சொரூபி. மாமியார் மருமகளை மிரட்டி பிரதி மாதம் ஏழாம் தியதி இருநூற்றி ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு எங்கேயோ செல்கிறாள். மருமகளை சந்தேகப்பேய் பிடித்தாட்டுகிறது. ஒரு ஏழாம் தியதி மாமியார் அந்த ரூபாயை மாரியம்மன் கோவிலில் ஒரு தாடிக்காரத் தடியனிடம் கொடுப்பதை மருமகள் ஒளிந்திருந்து பார்த்துவிடுகிறாள். மாப்பிள்ளையிடம் சொல்லலாமென்றால் ராட்சஸி மாமியார் கொன்றே விடுவதாக மிரட்டியிருக்கிறாள். பயங்கரமான சஸ்பென்ஸ். எப்படி கதையை முடிப்பது? இந்த ஆர்வக்கோளாறு கதையமைப்பு பெரும்பத்திரிக்கைக்காரனுக்கு வெல்லக்கட்டி. உடனடியாக வாங்கிக்கொள்வான். எனக்கு இருநூறு ரூபாய் கிடைத்து விடும். அடேயப்பா டீ ஹண்ட்ரட் ரூப்பிஸ்! அதை 

அறை வாடகை- ரூ 125.00
ஒரு கட்டு பீடி- ரூ 1.00
வழவழ ஸன்லிட் பாண்ட் பேப்பர் -ரூ-10.00 
சாணிக்கலர் வெள்ளைத்தாள்- ரூ 10.00
பக்கத்து வீட்டுப் பையனுக்கு நான் சொல்வதை எழுதக்கூலி- ரூ 40.00  
மீதிப் பணம் (கைச் செலவுக்கு) - ரூ 14.00

என பிரிப்பேன். ஸன்லிட் பாண்ட் பேப்பரை பூட்டி வைக்க வேண்டும். பக்கத்து வீட்டுப் பையனிடம் ஏற்கனவே பேரம் பேசி வைத்திருக்கிறேன். சாணிக்கலர் பேப்பரில் நான் சொல்லும் கொலைக்கதையை மடமடவென அவன் எழுதுவான். அதே ஆர்வக்கோளாறு கதையமைப்பு. மாமியார்க்காரி இப்போது இளம் மருமகள் தாடிக்காரத் தடியன் அவளின் பழைய காதலன். மிரட்டி பணம் பறிக்கிறான். சாந்த சொரூப சக்குபாயான கணவன் வீர தீரச் செயல் புரியும் துப்பறிவாளன். காதலனோ  இரக்கமற்ற குடிகாரன். காதலன் கொலை செய்யப்பட்டுவிடுகிறான். கொலைகாரியோ நல்லெண்ணம் கொண்ட மாமியார் (இவளுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கிறது) பழியோ அபலை மருமகளின் மேல். ஆஹ! என்னவொரு சிக்கல்! மாலைமதி/ராணிமுத்து/ பாக்கெட் நாவல்காரனுக்கு அல்வா. எனக்கு ரூ 2000/- பழுத்துவிடும். அந்தப் பணம் கைக்கு வந்ததுதான் தாமதம் உடனடியாக நல்ல வைத்தியனாகப் பார்த்து என் ஜீரண உறுப்புகளை பழுது பார்த்துக்கொள்வேன். அதிக பட்சம் ஐநூறு ரூபாய் ஆகுமா? மீதி ரூ1500/-க்கும் நான் நொட்டை விட்டுக்கொண்டு பார்த்த அத்தனை புத்தகங்களையும் வாங்குவேன். விழுந்து கிடந்து படிப்பேன். தும்பைப்பூச் செடிக்கூட்டத்தைப் பார்த்த வண்ணத்துப் பூச்சியின் ஆனந்தம். ஸ்ன்லிட் பாண்ட் பேப்பரின் வழவழத்த மேற்பரப்பில் ஒற்றைப் பக்கத்தில் மட்டும் அவ்வபொழுது கவிதை. தமிழ் மொழியே கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து ஒத்துழைப்புத் தா. முதலில் மாமியார், அப்புறம் ஒரு கொலை செய்யவெண்டும்…..

வேறு 

‘வாள் நிலை கண்டான்’ ஜனநாத கச்சிராயன் ஷீரஸேடுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள்…

“தம்பி! தமிழ் எழுத்தாளன் எவனோ வார்த்தையினால் பொருளை உண்டாக்கப்போவதாகவும் அவ்வாறு உண்டாக்கப்படும் கதையில் கதை சொல்லும் குரலை கொலை செய்யப்போவதாகவும் உன்னிடம் கூறியதாகவும் எழுதியிருந்தாய். அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. கதை சொல்லும் குரல் சாகாவரம் பெற்ற ராட்சசன். அவனைக் கொல்வதற்குப் பேராண்மை வேண்டும். அது மட்டுமல்ல. அக்கதையை எழுதும் துரதிருஷ்டசாலி தன்னுடைய ஆளுமையை அடியோடு ஒழித்துவிட வேண்டும். இதைப்பற்றி இங்கேயுள்ள சில இலக்கிய பங்காருக்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது நகுலனின் ‘நவீனன் டைரி’யில் இது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது எனப் பிதற்றினர். ‘நவீனன் டைரி’யில் செத்துப்போவது நவீனன் என்ற எழுத்தாளன்; இது ஒரு கதை நிகழ்வு. கதை சொல்லும் குரலே செத்துப்போய்விடவில்லை. ‘சுயம் நசித்தல்’ என்பதைப் பற்றி நகுலன் ‘நாய்களில்’ பேசினாலும் அதைச் செய்ய அவரால் முடியவில்லை. டி.கே.துரைசாமி என்ற ஆங்கிலப் பேராசிரியர், நல்ல சிவன் பிள்ளை, ஹரிஹரசுப்ரமணிய ஐயர், தேரை இவர்களை நண்பர்களாக உடைய நவீனன் என்ற தன் அம்மாவின் சாதாரண வார்த்தைகளில் பொதிந்திருக்கும் நிர்த்தாட்சண்யமான உண்மைகளைக் கண்டு அடிக்கடி வியக்கும், அண்ணனைப் பற்றி சதா சிந்திக்கும் ‘நகுலன்’ - என நாலைந்து ‘நான்’களை உலவவிடும் நகுலன் -அடடா சுசீலாவை விட்டு விட்டேனே- தன் வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு ஏமாற்றங்களைப் பற்றிப் புலம்ப இந்த ‘நான்’களை பயன்படுத்துகிறார். நகுலனின் கதைகள் நவீன தமிழிலக்கியத்திற்குக் கிடைத்த அற்புதமான நூல்கள் என்பது வேறு விஷயம். நகுலன் என்ற குறியீடு - அவருடைய கவிதைகள் சிறுகதைகள் நாவல்கள் (விமர்சனங்கள் என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் அபத்தங்கள்) அனைத்தும் சேர்ந்து உருவாகும். இக்குறியீடு- தமிழில் எழுதும் நல்லிலக்கிய, நடுத்தர, முற்போக்கு, பிற்போக்கு, வணிக எழுத்தாளர்கள் என உள்ள அத்தனை வகை எழுத்தாளர்களிடமும் தமிழ்க்கலாச்சாரத்திலும் விரவியிருக்கும் பெண்மை’யைச் சூசகமாகக் குறிக்கிறது. இந்தப் பெண்ணை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். படைப்பியக்கத்தின் ஆதிசக்தி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் இவள் சுய ஆராதனை, புலம்பல் (நோய், ஏமாற்றங்கள், காதல் தோல்விகள், மற்றவர்களின் வஞ்சகக் குணம் இத்தியாதி இத்தியாதி) சுய சந்தேகம், தற்பெருமை, பகட்டு, புறம்பேசுதல் என்ற சகல ஒழுக்கக்கேடுகளையும் உடையவள். இவள்தான் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளிலும் உள்ள கதை சொல்லும் குரல். இவளைக் கொல்ல முயன்று படுதோல்வியுற்றவர் நகுலன். இவளை ஓரளவுக்கு அலட்சியப்படுத்தி வெற்றி கண்டவர்கள் என சி.சு.செல்லப்பா, க.நா.சு, ந.முத்துசாமி, தர்மு சிவராம், அம்பை என ஐவரைத்தான் சொல்லமுடியும். இவ்வைவர் மரபையே ஆண் வம்சாவளி மரபு அல்லது மாந்தாதா மரபு எனலாம். மற்ற எல்லா எழுத்தாளர்களுமே நான் சொல்லும் ‘பெண்’ணிடம் சோரம் போனவர்களே. அன்புள்ள ஷீரஸேட் இது இலக்கிய விமர்சனமல்ல என்பதையும் நீ நன்கு அறிவாய். முடிந்தால் நீ அவளைக் கொலை செய்.

இதுவுமது 

அம்மா ஒரு கொலை செய்தாள் 

இதுவுமது 
ஆண் சுத்தமான கனவான். எந்த வம்புதும்புக்கும் போகாதவன். தாய் சொல்லே வேதமென்றிருப்பவன். பெண்ணோ மோகமுள். மாயப்பைசாசம். ஆணைத் துரத்தி துரத்தி காதலிப்பவள். அவளுடைய கள்ள வலையில் விழுந்துவிடும் ஆண் சமூக நடப்புக்குக் கட்டுப்பட்டு கட்ட கடைசியில் அவளை மணந்து விடுகிறான். வேறு என்ன செய்வான் பாவம். நமது தமிழ் சினிமாக் கதாநாயகர்கள் அனைவருமே இம்மாதிரியான இக்கட்டான நிலையில் அடிக்கடி மாட்டிக்கொள்வதைக் காண பரிதாபமாக இருக்கிறது. சமீபத்தில் திரையரங்கு ஒன்றில் மேற்கண்ட மேனகை புராணக் கதையமைப்பைக் கொண்ட உன்னதமான தமிழ்த் திரைப்படத்தைக் கண்ட மாந்தாதா பின்னங்கால் பிடரியில் பட திரையரங்கை விட்டு வெளியே கூச்சலிட்டுக்கொண்டே ஓடியதாகத் தெரிகிறது. ஏனென்று விசாரித்ததற்கு “கே.ஆர்.விஜயா, லட்சுமி முதல் ஶ்ரீதேவி வரையுள்ள தமிழ்க் கதாநாயகிகளின் பிம்பங்களும் எனக்கு காயடித்தலை ஞாபகப்படுத்துகின்றன” என்றானாம்.

வேறு 


கொல கொலையாய் முந்திரிக்காய்
நரிய நரிய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி


குளகம் 

ஜனநாத கச்சிராயன் சம்பத்தை மாந்தாதா மரபில் சேர்க்கவில்லை என ஷீரஸேட் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டான். எனக்கு இந்த பேச்சுகள் அனைத்துமே அபத்தகளஞ்சியமாய்த் தோன்றியது கதையிலுள்ள கதை சொல்லும் குரலுக்கும் கதாசிரியனுக்கும் உள்ள உறவைப் பற்றி விலாவாரியாகப் பேசுவது சமூக மாற்றத்திற்கு எந்த விதத்தில் பயன்படப்போகிறது? எனக்கு சத்தியமாக விளங்கவில்லை. ஷீரஸேடிடம் கேட்டால் ஏதோ பெரிய ஹாஸ்யதுணுக்கைக் கேட்டது போல நகைத்துவிட்டு முதலில் இலக்கியப் படைப்பு தருகின்ற அனுபவத்தைப் பற்றிப் பேசு, பிறகு சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்கலாமென்கிறாள். ஜனநாதனோ விஷமி. என்னதானய்யா பேசுகிறாய் என்றதற்கு உன்னைப் போன்ற மூடர்கள் எண்ணிக்கையில் பெருத்துவிட்டதால்தான் எதைப் பற்றி பேசவேண்டுமானாலும் பால பாடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது என்றான். பிறகு ஒரு நாள் நல்ல மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தபோது கதை சொல்லும் குரலைக் கொல்ல வேண்டியது இக்காலத்தின் நிர்ப்பந்தம் என்றான். இது வெறும் நடை சம்பத்தப்பட்ட விவகாராந்தானே என்றேன். “மடக்கி விட்டாயோ மடக்கி? நடை, உத்தி, வடிவம் இவைகள் கூட வார்த்தை வாக்கியங்கள் ஆகியவற்றைக் கடந்த நிலையில் உருவகமாகலாம்” என்றான். யாரேனும் இது எப்படி சாத்தியமென்று விளக்கிச் சொன்னால் நலம். தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து பார்க்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. கொலை செய்ய வேண்டுமாமே கொலை……

இதுவுமது 

பெண் போலப் புலம்பிய படலம் 

வேரில்லா கம்பெடுத்து
தூரில்லா கூடைபின்னி
தன்னனானேனானே
மையமற்றுப் போனேனே
தன்னானேனானே
தம்பி வீரா மரப்பாச்சி போர் வீரா
தன்னானானேனானே அட
தன்னானானேனானே 
தம்பி வீரா மையமற்றுப் போனேனே
மரப்பாச்சிப் போர் வீரா
தன்னானேனானே அட
தன்னானேனானே
ஜடத்தைப் படைக்கும் மூடா
அட தன்னானேனானே
ஒரு துளி விந்தே மூல தனம் 
தானத் தனதன தானத் தனதன னன 

-மாந்தாதா----------------------------------------------------------------------------------------------------------


குறிப்புகள்: “அம்மா ஒரு கொலை செய்தாள்” -அம்பை எழுதிய சிறுகதை ஒன்றின் தலைப்பு. ‘வாள் நிலை கண்டான் ஜன நாதக் கச்சிராயன்’ என்ற கதாபாத்திரம் அரு.ராமநாதன் எழுதிய சரித்திர நாவல் ‘வீரபாண்டியன் மனைவி’யில் வருவது. ஷீரஸேட் ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில்’ தினமும் கதை சொல்லி உயிர் தப்பிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். பெண்போலப் புலம்பிய படலம் என்ற பாடல் 1986இல் சென்னையில் நான் சேகரித்த கானாப் பாட்டு; ‘மையமற்றுப் போனேனே’ என்ற வரி இடைச் செருகல். ஆண், பெண், இனம், மரபு ஆகியனவற்றை absolute categoriesஆகக் கொண்டு உருவாக்கப்படும் சொல்லாடல்களை மேலோட்டமான வாசிப்பிற்கு புலனாகதவாறு பகடி செய்து எழுதப்பட்ட இந்தக் கதை 1988இல் ‘கிரணம்’ சிற்றிதழில் முதலில் பிரசுரம் ஆனது. பின்னர் 1990இல்  ‘கர்நாடக முரசு’ தொகுப்பிலும் பிரசுரம் ஆனது. இந்த பழைய ஸில்வியா கதைகளுக்கு நிறைய புது வாசகர்கள் கிடைத்திருப்பது பற்றி மகிழ்ச்சி. வந்திருக்கும் கடிதங்களுக்கு பதில் எழுத முயற்சி செய்கிறேன். இந்தக் கதைகளில் சமூகவியல், வரலாறு, இலக்கிய விமர்சனம், அல்லது தத்துவம் போல தோற்றம் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள பகுதிகள் அபத்தங்கள் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

1 comment:

Venkatesan said...

// சமீபத்தில் திரையரங்கு ஒன்றில் மேற்கண்ட மேனகை புராணக் கதையமைப்பைக் கொண்ட உன்னதமான தமிழ்த் திரைப்படத்தைக் கண்ட மாந்தாதா பின்னங்கால் பிடரியில் பட திரையரங்கை விட்டு வெளியே கூச்சலிட்டுக்கொண்டே ஓடியதாகத் தெரிகிறது //

இந்தக் கதையை படிச்சான்னா மாந்தாதா என்ன செய்வான்? :-)

by the way, கதை சூப்பர்!