Tuesday, December 2, 2014

பிரக்ஞையின் கரை உடையும் தருணங்கள்

சிரச்சேதத்திற்காக இழுத்துச் செல்லப்படும் குற்றவாளியை மணம் முடிப்பேன் என்று அடம் பிடிக்கும் இளவரசியைப் பற்றி நாம் கதைகளில் படித்திருக்கிறோம் அல்லவா, அந்த இளவரசியின் பிரக்ஞைக்குள் நடப்பதென்ன? அதை எப்படி விவரிப்பது?  பிரக்ஞை தப்பி சுய நினைவு இழப்பது போன்ற மனமயக்கு அல்லது புறத் தூண்டுதலில் மனம் அதீத விழிப்பினை அடைவது போன்ற மன நிலைதான் கதையில் வரும் இளவரசியின் மன நிலையும். அந்த மன நிலை தொடர்ந்து நீடித்திருப்பது அல்ல என்பதால் அதை பிரக்ஞையின் கரை உடையும் தருணம் என பெயரிடலாம். இளவரசியின் மனநிலை ஒரு உதாரணமென்றால் அது போல பிரக்ஞையின் கரை உடையும் தருணங்கள் எண்ணற்றவை; அவை எப்போதுமே நம் இளவரசியின் கதைச்சூழலைப் போல நாடகீயத்தன்மை வாய்ந்ததாக இருப்பதில்லை.

இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என்று இலக்கிய பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு. இந்தக் கருத்து கடந்த முப்பது வருட இலக்கிய கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து நான் அணுக்கமாக பெற்ற பார்வையாகும். நான் நாட்டுப்புற ஆராய்ச்சியாளனாகவும் இருப்பதால் மானிடவியல் களப்பணிகளின் போதும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்கள் மனிதர்களின் ஊட்டாட்டத்தின் போது நிகழ்த்துதல்களாக (performances) எப்படி பரிமாணம் பெறுகின்றன என்று நான் உன்னிப்பாக கவனித்து ஆவணப்படுத்தியிருக்கிறேன். சடங்குகளிலும், திருவிழாக்களிலும், கலை நிகழ்த்துதல்களிலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்கள் ஏராளம் என்றாலும் அவை தினசரி வாழ்க்கையில் இல்லாமலும் இல்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இலக்கிய பிரதிகள் போலவே தினசரி வாழ்க்கையிலும் நாடகீயத்தன்மையற்று மெல்லிய உணர்வாகவும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்கள் அனுபவமாகலாம். இப்படி இலக்கியப் பிரதிகளால் (குறிப்பாக கவிதையால்), மானிடவியல் கள ஆராய்ச்சியின் போது மனித ஊடாட்டங்களினால் ஏற்பட்ட பல தரப்பட்ட, பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களை அடையாளம் சுட்டி விளக்குவதுதான்  இந்தத் தொகுப்பிலுள்ள என் கட்டுரைகளுக்கு ஊடுபாவாய் அமைந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.  

பிரக்ஞையின் கரை உடையும் தருணங்கள் என இப்போது நான் வார்த்தைப்படுத்துவதையே ஜூலியா கிறிஸ்தவா பிளேட்டோவிடமிருந்து கடன் பெற்ற chroa என்ற கருத்தக்கத்தின் மூலம் விளக்குகிறார்.  ஜூலியா கிறிஸ்தவாவின் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ (‘Revolution in poetic language’) என்ற புத்தகத்துக்கு மூன்று பகுதிகளாக எழுதப்பட்ட அறிமுகக்கட்டுரையில் அவருடைய chora என்ற கருத்தாக்கத்தினை விளக்க முயற்சி செய்திருக்கிறேன். ஜூலியா கிறிஸ்தவா என்னுடைய முதன்மையான ஆசிரியை. அவருடைய சிந்தனையின் பாதிப்பு என்னுடைய கட்டுரைகள் முழுவதும் வியாபித்திருப்பதால் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ கட்டுரை முதல் கட்டுரையாக இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது. கிறிஸ்தவாவிடமிருந்து பெறப்பட்ட ஞானத்தின் சாராம்சத்தினை அக்கட்டுரையின் இறுதியில் பின்வருமாறு குறித்திருக்கிறேன்:

“கவிதை வாசிப்பு என்பது இதனால் தனியான, விசேஷமான வாசிப்பு செயல்பாடென்று மட்டும் கொள்ளலாகாது. ஒவ்வொரு பேசும் உடலின் மொழிச்செயல்பாட்டு சந்தர்ப்பத்திலும் கவிதை உள்ளார்ந்து இருக்கிறது. எழுதப்பட்ட கவிதை இந்த மொழிச் செயல்பாட்டு சந்தர்ப்பங்களை அழுந்தக்கூறி கவனத்தை ஈர்க்கிறது. கவிதை வாசிப்பே வாழ்தல்”

வாசிப்பிற்கும் வாழ்தலுக்கும் இடையிலான வேற்றுமைகளை இவ்வாறாக அழித்துவிட்டு அவற்றிற்கிடையிலான இணைவுப்புள்ளிகளை பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களில் கண்டதையே ஒன்பது பகுதிகளாக எழுதப்பட்ட ‘கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு’ கட்டுரை முன்வைக்கிறது. இந்தக் கட்டுரைத் தொடரை நான் மேலும் வளர்த்து எழுதவே ஆவலாக இருக்கிறேன். குறிப்பாக தனிப்பட்ட கவிஞர்களையோ கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையோ பிரதானப்படுத்தாமல் கருத்தோட்டத்தின் பாவுகளை நெய்வது எனக்கு தமிழ் பண்பாட்டு வரலாற்றின் ஒரு சிறு பகுதியினை குறுக்கு வெட்டுத் தோற்றமாக காட்டுவதாய் தோன்றியது. கவிதையை ஆதாரமாகக் கொண்ட வாழ்வியல் பார்வையை உருவாக்குவதற்கான அத்தனை கூறுகளும் இந்த நூலில் மையமாக இடம் பெற்றிருக்கும் ‘கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு’ கட்டுரைகளில் இருக்கின்றன.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு தொடர் கட்டுரை ஜெயமோகனோடு இணையத்தில் விவாதித்த சுப்பிரமணியபாரதியார் மகாகவியே என்பதற்கான என் தரப்பு வாதங்கள். முதலில் இந்த விவாதத் தொடரை, ஜெயமோகனின் தரப்பினையும் சேர்க்காமல் வெளியிடுவது எனக்குத் தயக்கமாக இருந்தது. இணைய கட்டுரைகள் அனைத்தையும் தரவிறக்கி அவற்றை ஒரு சேர வாசித்துப் பார்த்தபோது, ஜெயமோகன், எம்.டி.முத்துக்குமாரசாமி என்ற நபர்களை மீறி கட்டுரைகளில் உள்ள பாவனைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தன. காலப்போக்கில் நபர்களை மீறி எழுத்தும் அது கொள்ளும் பாவனைகளும் கட்டுரைத்தொடரில் இருக்கக்கூடிய தொடர்ச்சியுமே முக்கியமாக ஆகிவிடும் என்று தோன்றியது. ஆகையால் பாரதி மகாகவியே என்று நான் முன்வைத்த வாதங்கள் கொண்ட கட்டுரைகளை எவ்வகையிலும் மாற்றி எழுதாது அப்படியே சேர்த்திருக்கிறேன். பாரதியார் விவாத கட்டுரைகளை எழுதுவதற்கு காரணமாக அமைந்த நண்பர் ஜெயமோகனுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரதியை மகாகவியாக நாம் ஏன் கருதவேண்டும் நான் எடுத்துச்சொன்ன காரணங்களுள் மிக முக்கியமானதாக நான் நினைப்பது பாரதியார் நம் அகத்தோடு பேசுகிற ஆத்மார்த்தமான கவிக்குரலை கொண்டிருந்தார், அந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடைய ஆத்மார்த்தமான கவிக்குரல் வேறு யாருக்கும் இருக்கவில்லை என்பதாகும். இந்த முன்னுரையின் பதச்சேர்க்கையிலே சொல்வதானால் பாரதியாரின் கவிதைகளில் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன. அதை எழுத்தில் சாதித்தவன் மகாகவியல்லாமல் வேறு யார் என்றும் தோன்றியது.

சில சுயசரிதைக்கட்டுரைகளையும் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறேன். மூன்று கட்டுரைகள் தல யாத்திரை கட்டுரைகளாகவும் மூன்று பகுதிகளாக ‘நீர் அளைதல்’ என்ற என் கவிதைத் தொகுப்புக்கு “நான் எழுதாத  முன்னுரையும் போர்ஹெஸின் கவிதைகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் இத் தொகுப்பில் உள்ளன. என் தந்தைக்கும் எனக்குமான உறவினையும் சொல்வதற்கும் அவரையும் என் தாயையும் நினைவு கூர்வதற்கும் இந்தக்கட்டுரைகள் உதவின. சுயசரிதைக்கட்டுரைகளை எழுதுவதற்கே நான் மிகவும் சிரமப்படுகிறேன். திக்கித்திக்கியும் முகத்தை வேறுபக்கம் பார்த்துக்கொண்டு பேசுகிறவனாகவும் போர்ஹெஸின் கவிதை மொழிபெயர்ப்புகளுக்கு உள்ளாக என்னை ஓளித்துக்கொள்கிற சங்கோஜியாகவும் இந்தக் கட்டுரைகளில் நான் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. மீண்டும் வாசிக்கையில் முகம் சிவந்து போகிறது.

ஆனால் என் குழந்தைகளோடு விளையாடியதை விவரிக்கையில் அவர்களுடைய பள்ளிச்சூழல்களில் பார்த்தவற்றை எழுதுகையில் எனக்கு எந்தத் தயக்கங்களும் இல்லை. எனது வாழ்வுச்சூழல்களையும் அங்கமி நாகா இனக்குழுவினருடன் நான் இருவாட்சிகளை கலந்து ஆலோசிக்கப் புறப்பட்டு  சென்றதையும் மாறி மாறி இணையாகவும் எதிராகவும் இலக்கியம் மற்றும் தத்துவப்பிரதிகளை உள்ளே வைத்தும் எழுதிய கட்டுரைத் தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. பிரக்ஞையின் கரை உடைபடும் தருணங்களை பல சந்தர்ப்பங்களில் நான் அடையாளம் கண்டுகொண்டதை துல்லியமாக விவரிக்கும் கட்டுரைகளாகவும் அவை இருக்ககின்றன. ‘கார்வையை கவனித்தல்’, ‘ஊடுருவிப் பார்த்தல்’, ‘பாஷோவின் குளம்’ ‘மூடிய இமைகளூடே’ ஆகிய தலைப்புகளே கட்டுரைக்கும் புனைவுக்கும் இடையிலான இடைவெளி இல்லாமல் போவதை சுட்டிக்காட்டுகின்றன. இந்த வகைக்கட்டுரைகளின் பொருட்டே இத் தொகுப்பின் துணைத் தலைப்பு ‘ கட்டுரைகளும் கட்டுரை போல சிலவும்’ என்பது நியாயம் பெறுகிறது. பார்த்தல்மேயின் ‘ஸ்னோ வைட்’, நபகோவின் ‘அடா’ ஆகிய நாவல்கள் குறித்தும் அங்கமி நாகா நாட்டுப்புறக்கதைகளையும் இந்தக் கட்டுரைகளுக்குள் எழுத முடிந்ததை என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

இசை பற்றி நான் இணைய வாசர்களுக்காக எழுதிய நான்கு கட்டுரைகள் ‘பாகேஶ்ரீ ராகம்’, ‘சூஃபி இசையும் இஸ்லாமிய மெய்ஞானமும்’ ‘உஸ்தாத் பிஸ்மில்லாகான்’ ‘அஞ்சலி: பாடகர் பிரதிவாதி பயங்கரம் ஶ்ரீனிவாஸ்’. இக்கட்டுரைகளும் பெரும்பாலும் பண்பாட்டு ஆய்வுக்கட்டுரைகளாகவே வடிவம் பெற்றிருக்கின்றன.

‘காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம்’, ‘அடோர்னோவின் மாற்று அழகியல்’, ‘கோபோ அபேயின் மணற்குன்றுகளில் பெண்’ ஆகிய கட்டுரைகள் பின் நவீனத்துவத்திலிருந்து நவீனத்துவத்திற்கு, பின் அமைப்பியலிலிருந்து இருத்தலியலுக்கு நான் திரும்பி வந்ததை வலுவாக பதிவு செய்கின்றன.

‘நிலவொளி எனும் ரகசிய துணை’ உள்ளிட்ட வேறு சில கட்டுரைகளுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதால் அவற்றைக்குறிப்பிடாமல் விட்டு விடுகிறேன்.

இந்தக் கட்டுரைகள் தொகுப்பாக வெளிவருகின்றன என்றால் அதற்கு முழு முதல் காரணம் ‘அடையாளம்’ பதிப்பக நண்பர் சாதிக்தான். அவர்தான் எத்தனை முறை விடாமல் என்னைத் தொடர்பு கொண்டிருப்பார்? அவருடைய விடாமுயற்சியும். பொறுமையும், நட்புமே இத்தொகுப்பு வெளிவர உதவியிருக்கிறது. அவருக்கு என் நன்றிகளும் வணக்கங்களும் பல.




—————————————————————————————————————

“நிலவொளி எனும் ரகசிய துணை : கட்டுரைகளும் கட்டுரைகள் போல சிலவும் “ எனும் தலைப்பில் ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட இருக்கும் என் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை.

No comments: