Monday, December 15, 2014

மெய்ப்பாட்டியலின் செய்தி குறிப்பினை உயிர்ப்பித்தல்



தமிழிலக்கிய முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் முக்கியமான பாடங்களில் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் ஆறாவது இயலாக அமைந்திருக்கும் மெய்ப்பாட்டியலும் ஒன்று. மெய்ப்பாட்டியலை உரை அல்லது பொழிப்புரைக்கு உட்படுத்துகின்ற வகுப்பறை சொல்லாடல்களுக்கு நடுவே ஒரு விதமான தலையீட்டினை நிகழ்த்துவதற்கான முறைமையாக இக்கட்டுரையை வாசிக்க வேண்டும். 

உரை மற்றும் பொழிப்புரை மரபுகளுக்கு நேர் எதிரானது தலையீட்டு வாசிப்பு (interruption அல்லது intervention). உண்மையில் இவையிரண்டும் ஒரு பனுவலை (Text) மொழியியல் ரீதியாக அணுகுவதற்கான இரண்டு வேறுபட்ட எதிரிடையான வழிமுறைகளாகும். உரையின் மொழி மற்றொரு பனுவலை யதார்த்தம் குறித்து  தனக்குள் இருக்கக்கூடிய முன்முடிவுகளுடன் அணுகுகிறது. மேலும் உரையின் மொழி விளக்கமளிக்கின்ற மொழியாக செயல்படும்போது தன்னை தான் முன்முடிவாக கொண்டுள்ள யதார்த்தம் பற்றிய கருத்தின் வெளிப்பாடாகக் கருதிக்கொள்கிறது. இவ்வாறு உரை வேறொரு மொழியின் செயபாடுகளைக் குறைத்து, சுருக்கி (reductionism) இன்னொரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகிறது.

சற்று சிக்கலானதாகத் தோன்றும் இவ்விஷயத்தை ஓர் உதாரணம் மூலம் எளிமைப்படுத்தலாம். மெய்ப்பாட்டியலில் ஒரு சூத்திரம்:

“இளிவே இழவே அசைவே வறுமையென 
விளிவில் கொள்கை அழுகை நான்கே”  (மெய்ப்பாட்டியல், உருஙு)

இதற்கு உரை எழுதுகிற பேராசிரியர் பின்வருமாறு எழுதுகிறார்:

“ இது முறையான அழுகை யென்னுஞ் சுவையினைப் பொருள் பற்றி உணர்த்துதல் நுதலிற்று”
“இளிவும், இழத்தலும் அசைதலும் வறுமையுமென இந்நான்கு பொருள் பற்றித் தோன்றும் அவலம்”
“இளிவென்பது பிறரால் இகழப்பட்டு எளியவனாதல், இழவென்பது தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும்  இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவென்பது பண்டை நிலைமை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல், வறுமையென்பது போகந்துய்க்கப் பெறாத பற்றுள்ளம். இவை நான்குந்தன்கண் தோன்றினாலும் பிறன்கண் தோன்றினாலும் அவலமாமென்பது” (பேராசிரியர் உரை, பக்கம் 8)

இங்கே பனுவலின் மொழிக்கும் உரையின் மொழிக்கும் இடையிலுள்ள உறவை கவனியுங்கள். மெய்ப்பாட்டியல் சூத்திரத்தின் மொழி உணர்ச்சிகளைப் பகுத்து, அளந்து ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தி, ஒப்புமைப்படுத்தி பெயரிடுகிறது. உரை எழுதுகிற பேராசிரியரோ மேற்சொன்னவாறு பெயரிடப்பட்டவற்றைச் சமூகச்சூழல் உதாரணங்களின் மூலம் விளக்குகிறார். அப்படி விளக்கும்போது என்ன நிகழ்கிறது? உதாரணமாக ‘வறுமை’ என்ற பதத்தை, பேராசிரியர் விளக்குவதை கவனியுங்கள். “வறுமையென்பது போகந் துய்க்கப் பெறாத பற்றுள்ளம்”, அதாவது ‘வறுமை’ என்ற சொல எழுப்புகின்ற தொடர்புடைய வார்த்தைகளான ‘ஏழ்மை’ , ‘பசி’ , ‘பட்டினி’ போன்ற பொருளாதாரச் சார்புடைய நிலைகளை மட்டும், பேராசிரியரைப் பொறுத்தவரை ‘வறுமை’ குறிக்கவில்லை. ஒருவன் ஐஸ்கிரீமுக்காக ஏங்கியிருந்தாலும் சரி, கலர் டெலிவிஷனுக்காக அழுதாலும் சரி, பட்டினியால் அழுது உணவை நினைத்திருந்தாலும் சரி- தன் கண் தோன்றுதல் அல்லது பிறன்கண் தோன்றுதல் என்பதைப் பொறுத்துதான் வித்தியாசம்; மற்றபடி எல்லாமே ‘வறுமை’தான் என்கிறார் பேராசிரியர். வறுமை என்ற சொல்லின் பொருளை விரிக்கிறார் பேராசிரியர் என்று நீங்கள் சொல்லலாம். உண்மையில் இந்த விரிவு அபாரமானதும் அழகானதும் நுட்பமானதும் கூட.  ஆனால் பல சூழல்களில் தோன்றும் உணர்வின் அல்லது உணர்ச்சியின் இழைகளைப் பிரித்துப் பகுக்காமல் , வேறுபடுத்துவதற்குப் பதிலாக சாரம்சப்படுத்துவதால் பேராசிரியரின் உரை கருத்துமுதல்வாத சாரம்ச இயலாகிவிடுகிறது (idealist essentialism) என்பது மட்டுமல்ல என் வாதம். பேராசிரியரின் உரை அடிப்படையாகக் கொள்ளும் மொழி-யாதார்த்தம் உறவு பற்றிய பார்வை, விவரிக்கப்படுகின்ற பனுவலான மெய்ப்பாட்டியலின் மொழி-யதார்த்தம் பற்றிய கருத்திற்கு நேரெதிர்மாறானதாகும். மெய்ப்பாட்டியலின் மொழிச் செயல்பாடுகளான விவரித்தல், பகுத்தல், அளத்தல், வேறுபடுத்தல், ஒப்புமைப்படுத்தல், பெயரிடுதல் ஆகியன மறைக்கப்பட்டு , உரை மொழியின் செயல்பாடான சாரம்சப்படுத்துதலின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இது பேராசிரியர் உரைக்கு மட்டுமே உரித்தான குணநலன் அல்ல. உரை என்ற கருத்திற்கும் (concept) செயல்பாட்டிற்குமே  (Practice) இவ்வாறு ஒரு மொழியின் செயல்பாடுகளைக் குறைத்து, சுருக்கி, மறைத்து இன்னொரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பது பொதுவான குணநலனாகும். 

தலையீட்டின் மொழி வேறொரு கோணத்திலிருந்து செயல்படுகிறது. தலையீட்டின் மொழி ஒரு பனுவலை அணுகும்போது அப்பனுவல் முன்வைக்கின்ற மொழி-யதார்த்தம் உறவை கேள்விக்குள்ளாக்குகிறது. உரை அல்லது விளக்கத்தினால் மறைக்கப்படுகின்ற மொழிச்செயல்பாடுகளை இனம் காணுவதும் தலையீட்டு மொழியின் வேலையே ஆகும். 

தலையீட்டு மொழிசெயல்பாட்டின் அடிப்படைகள் மார்க்சீயத்திலிருந்தே பெறப்படுகின்றன என்பதைச் சொல்வது  ஆராய்ச்சி நெறிமுறையை விளக்குவதாக அமையும். மார்க்சின் ஒழுங்கமைப்பின்படி, அக உலகிற்கும புற உலகிற்கும் இடையில் எந்தவொரு சமூகச் சூழலிலும் நேர்கோட்டு, ஓற்றைவழி முரண்  என்று ஏதுமில்லை; மாறாக தொடர்ச்சியான உறவுகளின் தொகுப்பே காணப்படுகிறது. தூய அக உலகு அல்லது தூய பிரக்ஞை (pure consciousness) என்று ஏதுமில்லை;மனிதன் மற்றவர்களுடன் கொள்ளும் சமூக உறவுகளினாலும் கருத்துப்புலப்படுத்தங்களை மேற்கொள்வதினாலும் செயல்பாட்டுரீதியான மொழியாலான பிரக்ஞையே (practical consciousness of language) உருவாகிறது. (மார்க்சும் எங்கல்சும் 1845-6; 41-2; மார்க்ஸ் 1844: 162). ஹெகல் ‘the phenomenology of mind’இல் இதைப்பற்றி விரிவாக எழுதியிருந்தாலும் ஹெகலின் பார்வை செழுமையானது அல்ல. அக புற உலகுகளின் சந்திப்பை ஹெகல், வரலாற்றை விளக்கியது போலவே, நேர்கோட்டு இயங்கியலாக (linear dialectic) மட்டுமே விளக்கினார். ஹெகலிடமிருந்து பெற்ற இயங்கியல் கோட்பாடுகளை செழுமைப்படுத்துகிற மார்க்ஸ் அக-புற உலகு உறவினையும் மொழியை முதன்மைப்படுத்துவதன்  மூலம் செழுமைப்படுத்துகிறார்.

“…. அடிப்படையான வரலாற்று உறவுகளை கணித்த பின்னர்தான் நமக்கு மனிதனுக்கு ‘பிரக்ஞை’ என்று ஒன்று இருக்கிறது என்று தெரியவருகிறது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே இது தூய பிரக்ஞையல்ல.  மனம் ஆரம்பத்திலிருந்தே பொருளினை சுமக்க சபிக்கப்பட்டதாகையால் அது காற்றின், சப்தங்களின், சுருங்கச் சொன்னால் மொழியின், சலனமடைந்த படிவுகளின் வடிவமாகத் தன் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. மொழி பிரக்ஞையைப் போன்றது; மொழி செயல்பாட்டுரீதியானது. இந்த உண்மையான பிரக்ஞை மற்ற மனிதர்களுக்கு இருப்பதை அறிவதானாலேயே எனக்கும் இருப்பதை அறிகிறேன். மொழி, பிரக்ஞையைப் போலவே தேவையிலிருந்து பிறக்கிறது, மற்ற மனிதர்களுடன் உறவாட வேண்டிய தேவை, அவசியத்திலிருந்து பிறக்கிறது. எங்கே ஒரு உறவு இருக்கிறதோ அங்கே மொழி எனக்கு இருக்கிறது. மிருகம் தன்னை எதனோடும் உறவுபடுத்திக்கொள்வதில்லை; உறவுபடுத்துதல் என்ற காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதேயில்லை. மிருகத்திற்கு அது மற்றவையுடன் கொள்ளும் உறவு, உறவாக அறியப்படுவதுமில்லை, இருப்பதுமில்லை. எனவே பிரக்ஞை ஆரம்பத்திலிருந்தே ஒரு சமூக விளைபொருள்; மனிதர்கள் உள்ளளவும் அது அவ்வாறே நீடித்திருக்கும் ….” (மார்க்சும் எங்கல்சும் 1847: 43-44).

அக புற உலகுகளின் சந்திப்பில் மொழி பிரக்ஞையாக மார்க்சினால் விவரிக்கப்படும்போது இவையிரண்டுக்குமிடையில் தொடர்ச்சியான உறவுகளின் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அக்கருத்து மொழி-யதார்த்தம் உறவினை இரு ஒழுங்கமைப்புகளுக்கிடையிலான உறவாக (systemic relationship) சமூகச் சூழலில் இருத்திக் கணிக்கிறது. ஓசையாக, காற்றாக, மொழியாக அக புற உலகுகளின் சந்திப்பை மார்க்ஸ் விவரிக்கும்போது மொழியை அணுகுவதற்கான பொருள்முதல்வாத அணுகுமுறையை அவர் தருகிறார். அதாவது மொழி தூலமாக வெளிப்பட்டு நிற்கின்ற நிலையில், அக்குறிப்பிட்ட சூழலில் அதன் ஒழுங்கமைப்பு செயபடுகின்ற விதத்தை அளவிடுவது, கணிப்பது, பெயரிடுவது ஆகியவையே பொருள்முதவாத அணுகுமுறையாகும். 

மெய்ப்பாட்டியலில் எந்த வகையான அக-புற உலகின் உறவு முன்வைக்கப்படுகிறது? அது எந்த வகையான மொழி-யதார்த்தம் உறவினை முன் முடிவாகக்கொண்டிருக்கிறது? நமது சம காலச் சிக்கல்களின் நடுவே இப்பனுவலை வேறுவிதமாக படிப்பதற்கான நிர்ப்பந்தம் என்ன? ஆகிய கேள்விகளை இங்கே எழுப்பிக்கொள்வது அவசியமானதாகும். 

மெய்ப்பாட்டியல் என்பது புறத்துப் பொருளைக் “கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும்” ஐம்பொறி வழியாக அகத்துச் சுவைத்து எய்திய அகவுணர்வின் உண்மையினை உள்ளவாறே புறத்தார்க்கு மெய்யின்கண் புலப்படச்செய்யும் நெறி என்று பொருள்கொள்ளப்படுகிறது. புறவுலகை எதிர்கொள்ளும் அகத்தில் தோன்றுகின்ற குறிப்பினை  மொழியினால் அளந்து பிறருடன் பகிர்ந்துகொள்வதே மெய்ப்பாட்டியல். இவ்வாறு வரையறுத்துக்கொள்வதன் மூலம் மொழி-யதார்த்தம் உறவு பர்றிய அடிப்படை தெளிவாக்கப்படுகிறது. இங்கே மொழி புற உலகை அப்படியே தனக்குள் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படவில்லை; மொழி புற உலகை பிரதிபலிக்கிறது என்றும் சொல்லப்படவில்லை; மாறாக புறவுலகிற்கும் அகத்திற்குமிடையில் சந்திப்பு நிகழ்கின்றபோது மனத்தினுள் தோன்றுகின்ற குறிப்பை மற்றவர்களுக்கு மொழியின் மூலமாகப் புலப்படுத்துகின்ற காரியத்தை செய்யும்விதமே விளக்கப்படுகிறது. அதாவது அகபுற உலகுகளின் உறவைத் துல்லியமாக நிறுத்துப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த கருவியே மொழியாகும். மொழி பற்றிய நவீன கருத்துக்களும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டினையே எடுக்கின்றன என்பது ஆச்சரியமான உண்மையாகும். 

இது தவிர, தலைச்சூத்திரத்தில் தொல்காப்பியர் பயன்படுத்தும் வார்த்தைகளும் கவனிக்கத்தக்கன. 
தலைச்சூத்திரம்,
“பண்ணை தோன்றிய எண்ணான்கு பொருளுங்
கண்ணிய புறனே நானான்கென்ப” என்கிறது. இதில் கவனிக்க வேண்டியது ‘பண்ணை’ என்ற வார்த்தைப் பிரயோகம். ‘பண்ணை’ என்ற சொல்லுக்கு விளையாட்டு என்றொரு பொருளுண்டு. பேராசிரியர் இதற்கு ‘நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கேட்டுங் காமம் நுகரும் இன்ப  விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்’ என்று விளக்கமளிக்கிறார். ‘இன்ப விளையாட்டு’ ‘நாடகம்’ ஆகியவற்றைக் குறிக்கும்படி ‘பண்ணை’ என்ற சொல் இல்லை. வெறுமனே விளையாட்டு என்று பொருள் வைத்துக்கொண்டால் இவ்விடத்தில் அக புற உலகுகளிடையே நிகழும் விளையாட்டு என்று அர்த்தமாகிறது. கூட்டம் என்ற பொருளையும் ‘பண்ணை’ என்ற சொல் தருகிறது. ஆக, அக-புற உலகுகளின் விளையாட்டினால் கூட்டமாகத் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் (எண்ணான்கு 8 x 4= 32) ஒன்றுடன் ஒன்று இணைந்த விதத்தில் பதினாறு (நானான்கு 4 x 4) வகையாக வெளிப்படுத்தலாம் என்றே இங்கே அர்த்தமாகிறது.

இங்கு விளையாட்டு எவ்வெவற்றுக்கிடையில் நிகழ்கிறது? சுவைக்கப்படும் பொருள், சுவைக்கும் பொறியுணர்வு, மனதில் நிகழ்கின்ற குறிப்பு, குறிப்பினால் உடலில் தோன்றுகிற வெளிப்பாடு (சத்துவம் அல்லது விறல்) இவைகளுக்கிடையிலேயே விளையாட்டு நிகழ்கிறது. எட்டு சுவைகள் மேற்கண்ட நான்கின் விளையாட்டிற்கு உட்படுத்தப்படும்போது அவை இழைகள் பிரிந்து முப்பத்திரண்டாய் பகுக்கப்படலாம். 

முப்பத்திரண்டு உட்கூறுகளும் பதினாறு தூல வெளிப்பாடுகளாக இருக்கும் எனும்போது தொல்காப்பியரின் அளக்கும் திறன் வெளிப்படுகிறது. சுவைக்கப்படும் பொருளும், பொறியும் இணைந்தால்தான் சுவை; குறிப்பு சத்துவமாக உடலில் வெளிப்பட்டாலன்றி குறிப்பை அறிய வழியில்லை. இவ்வாறாக பதினாறாக வெளிப்படும் முப்பதிரண்டு பொருள்களுக்கும் பெயரிட்டவாறு மெய்ப்பாட்டியல் நகர்கிறது.  இங்கு கடைசியாகப் பெயரிடப்படுவது குறிப்பு என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

இப்போது மெய்ப்பாட்டியல் மொழியின் செயல்பாடுகளை வரிசைப்படுத்துவதை தொகுத்துக்கொள்ளலாம். 
  1. தலைச்சூத்திரம் அகபுற உலக உறவுகளின் விளையாட்டை முன்வைத்து அதற்கு முப்பத்திரண்டு உட்கூறுகளும் பதினாறு வெளிப்பாடுகளும் உண்டென்கிறது. இங்கே மொழி என்பது உட்கூறுகளுடன் உறவுகளுடைய ஒரு ஒழுங்கமைப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
  2. பல்வேறு தலைப்புகளின் கீழ் சுவைகள் / குறிப்புகள் பகுக்கப்பட்டு அவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும் உறவுகளும் பெயரிடுதலின் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றன.
  3. இந்த ஒழுங்கமைப்பின் கீழ் வராத மெய்ப்பாடுகள் யாவை என்று பட்டியலிடப்படுகிறது.

இதில் மொழி பெயரிடவே அதிகமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எவருக்கும் எளிதில் புரியும். பெயரிடுதல் என்ற செயல் அறிவியல்பூர்வமான எந்தவொரு ஒழுங்கமைப்பையும் கட்டமைப்பதற்கான முதற்படியாகும். பெயரிடுதல் தூலமான நிகழ்வு சார்ந்தே நிகழ்கிறது; மேலும் அது ஒரு சமூகத் தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலேயே வெளிப்படுகிறது. அளக்க, நிறுத்துப் பார்க்க, பகுக்க, வேறுபடுத்த, ஒப்புமைப்படுத்த பெயரிடுதல் அத்தியாவசியமானதாகும். சுருங்கச் சொன்னால் பெயரிடுதல் ஒரு தொழில்நுட்பம். 

இனி மெய்ப்பாட்டியலை முன்வைத்து நாம் விவாதிக்க வேண்டியது ஒரே ஒரு வாக்கியத்தைதான்; பெயரிடுதல் என்பது ஒரு தொழில்நுட்பம், மெய்ப்பாட்டியலில் பெயரிடப்படுவது குறிப்பு.

உண்மையில் குறிப்பெனும் மன நிகழ்வு பற்றிய உன்னிப்பான கவனத்தை நாம் நம் சமகால வாழ்வில் கொண்டிருக்கவில்லை என்பதே மெய்ப்பாட்டியல் நமக்கு உணர்த்துகின்ற செய்தியாகும். குறிப்புகளை உயிர்ப்பிப்பதே இலக்கியம். 

அடிக்குறிப்புகள்:

  1. ‘மேலும்’ இதழில் 1980 களின் இறுதில் வெளிவந்த இந்தக்கட்டுரையின் மெலிதாக திருத்தப்பட்ட பதிப்பு இது.
  2. தொல்காப்பியம் பற்றி நான் எழுதியுள்ள இதர கட்டுரைகளுக்கான சில அடிப்படைகள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன.   
துணை நூற்பட்டியல்
  1. பேராசிரியர், 1951. தொல்காப்பியம், பொருளதிகாரம் திருநெல்வேலி, கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
  2. Karl Marx and Frederick Engels, 1845- 47 The German Ideology, Collected Works, Moscow: Progress Publishers.
  3. Robert Caldwell, 1956.  A comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. Madras: University of Madras 
  4. David Silverman and Brian Torode, 1980. The Material World, Some theories of language and its limits. London, Boston and Henley, Routledge & Kegan Paul
  5. Anthony Wilden, 1984. System and structure Essays in communication and exchange. New York: Towistock Publications. 
  6. Voloshinov, V. 1973. Marxism and the Philosophy of Language. New York: Seminar Press
  7. Jaques Derrida. 1977. Of Grammatology. Baltimore : John Hopkins University Press 





No comments: