என்னால் எந்த நேரத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு முகத்தை என் மனக்கண்ணின் முன் கொண்டுவர முடியுமென்றால் அது பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட்டின் முகம்தான். இத்தனைக்கும் அவர் எனக்கு கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் அல்லர். நான் திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் எண்பதுகளில் ஆங்கில இலக்கிய மாணவனாய் இருந்த காலத்தில் எஸ்.ஆல்பர்ட் ஜமால் முகம்மது கல்லூரியில் ஆங்கில பேராசிரியராய் பணியாற்றிக்கொண்டிருந்தார். எனக்கு ஆல்பர்ட் என்ற பெயரில் இன்னொரு பேராசிரியர் (டி.ஆல்பர்ட்) ஜோசஃப் கல்லூரியில் இருந்தார்; அவரும் எனக்கு நெருக்கமானவரும் பிரியத்துக்குரியவரும் கூட. பேராசிரியர் டி.ஆல்பர்ட் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கு வழிகாட்டியாகவும் இருந்தார். ஆனால் டி.ஆல்பர்ட்டின் முகம் என் நினைவுக்கு வருவதேயில்லை. பல முறை வலிந்து டி.ஆல்பர்ட்டின் முகத்தை என் மனதின் முன் கொண்டுவர முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். காலம் நினைவின் பதிவுகளை பிரியத்தினைக் கொண்டே செதுக்குகிறது.
திருச்சியில் படிப்பு முடிந்த பின்பு கடந்த இருபத்தைந்து வருடங்களில் நான் எஸ்.ஆல்பர்ட்டினை ஓரிரு சந்தர்ப்பங்களில்தான் சந்தித்திருப்பேன்; ஓரிரு முறைகள்தான் தொலைபேசியில் உரையாடியிருப்பேன். ஆனால் அவர் என்றுமே என்னுடன் இருப்பதான உணர்வினை இழந்ததில்லை. ஏனெனில் என்னுடைய அக உரையாடல்கள் அனைத்துமே எஸ்.ஆல்பர்ட்டின் முகத்தை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றன. நான் எழுதும் கைப்பிரதிகள் அனைத்துமே எஸ்.ஆல்பர்ட் இவற்றை வாசிக்கக்கூடும், அவர் என்ன சொல்வாரோ என்ற பாவனைகளை உந்துசக்திகளாகக் கொண்டிருக்கின்றன. எஸ்.ஆல்பர்ட் என் அக உலகின் குருமுகமாய் மாறிய மாயாஜாலத்தின் வழித்தடங்கள் அத்தனையும் என் நினைவில் இல்லை.
எஸ்.ஆல்பர்ட்டின் மாணவ நண்பர்களிலேயே அவருக்கு மிகவும் பிரியமானவன் நான்தான் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. சமீபத்தில் என் நண்பனும் எழுத்தாளனுமான இமையம், “எஸ்.ஆல்பர்ட் இல்லாவிட்டால் இமையம் என்றொரு எழுத்தாளன் இல்லை” என்று ஒரு தொலைபேசி உரையாடலின்போது முழங்கினான். சினிமா இயக்குநர்களாக இருக்கும் நண்பர்கள் ஜெர்ரியும் ஜேடியும் கூட இமையத்தைப் போலவே சொல்லக்கூடும். ஏன், எஸ்.ஆல்பர்ட்டோடு தன் வாழ்வில் ஒரு முறை தொடர்பு ஏற்பட்டவர்கள் அனைவருமே எஸ்.ஆல்பர்ட்டின் பிரியத்திற்கு தாங்களே மிகவும் அதிகமாய் பாத்திரப்பட்டவர்கள் என்று முச்சந்தியில் அறிவிக்கக்கூடும்; அது எஸ்.ஆல்பர்ட்டின் விசேஷம். அவர் எல்லையற்ற அன்புடன் பிறரிடம் உரையாடக்கூடியவராக இருந்து வருகிறார்.
கெட்டியான கண்ணாடிக்குள் காருண்யத்தில் பிரகாசிக்கும் எஸ்.ஆல்பர்ட்டின் அகன்ற விழிகளில் அவருடைய உதடுகளின் சுழித்த புன்னகை எளிதில் தொற்றும். குள்ளமான உருவம், தோளில் என்றும் அகலாத ஜோல்னாப் பை என்றிருக்கும் அவரை ஒரு தாட்டியான பெண் எளிதாக தன் ஒக்கலில் இடுக்கிக்கொள்ளலாம் என்று தோன்றும். மென்மையான ஆனால் உணர்ச்சிகரமான குரலில் பேசும் எஸ்.ஆல்பர்ட் தன் குரலை சற்று அழுத்திப்பேசினார் என்றால் க.பூரணசந்திரன் முதல் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஆங்கில இலக்கியம் பயிலும் முரட்டு மாணவர்கள் வரை எல்லோரும் அவரிடம் அடங்கிப்போய்விடுவதை நான் கவனித்திருக்கிறேன். அவருடைய அந்த சிறிய உருவத்திற்குள் பண்பும், கனிவும், நேர்மையும், அபாரமான இலக்கிய ஞானமும் உடைய பேராளுமை ஒன்று வீற்றிருக்கிறது என்பதை எவரும் கவனிக்காமல் இருக்கமுடியாது.
எஸ்.ஆல்பர்ட் அதிகமும் எழுதியவரில்லை. ‘இல்லாத கிழவியின் கதை’ என்ற அவருடைய நான்கு வரிக் கவிதையை நகுலன் தன் ‘நாய்கள்’ நாவலின் முகப்பாய் எடுத்தாண்டிருக்கிறார். திரைப்பட ரசனை குறித்து எஸ்.ஆல்பர்ட் எழுதிய சிறிய கையேடு இன்றைக்கும் தன் சரளமான நடையாலும் தெளிவான சிந்தனையாலும் நிகரற்றதாக இருக்கிறது. அவர் எழுதிய சொற்ப கட்டுரைகளை தொகுப்பாக வாசிக்கும் பாக்கியம் தமிழ் உலகிற்கு இன்னும் வாய்க்கப் பெறவில்லை.
உண்மையில், தமிழ் சிற்றிதழ் இலக்கிய வாய்மொழி மரபின் பிதாமகர் எஸ்.ஆல்பர்ட் ஆவார். திருச்சி மெயின்கார்ட் கேட் ரயிலடியில் வாரம்தோறும் கூடும் ‘திருச்சி வாசகர் வட்ட’ சந்திப்புகளில், தேநீர் கடைகளில், திரைப்படசங்க திரையிடல்களில், எண்ணற்ற கருத்தரங்குகளில், இலக்கிய பயிற்சி பட்டறைகளில், திருச்சி கோரிக்குளம் சந்தில் இருந்த அவருடைய வீட்டில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் என கூடியவர்களின் எண்ணிக்கையைப் பற்றியோ இடத்தின் கௌரவத்தைப் பற்றியோ கவலையே படாமல் தேர்ந்த கர்மயோகியைப் போல எஸ்.ஆல்பர்ட் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். சூடான கோப்பை தேநீரும் சிகரெட்டும் போதும் அவருக்கு. ஞானக்கூத்தனின் ‘சூளைச் செங்கலில் ஒரு செங்கல் சரிகிறது’ என்ற ஒற்றை கவிதை வரியை எஸ்.ஆல்பர்ட் இரண்டரை மணி நேரம் விளக்கம் சொல்லி ஆற்றிய உரையினை கேட்டபோது பெரியவாய்ச்சான் பிள்ளையின் மறுவடிவம் இவர் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். டி.எஸ். எலியட்டின் ‘ப்ருஃப்ராக்கின் காதல் பாடல்’ கவிதையைப் பற்றிய எஸ்.ஆல்பர்ட்டின் உரையை நான் கேட்டிருக்காவிடில் ‘மேஜையில் கிடக்கும் மயக்கமூட்டப்பட்ட நோயாளியைப் போன்ற சாயுங் காலம்’ எனக்கு அனுபவமாய் பாத்தியமாகியிருக்காது. மிகைல் பக்தினை வாசிப்பதற்கு முன்பே எஸ்.ஆல்பர்ட்டின் மூலமாக தாஸ்தோவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதார்கள்’ ஏன் உலகின் தலைசிறந்த நாவல் என்று எனக்குத் தெரிந்திருந்தது. சத்யஜித் ரேயின் ‘சாருலதா’வும், ‘சதுரங்க சூதாடிகளும்’ சினிமாவாக என்ன விதமான கலைச் சாதனைகள் என்று எஸ்.ஆல்பர்ட்டின் உரையின்றி நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருச்சி செயிண்ட் பால் செமினரியில் அஷிஸ் நந்தியுடன் சேர்ந்து ஆல்பர்ட் நடத்திய மகாத்மா காந்தி கருத்தரங்கு என்னுடைய அரசியல் விழுமியங்களின் அடிப்படைகளை அமைத்துக்கொள்ள உதவியது.
ஃப்ரெஞ்சுக் கவி மல்லார்மேயின் கவிதைகளை வாசித்துவிட்டு டி.எஸ்.எலியட்டை விட உயர்ந்த கவிதையின் நவீன ரகமொன்று இருக்கிறது என்று எஸ்.ஆல்பர்ட்டிடம் சொல்லாவிட்டால் தலையே வெடித்து சுக்கு நூறாகிவிடும் எனத் தோன்றியதால் ஒரு நாள் ஓடிப் போய் திருச்சி கோரிக்குளம் சந்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த அவருடைய வீட்டில் நின்றிருக்கிறேன். அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஆல்பர்ட் கதவைத் திறக்கும் வரை கூட பொறுமையில்லாமல் மல்லார்மேயின் கவிதையை உரக்கச் சொல்லியபடியே நின்றிருந்திருக்கிறேன். ஆல்பர்ட் கதவைத் திறந்தவுடனே ‘மல்லார்மே, மல்லார்மே’ என்று கிட்டத்தட்ட கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன். நீல நிற கட்டம்போட்ட லுங்கியும் முண்டா பனியனும் அணிந்து தூக்கத்திலிருந்து எழுந்து வந்த ஆல்பர்ட்டிற்கு என்னுடைய உற்சாகமும் பதற்றமும் எந்த வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இயல்பாக மல்லார்மேயின் கவிதைகளைப் பற்றி அவர் உரையாட ஆரம்பித்தார். இரண்டு மணி நேரம் கழித்து ‘டீ குடிக்கிறாயா?’ என அவர் என்னிடம் கேட்டபோதுதான் எனக்கு சுவாதீனம் திரும்பியது. ‘மல்லார்மே சம்பவம்’ என்று என் திருச்சி நண்பர்கள் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து வேறொரு நண்பர் மூலம் ஆல்பர்ட் ‘இந்தப் பையன் எப்படி பிழைக்கப்போகிறானோ’ என்று கவலைப்பட்டதாக அறிந்தேன்.
என்னைப் பற்றிய ஆல்பர்ட்டின் கவலை மிகவும் உண்மையானதாக இருந்திருக்க வேண்டும்; அவர் என் வாழ்க்கை திசை திரும்பிப் போய்விடாமல் ஒரு முறை காப்பாற்றினார். திருச்சியில் பாதல் சர்க்கார் நாடக விழாவும் கருத்தரங்கு ஒன்றும் ஒரு சேர எண்பதுகளில் ஆல்பர்ட்டின் ஏற்பாட்டில் நடைபெற்றன. அதில் நான் அகஸ்டோ போவாலின் எதிர்ப்பரங்கு குறித்த கட்டுரை ஒன்றை வாசித்தேன். மாணவர்களும் நாடகக்காரர்களும் புரட்சிகர இயக்கத் தோழர்கள் பலரும் கலந்து கொண்ட நிகழ்வு அது. நண்பர்கள் சிலர் கல்லூரி புல்தரை மைதானத்தில் ரகசிய நள்ளிரவுக் கூட்டம் ஒன்று நடக்கவிருப்பதாகவும் நாடக விழா பங்கேற்பாளர்கள் பலரும் வருவதாகவும் நானும் கலந்துகொள்ள வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். நானும் என்ன ஏது என்று தெரியாமலேயே கூட்டத்திற்குப் போனேன். அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலாக எஸ்.என்.நாகராஜனை சந்தித்தேன். சந்தித்தேன் என்று சொல்வது கூட தவறு; அவர் உரையாற்றினார் நான் கூட்டத்தோடு கூட்டமாய் உட்கார்ந்து கேட்டேன். ஆனால் என்ன மாதிரியான உரை அது! என் வாழ்நாளிலேயே அது போல நாடி நரம்புகளில் வெறியேற்றும் ஒரு உரையை நான் கேட்டதில்லை. எஸ்.என்.நாகராஜன் அந்தப் பொழுதில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று அறைகூவல் விட்டிருந்தால் கூடியிருந்த அந்த இளைஞர் குழாம் அப்படியே அவர் பின்னால் ஓடியிருக்கும். அன்றைக்கு அந்த நள்ளிரவுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல இளைஞர்கள் ஏதேதோ புரட்சிகர இயக்கங்களில் சேர்ந்தார்கள். இன்றைக்கு அவர்களெல்லாம் காணாமல் போனவர்களின் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதைத்தவிர என்ன ஆனார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. இன்று நானும் அப்படிக் காணாமல் போகாமல் இருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் எஸ்.ஆல்பர்ட்தான்; பாதல் சர்க்கார் நாடக விழாவின் போது அவர்தான் என் கைகளைப் பிடித்து கூட்டிக்கொண்டு போய் மேற்படிப்பு படிக்கிற வழியைப் பார் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
காந்தியவாதி ஒருவரை ஆல்பர்ட்டுடன் நான் சந்தித்ததும் என் நினைவில் நன்றாகத் தங்கியிருக்கிறது. காந்தியவாதியின் பெயர் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஆல்பர்ட் அந்த காந்தியவாதிக்குத்தான் வாழ்க்கையில் எவ்வளவு திருப்தி என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். நிலைகொள்ளாமல் கொந்தளிக்கும் மனநிலையுடைய எனக்கு ஆழ்ந்த திருப்தியுடன் வாழ்க்கையை எதிர்கொள்வதன் முக்கியத்துவம் ஆல்பர்ட் மூலமாகவே விழுமியமாயிற்று.
ஆல்பர்ட் தூத்துக்குடியில் வசிக்கும் தன் பாட்டி எந்தவித தயக்கங்களும் இன்றி அன்பை வெளிப்படுத்துவதைப் பற்றி வெகுவாக சிலாகித்துப் பேசுவார். அவர் சிறுவனாக இருந்தபோது பாட்டியைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் ‘எலேய் வந்தியா, வந்தியா, சாப்ட்டியா சாப்டியா’ என்று பாட்டி ஆயிரம் முறை கேட்பாள் என வியந்து வியந்து சொல்லுவார். சிறு வயதில் எளிய வறிய குடும்பத்திலிருந்து வந்த அவர் நிலக்கடலை விற்கும் தள்ளுவண்டியில் படுத்துக்கொண்டு ஆனந்தமாய் காலாட்டிகொண்டு பயணம் செய்ததை அவர் பேருவுகையுடன் விவரிப்பார். அவர் ஏன் நாவல் எழுதவில்லை என எனக்கு அவ்வபோது கேள்வி எழும்.
ஆல்பர்ட் ஆழ்ந்த இறைநம்பிக்கையும் கிறித்துவில் தோய்ந்த உள்ளத்தையும் கொண்டவராகத்தான் இருக்க வேண்டும் என்பது என் ரகசிய கண்டுபிடிப்பு; அவர் எந்தக்கணத்திலும் அதை வெளிப்படுத்தியதே இல்லை.
கடந்த இருபத்தைந்து வருட கால இடையறாத ஆசிரியர் பணியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி கற்றுத்தருபவனாகவும், அவர்களின் சிந்தனை உலகை வடிவமைப்பவனாகவும், அவர்களின் ஆளுமைகளை செதுக்குபவனாகவும் நான் இருந்து வருகிறேன். என் மாணவ மாணவியரில் பத்து சதவீதத்தினரேனும் படித்து முடித்து சென்ற பிறகும் நள்ளிரவிலும் கூட என் வீட்டுக்கதவைத் தட்டி உதவி கேட்கத் தயங்காதவர்களாய் இருக்கிறார்கள், நான் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய தோழனாய் இருக்கிறேன் என்றால் அது பேராசிரியர் ஆல்பர்ட் அவர்களின் குருமுகத்தின் வழி இறங்குகின்ற அருள்கொடை.
No comments:
Post a Comment