Friday, December 5, 2014

சங்க இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியல்

சங்க இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியல்

    மனிதனுக்கும் சமூகம், இயற்கை, பண்பாடு, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கும் இடையில் மொழிச்செயல்பாட்டினால் உருவாகும் உறவு, அவ்வுறவு சார்ந்த கண்ணோட்டம், அக்கண்ணோட்டம் சார்ந்த கோட்பாடுகள், அவ்வகைக் கோட்பாடுகளை தொடர்ந்து உருவாகும் விதிகள், அவ்விதிகளைச் சோதித்தறிய கற்றுத்தரப்படும் வகைமைகள் இவையனைத்தும் இணைந்து ஒரு காலகட்டத்தின் அறிவு ஒழுங்கமைப்பினை உருவாக்குகின்றன. தத்துவத்தில், லௌகீக வாழ்வில் இவை சமூகம் இயல்பாகத் தன் அங்கத்தினர்களுக்கு அளிக்கின்ற கல்வியின் மூலம் கருத்துருவத்தின் அடிப்படையில் பெறப்படுகின்றன; இலக்கியத்திலோ இவை மானுட விழுமியங்கள் சார்ந்து காலத்தின் கட்டாயத்தால் வெளிப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன. அறிவு ஒழுங்கமைப்புகள் அனைத்துமே மொழிக்கட்டுமானங்கள் என்பதோடு அவை மனித மனத்தின் நனவு நிலையிலும் நனவற்ற நிலையிலும் தனித்தனியாகவோ இணைந்தோ செயல்படுகின்றன என்பதனையும் சேர்த்தே நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு செயல்படுகின்ற அறிவு ஒழுங்கமைப்புகளின் அடிப்படை நிலைப்பாடுகளைத் தொகுத்தே அறிவுத்தோற்றவியல் ஆராய்ச்சி தொடங்குகின்றது.

    சங்க இலக்கியத்தினை மையகவனமாகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாராய்ச்சி இலக்கியத்தினை அணுகுவதற்கான புதிய நெறிமுறையொன்றைக் கற்றுத்தருவதாக அமையும்; அதே நேரத்தில் இந்த மூலம் பெறப்படும் முடிவுகள் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், அரசியல், சமூகவியல், தொடர்பியல் போன்ற பிறதுறைகளுக்கும் பயன்படுவதாக அமையும்.

    அறிவறிவு அல்லது அறிவுத்தோற்றவியல் என்று தமிழில் குறிக்கப்படுகின்ற epistemology-ஐ இலக்கியத்தில் காண விழைந்த முதல் தமிழ் நூலாக க.நாராயணனின் ‘தமிழர் அறிவுக்கோட்பாடு’ என்ற நூலினைச் சொல்லலாம். ஆனால் நாரயணனின் நூல் அறிவுத்தோற்றவியலை விளக்கிய அளவுக்கு பழந்தமிழ் இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியலை விளக்கவில்லை. இதறகு அடிப்படையான காரணம் நெறிமுறையில் ஏற்பட்ட கோளாறே ஆகும். நாராயணனின் நூல் ‘அறிவு’ என்ற சொல் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பிற சங்க இலக்கியங்களிலும் குறிப்பாக திருக்குறளிலும் எங்கெல்லாம் வருகிறது என்று பார்த்து, அவற்றை ‘அறிவு’ பற்றிச் சொல்லப்படுகின்ற கருத்துக்களோடு இணைத்து தமிழரின் அறிவுக்கோட்பாடு என தனக்கு வேண்டியதை மட்டும் உருவி எடுத்து தொகுப்பதாக உள்ளது. ஆகவே அடிப்படை நிலைப்பாடுகளை தொகுக்கின்ற பிரச்சினை எழவே இல்லை. இதற்கு மாறாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களின் அமைப்பாக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து அவற்றின் அறிவுத்தோற்றவியலை விளக்குவது என் நெறிமுறையாகிறது. இதற்கு சங்க இலக்கியத்தின் மையப்புள்ளியை நான் அடையாளம் காணவேண்டும்.

    சங்க இலக்கியங்களின் அமைப்பாக்கம் குறித்த இரண்டுவிதமான விளக்கங்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. ஒன்று தொல்காப்பியர் வரையறுத்து விளக்குகின்ற திணைக்கோட்பாடு. மற்றொன்று கைலாசபதி (1968) முன்வைக்கின்ற வய்மொழி வாய்பாட்டினால் பாட்டுகட்டுகின்ற முறை. கைலாசபதியின் ஆய்வினை அடிப்படையாக வைத்து சங்க இலக்கியத்தின் வாய்பாடுகளைத் தொகுத்து பின்னர் வாய்பாடுகளுக்கு அடங்கா விதிவிலக்குகளை பட்டியலிட்டு, மௌனங்கள், தொடர்ச்சியற்ற நிலைகள் ஆகியவற்றைக் கோட்பாட்டு பிரச்சினையாக்கி அறிவுத்தோற்றவியலை விளக்க முடியும் என்பது கருத்தளவில் உண்மை. ஆனால் அந்த நெறிமுறை எனக்கு உகந்ததல்ல.

    தொல்காப்பியத்தின் திணைக்கோட்பாட்டினை வைத்தே சங்க இலக்கிய அமைப்பாக்கத்தின் மையப்புள்ளியைக் காணவேண்டியிருக்கிறது. ஒருவகையில் இக்கட்டுரை சங்க இலக்கியத்தைச் சான்றுகளாகக் கொண்டு தொல்காப்பியத்தை திரும்பப்படிப்பதாக அமைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    எந்த மையத்தைச் சுற்றி சங்க இலக்கியச் சொல்லாடல்கள் சுழல்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்.

விதிவிலக்குகள் விதியை சரியாகக் கூறுமாதலால், முதல் கேள்வி: திணைமயங்கிய பாடல்களை தொல்காப்பியம் எப்படி எதிர்கொள்கிறது? திணைமயக்கம் எவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது?
உள்ளுறையுவமமே செய்யுள்களுக்கும் பொருளிலக்கணத்திற்குஞ் சிறந்ததென்று ஏன் கருதப்படுகிறது?
அகத்திணையியலுக்கும் புறத்திணையியலுக்குமிடையில் அமைப்பாக்கரீதியில் உண்டாக்கப்படும் உறவின் தாத்பரியம் என்ன?
பொருளாக்கம் நிகழ்வது குறித்து தொல்காப்பியரின் அனுமானம் என்ன?

    முதலில் திணைமயக்கத்தை ஆராய்ந்துவிட்டு பின் விதியை அணுகுவோம். பாடல்களுக்கு இலக்கணம் முதல், உரி, கரு, ஆகியவற்றைச் சொல்லி அவற்றின் கூடுதல் குறைவு இணைவுகளால் அமைப்பாக்கம் பெறுவதை விளக்குகின்ற தொல்காப்பியர் திணைமயங்குதலை பின்வருமாறு விளக்குகிறார்:

‘திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப
                புலனன் குணர்ந்த புலமை யோரே’ (அகத்திணையியல்)

    ஒரு நிலத்தில் நிகழக்கூடியதாக வறையறுக்கப்பட்ட ஒழுக்கம் வேறொரு நிலத்தில் நிகழ்வதால் அதை நீக்கிவிடலாகாது என்று சொல்கிற தொல்காப்பியர் நில ஒருங்கே மயங்குதல் இல்லாதது என்றும் சொல்கிறார். இதன் அர்த்தம் என்ன?

    ஒரு பாடலில் ஒரு உரிப்பொருளோடு இன்னொரு உரிப்பொருள் மயங்கலாம் ஓர் உரிப்பொருள் இருக்கவேண்டிய இடத்தில் இன்னொரு உரிப்பொருள் உட்கார்ந்திருக்கலாம். இது போலவே காலம் மயங்கலாம் கருப்பொருள் மயங்கலாம் ஆனால் நிலம் மயங்காது. இந்த இடத்தில் திணைகள் நிலத்தின் பெயரால் குறிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது முதல், உரி, கரு மூன்றும் இணைந்ததுதான் திணை எனினும், அவற்றுள் மயங்காது நிற்கின்ற நிலத்தின் பெயரினால் இவற்றிற்கிடையேயுள்ள உறவு பெயரிடப்பட்டிருக்கிறது என்பது இதனால் தெரியவருகிறது.

    ஆனால் திணையறிதல் என்பது கட்டகடைசியாக உரிப்பொருளை அறிவதே ஆகும். உதாரணமாக:

‘அன்னாய் வாழிவேண் டன்னை யென்றோழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி யாயியென்ன தூஉ
மறிய வாகுமோ மற்றே
முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே.’
(ஐங்குறுநூறு-344)

என்ற ஐங்குறுநூறு பாட்டினை நச்சினார்க்கினியர் ‘குறிஞ்சிக்கண் மருதம் நிகழந்தன’ என்று குறிப்பிடுகிறார். நிகழ்ந்தது மருதம் என்று சொல்லும்போது ‘மருதம்’ என்ற சொல் உரிப்பொருளை அதாவது மனித உணர்ச்சியின் நிகழ்வைக் குறிப்பதாகவே அமைகிறது. ‘இஃது இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்’ என விளக்கப்படுகிறது. மனித உணர்ச்சி நிகழ்வின் முக்கியத்துவத்தை தொல்காப்பியர் உணர்ந்ததாலேயே எந்தவொரு நிலத்தும் எந்தவொரு ஒழுக்கமும் நிகழலாம் என்ற யதார்த்தத்தை அங்கீகரிக்கிறார். இதனாலேயே உரிப்பொருளை மூன்றினும் சிறப்பித்துச் சொல்கிற சூத்திரமும் விதியாகத் தரப்படுகிறது.

‘முதல் கருவுரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந்தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை’
(அகத்திணையியல்: 3)

    ஆகையால் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியம் துணைகொண்டு திணையறிகின்ற வாசகன் உரிபொருளையே (அதாவது உணர்ச்சியையே) மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை ஆகிய நிலங்களின் பெயரால் உவமிக்கின்றான். நிலம் மயங்காது என்று கூறிவிட்டதானால் நிலத்தின் பெயர் நிலத்தின் பெயராகவே இருக்க குறிக்கப்படும் பொருளோ மனித உணர்ச்சி நிகழ்வாக இருக்கிறது. ஆக இங்கே புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவற்றின் நிமித்தம் உவமைகளாகவும் உவமிக்கப்படும் பொருள்களாகவும் நிலங்களின் பெயர்களே செயல்படுகின்றன. இதைத்தானே தொல்காப்பியரே ‘உள்ளுறை உவமம்’ என்று சொல்கிறார்?

    இப்படிப்பார்க்கையில் சங்க இலக்கியத்தின் அதை ஒழுங்கமைப்புக்கு உட்படுத்துகிற தொல்காப்பியத்தின் மையப்புள்ளி தென்பட ஆரம்பிக்கிறது. அதாவது தான் இலக்கணம் வகுக்கின்ற இலக்க்கியம் இயங்குகின்ற அதே முறையில் அதே தளத்தில் தொலகாப்பியத்தின் மொழி இயங்குகிறது. நவீன அமைப்பியல் விமர்சகன் எதைச் செய்ய ஆசைப்படுகிறானோ அதைத் தொல்காப்பியர் ஏற்கனவே தெளிவாக நிறைவேற்றிவிட்டார். விமர்சனமும் இலக்கணமுமாய் விளங்குகின்ற தொல்காப்பியம் தானும்  இலக்கியமாய் பரிணமிக்கின்றது. தொல்காப்பியத்திற்கும் சங்க படைப்பிலக்கியத்திற்குமிடையில் இவ்வாறாக வெளிப்பட்டு நிற்கும் உறவு விமர்சனத்திற்கும் இலக்கியத்திற்குமிடையிலுள்ள உறவிலுள்ள சிக்கல்களை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது.

    இதுவரை, மனித உணர்ச்சி நிகழ்வே கவிதையின் மையம் என்பத்னையும் அவ்வுணர்ச்சியின் வெளிப்பாட்டு தேவைகளுக்கேற்ப கவிஞன் நிலம். பொழுது, மா, மரம், புள், பறை, தொழில், யாழ், பூ, நீர், ஊர், மாக்கள், தலைமக்கள், ஆகியவற்றைச் சுட்டுகின்ற மொழியினால் வடிவமைத்துகொள்ளலாம் என்று அறிந்தோம். கவிஞனின் மொழி உள்ளுறை உவமம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நிலையை அடைய என்னென்ன செயல்முறை விதிகள் தொழில்படுகின்றன என்பதை அறிந்தாலே இனி அறிவுத்தோற்றவியலை விவரிக்க இயலும்.

    உணர்ச்சியை அனுபவித்தால் மட்டும் போதாது; அதை வெளிப்படுத்தவும் வேண்டும். அக உணர்ச்சியின் நுட்பமான கூறுகளை, நுண்ணிய இழைகளைப் பிடித்திழுத்து வெளிப்படுத்தி நிற்பது வாசகனுக்கும் புலப்படுத்தப்படவேண்டும். இதற்கான செயல்முறை விதியாகவே அகப்பாடல்களில் தலைவன் தலைவி பெயர் சொல்லப்படக்கூடாது என்றதும் புரிந்துகொள்ளப்படவேண்டும். பல வியாக்கியானங்களில் தலைவன் தலைவி ஆகியோர் லட்சிய குணநலன்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றபடிக்கு பொருள்கொள்ளப்பட்டமையால் பலர் அக இலக்கிய பாடல்கள் உயர் வகுப்பினரின் பாடல்கள் மட்டுமே என்று கருதுகின்றனர். இது தவறான முடிவுக்கு இட்டுச் செல்வதாகும்.

    தலைவன் தலைவியின் பெயர்கள் தவிர்க்கப்படுவதால் உணர்ச்சி தனியாளுடையது என்பது மறைந்து வாசகர்களின் பொது அனுபவத்திற்கு விரிய இடம் கொடுக்கின்ற வெளியாக கவிதை மாறுகிறது. இனி உணர்ச்சியின் நுண்ணிய இழையைத் துல்லியமாக வெளிச் சொல்லியாக வேண்டும். இந்த வேலையை உள்ளுறை உவமம் என்ற உத்தி செய்கிறது. எனவேதான் தொல்காப்பியர்

‘உள்ளுறை உவமம் ஏனை உவமெனத்
தள்ள தாகும் திணையுணர் வகையே’

என்று அகத்திணையியல் நான்காம் சூத்திரத்தில் எழுதுகிறார்.

    சிறப்பு, நலன், காதல், வலி ஆகியவற்றை பண்பு நிலைக்களமாக்கி இயற்கைப் பொருளை உற்று நோக்குதல் மூலம் அறிந்து உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் ஒன்றாக்குதல் உள்ளுறை உவமமாகும். இயற்கைப் பொருளை அறிந்தவர்கள் உவமைகளை உணர்வதன் மூலம் உணர்ச்சியின் நுண்ணிழைகளைப் பற்றிக்கொள்ள முடிகிறது. உதாரணமாக கலித்தொகையில் ஒரு பாடல்:

“விரிகதிர் மண்டிலம் விசுப் பூர்தரப்
புரிதல் தளைட் டவிழ்ந்த பூவங்கபுணர்ந்தாடி
வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட்
டுனிச்சிறந்திழ்தரும் கண்ணினீ ரறல்வார
விளிதமர் காதலனிறைஞ்சித்தான்னடி சேர்பு
நனி விரைந்தளிதவி நகுவண் முகம் போலப்
பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடூஉந்தண்டுறை நல்லூர”
(கலித்தொகை)

    இங்கே ஒரு காட்சி மட்டும் விவரிக்கப்படுகிறது. உதிக்கின்ற இளமையான சூரியனின் விரியுங்கதிர்கள் பரவாமல் விசும்பில் நிற்கின்ற அதிகாலை நேரத்தே, அந்தச் செழுமையான பொய்கையில், மொட்டவிழ்ந்து நெகிழ்ந்த மலர்களிடையே தேனாகியக் கள்ளை உண்டு, நுகர்ந்து, விளையாடி அத்னாலும் அமைதி கொள்ளாமல் வண்டு அலைந்து கொண்டிருந்தபோது ஒற்றைத் தாமரை பச்சைபசேலென்ற இலைகளூடே, வடியாமல் நின்று வருத்தத்தையளிக்கிற பனித்துளியை ஏந்தியவாறு ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தது என்ற காட்சி மட்டுமே கொடுக்கப்படுகிறது. இது எதனுடன் உவமிக்கப்படுகிறது என்று சொல்லப்படவில்லை. சொல்லப்படுகின்ற காலம் (அதிகாலை) மருதத்திணைக்கு உரியதாகையால் ஊடலும் ஊடல் நிமித்தமும் பாடல் பெறுகிறது என்று அறியலாம். ஆகவே விவரிக்கப்படுகின்ற காட்சி பரத்தையரிடையே மயங்கிக் கிடக்கின்ற தலைவனையும் சுற்றத்தாரிடமிருந்து எந்தவித அனுதாபத்தையும் பெறாமல் ஏங்கி நிற்கின்ற தலைவியையும் குறிப்பதாக அமைகிறது. ஒப்புமையை குறிக்கின்ற சொற்கள் கொடுக்காமல் விடப்பட்டுவிடுவதால் கருத்துப்புலப்படுத்தத்திற்கான நோக்கங்கள் இல்லாத தாமரை, பொய்கை, வண்டு, பனித்துளி போன்ற இயற்கைப் பொருட்கள் பொது அனுபவத்திற்கு விரிகின்ற, நுட்பமான உணர்ச்சிகளைத் தாங்கி நிற்கின்ற ஊடகங்கள் ஆகிவிடுகின்றன.

    அந்தரங்கமான தனிமனித அனுபவம் இயற்கையை ஊடகமாகக்கொண்டு பொது அனுபவத்திற்கு விரியவேண்டும் என்பதற்காக எடுத்துக்கொள்ளப்படும் இந்த அக்கறைகள் Particular is universal என்ற அறிவுத்தோற்றவியல் நிலைப்பாட்டினை உடையது. அந்தரங்கத்தின் அந்தரங்கத்தை கடைந்து செதுக்கி நுட்பமாக்கி இயற்கையின் மீது மொழியின் துணை கொண்டு ஏற்றும்போது, உலகே மனித மொழியாகிவிடுகிறது.  மொழி மனிதனுக்கும் இயற்கைக்கும் அல்லது மனிதனுக்கும் பொருளுலகுக்கும் அடிப்படையான உறவுகளை ஏற்படுத்திக்கொடுத்து புற உலகினை சுட்டியும் சுட்டாமலும் நிற்கிறது. புறஉலகு தன்னளவில் முழுமையானதாகவும் அதே சமயத்தில் மனித அர்த்தங்களை தாங்குகின்ற வல்லமையுடையதாகவும் விளங்குகின்றன. இதை கவிதையில் சாதிக்க இயற்கையின் குணங்களை நுட்பமாக ஆராயவும் உற்று நோக்கவும் மனிதனுக்குத் தெரியவேண்டும். இதற்குக் கடுமையான உழைப்பு தேவை.

    இந்த அறிவுத்தோற்றவியல் நிலைப்பாடு போர், சாகசம், வீரம் ஆகியவற்றை சிறப்பிக்கின்ற புற இலக்கியங்களை எந்தவகை அமைப்பாக்க உறவுகளுக்குள் கொண்டு வரும்? அகத்திணையியலுக்கும் புறத்திணையியலுக்கும் இடையில் தொல்காப்பியம் உருவாக்குகின்ற உறவுகளை பின்வருமாறு அட்டவணையிடலாம்.








    அகத்திணையியலில் மனித உணர்ச்சிக்கு இயற்கையின் ஒழுங்கமைப்பு (நிலம்) பெயராக்கப்பட்டதெனில் புறத்திணையியலில் உலகியல் வழக்கு அதாவது வரலாற்று சூழலில் தூலமாய் நிகழ்ந்தன தரம் பிரிக்கப்பட்டு நிகழும் காலம் சார்ந்தோ செயலின் தன்மை சார்ந்தோ பெயரிடப்படுகின்றன. உதாரணமாக ‘குறிஞ்சிக்கு வெட்சி புறமானது’ ஏனெனில் இரண்டிலும் களவு நிகழ்வதால் என்று சொல்லப்படுகிறது. இந்த உறவுபடுத்துதலில் மொழி இரு ஒழுங்கமைப்புகளுக்கும் பொருந்துமாறு இயங்கினாலும் இதிலுள்ள அடிப்படை வித்தியாசம் உணரப்படவேண்டும். ‘களவு’ என்ற பல அர்த்த சாத்தியப்பாடுகளைக் கொண்ட சொல் பொதுமைப்படுத்தப்பட்டு அதன் ஒப்புமை சூட்சுமப் பண்பு (analogous quality) அகத்திணையியலிலும், அதன் எண்ணிலக்க சூட்சுமப் பண்பு (digital quality) தூல நிகழ்வினை அளக்க புறத்திணையியலிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அகத்திணைப்பாடல்கள் அனைத்தும் ஒப்புமைக் கருத்துப்புலப்படுத்தம் (analog communication) என்றும் புறத்திணைப்பாடல்கள் அனைத்தும் எண்ணிலக்க கருத்துப்புலப்படுத்தம் (digital communication) என்றும் சொல்லலாம். மொழியின் இருவகைப் பண்புகளையும் துல்லியமாகப் பயன்படுத்தும் தொல்காப்பியம் ஒரே ஒழுங்கமைப்பினை (system) உருவாக்குவதன் மூலம் இருவகை அமைப்பியல் உறவுகளையும் (structural relations) அளந்துவிடுகிறது. அதாவது மனதில் நிகழ்கின்ற குறிப்பாகிய உணர்ச்சியை தூலமான பொருளின் மேல் ஏற்றி ஒப்புமைப்படுத்திச் சொல்வதன் மூலம் அக இலக்கியங்கள் இயங்குகின்றன என்றால் தூலமான வரலாற்று நிகழ்வினை மொழியினுள் அமைப்பதன் மூலம் புற இலக்கியங்கள் இயங்குகின்றன. இரண்டின் ஒழுங்கமைவுகளும் ஆனால் ஒன்றுதான்; அவற்றை உறவுபடுத்தி அளக்கும் முறைளே வேறுபாடானது. இவ்வகைத் தொடர்புபடுத்துதல்கள் மதிப்பீட்டு அக்கறைகள் உள்ளவையும் கூட. நிலத்தை வெற்றி கொள்கிற தலைவனது புகழைப்பாடும் வாகையின் அகம் நிலமற்ற பாலை என்பதைக் கவனத்தில் கொள்வது இம்மதிப்பீட்டு அக்கறைகளை அறிவுத்தோற்றவியல் நோக்கில் வெளிப்படுத்த உதவும். வெற்றிகளில் மிகவும் சிறப்பானதாகச் சொல்லப்படும் வெற்றி வலியும் வருத்தமுமின்றி இயல்பாக பெற்ற வெற்றியே ஆகும்.

    அதாவது புறத்திணை இலக்கியங்களும் தொடர்ந்து மனித வாழ்விற்கும் உணர்ச்சிகளுக்கும் முதலிடம் தருகின்றதே தவிர வீரம், போர், சாவு, மனித அழிவு ஆகியவற்றைச் சிறப்பித்துச் சொல்வதில்லை. இக்காரணத்தினாலேயே புற உலக நிகழ்வான போரின் பலவகைக்களும் பொறுப்பு தனிமனித செயல்களாக விளக்கப்படவேண்டுமென்றது. தனி மனித செயலாகப் பாடப்படும் புற இலக்கியங்கள் வாசகனால் இன்ன காரியம் இவரால் செய்யப்பட்டது என்று மட்டும்தான் புரிந்து கொள்ளப்படுமேயன்றி அக இலக்கியங்களைப் போல வாசகனின் சொந்த அனுபவமாக விரியாது என்பது மட்டுமல்ல பொருள்; விரியக்கூடாது என்ற நோக்கமும் பொருளாகும்.

    புற இலக்கியங்களுக்கும் அக இலக்கியங்களுக்கும் இவ்வாறு உருவாகின்ற உறவு மனித சிந்தனையின் மிக உன்னதமான வளர்ச்சியின் காரணமாகவே ஏற்பட்டிருக்க இயலும் என்பதை நாம் அவசியம் உணரவேண்டும். இதை விடுத்து தமிழர் வீரம், தமிழரின் போர்த்திறன், தமிழரின் இனப்பார்வை என்றெல்லாம் சங்க இலக்கியத்தை அணுகுவதும் ஆராதிப்பதும் திராவிட அரசியல் கருத்துருவங்களால் கட்டப்பட்டவையாகும். திராவிட அரசியல் கருத்துருவங்களுக்கு ஒரு வரலாற்றுத் தேவை இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை. தத்தம் மரபு வழிபட்டே பொருளாக்கம் நிகழும் என்பதை தொல்காப்பியர் கூறுவதை மனதில் கொண்டு திராவிட அரசியல் கருத்துவங்கள் புற இலக்கியங்களுக்கான அணுகுமுறையை தீர்மானித்ததை அங்கீகரிக்கின்ற அதே நேரத்தில் இன்றைய வரலாற்றுத்தேவை வேறு விதமான அணுகுமுறை என்பதையும் நாம் உணரவேண்டும். காஞ்சித்திணை ஏன் வீடுபேற்றினைப் பற்றி பேசுகிறது, பாடாண் திணை ஏன் மனிதனின் இழிவு நிலையை சுட்டிக்காண்பிப்பதாக அமைகிறது என்றும் ஏன் அவலச்சுவையே புற இலக்கியங்களில் மிகுதியாகக் காணக்கிடைக்கிறது என்பது பற்றியும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உணர்ச்சியை மையமாகக் கொண்டு சகமனிதன், இயற்கை, புற உலகு, ஆகியவற்றோடு மொழி செயல்பாட்டின் மூலம் மனிதன் கொள்கிற இயங்கியல் உறவினை அடிப்படை அறிவுத்தோற்றவியல் நிலைப்பாடாக அறியவரும்போது சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் நவீன வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து தமிழனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை சொல்லக்கூடும். அப்படிப்பார்க்கையில் அக புற ஒழுங்குகளை ஒரே சமயத்தில் எதிர்கொள்கிற நெடுநெல்வாடை போன்ற பாடல்கள் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, தமிழனின் உணர்வுகளை உயிர்ப்பிக்கின்ற நவீன கவிதைகளாக விளங்குகின்றன. என்னைப் பொறுத்தவரை நெடுநெல்வாடையே பத்துப்பாட்டில் மிகச் சிறந்த கவிதையாகும். இதைப் பற்றி தனிக்கட்டுரையில்தான் எழுத வேண்டும் இங்கே இடமில்லை.

    இவ்வாறு சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் அணுகும்போது கிடைக்கப்பெறுகிற முடிவுகள் பிற துறைகளுக்கும் உதவிகரமாக இருக்கக்கூடும்.

குறிப்புகள்

1. 1989 ஆம் ஆண்டு ‘மேலும்’ இதழில் வெளிவந்த கட்டுரையை மெலிதான திருத்தங்களுடன் இணைய வாசகர்களுக்காக இங்கே வெளியிடுகிறேன். இக்கட்டுரையின் பிரதியும் என்னிடத்தில் இருக்கவில்லை. பல தமிழ் இலக்கிய கல்விப்புல தொகுப்புகளில் இக்கட்டுரையை என்னுடைய அனுமதியின்றி பலரும் பதிப்பித்திருக்கின்றனர் என்று சமீபத்தில் நான் தெரிந்துகொண்டேன். பதிப்பித்தவர்கள் எனக்கு புத்தகங்களின் பிரதிகளையும்  அனுப்பித் தரவில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் முனைவர் சதீஷ் எனக்கு இந்தக் கட்டுரையின் பிரதியை தந்து உதவினார். அவருக்கு என் நன்றிகள் பல. இக்கட்டுரையைத் தொடர்ந்து சங்க இலக்கியங்கள் குறித்தும் தொல்காப்பியம் குறித்தும் பல கட்டுரைகளை நான் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒன்று ஒன்றாக இணையத்தில் தமிழில் வெளியிட இக்கட்டுரை ஒரு முகாந்திரம். ‘மேலும்’ இதழில் வெளிவந்த கட்டுரையில் இருந்த கடைசி சில பத்திகளை இந்தக்கட்டுரையில் தேவையில்லை என்று வெட்டிவிட்டேன்.
2. தொல்காப்பியம் குறிப்பிடுகிற இன்னொரு முக்கியமான கருத்தாக்கம் இறைச்சி; இது வாசகநிலையில் பல பொருளாக்கங்கள் நிகழ்வதை விளக்குகிறது. என் கட்டுரை அமைப்பாக்கத்தினை மையமாகக்கொண்டதால் இறைச்சி பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
3. ஓப்புமை கருத்துப்புலப்படுத்தம், என்ணிலக்கக் கருத்துப்புலப்படுத்தம் ஆகியன பற்றி அறிய விரும்புபவர்கள் Anthony Wilden- இன் “System and structure” புத்த்கத்தில் “Analog and Digital communication”, “Epistemology and Eco-system” ஆகிய இரு அத்தியாயங்களையும் பார்க்க.
4. பெயரிடுதல் என்ற பொருளை தத்துவ பிரச்சனையாக பலர் பார்த்திருக்கின்றனர். இவற்றுள் முக்கியமான விவாதங்களை Blaise Pascal-இன் “Pensees” என்ற நூலிலும் Kripke என்ற குறியியல் அறிஞரின் “Naming and necessity” என்ற நூலிலும் வாசிக்கலாம்.
5. இலக்கண உரை நூல்களுக்கான நூற்பட்டியல் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது.  
   
துணை நூற்பட்டியல்

1. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம்- எழுத்ததிகாரம், திருநெல்வேலி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1944.
2. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம்- சொல்லதிகாரம், திருநெல்வேலி, சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், 1962.
3. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம்- பொருளதிகாரம், திருநெல்வேலி, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், 1980.
4. பேராசிரியர், தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1951.
5. வ.சு.ப.மாணிக்கம், தமிழ்க்காதல், சென்னை, பாரிநிலையம், 1962.
6. தமிழண்ணல், பத்துப்பாட்டு, மதுரை, பி.கே.புக்ஸ், 1975.
7. எஸ்.வையாபுரிபிள்ளை, சங்க இலக்கியம்-பாட்டும் தொகையும், சென்னை, 1940

No comments: