Wednesday, November 2, 2011

மின்தூக்கி இயக்குனர்

'லிஃப்ட்',  ஓவியம்- ஷாந்தா பாத்தி

பணி ஓய்வு பெற்றபின் காட்டில் தபசியாய் சுற்றிக் கொண்டிருந்த அவர், மு வேலை பார்க்கும் அலுவலக கட்டிடத்தில் மின்தூக்கி இயக்குனராய் சேர்ந்தார். மு வின் அலுவலகம் இருந்த கட்டிடம் ஏழு மாடி; வயதானதால் இப்பவோ அப்பவோ பொடிந்து உட்கார்ந்துவிடும் என்பது போல இருக்கும். அந்தக் கட்டடத்திற்கான மின்தூக்கியோ அதற்கும் மேல். துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் கொண்ட வாயில், பொத்தல்கள் நிறைந்த கீழ்த்தளமும் மேல்த்தளமும், என்று இருக்கும் மின்தூக்கியில் ஏறுபவர்கள் உயிரைப் பணயம் வைத்துதான் ஏறவேண்டும். இந்த மின்தூக்கியை இயக்குவதுதான் முதியவரின் வேலை.  

மு வைத் தவிர முதியவரை ஆரம்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. முதல் காரணம் மின்தூக்கியில் கைபேசியில் பேசிக்கொண்டே வரும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதியவர் சத்தம் போட்டு பாடல்களைப் பாடிக்கொண்டே மின் தூக்கியை இயக்குவது பிடிக்கவில்லை. 


ஒரு சமயம் முதியவர்

“அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது?
மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது?
மெள்ளவே குருக்களே, விளம்பிடீர் விளம்பிடீர்”

என்று பாடியது தாங்கள் கைபேசியில் பேசுவதைத்தான் கிண்டல் பண்ணி பாடுகிறார் என்று பெண்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் புகார் செய்துவிட்டனர். இலக்கிய அஞ்சலிக் குறிப்புகளின் திரட்டி தயாரிக்கும் முதான் பெரியவர் பாடுவது சித்தர் பாடல் என்று சமாதானம் செய்து வைத்தான்.  பெரியவருக்கும் மு விற்கும் இப்படி நல்ல நட்பு உருவாகிவிட்டது. 

மின்தூக்கியின் மேல் நோக்கிய பயணம் மின் தடையால் பாதியில் நின்றுவிட்டால் பெரியவருக்கு குஷி தாள முடியாது. அவர் சத்தம் போட்டு பாடுவது அந்த மாதிரி சமயங்களில் பிறர் ஓடி வந்து மின்தூக்கியினுள் மாட்டிக்கொண்ட ஆட்களைக் காப்பாற்ற உதவியாகவே இருந்தது. 

அவர் மின்தூக்கியில் மின்சாரமில்லாமல் சிக்கிக்கொண்டபோது 

“பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம் ?”

என்று பாடியது ஏழு மாடி கட்டிட பொது ஜனங்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

காம்ப்ளெக்சிலுள்ள கடைகள் பூஜை போடும்போதெல்லாம் திருஷ்டி பூசணிக்காய் பெரியவர் கையினால் உடைத்தால் சுபிட்சம் என்றும் நம்ப ஆரம்பித்தார்கள்.

மு அவருக்கு ஒரு நாள் தேநீர் வாங்கிக் கொடுத்தான். பதிலுக்கு அவர்
“பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்?” என்று பாடினார்.

முவின் தோழிக்கு இந்த மின் தூக்கி உரையாடல்களும் குலாவல்களும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஹேய் மு! நீ ஏற்கனவே அரை வட்டு, இந்தக் கிழத்தோடு சேர்ந்து நீயும் முழு வட்டாய் ஆகிவிடாதே என்றாள்.

மு பெரியவரிடம் ஒரு சிதம்பர ரகசியம் இருப்பதாய் நம்பினான். மின் தூக்கிப் பயணத்தில் அவர் எப்போதாவது அந்த ரகசியத்தை தன்னிடம் சொல்லிவிடுவார் என்றும் நம்பினான். அவரோ தன் பாட்டுக்கு ஏதாவது பாடிக்கொண்டிருந்தாரே தவிர முவிடம் எந்த ரகசியத்தையும் சொல்கிறார்போல இல்லை. 

மு ‘மின்தூக்கிகள் மேலே கீழே போய் வருகின்றன’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி அவரிடத்தே வாசித்துக் காண்பித்தான். வேறு என்ன தலைப்பிலெல்லாம் உன்னால் எழுதமுடியும் என்று கேட்டார் அவர். ‘பாழடைந்த கட்டிடம்’, ‘கீழ் நோக்கிய பயணம்’, ‘மின் வெட்டு’ என்று மனதிற்குத் தோன்றியதைச் சொல்லி வைத்தான். அவர் திருஷ்டி பூசணிக்காய் என்று ஒன்று எழுதேன் என்று சொல்லி சிரித்தார்.

மறு நாள் மு ஒரு பூசணிக்காயை வாங்கி அவர் கையில் கொடுத்துவிட்டான்.  பெரியவர் முவைக் கண்ணை மூடிக்கொள்ளச் சொன்னார், மு கண்ணை மூடிக்கொண்டவுடன் மின் தூக்கியை மேல் நோக்கி இயக்கினார். 
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம் ?”
என்று பாடிக்கொண்டே அந்த பூசணிக்காயை மு தலையில் போட்டு உடைத்தார்.

1 comment:

Anonymous said...

இதையும் சேர்த்து வாசிக்க:
http://www.maamallan.com/2011/11/blog-post_03.html