Tuesday, November 1, 2011

செய்தி அறிவிப்பாளன்
மு செய்தியாளராக பயிலரங்கப் பயிற்சி முடித்தபின் உடனடியாக புது வேலையில் சேர்ந்துவிட்டான். பெரிய செய்தி நிறுவனத்தில் சிறு வேலை அவனுடையது. அவன் பிரிவு பிரபலமானவர்கள் மரணமடையும்போது உடனடியாக அவர்களுக்கு அஞ்சலி செய்தி வெளியிடுவதற்கு வசதியாக எல்லோருடைய தகவல்கள் புகைப்படங்கள் என்று திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுரைகளையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். பிரபலமானவர் இறந்தவுடன் நேரத்தையும் இடத்தையும் மட்டும் குறித்து உடனடியாக பிரசுரித்து விடலாம். மு வின் செய்தி நிறுவனத்திற்கு வானொலி பிரிவு, தொலைக்காட்சிப் பிரிவு என்றெல்லாம் இருந்தது. வானொலி, தொலைக்காட்சிப் பிரிவுகளில் வேலை பார்த்தவர்களை விட மு அதிர்ஷ்டம் செய்தவன் என்று அவனுடன் வேலை பார்த்த பெண்கள் சொன்னார்கள். அந்தப் பிரிவுகளில் கட்டுரை எழுதினால் மட்டும் போதாது மனச்சோர்வையும் சோகத்தையும் பிழிந்து தரும் இசைத்தட்டுகளையும் கேட்டு தேர்ந்தெடுத்து வைக்கவேண்டும்.

மு வின் பிரிவுத் தலைவர் நடிகை நடிகர்களின் மரணச் செய்திகளை தனக்கென கவர்ந்துகொண்டார். சதா அவர் கணிணியில் பழைய திரைப்படங்களோ அல்லது பாடல்காட்சிகளோ ஓடிக்கொண்டிருக்கும். பழைய நடிகைகளைப் பார்த்து தாபத்தில் ஏக்கப் பெருமூச்சு விடுவது பழம்பாடல்களைக் கேட்டு கண் கலங்குவது என்று எப்போதுமே அவர் கண்ணீரும் கம்பலையுமாய் இருந்தார். இதற்கு கொழுத்த சம்பளம் வேறா என்று மு கேட்டுத் தொலைத்து சேர்ந்த நாளிலேயே மு அவரின் அதிருப்திக்கு ஆளாகியிருந்தான். மு அவருடைய அறைக்கு பணி ஒதிக்கீடு வாங்குவதற்காகச் செல்லும்போதெல்லாம் பலமாக மூக்கைச் சிந்திப்போட்டுவிட்டே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார். 

மு ஜூனியரிலும் ஜூனியர் என்பதாலும் மு வுக்கு முன் அனுபவம் இந்தத் துறையில் இல்லை என்பதாலும் அவனுக்கு உப்பு சப்பில்லாத இலக்கியத் துறை ஒதுக்கப்பட்டது. மு வுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இலக்கியவாதிகளின் வாழ்க்கைகளில் எந்த பிரமாதமான சம்பவமும் நடைபெற்றதாக இல்லை என்பது தவிர அவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டிய துன்பத்திற்கு வேறு மு ஆளானான். 

ஒரு நாள் சரோஜா தேவிதான் தனக்குப் பிடித்த நடிகை என்று தன் மேலதிகாரியிடம் மு பேச்சுக் கொடுத்து அவருடைய முகத்தைப் பிரகாசிக்கச் செய்தான். பழைய பாடல்களில் அவருக்குப் பிடித்த ஆடவரலாம் ஆட வரலாம் என்ற பாட்டையே தனக்கும் மிகவும் பிடித்த பாடல் என்றான். கோவைப் பழம் போல் அழுகையில் சிவந்திருந்த மூக்கை நிமிண்டிக்கொண்டே அவன் மேலதிகாரி மு வை நோக்கி புன்னகை புரிந்தார். தமிழ் இலக்கியத் திரட்டி தயாரிப்பு எந்த அளவில் இருக்கிறது என்று வழக்கமான வேலை நேரக் கேள்வி வந்தவுடன் மு மெலிதான கேவலுடன் ஆரம்பித்து கதறி அழுதுவிட்டான். எனக்கு இலக்கியம் வேண்டாம் சார் என்று மட்டுமே முவினால் சொல்ல முடிந்தது. 

ஜூனியர்களின் ஒப்பாரிப் படலங்கள் மேலதிகாரிக்கு பழக்கம்தான் என்றாலும் எங்கே மு திரைப்படத் துறையை தன்னிடமிருந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியே பறித்துவிடுவானோ என்று அவருக்கு உதறல் கண்டது. பொதுவாக இலக்கியவாதிகள் இயற்கை எய்தும்போது மூன்றாம் பக்கத்திலோ நான்காம் பக்கத்திலோ சிறு பத்திச் செய்திதானே வெளியாகும் அதற்கேற்றாற் போல திரட்டி சிறிய அளவில் இருந்தால் போதுமே என்றார் மேலதிகாரி.

மு சமாதானமடைந்துவிட்டான். முப்பது வரி பத்தி ஒவ்வொருவருக்கும் தயாரிப்பது அவனுக்கு பெரிய வேலையில்லை. திரட்டி வேலையை மொத்தமாக இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான். இப்பொழுதெல்லாம் அலுவலகத்திற்கு வேலை பார்ப்பது போல பாவ்லா செய்வதற்குத்தான் போகிறான். திரட்டியின் தீராத பக்கங்களில் எந்த ஏட்டினை எப்பொழுது எடுத்தாலும் மு என்றே வருவதுதான் ஏனென்று அவனுக்குப் புரியவில்லை. அவன் மேலதிகாரியைக் கூப்பிட்டு கணிணியின் திரட்டியிலிருந்து ஒரு ஏட்டினை எடுங்கள் என்றான். அவருக்கு சரோஜாதேவி புத்தகம் வந்தது. இது எப்படி இந்தத் திரட்டிக்குள் என்றார். மீண்டுமொருமுறை அவர் ஏட்டினை எடுத்தபோது ஆடவரலாம்  ஆட வரலாம் பாடல் வந்தது. இலக்கிய ஆசிரியர்களின் அஞ்சலிக் குறிப்புகள் திரட்டியிலிருந்து நீங்களும்தான் ஒரு சில ஏடுகளை உருவிப்பாருங்களேன்.

No comments: