Saturday, July 12, 2014

சென்னையின் சிறுநீரகம்: பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

சென்னையின் சிறுநீரகம்: பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

NFSC யும் INTACH நிறுவனமும்  இணைந்து சென்னை நியு கல்லூரி வளாகத்திலுள்ள MEASI கட்டிடக்கலை கல்லூரியில் மூன்று நாட்கள் (ஜுலை 7,8,9, 2014) சென்னையின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாப்பது பற்றிய மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறையை நடத்தின. திருமதி தாரா முரளி, திரு. பி.டி. கிருஷ்ணன்,திரு.ரஞ்சித் டேனியல்ஸ் (www.careearthtrust.org), திரு. பரத் ஜெயராஜ், திரு. ஆர்.பி.அமுதன் மற்றும் நான் உரையாற்றினோம்.  திரு. ரஞ்சித் டேனியல்ஸ் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பற்றி ஆற்றிய உரையிலிருந்து பல புதிய தகவல்களையும் பார்வைகளையும் நான் கற்றுக்கொண்டேன்; இந்தக் கட்டுரையில் அவருடைய உரையிலிருந்து அறிந்த தகவல்களை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் கட்டுரைக்கு நானே முழுப் பொறுப்பு.
—————————————————————

Shared with thanks from https://www.flickr.com/search?text=pallikaranai&sort=relevance


பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒரு காலத்தில் இப்போது தரமணி டைடல் பார்க் இருக்கும் இடத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை விரிந்து கிடந்திருக்கவேண்டும்; மனித உபயோகத்தினால் சுருங்கி சுருங்கி ஆறு கிலோமீட்டர் விஸ்தீரணமுடைய சதுப்பு நிலமாய் இன்று குறுகிவிட்டது. இயற்கையாளர்களும் சுற்றுச்சூழலியலாளர்களும் ‘ஈர நிலங்கள்’ என வகைப்படுத்தும் நில வகைகளுள் சதுப்பு நிலங்களும் ஒரு வகையானதாகும். பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்களில் மரங்கள் வளர்வதில்லை; புல்லினங்களும் செடி வகைகளுமே அடர்ந்திருக்கின்றன. கடலிலிருந்து ஒரு கிலோமீட்டர் அருகாமையில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்தும் தூய நன்னீரை தன்னகத்தினுள்கொண்டும் திகழ்கிறது. ஒரு காலத்தில் நிலத்தடி ஈரக்கசிவுகளாலும், நீரோட்டங்களாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் அடையாறும் வேளச்சேரியின் ஏரிகளும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; இன்று கட்டுமானங்களாலும் வறண்டுவிட்ட ஏரிகளாலும் நிலத்தடி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இருந்தாலுமே நிலத்தடி கசிவுகளையும் நீரோட்டங்களையும் உள்வாங்கி வடிகட்டி கடலுக்கு எடுத்துச் செல்லும் பணியையும் கடல் மட்டம் உயரும்போது உள்வரும் உப்பு நீரை வடிகட்டி நன்னீரை அடையாறுக்கும் நிலத்தடி நீர் வளங்களுக்கும் சேர்க்கும் பணியையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் செய்கிறது; மனித உடலில் கழிவு நீரை அகற்றும் சிறுநீரகத்தின் பணியினைப் போன்ற பணிகளை சென்னை மாநகருக்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் செய்துவருவதால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை இயற்கையாளர்கள் சென்னையின் சிறுநீரகம் என்று அழைக்கிறார்கள். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுமையாக அழிக்கப்படுமென்றால் வேளச்சேரி, கிண்டி முதல் மடிப்பாக்கம் வரையுள்ள பகுதிகள் மழைக்காலங்களில் நீரில் மூழ்கும்; நிலத்தடி நீர் உப்பு நீராய் சீரழியும்; மண்ணின் தன்மை கெட்டு அதன் இறுகுத்தன்மை குலைய மௌலிவாக்கத்தில் சமீபத்தில் நடந்ததுபோல பாரம் சுமக்க முடியாமல் மண் இற்றுப்போக கட்டிடங்கள் இடிந்துவிழும். 

வானத்தில் செயற்கைகோளிலிருந்து பிடித்த புகைப்படங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இரண்டு கால்களில் நின்று இரண்டு கால்களை தூக்கிக்கொண்டிருக்கும் வாலில்லா சிங்கம் போல இருக்கிறது. அது சதுப்பு நிலமாய் உருப்பெற்று திரள்வதற்கு கோடானு கோடி வருடங்கள் ஆகியிருக்கவேண்டும். வேறு எந்த ஒரு தேசத்திலும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் போன்ற இயற்கையின் அற்புதம் வடிவம் கொள்ளுமென்றால் அதை தங்களுக்கு இயற்கை வழங்கிய கொடையாக, பாரம்பரியமாக கொண்டாடியிருப்பார்கள். 

மனிதர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ பறவைகளுக்கு பள்ளிக்கரணையின் மகத்துவம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. பருவ காலங்களில் நூற்று முப்பது பறவையினங்களை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணலாம். இந்தியத் துணைக்கண்டத்தின் நில விரிவில் இதுவரை 1300 பறவையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன; அவற்றில் பத்தில் ஒன்றினை பள்ளிக்கரணையில் காணலாம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. வேடந்தாங்கலை விட முக்கியமான பறவைகளின் புகலிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அறியப்படவேண்டும். ஐப்பசியிலிருந்து தை வரையிலான பருவ காலத்தில் நான் வசிக்கும் வேளச்சேரி பகுதியில் புது பறவைகள் தென்பட ஆரம்பித்தால் உடனடியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகளைப் பார்க்கச் செல்வதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன்.

மூன்று அல்லது நான்கு அங்குலமே அளவுடைய தேன்சிட்டு முதல் மூன்றடி நான்கு அடி வரை வளர்ந்திருக்கும் கூழைக்கடாக்களை (ஆங்கிலத்தில் பெலிக்கன்) நான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பார்த்திருக்கிறேன். மனித அக விழைவுகளே பறவைகளாகவும் அவற்றின் பல வகை பறத்தல்களாகவும் வெளித்தோற்றம் கொள்கின்றன என்று ஒரு கற்பனை எனக்கு உண்டு. அந்தக் கற்பனையின் வண்ணங்கள் ஒவ்வொரு முறையும் திரைச்சீலை ஓவியங்களெனவே தோற்றம்கொள்வதை பள்ளிக்கரணையில் பார்த்திருக்கிறேன். என் குழந்தைகளுக்கு பள்ளிக்கரணையின் பறவைகள் அளிக்கும் சந்தோஷம் அளப்பரியது. அவர்கள் தங்கள் அக விழைவுகள் வடிவங்கள் ஏற்பதற்கு முன்பாகவே அவற்றின் ஆனந்தங்களை பறவைகளாக அறிகிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு. அவர்களின் குழந்தைப்பருவத்தினை வளம் மிக்கதாய் மாற்றியதற்காக அவர்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு நன்றியுடன் இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

போன வருடம் சுமார் ஐம்பதிலிருந்து அறுபது கூழைக்கடா நாரைகள் கூட்டமாக தவமிருப்பதைப்போல நாணல்களிடையே நின்றிருப்பதை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பார்த்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில் தவமிருக்கும் பாவனையில் இருந்த நாரையொன்று கிட்டத்தட்ட இரண்டு கிலோ எடையுள்ள மீனை தவம் கலைந்து அலகில் அள்ளி விழுங்கியது. அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது பள்ளிக்கரணையின் சதுப்பு நிலம் மிகப் பெரிய உணவு மண்டலம் என்று. நீர் வாழ் உயிரினங்கள் அந்த ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் மட்டும் பல ஆயிரக்கணக்கான டன்களில் இருக்கும் என்று உயிரியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். நீர் வாழ் உயிரினங்களைப் பற்றிய  அறிவியலின்  தகலறிவு கூட முழுமையானது அல்ல. இன்னும் நமக்கு பல நீர் வாழ் கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய பட்டியல் கூட இல்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இன்னும் பெயரிடப்படாத பல நீர் வாழ் உயிரினங்கள் காணக்கிடைக்கின்றன அவை பூமியில் உயிர் தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்ததன் ரகசியங்களைச் சொல்லக்கூடும் என உயிரியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். 

1994 இல் நான் வேளச்சேரியை வசிப்பிடமாகக் கொண்டதிலிருந்து பள்ளிக்கரணைக்குப் போய் அவ்வபோது பறவைகளைப் பார்த்துவருவதும், ஐஐடி வளாகத்திலிருக்கும் காட்டினூடே நடைப்பயிற்சிக்குப் போவதும் என் புலனுணர்வு வாழ்க்கையினை செழுமை மிக்கதாய் மாற்றியிருக்கின்றன. தி.ஜானகிராமனின் “ செம்போத்துக்கள் உம் கொட்டி பறந்தன” என்ற வரியினை சென்னை நகரவாசியான என்னாலும் அனுபவபூர்வமாக எழுத முடியும் என்பதே மிகப் பெரிய கொடுப்பினை என்று இப்போதெல்லாம் அடிக்கடி நினைக்கிறேன். நீர் மண்டிய நாணல் சகதி வெளியில் மூங்கில் வனங்களில் மட்டுமே உணரத்தக்க ரகசிய அனுபவ வெளி மனித மனங்களுக்காகக் காத்துக்கிடக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிப்பதற்கும் மாசுபடுத்துவதற்கும் நம்மிடையே கிராதகத் திட்டங்களுக்கு என்றுமே குறையிருக்கவில்லை என்று வரலாறு சொல்கிறது; நன்னீர் ஏரி ஒன்றினை அமைப்பதிலிருந்து அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது, கோல்ஃப் விளையாட்டு மைதானம் அமைப்பது என பல திட்டங்களை யோசித்து சென்னை மாநகராட்சி சப்பு கொட்டியிருக்கிறது. பொது நல வழக்குகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அயராத போராட்டங்களுமே நமக்கு இந்த அளவுக்காவது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பாற்றிக்கொடுத்திருக்கின்றன. இப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வன இலாக்காவின் பாதுகாப்பில் இருக்கிறது. வன இலாக்காவுக்கு இருக்கக்கூடிய இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான விசேஷ அதிகாரங்கள் பள்ளிக்கரணையை தொடந்து பாதுகாக்கும் என்று நாம் நம்பலாம்.

ஆனால் பள்ளிக்கரணை பகுதியில் போடப்படும் குப்பை மேடுகளிலிருந்தும், குப்பை மலை மலையாய் எரிக்கப்படுவதன் மாசுபடுத்துதலிலிருந்தும் யார் பள்ளிக்கரணையை காப்பாற்றுவார்கள்? வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரணை போகும் சாலையில் டோபி அபார்ட்மெண்டுகளுக்கு கொஞ்சம் தொலைவில் மாநகரத்தின் ஆயிரக்கணக்கான டன்கள் குப்பைகள் தினசரி கொட்டப்படுவது மட்டுமில்லாமல் அவை எரிக்கவும்படுகின்றன. பள்ளிக்கரணைக்கு போகும்போது குப்பைகள் எரிக்கப்படும்போது புகை மேகங்கள் போல எழுவதையும் கரித்துகள்கள் சதுப்பு நிலத்தின் நாணல்புதர்களில் அடர்வதையும் நான் பார்த்திருக்கிறேன். இன்னொரு பெரிய குப்பை மைதானம் பள்ளிக்கரணையிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழியில் இருக்கிறது. இந்த குப்பை மைதானங்கள் அதிர்ச்சியூட்டத்தக்க அளவு கற்பனையை விட பெரிதானவை; அவரவர் எச்சத்தினால் காணப்படும் சென்னை படு பயங்கரமானது. போரின் அழிவுகளையும் சர்ரியலிச ஓவியங்களையும் விஞ்சிய காட்சிகளைக் கொண்டவை இந்த குப்பை மைதானங்கள்.

வருடா வருடம் பறவைகள் இன்னும் வந்து போகின்றன பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சதுப்பு நிலமாகவே இன்னும் பிழைத்துக் கிடக்கிறது என்றால் அதற்கு மனித யத்தனங்கள் ஐம்பது சதவீதம் காரணம் என்றால் இன்னொரு ஐம்பது சதவீத காரணம்  தெய்வீக அருள்தான்.  

  
No comments: