Friday, July 25, 2014

நண்பர் ஜெயமோகனுக்கு: மூலாதார ஆற்றல் சாத்வீக ஆற்றலே

அன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு,

நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல் (காமம்) சாத்வீக ஆற்றலாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற என்னுடைய டிவீட் மட்டுமே. 

நமது யோக மரபுகள் பெரும்பானவற்றில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை, சகஸ்ரம் ஆகிய ஏழு சக்கரங்களையும் உடலின் ஏழு புள்ளிகளில் இயங்கும் ஆற்றல்களாக உருவகித்து பல சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன; நீங்கள் பிரசுரித்தது போல நம் ஓவிய மரபுகளில் கிடைக்கும் இந்த சித்திரங்கள் பலவற்றை நான் சேகரித்தும் வைத்திருக்கிறேன். பிற்காலத்திலான இந்த சித்திரங்கள் ஏழு சக்கரங்களாக உருவகிக்கப்படும் மனித உடலில் செயல்படும் ஆற்றல்களை ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையாகவும் ஒரு சக்கரத்தினை கிழித்து மேல் நோக்கி எழுகிற குண்டலினி விசையே அவற்றைத் தொடர்புபடுத்துவதாகவும் பொதுக்கருத்து உருவாக காரணமாக இருந்தன; இல்லை இந்த வகை சித்திரங்கள் அவ்வாறாக உருவாகிவிட்ட பொதுக்கருத்தின் பிரதிநிதிகளாகவும் இருக்கலாம். 

ஆனால் பதஞ்சலியின் பிரம்ம சூத்திரம் ( குறிப்பாக சமாதிபாதம் -அதற்கு கிருஷ்ணமாச்சாரியார் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பும் உரையும் கூட இருக்கின்றன), திருமந்திரம், சௌந்தர்யலகிரி, ஶ்ரீவித்யா தியான முறைமை, கிரியா யோக மரபு ஆகியன உண்மையில் எழு சக்கரங்களில் இயங்கும் ஆற்றல்களும் இயற்கையிலேயே தொடர்புடைய ஒற்றை ஒளிநாக சக்தி என்றே உருவகிக்கின்றன. விநாயகரை முதன்மைக்கடவுளாகக் கொண்டு வளர்ந்த கணாதிபத்யம் கணபதியை மூலாதார சக்கரத்தின் கடவுளாக உருவகிப்பதும், அதை பிற மரபுகள் ஏற்றுக்கொண்டதும் நமக்கு தெரிவிப்பது என்னவென்றால் மூலாதார ஆற்றலை சாத்வீக ஆற்றலாக அறிவதில் நமக்கு உள்ள தடைகளை, விக்னங்களை கணபதி தியானம் விலக்கும்; நாசம் செய்யும் என்பதே.

இதன் தொடர்ச்சியும் சூட்சுமமும் என்னவென்றால் ஏழு சக்கரங்களும் அவற்றின் ஆற்றல்களும் உடலில் மூளையில் அடையாளம் காணப்படவேண்டும்; அல்லது மூளையின் நீட்சியாக முதுகுத்தண்டும் அதன் நரம்பு நீட்சிகளும் அறியப்படவேண்டும். காகபுசுண்டரின் பெருநூல் மனிதன் தலைகீழாக நட்டு வைக்கப்பட்ட செடி என்று மூளைக்குள்ளாகவும் அதன் நீட்சியான முதுகுத்தண்டினையும் அவற்றிலுள்ள சக்கர தொடர்புறுத்துதல்களையும் உருவகிக்கிறது. இந்த மூளை மைய அத்தனை சக்கரங்களிலும் இயங்கும் ஒற்றை ஆற்றல் என்ற கருத்தாக்கமே வைத்திய சாத்திரங்களிலும், களரி உள்ளிட்ட வர்மக்கலைகளிலும் காணக்கிடைக்கிறது.

மூலாதார ஆற்றலை சாத்வீக ஆற்றலாக அடையாளப்படுத்திய புத்தர் இதை  தன்னுடைய சாரநாத் உரையில் விளக்கி தர்மசக்கரம் சுழல்வது மனித உடலிலும் பிரபஞ்ச இயக்கத்திலும் தொடர்புற்றிருப்பதை சொல்கிறார். சமணம் மனித உடலிலும் பிரபஞ்சத்திலும் இயங்கும் ஜீவசக்தி மொழிவழி விரிவிலும் செயல்வழி ஒழுகிலும் லயம் பெறுவதைச் சொல்கிறது. மேல்சித்தாமூர் சமணக்கோவிலில் உள்ள சுவர்சித்திரம் இதற்கான சிறந்த விளக்கம்; சமண முனிவர்கள் தயாரித்த அகராதிகளின் பின்புல சிந்தனையும் அதுதான்.

ஒரு புத்தகமாக விரித்து எழுத வேண்டிய பொருள் இது. வெகு சுருக்கமாக எழுதியிருக்கிறேன் ஆனால் மூலாதார முதல் ஆற்றலே சாத்வீக ஆற்றல்தான் என்பதினை விளக்குவதற்கு இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.  

அன்புடன்


எம்.டி.எம் 

No comments: