விமலாதித்த மாமல்லன் |
இலக்கிய விமர்சனங்கள், அடிதடிகள், பகடிகள் எதுவுமே வன்மங்களாக இறுகுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த வாக்கியத்தினை பெரிய உத்தம கனவான் போல நான் எழுதினாலும் சில சமயங்களின் வன்மம் என்னையும் மீறி மனதில் இறுகிவிட்டிருக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன். சமீபத்தில் சியோல் நகரில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது தூரத்திலிருந்து பார்வைக்கு ஒரு நபர் அச்சு அசலாய் விமலாதித்த மாமல்லன் போலவே இருந்தார். பக்கத்தில் போய் பார்த்தபோதுதான் அது வேறு நபர் என்று தெரிந்தது. மாமல்லன் இரண்டொரு மாதங்களுக்கு முன்பு என் அலுவலகத்திற்கு வந்தது ஞாபகம் வந்தது.
என்றைக்கு என்று துல்லியமாக நினைவில்லை. ஒரே ஒரு சக பணியாளர் மட்டுமே அலுவலகத்தில் இருக்க, மதியம் வரவிருக்கிற ஆராய்ச்சி மாணவர்களுக்காய் பாடங்களை தயார் செய்துகொண்டிருந்தேன். வாசலில் அழைப்புமணி அடிப்பதைக் கேட்டு வாசலுக்குப் போனால் ... மாமல்லன்! அப்படி வெட்டுப்பழி குத்துப்பழி என்று இணையத்தில் கட்டிப் புரண்டு சண்டையிட்டபின் அவர் என்னைப் பார்க்க வருவார் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. மாமல்லனை நான் அதற்கு முன் அதிகமாகப் பார்த்ததுமில்லை, பழகியதுமில்லை. நான் சந்தித்த ஓரிரு சந்தர்ப்பங்களிலிருந்து மனதில் நிறுத்திய உருவத்தை விட குள்ளமாக இருந்தார். நரைத்த தாடியையும் கண்களுக்கு கீழே அடர்ந்திருந்த கரு வளையங்களையும் அவருடைய மனம் விட்டு சிரித்த பெரிய சிரிப்பினையும் பார்த்தபோது இவரோடா அத்தனை சண்டை போட்டோம் என்று தோன்றியது. வெட்டி சண்டை அது என்றும் தோன்றிக்கொண்டே இருந்தது. அவரை நீ என்று அழைத்து பேசுவதா அல்லது நீங்கள் என்று அழைப்பதா என்ற குழப்பத்தில் நான் ஓரிரு வாக்கியங்கள்தான் பேசினேன் என்று நினைக்கிறேன். சென்னைவாசியான அவருக்கு என்னை நீ என்று அழைத்து படபடவென்று பேசுவதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. முழுமையாக என்ன பேசினோம் என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவர் கையில் பெருவிரலில் ஒரு பிளாஸ்திரி போட்டிருந்தது நினைவிருக்கிறது. என்னவென்று கேட்டதற்கு சுங்க பரிசோதனையின் போது கைது செய்த நபரொருவரை அடிக்கத் தெரியாமல் அடித்ததில் கை பிசகிவிட்டதாகச் சொன்னார். இலக்கியத்திலும் அப்படித்தான் காட்டடி பிறரை அடிப்பதாக நினைத்து தன்னையே காய்ப்படுத்திக்கொள்வார் என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டேன், மதிய உணவு நேரம் என்பதால் சாப்பிடுங்கள் என்றதற்கு வேண்டாமென்று மாதுளை சாறு மட்டும் அருந்தி விடை பெற்றுப் போய்விட்டார்.
அத்தனை நேரமும் நான் அவரிடத்தில் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மனதிலிருந்தது வார்த்தையாய் வெளிப்படவில்லை. ஏதோ ஒரு தயக்கம் என்னைத் தடுத்துவிட்டது. அதாவது இணையத்தில் நடந்த சண்டையின் போது அவரை நான் ஒரு சமயம் தலைக்கேறிய கோபத்தில் கருணை அடிப்படையில் வேலை வாங்கியவர்களுக்கு உழைப்பினாலும் தகுதிகளாலும் அடையும் பிற வேலைகளைப் பற்றி என்ன தெரியும் என்று நான் அவரைத் தாக்கி ஒரு வாக்கியம் எழுதியிருக்கிறேன். மாமல்லனின் வசைகளால் தடுமாறி நான் சறுக்கிய தருணம் அது. ஒரு போதும் எவரையும் அப்படித் தாக்கி எழுதுவது என் இயல்புக்கு உகந்தது அல்ல. ஆனால் அது நிகழ்ந்துவிட்டது. அதற்காக மாமல்லனிடம் அவர் நேரில் வந்தபோதாவது நான் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும்.
சியோல் நகரில் யாரோ ஒரு அந்நியரை மாமல்லன் என்று நினைத்தது நான் கேட்கத் தயங்கியதால் மீண்டும் சறுக்கியதற்கான நினைவூட்டல். மேற்சொன்ன விஷயத்திற்காக விமலாதித்த மாமல்லனிடம் மன்னிப்பு கோருகிறேன்.
No comments:
Post a Comment