அம்மாவின் அஸ்தி கலசத்தை
மடியில் வைத்துக்கொண்டு
கன்னியாகுமரிக்கு பயணம் செய்யும்போது
கார் அதிகமும் கனக்க
ஊர்கின்றன சக்கரங்கள்
கலசத்தின் வாயை மூடிய துணிக்கு
அம்மாவின் சேலை போலவே
மணம்
படபடப்பு
சாம்பலில் அமிழ்ந்த சிறு
எலும்புகள் கலசத்தினுள்
முணுமுணுக்கும்
விநோத இசைக்கருவி
என்ன செய்வான் இனி
இந்த பைத்தியக்கார பிள்ளை
காரை நிறுத்தி
சாலையோரக் கடையில்
தேநீர் அருந்துகையில்
பிறிதொருமுறை
கள்ள சிகரெட் பிடிக்கச் சென்ற
மகனின் வருகைக்காகக்
காத்திருந்தவளாகவே
இருக்கையில் வீற்றிருக்கிறது
அஸ்தி கலசம்
இப்போது சிகரெட்டுக்கு வழியில்லை
என்பதாக அரும்புகின்றன
வியர்வைத்துளிகள்
மொட்டைத்தலையிலும்
மழித்த உதடுகளிலும்
கடலலைகளில் நிலம் நோக்கி நின்று
முதுகு வழி கலசத்தினை
கடலில் விட்டு
மூன்று முறை மூழ்கி
எழுகையில்
விலகிச் செல்கிறது
பால் வாசம்
உருவாகி அழிகிறது
நீர்த்திவலைகளில் ஒரு புகார்
நிறுத்துதலின்றி விரைந்து வீடு திரும்புகிறது கார்
பின்னெப்படி மகிழம்பூ மரத்தடி சாம்பலில்
அதே வாசம்
இலைகளில்
அதே படபடப்பு
ஊடுறுவும் சூரியக் கதிர்களில்
அதே முணுமுணுப்பும்
நீ எனக்கு கொள்ளி வைக்கவில்லை
என்ற கன்னியாகுமரி ஆவலாதியும்?
அதுவும்
இருபது வருடங்கள்
பதினோரு மாதங்கள்
மூன்று நாட்கள்
ஆறு மணி நேரம்
எட்டு நிமிடங்கள்
எட்டு நிமிடங்கள்
இரண்டு விநாடிகளுக்குப்
பிறகு
No comments:
Post a Comment