Monday, July 14, 2014

பறத்தலில் வீழ்தல் இனிது


“Most gulls don’t bother to learn more than the simplest facts of flight — how to get from shore to food and back again. For most gulls, it is not flying that matters, but eating. For this gull, though, it was not eating that mattered, but flight. More than anything else, Jonathan Livingston Seagull loved to fly.” - Richard Bach in ‘Jonathan Livingston Seagull’ நாவலை இலவசமாக தரவிறக்கி படிக்க: http://csermelyblog.tehetsegpont.hu/sites/default/files/angol%20sirály.pdf 

Diving Pelican 



எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று ஞாயிறு மாலை வேளச்சேரி நண்பர்கள் கூடும் மொட்டைமாடிக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்தேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பற்றி நான் இந்த ப்ளாக்கில் வெளியிட்டிருந்த கட்டுரையை ஒட்டி பேச்சு தொடங்கியது. நான் பறவை வல்லுனர் அல்லன் என்  பறவைகள் ஈடுபாடு கலை இலக்கியங்கள் சார்ந்தது மட்டுமே என்று விளக்கும்போது ரிச்சர்ட் பாக்கின் புகழ்பெற்ற நாவலான ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ பற்றி குறிப்பிட்டேன். கூடியிருந்த நண்பர்களில் ஒருவர் கூட அந்த நாவலை வாசித்திருக்கவில்லை என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று எந்த காரணத்தினால் முன் அனுமானம் கொண்டிருந்தேன்? 
ரிச்சர்ட் பாக்கின் ஜொனாதன் விவிங்ஸ்டன் கடற்பறவை எல்லா கடற்பறவைகள் போல அல்லது எல்லா பறவைகளையும் போல உணவுக்காக மட்டும் பறக்கின்ற பறவை அல்ல. பறத்தலின்பத்தினால்  பறவைக்கு பறத்தலென்ற செயலே எப்படி வாழ்தலாகிறது என்பதை ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ ஒரு நீதிக்கதை வடிவத்தில் சொல்கிறது. கலை என்றால் என்ன, வாழ்க்கையே கலையாவது எப்போது, கலை எதற்காக  கூட்டத்திலிருந்து விலகி தனியாக இருக்கவேண்டியதன் அவசியத்தை முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது ஆகியவற்றை ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ போல கவித்துவமாக சொன்ன வேறொரு கதை இல்லை. மிகுந்த உற்சாகத்தினையும், உத்வேகத்தினையும், கலை ஈடுபாட்டின்  மேல் அளப்பரிய நம்பிக்கையினையும் உண்டாக்குகிற கதை அது. 
நான் சொல்ல வந்தது ஆனால் ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்லுக்கான அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல. ஜொனாதன் கடற்பறவைக்கு நாவலின் ஆரம்பத்திலேயே அது பறப்பதற்குக் காரணம் உணவே என்று வலியுறுத்தி சொல்லப்படுகிறது; அந்த வலியுறுத்தலை மீறியே ஜொனாதன் இலக்கற்ற பறத்தலை வாழ்தலாக அடையாளம் கண்டுகொள்கிறது. என்னுடைய நோக்கம் வானில் மிதக்கும் பறவைகள் தங்கள் இரைகள் நோக்கி வீழ்வதிலுள்ள அழகையும் கம்பீரத்தையும் கவனப்படுத்துவதன் மூலம் ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ வழங்கும் வாசிப்பனுபவத்தை உங்களுடையதாக்கிக்கொள்ள கோருவதுதான்.

நான் பயணம் செய்த விமானம் வானத்திலிருந்து ஒரு முறை கீழே விழுந்திருக்கிறது.2000 ஆண்டில் சென்னையிலிருந்து விமானத்தில் கல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். மே மாதம். அந்தப் பருவத்தில் வருடந்தோரும் வங்காள விரிகுடாவில் தாழ்வழுத்த மண்டலங்கள் உருவாகும். பொதுவாகவே வங்காள விரிகுடாவில் கடல் இந்தியாவின் மேற்கிலிருக்கும் அரபிக்கடலைப் போல அமைதியானது அல்ல. வங்காள விரிகுடாவில் கடல் பல கொந்தளிப்புகளையும் புயல்களையும் வான வேடிக்கைகளையும் உருவாக்க வல்லது.  ‘வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்ற விஷ்ணு துதிக்கான வரி வங்கக் கடல் பற்றிய அனுபவத்தால் உண்டானது. பருவ மழையும் தாழ்வழுத்த மண்டலங்களும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் வங்காள விரிகுடாவிலும் அதையொட்டிய இந்திய நிலப்பகுதிகளிலும் வானில் பல air pockets என்று அழைக்கப்படுகின்ற தாழ்வழுத்த வெற்றிடங்களை உண்டாக்குகின்றன. 2000 வருடம் மே மாதம் நான் பயணம் செய்த விமானம் வங்காள விரிகுடாவின் மேல் வானத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய air pocket ஒன்றினுள் வசமாக மாட்டிக்கொண்டது.
இரை நோக்கி இறக்கைகள் மடக்கி வானில் இருந்து செங்குத்தாக கீழே விழும் பறவை போல எங்கள் விமானம் கீழே விழுந்தது. நடு வானில் அதன் வீழ்தலைக் கட்டுப்படுத்தி விமானி காற்றழுத்த அறையிலிருந்து வெளிக்கொணர முயன்றபோதெல்லாம்  விமானமே துண்டு துண்டாய் சிதறப்போவது போல அதிர்ந்து அடங்கியது. எந்த முன்னறிவிப்பும் இன்றி ஏற்பட்ட முதல் வீழ்தலிலேயே பயணிகள் அலற ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் முப்பந்தைந்து நிமிட நேரம் நீடித்த அந்த வீழ்தலும் பறத்தலும் யுகாந்திரமாய் நீடிப்பது போல தோன்றியது.  முதல் வீழ்தலிலேயே என் இருக்கைக்கு பின் இருக்கையில் இருந்த பெண்மணி ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று உச்ச ஸ்தாயியில் அலற ஆரம்பித்துவிட்டார். விமானம் முழுக்க  எழுந்த பயத்தின் கூச்சல்களை மீறி அவருடைய சத்தம் அதிகமாகக் கேட்டது. அவருக்கு இணையாக குழந்தையொன்றும் அலறியது. என் முன்னிருக்கையில் இருந்த நபர் விமானம் அமைதிப்படும்போதெல்லாம் நல்ல வேளை இது வங்க தேச விமானமல்ல வங்க தேச விமானமாயிருந்தால் மேற்புறங்களில் நீர் கசிந்திருக்கும் என்று அல்லாவுக்கு நன்றி சொன்னார். வேறொரு இருக்கையில் இருந்த நபர் விமானம் சிதறி எல்லோரும் இறந்துவிட்டோமென்றால் உறவினர்களெல்லாம் எங்கள் உடல்களைத் தேடும்போது எங்கோ அத்துவானக்காட்டில் போய் செத்துத் தொலைந்திருக்கிறான் பார் என்று எப்படியெல்லாம் திட்டித் தீர்ப்பார்கள் என்று சத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த அரைமணி நேர நரக வேதனையும் அச்சமும் நிறைந்த நிமிடங்களில் விமானத்தின் கேப்டனிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கிலேசமும் பயணிகளான எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 
விமானம் காற்றழுத்த வெற்றிடப் பொறியிலிருந்து தப்பித்து கல்கத்தா செல்வதற்கு பதிலாக அருகாமையிலிருந்த புவனேஷ்வர் சென்று தரையிறங்கியது.  பூமியைத் தொடுவதற்கு சற்று முன்னர்தான் விமான கேப்டன் ஒலிபெருக்கியில் முதல் முறையாக  அறிவித்தார்: “நாம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டோம். வானில் காற்றழுத்த வெற்றிடத்தில் நம் விமானம் சிக்கிக்கொண்டது. நான் வடக்கு, கிழக்கு, மேற்கு என்று ஒவ்வொரு திசையாய் மோதி வெளிவரப்பார்த்தேன். ஆனால் மூன்று திசைகளிலும் மேகங்கள் அடர்ந்து வழிவிடவில்லை. நல்ல வேளையாக தெற்கில் நமக்கு வழி கிடைத்தது. புவனேஷ்வரில் நாம் தரையிறங்குகிறோம். நான் உங்களை பயமுறுத்தவேண்டாம் என்றுதான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடாததற்கு மன்னிக்கவும். உங்கள் அனைவரையும் பத்திரமாக பூமியில் இறக்குவது எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வானில் இருந்து இரை நோக்கி கீழே விழும் பறவைகளுக்கு இது தினசரி அனுபவம். நமக்கு கடவுளின் ஆசி கிடைத்த பேரனுபவம்.”
புவனேஷ்வரில் விமானம் தரையிறங்கியதும் பயணிகளின் ஆனந்தக்கூச்சல் எழுந்தது. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் சிலர் பூமியை முத்தமிட்டார்கள்; சிலர் கீழே விழுந்து புரண்டார்கள்; ஆண்டவனின் கருணை என்று சிலர் முணுமுணுத்தார்கள். புவனேஷ்வர் விமான நிலையத்தில் எங்களை பத்திரமாகத் தரை இறக்கிய கேப்டனை சந்தித்து நான் நன்றி சொன்னேன். கேப்டன் ராக்கேஷ் ஷர்மாவின் முகத்திலும் கழுத்திலும் வியர்வை வெள்ளமாய் வழிந்திருந்தது. நான் கைகுலுக்கியபோது அவர் உடல் மெலிதாய் நடுங்கியதாய் நான் நினைத்தேன்.
வானத்தில் மேகங்கள் கலைந்துவிட்டபின் புவனேஷ்வரிலிருந்து கல்கத்தாவுக்கு விமானம் புறபடத்தயாரானது. ஆனால் என்னையும் வங்கதேசத்து பயணி இன்னொருவரையும் தவிர வேறு எவரும் அந்த விமானத்தில் மீண்டும் பயணம் செய்யத் தயாராக இல்லை. அனைவரும் ரயில் பிடித்து கல்கத்தா போவதாகக் கிளம்பிப் போய்விட்டனர். விமானப் பணிப்பெண்கள், கேப்டன் ராக்கேஷ் ஷர்மா, மற்றும் நாங்கள் இருவர் என ஒன்றாக நடந்து போய் விமானத்தில் ஏறினோம். ராக்கேஷ், “நீங்கள் இருவர் மட்டுமாவது மீண்டும் வருவது உற்சாகமாக இருக்கிறது. உங்களுக்கு பயமாக இல்லைதானே?” என்று கேட்டார். “உங்கள் திறமையில் நம்பிக்கையிருக்கிறது, ஆனால் உங்களுக்கு பயமாக இல்லையா?” என்று நான் திருப்பிக் கேட்டேன். “நாங்கள் பறவைகள், பறத்தலில் இனிது வீழ்தல்” என்றார் ராக்கேஷ். எங்களோடு நடந்த விமானப்பணிப்பெண்கள் உற்சாகமாக சிரித்தார்கள்.
புவனேஷ்வரிலிருந்து கல்கத்தா விமான பயணம் சுமுகமாக இருந்தது. நான் கல்கத்தாவிலிருந்து ஷில்லாங், பிறகு அங்கிருந்து அருணாசல பிரதேசத்திலுள்ள லோஹித் மாவட்ட கிராமங்கள் என்று பயணம் செய்ய ஆரம்பித்தேன். அருணாசல பிரதேசத்தின் காடுகளில் இருவாட்சிகளைப் பார்க்க மிஷிங் ஆதிவாசி நண்பர்களோடு சென்றேன். மிஷிங் ஆதிவாசிகளின் மூப்பர் செர்னாவ் மிரி என்னுடைய நல்ல நண்பர். செர்னாவ் மிரி இருவாட்சிகளை (hornbills) நுட்பமாகத் தெரிந்து வைத்திருப்பவர். அவரிடம் நான் விமானம் பறவை போல கீழே விழுந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தேன். செர்னாவ் மிரி இருவாட்சிகள் இரை நோக்கி கீழே வானில் இருந்து எய்த அம்பு போல இறங்கும்போது அவை உயிர் வெறுத்து உயிர் வாழ விழைகின்றன என்று சொன்னார்.
இருவாட்சிகளின் வாழ்வினைப் பற்றி செர்னாவ் மிரி எனக்களித்த நுட்பமான பார்வை ரிச்சர்ட் பாக்கின் நாவல் ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’லில் இல்லாதது; ஆனால் பாக்கின் நாவலை மீண்டுமொரு முறை வரி வரியாய் வாசிக்க வைத்தது.
பள்ளிக்கரணையில், வேடந்தாங்கலில், முப்பந்தலில், அருணாச்சலப்பிரதேச காடுகளில் ஏன் யுடூப் வீடியோக்களில் இரை பிடிக்க கீழே விழும் பறவைகளைப் பார்க்கும்போது நான் பயணம் செய்த விமானம் கீழே விழுந்த அனுபவம் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அப்படி கீழே விழுந்தபோது என் மனமும் உயிர் வாழும் இச்சையால், துடிப்பால் பீடிக்கப்பட்டதாக நான் கற்பனை செய்து கொள்கிறேன். பறத்தலுக்கான உந்துதல் அந்த இச்சையில் இருக்கிறது.
கோழிகள், தவிட்டுக் குருவிகள் போன்றவையும் பறவைகள்தான்; அவற்றிற்கு உயரப் பறந்து உயிர் வெறுத்து இரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 
உயிர் வாழ இச்சை நிறையும் மனதினையே அமிர்தகலசம் என்று புராணங்கள் உருவகித்ததாய் எனக்கொரு சம்சயம் உண்டு; அமிர்த கலசங்களை உயரப் பறக்கும் பறவைகள் தங்களகத்தில் கொண்டிருக்கின்றன.    



No comments: