பச்சை வயல்வெளிகளூடே அவளை
தோளில் சுமந்து வரும்
அதே கனவு
நான்காம் முறையும்
திரும்ப வந்தபின்புதான்
அந்தச் சிறுமியை
என் சிறுகதையில்
இறக்கி வைத்தேன்
தேக்குமர மேஜைக்கடியில்
அவள் பத்திரமாயிருப்பாள்
என்று நம்பி
கதையை முடிக்கமுடியவில்லை
எழுபது வயது தாத்தா
அறுபது வயது மாமா
ஐம்பது வயது சித்தப்பா
நாற்பது வயது ஆசிரியர்
முப்பது வயது அக்காள் புருஷன்
இருபது வயது அண்ணா
அவள் வயது தோழன்
இன்னும் சிறிய சிறுவன்
யாரிடமும் அவளை
நம்பி ஒப்படைக்க முடியவில்லை
கடவுளர்களும் தேவதைகளுமோ
கதைகளில் வருவதில்லை இப்போது
ஐந்தாம் முறை அதே கனவு வந்தால்
தோளில் சுமந்த சிறுமியுடன்
அத்துவான வெளி நோக்கி நடையைக்கட்டலாம்
மகளவள்
No comments:
Post a Comment