Friday, July 10, 2026

சிற்பி ஷியாம் மறைந்தார்



ஷியாமிடம் பேசலாம் என்று அவரைத் தொலைபேசியில் சற்று  முன்பு அழைத்தபோது அவர் இன்று காலை ஏழுமணிக்குக் காலமாகிவிட்டதாக அவருடைய மனைவி கதறி அழுதுகொண்டே தெரிவித்தார். என்ன மாதிரியான காலை இது என்று தெரியவில்லை. பெரும் துக்கம் என்னைப் பீடிக்கிறது.  ஷியாமைப் பார்க்க அவருடைய வீட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கிறேன்.

ஷியாமைப் பற்றி முன்பு எழுதிய சிறு கட்டுரை:

நித்திய யோகியும் பரம போகியும்

எம்.டி.முத்துக்குமாரசாமி

—-

சிற்பியும் சித்திரக்கலைஞருமான ஷியாமின் தோற்றம், நடை, பாவனை, பேச்சு, மனப்பாங்கு அனைத்துமே ஒரு மறைபொருள் மெய்ஞானியினுடையதைப் போல இருக்கும். ஷியாமை இருளின் ஆராதகர் என்று சொல்லலாம்; இருட்டில் பல மணி நேரம் ஷியாமால் விழிப்புடன் உட்கார்ந்திருக்க முடியும்.  சித்திரங்களை அவர் நுணுக்கி நுணுக்கி தியானம் போல வரைந்துகொண்டிருப்பார். கோட்டைகள், கொத்தளங்கள், பெருவெளிக் காட்சிகள், ஆகியவற்றை சின்னஞ்சிறு விபரங்களுடன் ஷியாம் வரைவார். அவருடைய முகமூடிகள், சுடுமண்  சிற்பங்கள், கோட்டுச்சித்திரங்கள் அனைத்திலும் அறிவியல் புனைவின் கற்பனையும் மறைபொருள் மெய்ஞானத்தை உள்ளுணர்வாலும் பட்டறிவாலும் வாழ்பனுபவத்தாலும் கண்டுகொண்ட ஒரு சாதாரணனின் தரிசனம் துலங்கும். ஷியாமை எனக்கு எத்தனை பத்தாண்டுகளாகத் தெரியும் என்று  நினைவில்லை. புலனுணர்வின் அடியோட்ட உலகை விழிப்புடன் பார்க்கும் ஷியாம் என்ற கலைஞனின் பார்வை என் அக உலகுக்கு நெருங்கிய சம்பந்தமுடையது. அந்த சம்பந்தம் என்ன என்பதை விளக்குவது கடினமான காரியம். சிலவற்றை  சூசகமாகச் சொல்லலாம் 

ஷியாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தவளைகளை மட்டுமே சுடுமண் சிற்பங்களாகச் செய்துகொண்டிருந்தார். ஷியாம் அவற்றை தவளைக்காய்கள் என்றழைப்பார். ஏன் தவளைக்காய்கள் என்று நான் ஒருமுறை கேட்டபோது அவர் அவைதானே நீரிலும் நிலத்திலும் வாழ்பவை என்று சொன்னதாக ஞாபகம். இந்த இடையூடிகள் என் கவிதைகளை நிறைத்திருப்பதை நான் “On a Winter Morning Clearing” ஆங்கிலக் கவிதைத்தொகுப்புக்கான கவிதைகளை வரிசையாக அடுக்கி சேகரித்துக்கொண்டிருந்த போது  கண்டுகொண்டேன். இடையூடிகள் தவளைகளாக மட்டும் இல்லை, கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும்  இடையில், வைகறையிலும் அந்தியிலும், விழிப்பிறகும் கனவிற்கும் இடையில், ஒரு நொடிக்கும் மற்றொரு நொடிக்கும் இடையில், ஒரு மூச்சிற்கும் மறு மூச்சிற்கும் இடையில் என என் கவிதைகள்  சொல் பெற்றிருப்பதை உணர்ந்தேன். அந்தத் தொகுப்பின் முன்னுரையில் பின்வருமாறு எழுதியிருக்கிறேன்;

In the quiet hours before dawn, when the world holds its breath, I find myself drawn to the spaces between—between moments, breaths, and the known and the unknowable. It is here, in this liminal expanse, that my poems take root. Each line in this collection, "On a Winter Morning Clearing," is an attempt to capture the ephemeral, the fleeting whispers of a universe both indifferent and intimately familiar.

ஷியாமின் கலைஉலகைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்; சஹப்பீடியாவிற்காக, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக என. அவருடைய அத்தனை கலைப்படைப்புகளையும் சஹப்பீடியாவிற்காக ஆவணப்படுத்தியிருக்கிறேன். அவருடைய கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றியிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு ஷியாமின் காமதேனு சுடுமண் சிற்பத்தை வைத்து “The pleasures of giving” என்று நான் ஓவியக்கல்லூரி மாண்வர்களைடையே ஆற்றிய உரை பிரபலமாக இருந்தது. 

சில நாட்களுக்கு முன்பு நான் இப்போது தொகுத்துக்கொண்டிருக்கும்  எனது ஆங்கிலக் கவிதைகள் நூலுக்கு “Fables of the Third Eye” என்று பெயரிட்டபோது ஷியாமின் கோட்டுச்சித்திரங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. ஷியாமின் சித்திரங்களையும் என் கவிதைகளையும் சேர்த்து பிரசுரிக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது ஷியாமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நீங்கள் என் கனவில் வந்தீர்கள் ஏதோ கட்டிடம் போல ஒன்றை எனக்குக் கொடுத்தீர்கள் என்று  ஷியாம் சொன்னபோது கடந்த இரண்டு நாட்களாகத்தானே அவருடைய சித்திரங்களை என் கவிதைகளோடு சேர்க்கலாம் என்று யோசித்தேன் என ஆச்சரியமாக இருந்தது. அதை நான் ஷியாமிடம் சொன்னேன். கூடவே நான் சித்திரங்களையோ ஓவியங்களையோ ‘பற்றி’ கவிதைகள் எழுதுவதில்லை; நான் கவிதைகளையும் சித்திரங்களையும் உரையாட வைப்பதே என் நோக்கம் என்று  ஷியாமிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவரோ என் யோசனைகள் அவர் கனவில் எழுப்பியதை இன்னும் நனவுபூர்வமாக வளர்த்தெடுக்கலாம்; அது யோகிகளின் சித்தர்களின் சாதனை; அது சாதாரண மனிதர்களுக்கும் வசப்படக்கூடியதே என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

 

No comments: