Wednesday, September 2, 2026

பிராக் (Prague) நகர வீதிகளில்: பகுதி 1 காஃப்கா












ஸ்டெஃபி எனக்கு  இத்தனை பத்தாண்டுகளாக நண்பராக இருப்பது எப்போது எப்படித் தொடங்கியது என்று யோசித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஜெர்மனியில், மே மாதத்தில் ஒரு நீண்ட பகல் நேர பஸ் பிராயணத்தில், நான் அவளை முதல் முதலில் சந்தித்தபோது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தாள்.  ஜெர்மனியில் மே மாதம் என்பது வசந்த காலம். மரங்களெல்லாம் பூத்துக்குலுங்கி கோலாகலமாய் இருக்கும். மேப்பிள்ஸ் மரங்களும் flame of the forest மரங்களும் வசந்த காலத்தைக் கொண்டாடுவது களேபரமாக இருக்கும்.  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்டெஃபியோ ஜன்னல் திரையை இழுத்துமூடியிருந்தாள். எனக்கு மே மாத வசந்தத்தை வெளியே பார்த்தபடி பிரயாணம் செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. பஸ்ஸில் எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. ஸ்டெஃபி பொன்னிறக் கூந்தலுடன் உயரமாக இருந்தாள். நான் அவள் ஸ்வீடனைச் சேர்ந்தவராக இருக்ககூடும் என்று நினைத்தேன்.  அவளிடம் எப்படி ஜன்னல் திரைகளைத் திறக்க சொல்வது என்று எனக்குத் தவிப்பாக இருந்தது. பொறுக்க முடியாமல் நான் எனக்கு நானே சொல்லிக்கொள்வது போல உலகமே பூத்துக்குலுங்கிறது ஆனால் எனக்கு பார்க்கக் கிடைத்ததெல்லாம் இந்த அசட்டுத் திரைச்சீலைதான் என்று ஆங்கிலத்தில் சத்தமாக அலுத்துக்கொண்டேன்.  ஸ்டெஃபி உடனடியாக என்னிடம் திரும்பி உனக்கு இந்த ஜன்னலோர இருக்கை வேண்டுமா என்று கேட்டாள். நாங்கள் இருக்கைகளை மாற்றிக்கொண்டபின் அவள் தூங்கப்போவதாகவும் தூங்கி என் தோளில் விழுந்தால் மன்னிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். நான் ஜன்னல் திரை விலக்கி வெளியே ஜெர்மனியின் கிராமங்களின் எழிலையும் வசந்தத்தையும் பார்த்துக்கொண்டே வந்ததில் மகிழ்ச்சியாக இருந்தேன். அந்த ஏழு மணி நேர பயணத்தில் இரண்டு மணி நேரம் அவள் என் தோளில் தூங்கியிருப்பாள். மீதி நேரம் முழுக்க அவளோடு அரட்டை கலகலப்பாக, நகைச்சுவையாகப் பேசிச் சிரித்து மகிழும்படி இருந்தது. பிரயாணம் முடிந்து விடைபெறுகையில் “You are a good travel companion” என்று சொல்லி விடைபெற்றாள். எல்லா உறவுகளுமே அப்படித்தான் என்று சொல்லி வைத்தேன். பிராக் நகரில் வசித்த ஸ்டெஃபிக்கு வுர்ஸ்பர்க்கில் அவருடைய உறவினர் யாரோ இருந்தார்கள். நான் வுர்ஸ்பர்க் வரும்போதெல்லாம் ஸ்டெஃபியும் அங்கு வருவாள். நாங்கள் வார இறுதிகளில் எங்காவது பயணம் மேற்கொள்வோம். லிஸ்பன், பாரிஸ், வெனிஸ், பிராக் எனப் பல ஊர்களுக்கும் ஸ்டெஃபியே என்னைச் சுற்றுலா அழைத்துச் சென்றாள். ஸ்டெஃபியின் சொந்த ஊரான பிராக் நகரின் வீதிகளில் அவளோடு சுற்றியது அலாதியான  அனுபவம். பல முறை பிராக் நகரைச் சுற்றி அலைந்ததை  எழுத முயற்சிக்கிறேன். 

 என்னைப் பொறுத்தவரை பிராக் நகரம் முதன்மையாக காஃப்காவுடையது.

பிரான்ஸ் காஃப்காவிற்கும் (1883–1924) பிராக் நகரத்திற்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது, பதற்றம் நிறைந்தது  பிரிக்க முடியாதது. அவர் தனது கடிதம் ஒன்றில், பிராக் நம்மை விட்டுவிடாது... இந்தத் தாயின் நகங்கள் கூர்மையானவை என்று பிரபலமாக எழுதியிருக்கிறார். காஃப்காவைப் பொறுத்தவரை, பிராக் உளவியல் சிறையாகவும், அதே நேரத்தில் அவரது உன்னதமான படைப்பாற்றலின் பிறப்பிடமாகவும் இருந்தது.

காஃப்கா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பிராக்கின் பழைய நகர (Old Town - Staré Město) பகுதிக்குள் இருக்கும் ஒரு சிறிய சுற்றளவிற்குள்ளேயே கழித்தார்.  முன்னாள் யூதக் குடியிருப்பின் எல்லையில் இருந்த வீட்டில் பிறந்த அவர் பழைய நகர சதுக்கத்தில் பள்ளிக்குச் சென்றார், சார்லஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார்,  நா போரிசி (Na Poříčí) தெருவில் உள்ள தொழிலாளர் விபத்துக் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்தக் குறுகிய பிரதேசம் உண்டாக்கும் நெருக்கடி, அவரது “விசாரணை” (The Trial), “கோட்டை”  (The Castle) ஆகிய நாவல்களில் காணப்படும் மூச்சுத் திணறவைக்கும், பிரமை போன்ற இடங்களை உருவாக்குவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில், பிராக் நகரம் வேகமாக செக்-தேசியவாத நகரமாக மாறிக் கொண்டிருந்தபோது, காஃப்கா அங்கு வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசும் சிறுபான்மையைச் சேர்ந்தவராக இருந்தார். அவர் யூதராக இருந்ததால்,  ஜெர்மானிய  மக்களிடமிருந்து அன்னியமானவராக இருந்தார். அவர் மதச்சார்பற்ற வாழ்க்கையை மேற்கொண்டதால் பழமைவாத யூத மதத்திலிருந்தும் அவர் தனிமைப்பட்டிருந்தார். தன் சொந்த ஊரிலேயே ஏற்பட்ட இந்தத் தீவிரமான அன்னியப்பட்டுப் போன நிலைதான், அவரது படைப்புகளில் உள்ள தனிமை, முகமற்ற அதிகாரம்,  குற்ற உணர்ச்சி போன்ற காஃப்காவிய (Kafkaesque) பாணி அபத்தங்களை தீர்க்கதரிசனத்தோடு எழுத வைத்தது. 

நானும் ஸ்டெஃபியும் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து காஃப்கா மாக்ஸ் பிராடை (Max Brod) சந்தித்த இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.

எனக்கு எல்லா இடங்களிலும் காஃப்கா தெரிந்தார். மூச்சுத் திணற வைக்கும் அதிகாரத்தை தன் தீர்க்கமான் விழிகளால் பார்த்த  காஃப்கா அல்ல—அவை எப்போதும் வெகு தொலைவில் இல்லை என்றாலும்—ஆனால் இந்த நகரத்தின் கட்டிடக்கலையிலேயே உறைந்திருக்கும் காஃப்கா. 

பிராக் நகரில், கட்டிடங்கள் உங்களுக்கு வெறுமனே தங்குமிடங்களைத் தருவதில்லை; அவை உங்களைக் கண்காணிக்கின்றன.  பிராக் கோட்டையின் புகழ்பெற்ற கல் விலங்குச் சிலைகள் (gargoyle), கோட்டை வளாகத்தின் நடுவே கம்பீரமாக நிற்கும் கோதிக் பாணி தேவாலயமான செயின்ட் விட்டஸ் கதீட்ரலின் உயர்ந்த கூரை விளிம்புகளிலும் வெளிச் சுவர்களிலும் அமைந்துள்ளன. 14-ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இந்த கல் அரக்கர்கள், கற்பனையான விலங்குகளையும் தீமையின் முகங்களையும் பிரதிபலிக்கும் அதே வேளையில், மழை நீர் வெளியேறும் குழாய்கள் (rain spouts) செயல்படுகின்றன.

ஒரு கட்டிட விளிம்பிலிருந்து கல் விலங்குச் சிலை வழிதவறிய பல ஆத்மாக்களைப் பார்த்து சலித்துப்போன  களைப்புடன் எட்டிப்பார்த்தது.  ஒரு திருப்பத்தில் திரும்பி 'அனுமதி'  என்று எழுதப்பட்ட ஒரு கதவைக் காண்பேன் என்று நான் அரைகுறையாக எதிர்பார்த்தேன், அது நிச்சயமாக 'அனுமதி இல்லை'  என்று எழுதப்பட்ட மற்றொரு கதவுக்குத்தான் இட்டுச்செல்லும், அதுவே இயல்பாக, வெளியேறுவதற்கான ஒரே வழியாகவும் இருக்கும்.

என் பார்வையைத் தொடர்ந்து, “இந்த கார்கோயில்கள்” என்றாள் ஸ்டெஃபி. “அவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. அவை இன்னும் செயல்பாட்டில் இருப்பவை.  அவைதான் இந்த நகரத்தின் அசல் கண்காணிப்பு அமைப்பு. கேமராக்கள் வருவதற்கு முன்பு, கார்கோயில்கள் இருந்தன. அவை அனைத்தையும் கவனித்தன. இப்போதும் கவனிக்கின்றன. அவை தங்கள் கண்டுபிடிப்புகளை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை, அவ்வளவுதான். அவை மிகவும் விவேகமானவை.” 

“காஃப்காத்தனமானது”  என்றேன் நான்.

 “ஆமாம், ஆமாம். காஃப்காத்தனமானது. சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த வார்த்தை. அவர்கள் அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறார்கள். தபால் நிலைய வரிசை காஃப்காத்தனமானது. டிராம் வண்டி கால அட்டவணை காஃப்காத்தனமானது. பியர் விலை காஃப்காத்தனமானது. அதன் உண்மையான அர்த்தம் அவர்களுக்குத் தெரிவதில்லை.” 

“அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன?”

 “அதன் அர்த்தம் என்னவென்றால், எந்த அர்த்தமும் இல்லாத ஒரு அமைப்பிற்குள் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள், ஆனால் உங்களால் வெளியேற முடியாது, ஏனென்றால் வெளியேறுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை. இது வெறும் அதிகாரம் பற்றியது மட்டுமல்ல. இந்த பிரபஞ்சம் உங்களுக்காக ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு, ஆனால் அந்த திட்டம் உங்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதப்பட்டுள்ளது, அதை நீங்கள் மொழிபெயர்க்க முயற்சி செய்யும் போதெல்லாம் உங்களுக்கு வேறு வேறு முடிவுகள் கிடைக்கின்றன. அதுதான் காஃப்காத்தனமானது. அப்புறம், அந்த தபால் நிலைய வரிசையும் தான்.”

ஜோதிடத்தைப் பற்றி நான் நினைத்தேன்.

பல மொழிகளில் 'அனுமதியின்றி நுழையக் கூடாது' என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை கொண்ட ஒரு அரசு கட்டிடத்தைக் கடந்து சென்றோம். அதற்கு கீழே, ஒரு சிறிய பலகையில், 'அனுமதிக்கு, தயவுசெய்து உள்ளே நுழையவும்' என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பலகையின் முன்னால் நான் நீண்ட நேரம் நின்றதாக உணர்ந்தேன்.விட்கைன்ஸ்டனின் நகைச்சுவை “Private sign. Do not read” நினைவுக்கு வந்தது. 

 “பார்த்தியா? இதைத்தான் நான் சொல்கிறேன். இந்த நகரம் இதுபோன்ற நகைச்சுவைகளால்  நிறைந்தது. இந்த பலகைகளை எழுதும் அதிகாரிகள் முட்டாள்கள் அல்ல. தாங்கள் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அபத்தங்களின் தத்துவவாதிகள். அவர்கள் காஃப்காவின் பேரக்குழந்தைகள்.”

“நாம் உள்ளே நுழைய முயற்சிக்கலாமா?”

“ஏன்? அந்த முரண்பாட்டைச் சோதிக்கவா? பிரபஞ்சம் நொறுங்கி விழுகிறதா என்று பார்க்கவா?”

1916-1917 இல், தனது சத்தம் மிகுந்த குடும்ப வீட்டிலிருந்து தப்பிக்க விரும்பிய காஃப்கா, பிராக் கோட்டை (Prague Castle) வளாகத்தின் சுவர்களுக்குள் அமைந்திருந்த 22ஆம் எண் கொண்ட நீல நிற சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். இந்த அமைதியான, விசித்திரமான கல் வீட்டில்தான் அவர் தனது பல சிறுகதைகளை எழுதினார். அவரது ஜன்னலுக்கு வெளியே அச்சுறுத்துவது போல்  நின்றுகொண்டிருந்த, நுழைய முடியாத அந்தப் பிரம்மாண்டமான கோட்டையின் தோற்றமே, அவரது சிறந்த படைப்பான “கோட்டை” (The Castle) நாவலுக்கு நேரடித் தூண்டுதலாக அமைந்தது.

ஸ்டெஃபி என்னிடம் பேசிக்கொண்டே வந்தாள்:

“இந்த நகரம் உன்னிடம் பேசும், ஆமாம். ஆனால் அது புதிர்களுடன் பேசும். உனக்குப் புரியாத நகைச்சுவைகளைக் கூறும். எங்கும் இட்டுச் செல்லாத வழிகளைக் காட்டும். இதுதான் செக் (Czech) வழிமுறை. ஜெர்மானியர்கள், ஆஸ்திரியர்கள், ரஷ்யர்கள் என அனைவராலும் ஆக்கிரமிக்கப்பட்ட  மக்கள் நாங்கள்—எங்களிடம் இருந்த ஒரே ஆயுதம் எங்கள் நகைச்சுவை மட்டும்தான். எனவே, நாங்கள் அதை கூர்மையாக்கினோம். அதை ஒரு கத்தியாக மாற்றினோம். இப்போது, அர்த்தத்தைத் தேடி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வெட்டிப் பேச்சுகளை வெட்டி எறிய அதை நாங்கள் பயன்படுத்துகிறோம்.” 

அவள் சற்று இடைநிறுத்தி,  புன்னகையுடன் என்னை நோக்கித் திரும்பினாள். "நான் சும்மா விளையாட்டிற்குச் சொன்னேன், நிச்சயமாக. எங்கள் ரொட்டியில் வெண்ணெய் தடவவும் நாங்கள் நகைச்சுவையைத்தான் பயன்படுத்துகிறோம்.”

நாங்கள் பியர் அருந்துவதற்காக ஒரு உணவகத்தினுள் நுழைந்தோம்.

காஃப்காவின் குட்டிக்கதை, “The Little Fable” ஐ ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டோம். அந்தக் குட்டிக்கதை, பின்வருமாறு:

"ஐயோ!" என்றது சுண்டெலி, "உலகம் நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே வருகிறதே. முதலில் இது மிகவும் பரந்ததாக இருந்தது, எனக்கு பயமாக இருந்தது, அதனால் நான் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தேன். தூரத்தில் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் சுவர்கள் தெரிவதைக் கண்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இந்த நீண்ட சுவர்கள் மிக வேகமாக ஒன்றோடொன்று நெருங்கி வருகின்றன, நான் ஏற்கனவே கடைசி அறைக்குள் வந்துவிட்டேன், அங்கே அந்த மூலையில் நான் ஓடி விழப்போகும் ஒரு பொறி இருக்கிறது.”

"நீ உன்னுடைய ஓடும் திசையை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்றது பூனை, சுண்டெலியை அப்படியே கவ்விப் பிடித்து விழுங்குவதற்கு முன்னால்.

“நான்தான் பூனை” என்றாள் ஸ்டெஃபி.

அப்படியே ஆகட்டும் என்று நான் வாளாவிருந்தேன். 

---

புகைப்படம் 1: gargoyle கல் அரக்கன்

புகைப்படம் 2: பிராக் கோட்டை நுழைவாயில்

புகைப்படம் 3: காஃப்காவின் நீல நிற வீடு 

No comments: