Saturday, August 20, 2011

முகக்குறிப்பு


இந்த வலைத்தளத்தை சுமார் இரண்டாயிரம் பேர் வாசிக்கிறார்கள் என எனக்குத் தெரிய வந்திருக்கிறது; எராளமாய் மின்னஞ்சல்கள் வேறு வந்த வண்ணமிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் பதிலெழுத தயாராக இருக்கிறேனா என்று தெரியவில்லை. பலருக்கு என்னைப் பற்றி என்னை விட அதிகமாக தெரிந்திருக்கிறது. அதனால் சில விபரங்களைச் சொன்னால் நல்லது என்று இந்த இடுகையை எழுதுகிறேன்.
1993 ஆம் ஆண்டு நியூயார்க் நகரிலுள்ள கிழக்கு கிராமத்தில், side walk என்ற இரவு விடுதியில் டோனி ப்ரெட்டை சந்தித்தேன். டோனி ஆப்பிரிக்க அமெரிக்கன்; கிடாரும் சாக்ஸஃபோனும் வாசிப்பான், நல்ல பாடகன், நன்றாக நடனமும் ஆடுவான். வீதிகளிலும் இரவு விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவான்; நிகழ்ச்சி முடியும்போது இரவு விடுதியென்றால் கிடாரையோ தொப்பியையோ சுற்றுக்கு அனுப்பி வசூலிப்பான். வீதியென்றால் தன் முன் விரித்துள்ள துண்டில் என்ன விழுகிறதோ அதை சேகரிப்பான். இவ்வாறுதான், இவ்வளவுதான் அவன் வருமானம். என்ன கிடைக்கிறதோ அதை உடனடியாக கொண்டாடி செலவழித்து விட்டால்தான் அவனுக்கு நிம்மதி. அவனுடைய சாக்ஸஃபோன் இசைக்கு நான் என்றென்றும் அடிமை. டோனி experimental jazz இசையில் ஒரு மேதை. அவன் எங்கெல்லாம் வாசிக்கிறேனோ அங்கெல்லாம் தேடி தேடிப் போய் அவன் இசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சீக்கிரமாகவே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். ஒரு இரவு விடுதியில் நான் ஏதாவது ஒரு பாடலை உடனடியாக எழுதித் தந்தால்தான் ஆயிற்று என்று அவன் வற்புறுத்தினான். சரியென்று கையில் கிடைத்த பேப்பர் நாப்கினில் ‘ஓ மம்மா ஓ பப்பா’ என்று நர்சரி ரைம் போல ஒன்றை எழுதிக் கொடுத்தேன். ஆனால் அதை டோனி பாடிய முறையிலும் சாக்ஸஃபோன் அதனோடு இழைந்த விதத்தினாலும் சொக்கவைக்கும் தருணங்களைத் தந்தது. அந்தப் பாடலைக் கேட்டு ஒரு பொன்னிற கூந்தல் அழகி இயல்பாக ஆடிய பெல்லி டான்ஸ் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. 
அதன் பிறகு டோனியோடு தொடர்பு அறுந்து விட்டது. மீண்டும் 2004 இல் வாஷிங்டன் நகரில் நேஷனல் பார்க் ரயில் நிலையத்தின் அருகாமையில் அவன் சாக்ஸஃபோன் வாசித்துக்கொண்டிருந்தபோது பார்த்தேன். நீண்ட பொடிச்சடை போட்டுக்கொண்டு எதிர்காலம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாதவனாக வழக்கம் போலவே மகிழ்ச்சியாக இருந்தான். டோனியின் மூலமாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று சகல இடங்களிலுமுள்ள பல இசைக் கலைஞர்களும் இசைக்குழுக்களும் எனக்கு அறிமுகமாயின. லண்டன், பாரீஸ் முதல் அடிஸ் அபாபா வரை பல இடங்களுக்கு நான் பயணம் செய்தபோதெல்லாம் டோனியின் தொடர்பினால் வித விதமான இசைக் கலைஞர்ளின் நட்பு கிடைத்தது. அவ்வபோது குழுக்களுக்கு பாடல்கள் எழுதுவதும் தொடர்ந்தது. அவனுக்கு நான் ஒரு பெரிய புதிரான ஆளாகவே இருந்தேன். சைவ உணவு மட்டுமே உட்கொள்வது, அதிகாலையில் சிவ பூஜை செய்யாமல் ஒரு கவளம் உணவு கூட சாப்பிடாதது, இட்லி, தோசை, தயிர் சாதம் கிடைத்துவிட்டால் வெகுவாக திருப்தி அடைந்து விடுவது என என்னுடைய எல்லா பழக்கங்களுமே அவனுக்கு என் மேல் ஒரு வித பரிதாபத்தையும் பாசத்தையும் ஏற்படுத்தின. ஒரு முறை என்னை அவனுடைய தங்கையிடம் அறிமுகப்படுத்தியபோது இவனை மாதிரி உனக்கு நல்ல மாப்பிள்ளை அகிலத்திலும் கிடைக்கமாட்டான் ஆனால் என்ன இழவு புல் பூண்டுதான்  சாப்பிடுவான் என்றான். ஒரே ஒரு முறை நுகூகி வா தியோங் ஓவின் புகழ் பெற்ற ‘Decolonising the mind’ புத்தகத்தைப் பற்றி பேச்சு வந்தபோதுதான் அவன் எவ்வளவு பெரிய படிப்பாளி என்று எனக்குத் தெரிய வந்தது. நான் இந்தியா முழுவதும் ஆதிவாசி பண்பாடுகளையும் கலைகளையும் சேகரிப்பதையும் ஆராய்ச்சி செய்வதையும் அவன் ஆர்வமாகத் தெரிந்து கொள்வான். இந்தியா முழுவதும் பல கதை சொல்லிகள் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காப்பியங்களை வாய்மொழியாகவே கற்று வாய்மொழியாகவே நிகழ்த்தி வருகிறார்கள் என்பது டோனிக்கு பெரிய மரியாதையை இந்தியா மேல் ஏற்படுத்தியது. 
டோனிதான் மறைந்த தோல்பாவைக் கூத்து கலைஞர் சிவாஜி ராவைப் போலவே என் கலை இலக்கிய பார்வையை தீர்மானித்தவர்களில் முக்கியமானவன். தத்துவ நோக்குகளின், மதங்களின், அரசியல் பார்வைகளின் சுமை இல்லாமல் அதி சுதந்திரனாக வாழ்வையும், கலையையும், இலக்கியத்தையும், எதிர் காலத்தையும் பார்க்க அவன் எனக்குச் சொல்லித்தந்தான். அதீத எளிமையை நோக்கிச் சென்ற அவன் வாழ்வு முழுச்சுதந்திரமான கணங்களின் தொகுப்பான இசையைப் படைக்க அவனுக்கு உத்வேகமளித்தது. அதே பாக்கியம் எனக்கும் வாய்க்கட்டும். 
2010ஆம் ஆண்டிலிருந்து டோனியோடு தொடர்பு அறுந்துவிட்டது. எந்த ஊர்த் தெருவில் எப்போது இனி அவனை சந்திப்பேனோ?

No comments: