Tuesday, August 23, 2011

ராஜேஷ்: ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம்


குட்டிக் கதை
ராஜேஷை உங்களுக்குத் தெரியாதுதானே? நான் அதை எதிர்பார்த்ததுதான்.  இன்றைய இணைய தலைமுறை வாசகர்களுக்கு பழைய ஆட்களைத் தெரிந்திருப்பதில்லை. பல இணைய ஆவணக்காப்பகங்கள் இன்றைக்கு செயல்பட்டு வந்தாலும் பழையஆட்களை மீண்டும் மீண்டும் புது ஆட்களைப்போலவே அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த பழைய ஆள் எழுதுபவராக இருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம் இறந்தவன் எப்படி உயிர் பெற்று வரலாம் என்று துண்டறிக்கைகள் பறக்கும். ஆனால் ராஜேஷ் என்ற பெயரை வைத்தே நீங்கள் முடிவு செய்து விடலாம் அவர் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதுகளில் பிறந்தவர் என்று. அறுபதுகளில்தான் தமிழ் நாட்டுத் தாய்மார்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் குழந்தைகளை சுரேஷ், ராஜேஷ், மகேஷ், சதீஷ் என்று பெயர் வைப்பது வழக்கமாக இருந்தது. தாய்மார்களின் மாமியார்கள் தஙகள் பேரப்பயல்களை கூப்பிட ‘ஷ’ வாயில் நுழையாமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். பயல்கள் வளர்ந்து கல்லூரி செல்லும்போது தூய தமிழில் தங்கள் பெயரை ராசேசு, சந்தோசு என்றவாறே எழுத நேரிட்டது. இது பிடிக்காமல்தான் ராஜேஷ் உஸ்ருளா நுஃருன்னிஸா என்ற புனை பெயரைத் தேர்ந்தெடுத்தான் என்று நினைக்கிறேன். உஸ்ருளா நுஃருன்னிஸா என்ற பெயரில் ராஜேஷ் பல வரலாற்று கட்டுரைகளை எழுதியிருக்கிறான். அவன் தமிழகத்தில் நடந்த கிறித்தவ மத மாற்றங்களைப் பற்றி, ‘கட்டுவிரியன் குட்டி பாம்புகளே, மனம் திருந்துங்கள்’ என்ற கட்டுரையை எழுதிய கையோடு என்னை எண்பதுகளின் மத்தியில் சந்தித்தான்.
கவனிக்க: நான் இந்தக் குட்டிக்கதையில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. மற்றதெல்லாம் உள்ளது உள்ளபடி.
வரலாறென்றால் வெகுஜன இயக்கங்கள், பெரும் தேசியத் தலைவர்கள், போராட்டங்கள், அரசர்கள், அரசிகள், சதி வேலைகள், கூட்டங்கள், ஆவேசப் பேச்சுகள் என்று மட்டுமே நினைத்திருந்த ராஜேஷுக்கு நான் எழுதியிருந்த ‘’தமிழ் மறமகளிருக்கு அசரீரீ சொன்ன கதை’ வெகுவாக பாதித்தது. அந்தக் கதையில் நான் தமிழகத்தில் எப்படி பரோட்டா என்ற வடக்கத்திய உணவு எப்படி அறுபதுகளின் இறுதியில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பரவலாயிற்று என்று ஒரு பத்தி எழுதியிருந்தேன். ராஜேஷ் மைதா மாவு பரோட்டாவால் சிறு வயதில் மிகுந்த மன பாதிப்புக்கு ஆளானவன். தன் பெற்றோரிடத்து குழந்தையாயிருக்கையில் ‘ஒரு ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு ஒரே ஒரு ராணியாம். அவர்களுக்கு ஒரே ஒரு பையனாம். அவர்கள் வீட்டில் பரோட்டாவே கிடையாதாம் எப்பொழுதுமே இட்லி, தோசை, அரிசிச் சோறுதானாம்’ என்று கதை சொல்ல அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கண் கலங்கிவிட்டதாம். என் கதையில் பரோட்டாவின் வரலாற்றை படித்ததும் தானும் ஒரு வரலாற்று நாயகன், தன் வரலாறும் வரலாறுதான் என்று அவனுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. நாம் பங்கு பெறாத வரலாற்றைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்டது வேறு அவனுக்கு என் மேல் அபிமானத்தை அதிகப்படுத்திவிட்டது.
நான் அந்தக் காலகட்டத்தில் ஊர் ஊராகச் சென்று அமைப்பியல் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்தேன். இனையம், மின்னஞ்சல், கைபேசி எதும் இல்லாத அந்த கற்காலத்திலேயே நான் எங்கே பேசினாலும் அதைத் தெரிந்து அங்கே அவன் வந்துவிடுவான். இலக்கியத்தைப் படைப்பதற்கும் வாசிப்பதற்கும், தரிசனம், உள்ளொளி, ஞான மரபு, மெய்யியல், ரசனை, குலம், ஆத்ம பலம் போன்ற பத்தாம் பசலி கருத்துருக்கள் எல்லாம் பீலா என்பதில் கொள்கைப்பிடிப்புள்ளவனாக இருந்தான். ‘முனியாண்டி விலாஸ்’ ‘மிளகுத்தண்ணியும் காலனீயமும்’ ஆகிய படைப்புகள் அவன் எழுதியவற்றுள் மிகவும் முக்கியமானவை. எப்பொழுது பார்த்தாலும் சாப்பாட்டு பதார்த்தங்களைப் பற்றிதான் வரலாற்று ஆசிரியர்கள் கவலைப்படுகிறார்கள், பரோட்டாவைப் பற்றியெல்லாம் கதைகளில் எழுதும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லையென்றால் எந்தக் குழந்தை என்ன வயதில் நம்மிடத்தில் வந்து கண் கலங்குமோ என்றெல்லாம் உரைகளின் போது இடையிடையே நான் சொன்னதெல்லாம் அவனை மறைமுகமாக இடிக்கத்தான் என அவன் என்னிடத்தில் வருத்தமடைந்தது நியாயமானதுதான். அதற்காக சொல்லாமல் கொள்ளாமல் என்னுடன் உறவை முறித்துக்கொள்வான் என்று என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை.
என்னுடைய வெற்று அகந்தையினாலும் சமயத்திற்குப் பொருந்தா நகைச்சுவை உணர்வினாலும் ராஜேஷ் என்கிற உஸ்ருளா நுஃருன்னிஸாவின் நட்பை இழந்தேன். 
அது சரி குட்டிக்கதை எங்கே என்கிறீர்களா? குட்டி சொன்ன கதைதான் குட்டிக் கதை.

No comments: