Sunday, August 21, 2011

நாட்டுக்கோழி பிரியாணி


'நாட்டுக்கோழி பிரியாணி' என்ற நாடகத்தை நான் 1999இல் எழுதினேன். நான் எழுதிய பிற நாடகங்களைப் போலவே இந்த நாடகத்தையும் மங்கோலிய சர்கஸ்காரிகளே நிகழ்த்த முடியும் என்ற காரணத்தால் 'நாட்டுக் கோழி பிரியாணி' இன்றும் அரங்கேற்றப்படாமலே இருக்கிறது. இன்றைக்கு இருப்பது போல இணையம் அன்று வளர்ச்சி அடைந்திருக்குமானால் மங்கோலியாவிலேயே அந்த நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.

தலைப்புதான் நாட்டுக்கோழி பிரியாணி என்றிருக்கிறதே தவிர அந்த நாடகம் உருவான சூழலும் அதன் உள்ளீடும் மிகவும் சீரிய வினைத்திட்பமுடையனவாகும்.

முதலில் நாடகம் உருவான சூழல் குறித்து: 1999இல் நானும் இன்று பிரபலமாக இருக்கும் ஹிந்தி நடிகை ஒருவரும் பௌத்த தியான முறையான விபாசனா செல்வழியை கற்றுகொள்ளத் துணிந்தோம். ஹிந்தி நடிகைக்கு அப்போது காதல் முறிவு நானோ தீர்க்கவியலா துக்கத்திலிருந்தேன். என் பெரும் தொந்தியை வைத்துக்கொண்டு நௌலி, திரிமடங்காசனம் என்றெல்லாம் செய்யச்சொல்லமாட்டார்கள் என்பது விபாசனா செல்வழியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்தது. பதினைந்து நாளா என்று முதலில் பயந்தாலும் வேறு போக்கிடம் இல்லாததால் சேர்ந்து தொலைவோம் என்று முடிவு செய்தோம். சென்னை புற நகர் பகுதியில் புறவுலகுத் தொடர்பில்லாத தென்னஞ்சோலையில் அந்த ஆஸ்ரமம் அமைந்திருந்தது. சிங்கள புத்த பிக்கு ஒருவர்தான் எங்கள் செல்வழியின் குரு. அவர் சிங்களவர் என்று தெரிந்த நிமிடமே என் தமிழ் உள் மனம் அவரை குருவாக ஏற்க மறுத்துவிட்டது. அவருடைய நெறிமுறை கட்டளை ஒவ்வொன்றிற்கும் என் மனம் ஏட்டிக்கு போட்டியாய் இயங்கிக்கொண்டிருந்தது. அவர் மனதிற்குள் இலவம் பஞ்சுப்பொதியினை கற்பனை செய்து அதில் தண்ணீரை ஊற வைத்து அதை நன்றாகப் பிழியுங்கள் என்றால் நான் அவருடைய சங்கை நெறித்துக்கொண்டிருப்பேன். வைர சூத்திரம் உரையின் போது அவரைக் காமக்கொடூர களியாட்டங்களில் ஈடுபடுபவராக மனம் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு, செல்வழியின் தினசரி ஒழுங்கு முறை சுத்தமாக எனக்கு ஒத்து வரவில்லை. அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிட வேண்டும். நெறிமுறை கட்டளை உரையின்போதன்றி பிறகு எப்போதும் பதினைந்து நாளும் மௌன விரதம் காக்க வேண்டும். மதியம் ஒரு வேளை சாத்வீக கஞ்சி மட்டும்தான் உணவு. தரையில் கோரைப்பாயில்தான் படுக்க வேண்டும். இரண்டாம் நாளே பசியிலும் கோபத்திலும் நாக்கு தள்ளிவிட்டது. உலகமே களித்து கும்மாளமிடும்போது நான் மட்டும் துயரத்தின் அதள பாதாளத்தில் விழுந்துகொண்டிருப்பதான எண்ணம் என் உடல், மனம் எங்கும் வியாபித்தது. ஹிந்தி நடிகையோ மணி தோறும் இளைத்து மேலும் மேலும் கவர்ச்சியாகிக்கொண்டிருந்தாள். நான்காம் நாள் இரவு அவள்தான் எனக்கு அந்த அபூர்வ யோசனையை சொன்னாள். இரவு எட்டு ஒன்பது மணிக்கு பிக்குகள் எல்லோரும் நன்றாகத் தூங்கியபின் மதிலெட்டி சாடி பழைய மகாபலிபுரம் சாலைக்குப் போய் வயிறு புடைக்க சாப்பிட்டு வந்துவிடுவோம் என்றாள். ஐந்தாம் நாள் காலையிலிருந்தே மதிலெட்டி சாடுவதன் குதூகலம் என்னை ஆட்கொண்டிருந்தது. பௌத்த புனித மந்திரமான ‘ஓம் மணி பத்மே ஹும்’ ஓதும்போது பரோட்டாவும் சால்னாவும் நினைவுக்கு வந்து வாயில் உமிழ் ஊறியது. அன்றிரவு ஹிந்தி நடிகை என்னை விட லகுவாகவும் வேகமாகவும் மதிலெட்டி குதித்தாள். பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு ஓமடைஞ்ச சிறு உணவகம்தான் திறந்திருந்தது. நாட்டுக்கோழி பிரியாணி மட்டும்தான் இருந்தது. நீ சைவமாச்சே என்றாள் நடிகை. நான் மண்ணாங்கட்டி என்றேன். மூன்று நான்கு கவளம் அந்த காரசாரமான பிரியாணி உள்ளிறங்கியபோது கண்களில் ஆனந்தத்தில் நீர் கட்டியது. வெடித்து சிரித்தோம். திரும்பி ஆஸ்ரமத்திற்கு வரும்போது இயல்பாக கைகளைக் கோர்த்துக்கொண்டோம். மெலிதாக முத்தமிட்டுக் கொண்டோம். அந்த சிறிய தூரத்தை இணைந்து கடந்ததில் எங்களிடையே மிக ஆழமான நட்பு உருவாகியிருந்தது. விபாசன செல்வழியின் இதர நாட்களை நாட்டுக்கோழி பிரியாணியின் நினைவிலேயே தட்டுத்தடுமாறி கழித்து விட்டோம். 

பல வருடங்களுக்கு பிறகு ஃபிலிம்ஃபேர் விழா ஒன்றில் அந்த ஹிந்தி நடிகையை சந்தித்தேன். மும்பய் அருகே ஒரு மாத கால தியான செல்வழி ஒன்று இருக்கிறது போலாமா என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள்.

‘நாட்டுக்கோழி பிரியாணி’ நாடகத்தின் உள்ளீடு என்ன என்று உங்களுக்கு இப்பொழுதே தெரிந்திருக்குமே! பல ஜென் தருணங்கள் நிரம்பியது என்பதற்கு நான் உத்தரவாதம். என்ன, பல மதில்கள் எட்டி சாட வேண்டியிருப்பதால் மங்கோலிய சர்கஸ்காரிகள்தான் அதை நிகழ்த்த முடியும்.

No comments: