Monday, October 31, 2011

பாரீசிலிருந்து சாரு நிவேதிதாவிற்கு


சாரு நிவேதிதா
அன்பு நண்பர் சாரு நிவேதிதாவிற்கு,

இரண்டு நாள் பயணமாக பாரீசுக்கு வந்தேன். நாளை இரவு மீண்டும் சென்னையில் இருப்பேன். கருத்தரங்க தேநீர் இடைவேளையில் உங்கள் blog-இல் நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தைப் படித்தேன். இரவு விருந்தில் ஹெலன் சிக்சு, அரியான் முஷ்கின், ஜூலியா கிறிஸ்தவா ஆகியோரை சந்திப்பதாக ஏற்பாடு. கருத்தரங்கு பாம்பிதூ நூலகத்தின் மேல் தளத்தில். கிறிஸ்தவாவின் மாணவி ஒருவரே எனக்கு உதவியாளர். நான் உங்கள் கடிதத்தைப் படித்துவிட்டு சிரித்தேனா அந்த மாணவி என்ன விஷயம் என்று கேட்டார். நகைச்சுவை, பொய், புகழ்ச்சி மூன்றுக்கும் மயங்காத பெண்ணோ கலைஞன்/எழுத்தாளனோ உலகத்திலுண்டோ என்று கேட்டேன். பிறகு உங்கள் கடிதத்தை எனக்குத் தெரிந்த ஃப்ரெஞ்சு, ஆங்கிலத்தில் அவளுக்கு மொழி பெயர்த்துச் சொன்னேன். 

அவளுக்கு உங்கள் கடிதத்தின் ஒரு அம்சம் மட்டும் பிடிக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டை மறைமுகமாக தாழ்த்த காங்கோ என்று நீங்கள் குறிப்பிட்டது.  அதிலும் உண்மையிலேயே மாகுவே கபாம்பா என்று காங்கோ நாட்டின் பெண் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறாராம். அவர் ‘காலனீயக் கடன்’ என்ற புகழ் பெற்ற நூலை எழுதியிருக்கிறாராம். அவர் ஷேக்ஸ்பியர் எழுத்தாளரே இல்லை என்று வாதிடுவதற்கு வாய்ப்பே இல்லையாம். எப்படி அப்படிச் சொல்லப்போச்சு உங்கள் நண்பர் என்று பிடி பிடியென்று பிடித்துவிட்டார். இல்லை சாரு சொல்வது கற்பனையான பாத்திரம் என்று விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. மேலும்  நிஜ வாழ்க்கை மனிதர்களை அவர்களை நினைவூட்டுகின்ற வகையிலேயேதான் நீங்கள் புனைவுகள் எழுதுவீர்கள் அந்தப் பழக்கமே இந்தக் கடிதம் எழுதும்போதும் கையில் வந்துவிட்டது அவருக்கு ஆனால் அவர் சொல்கிற கபாம்பா கற்பனை நிஜ கபாம்பாவுக்கு எந்த சம்பந்தமுமில்லை என்றேன். காங்கோ ஆப்பிரிக்க நாடு என்பதினால் கறுப்பர்கள் நாடு என்பதினால் எப்படி வளர்ச்சி குன்றியது என்ற பொருள் தரும்படி நீங்கள் எழுதலாம் என்றாளே பார்க்கலாம் அடுத்து. கிறிஸ்தவாவுடன் இரவு விருந்திற்கு அழைத்துச் செல்வாளோ மாட்டாளோ என்று எனக்கு பயமாகிவிட்டது.

சாருதான் பாட்ஷா பட ரஜினி மாதிரி புதிதாய் மாறிவிட்டேன் என்கிறாரே என்று பாட்ஷா ரஜினி கதாபாத்திரம் பற்றி கார்தி நோருக்கு ஃபோன் பண்ணி தமிழ் நண்பர்களிடம் கேட்டேன். ஆமாம் அந்தப் படத்தில் ஆட்டோக்காரராய் நல்ல பிள்ளையாய்தான் பழைய தாதா வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இருப்பார். ஆனால் அவ்வபோது எனக்கு வேறு ஒரு பெயர் இருக்கிறது என்று ஆட்காட்டி விரலைத் தூக்கிக்காட்டி எல்லோரையும் நையப்புடைப்பார், மணவடையிலிருந்து மணமகளைக் கூட்டிச் செல்வார், பழைய அடிதடியை ஞாபகப்படுத்தி எல்லோரையும் பின்னி எடுத்துவிடுவார் என்றார் அந்த நண்பர். உங்கள் கடிதத்தில் உள்ளதை அப்படியே அவருக்குப் படித்து காட்டினேன். முத்து நீ செத்தாய், எக்சைல் நாவலைப் படித்துவிட்டு, நரை மூப்பு எல்லாம் வந்து விட்டது சாருவுக்கு என்று நினைத்து குப்பை கிப்பை என்று ஏதாவது நீ எழுதினியோ நான் முன்பு எப்படி தெரியுமான்னு கேட்டு உன்னை விளக்குக் கம்பத்தில் டின் கட்டிவிடுவேன் ஜாக்கிரதை என்கிறார் சாரு என்றார் நண்பர்.

கிறிஸ்தவா மாணவி ஒரு கோப்பை வைன் கொண்டுவந்தாள். இரவு விருந்திற்கு அரியான் முஷ்கினின் புற நகர் நாடக அரங்கிற்கு செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் சிறிது நடனமாடிவிட்டுப் போகலாம் என்றாள் அந்த மாணவி. 

பாரீஸின் குளிருக்கு வைன் குடித்தது கத கதப்பாகவே இருக்கிறது. சாரு உண்மையிலேதான் பாராட்டுகிறார் போலும் என்றும் தோன்றுகிறது.

2 comments:

manjoorraja said...

எப்படியய்யா இப்படி... சிரிக்காமெ சிரிக்க வைக்கறீங்க...... ம்ம்... நடத்துங்க.... எங்களுக்கும் பொழுது போகணும்லெ....

மாற்றுப்பிரதி said...

உண்மையில் சாரு திருந்தியிருக்க வாய்ப்புக்கள் இருக்கிறதா தெரியவில்லை..
ஒரு வேளை இருக்கலாம். அவருக்கு போட்டியாக கருதும் எழுத்தாளர்களை அவர் பட்டியலிட்டுக்கொண்டிருக்கும் அதே தருணத்தில், வல்லினம் என்ற இணைய இதழில்
நான் சொல்லியிருப்பதை அவர் வாசிப்பாரென்று நினைக்கிறேன்.....

Riyas Qurana