போகத்தின் வழி திசைகளை காலங்களாகவும் ஆசைகளை நிலப்பகுதிகளாகவும் மாற்றி அமைக்கின்ற பெண் வேடமிட்ட பெண்ணிடம் சிக்கி போகம் துய்த்து மனப்பிறழ்வடைந்த அரசியல் செயல்வீரனாகிய என் நண்பனின் கதை இது. என் நண்பன் சொல்லக் கேட்டவற்றையும், அவனது டைரிக்குறிப்புகளையும், என் சொந்த அனுபவத்தையும் இணைத்து இக்கதையை உருவாக்கியிருக்கிறேன். இக் கதையை வாசிப்பவர்கள் சித்தப்பிரமையடையக் கூடுமென்று முதலிலேயே எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும் இக்கதையில் விவரிக்கப்படும் போகதந்திரமுறைகள் முழுக்க முழுக்க புனைவுகளே ஆகும் என்றும் அறிவிக்கிறேன். கதையை வாசித்து முடித்தபின் இப்பகுதியை மீண்டுமொருமுறை வாசிக்கவும். அடையாளப்படுத்துதல்கள் அவசியமில்லையென்றாலும் கதையின் வசதிக்காக என் நண்பனின் பெயரை ஜெயராஜ் என்றும் பெண் வேடமிட்ட பெண்ணின் பெயரை ஹம்ஸேஸ்வரி என்றும் என் பெயரைச் சந்திரன் என்றும் குறிக்கிறேன்.
ஹம்ஸேஸ்வரி! வணங்குகிறேன். பெண்களின் பெண்ணே! பேரழகின் இருப்பிடமே! வசீகரத்தின் வசீகரமே! இக்கதையை வெளிச்சொல்வதற்காக என்னை ஏதும் செய்துவிடாதே. ரகசியங்களைக் காப்பாற்றும் சக்தியற்ற பலவீனன் நானென்றாலும் லௌகீக வாழ்க்கையை விரும்புபவன். லௌகீகத்திற்குத் தேவையான அறிவை ஜெயராஜிடமிருந்து பறித்தது போல என்னிடமிருந்தும் பறித்துவிடாதே. ஹம்ஸேஸ்வரி!
ஹம்ஸேஸ்வரி ஹம்ஸேஸ்வரி ஹம்ஸேஸ்வரி ஹம்ஸேஸ்வரி இல்லை என்னை நீ கைவிடமாட்டாய். எதிர்காலமாயும் எனவே சாவாகவும் இறந்தகாலமாயும் எனவே மரபாகவும் விளங்கும் மேற்கிலிருந்து ஆமாம் மேற்குத் திசையிலிருந்து உன் வெப்ப மூச்சுடன் கூடிய மந்திரக்குரல் ஒலிக்கிறது.
பூமியைத் தீண்டு. பூமியைத் தீண்டு. பூமிமைய காமாக்னியைத் தீண்டு. பூமியின் ஸ்பர்ஸம் எந்தனுடல் ஸ்பர்ஸம். வா. தீண்டு. தொடு. இப்போதே. இங்கேயே.வா.தீண்டு. சந்திரா உன் குளிர்ந்த ஓளிக்கிரணங்களால் என்னைத் தழுவு. வா. உன் விரல்களின் வெம்மைக்காக என் இடை குறுகுறுத்து துவள்கிறது. தீண்டு. தொடு. இப்போதே இங்கேயே.
எழுதிக்கொண்டிருந்த சந்திரன் கதையை நிறுத்திவிட்டு வெளியே பார்த்தான். ஆமாம் பெண் வேடமிட்ட பெண் பூமிதான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். வெளியே தோட்டத்தில் தூபமாய் பனிமூட்டம் இறங்கிக்கொண்டிருந்தது. மேற்புறத்தில் மட்டும் ஈரம் படிந்து உள்ளே வெப்பமான புழுதியை மறைத்து வைத்திருந்ததால் எழுந்த மண்வாசனை பெண்ணின் நறுமணமென பவளமல்லி மரத்தினைச் சூழந்திருந்தது. மேகங்களிடமிருந்து அப்போதுதான் வெளிப்பட்ட நிலவின் ஒளியில் தூரத்தில் தெரிந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆசையின் மடிப்புகளென கோடிக்கணக்கான பெண்களின் தாப இடுப்புகளென மடிந்து மடிந்து நீண்டு கிடந்தது. மேகங்களின் வெப்பப் பெருமூச்சுக்களோடு சந்திரன் மலைஇடுப்புகளைத் தழுவ விரைந்தோடிக்கொண்டிருந்தான்.
பூமியின் வசியம், பெண்ணின் வசியம். வசிய கோபத்தில் அவள் உள் நடுங்கிச் சீறியபோது சந்திரனைத் தழுவ ஆவேசமாய் எழுந்தவைதானே மேற்குத் தொடர்ச்சி மலைகள். அப்போது தாபத்தின் கம்பளமென பூத்துக் கிடந்தது காடு. கிரணங்களால் மட்டுமே தழுவ முடிந்த நிலையில், பௌதீக நெருக்கத்திற்கான வசியத்திலிருந்து விடுபடமுடியாமல், கடலலைகளையும், மலையுச்சிகளையும் அல்லி மலர்களையும் பேதலித்த மனித மனங்களையும் பௌர்ணமியண்று ஆர்ப்பரிக்கச் செய்கிறான் சந்திரன். ஜெயராஜுக்கு சித்தப்பிரமை கண்டபோது பேதலித்த அவன் மன அலைகளின் வழி சந்திரன் பௌர்ணமியன்று தாபத்தில் உளறினான். கேள்! பூமியின் இதயத் துடிப்பைக் கேள். அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று கேட்டுச் சொல். ஒவ்வொரு உயிரின் இடமூச்சின் வழியும் நான் அனுப்பும் காதல் சங்கேதங்களை அவள் காது கொடுத்து கேட்டாளா என அறிந்து சொல். காதலினால் உருகி உருகி அழிந்து மரித்துப்போய் வசியத்தினால் மீண்டும் உயிர்பெற்று வளர்ந்து வளர்ந்து வரும் என் அவலத்தை அவள் அறிவாளா? கேள் நன்றாகக் கேள்.
ஜெயராஜ் பெண்களின் பின்னந்தொடைகளைப் போல சூடாயிருந்த மலைமேட்டில் காதை வைத்துக் கேட்டான். பூமியின் துடிப்பு அவனுக்கு நன்றாகக் கேட்டது. சந்தோஷத்தை விகார இளிப்பில் காட்டியபடி, காதை மலைமேட்டில் அழுத்தி, மண்டியிட்டு படுத்துக் கிடந்தவனுக்கு கொலுசு சப்தம் கேட்க ஆரம்பித்தது. இதயத்துடிப்புகளை காலில் கட்டியல்லவா பெண்கள் நடக்கிறார்கள் என்றபடி நிமிர்ந்தவனின் முன்னே காலில் கொலுசுகளுடன் ஹம்ஸேஸ்வரி நின்றிருந்தாள். ஹம்ஸேஸ்வரி!
ஜெயராஜ் தன்னிடம் கூறியவற்றை மனத்திற்குள் அசைபோட்டபடி நடந்த சந்திரன் மீண்டும் உட்கார்ந்து அனைத்தையும் எழுதலானான்.
பூமி ஸ்பர்ஸம். போக தந்திரத்தின் முதல் நிலை. அதை ஜெயராஜ் மலையுச்சியில் கண்டுபிடித்தபோது அவன் அரசியல் காரணங்களுக்காகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான். அப்போது அவன் இந்திய நனவிலி ஜாதிய நனவிலி என்று நமபினான். பிரச்சாரம் செய்தான். இனவெறியின் உச்சகட்ட கூக்குரல் அது என்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. ஹம்ஸேஸ்வரி என்ற வசியக்காரி, மோகினி, பழங்குடிப்பெண்தான் பூமிதான் இயற்கைதான் எனவே பெண்மைதான் இந்திய நனவிலி என்பதை ஜெயராஜுக்கு உணர்த்தினாள். புணர்ச்சியின் எல்லையின்மையை இயற்கையாய் அவள் விரித்துக்காட்டியபோது இனங்களின் குறுகிய எல்லைகளைத் தாண்டி ஓடும் பெண்மையின் ரகசிய சங்கேதங்களை அவன் புரிந்து கொண்டான். பெண்மையின் ஜீவத் துடிப்பான ரகசிய சங்கேதங்களை அப்போது கலகலத்து குதூகலித்துக் கடத்தியது காடு. மலையுச்சியில் அமைந்திருந்த காடு. பெண்ணே நனவிலி நனவிலியே மொழி என்ற சிறிய கலாபூர்வமான உண்மை தனக்கு புத்தி பேதலிக்கும் நாள் வரை தெரியவில்லையே என்று ஜெயராஜ் பின்னால் பலமுறைத் தன்னைத்தானே நொந்துகொண்டான். அறிவுக்கு அப்பாற்பட்டதை அறிவு வழி காண முயன்றதும் சில்லறை அரசியலில் லாபம் காண முயன்றதுமே தன்னுடைய மிகப் பெரிய சறுக்கலகள் என்றுணர்ந்து கேவிக் கேவி அழுத ஜெயராஜ் ஹம்ஸேஸ்வரியின் போக தந்திரங்களுக்குட்பட்டு புத்தி பேதலிக்க மனமுவந்து சம்மதித்தான் என்று நம்ப இடமிருக்கிறது.
பூமியின் ஸ்பர்ஸத்தால் இவ்வாறு ஸ்மரணை பெர்ற ஜெயராஜுக்கு தெற்கின் வலி நிரம்பிய சமகாலத்திய அறிவற்ற வாதம் புரிய ஆரம்பித்தது. போக தந்திரத்தின் அடுத்த நிலையான கீர்த்தனைக்கு ஹம்ஸேஸ்வரி அவனை ஆட்படுத்தினாள். கனமான கறுத்த மேகத்தின் வயிற்றில் நிறைந்துள்ள மழைத்துளிகளை ஒன்றாய்த் திரட்டிக்கொண்டு திடீரென கிளம்பி வரும் புயலானது எவ்வாறு நீல நிறமுள்ள கடலை ஒரு கலக்கு கலக்கி அகாதமான அதன் அடிப்பாகத்திலிருந்து சிறிதும் தங்கு தடையின்றி ஒன்றையொன்று மோதி அடித்து வரும் மலை போன்ற திரைகளை எழுப்பி அந்தக் கடலையே ஒரே கலக்காய் கலக்கி விடுகிறதோ அவ்வாறே ஹம்ஸேஸ்வரி ஜெயராஜை ஆட்கொண்டாள். மூடிய அவள் இமைகளில் முத்தமிட்ட ஜெயராஜின் உடல்வெளி பாலைவனமாய் விரிவடைய, ஈரப்பதம் நிரம்பிய மணற் புயலாய் அவள் அவனுள் சுழன்றாடினாள். காற்றையே தங்களைச் சுற்றிய திரையாகக் கொண்டு மிருதுவான இன்பக்கடலில் ஆவேசமாய் அவர்கள் ஆழ்ந்திருக்கையில் தாளவொண்ணா தாபத்தை கமகமவென்ற சுகந்ததுடன் கீர்த்தனைகளாக இசைத்தது காற்று.
பாடு. பெண்மையின் புகழைப் பாடு.ஆராதனை செய். கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, உந்தன் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ ஹம்ஸேஸ்வரி ஹம்ஸே ஹம்ஸே
கொஞ்சு திகட்டத் திகட்டக் கொஞ்சு. கொஞ்சுதல் பிறாண்டலாக, நகக்கீறல் தாபமாக, தாபம் சங்கமமாகட்டும். கொஞ்சு கீர்த்தனைகளால் கொஞ்சு. இனிய சொற்களால் கொஞ்சு. ஹம்ஸே ஹம்ஸே என்று பிதற்று. உன் மார்பின் அடியாழத்திலிருந்து புறப்படும் இனிய சொற்கள் தாமாகவே மலர்ந்த புஷ்பங்களாய் சொரிந்து மிருதுவான கம்பளத்தை உருவாக்கட்டும் கீர்த்த்னையின் இனிய செந்தழல் பாலைவனம் முழுக்க குங்குமப்பூக்களால் நிறைக்கட்டும். கற்றாழைகளும் மலரட்டும். ஈச்சம் மரங்கள் ஜீவசக்தியை தங்கள் கனிகளின் வழி பரப்பட்டும். ஹம்ஸே ஹம்ஸே எனப் பிதற்றி பெண்மையைப் போற்று. பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்- கனிந்த காதல், இன்னுரையாடி அன்பு புகட்டல், புன் முறுவலுடன் ஆசை தெரிவித்தல், நயந்து மயக்கல், காமத் தீயை அணையாது காத்தல், நயம்படவுரைத்து தன்வசமாக்கல், பெருமூச்செறிந்து மிக்க வலிவுடன் அணைத்துப் பிணித்தல், வாய் திறவாமல் மௌனமாகவிருந்து மனக்கருத்துரைத்தல் கண்களை சிமிட்டி காதலையூட்டல் என கீர்த்தனைகள் விரியட்டும். காதலனாகி பெண்மையைப் போற்று. துதிபாடு. பெண்மையை வணங்கு. ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸேஸ்வரி ஹம்- என்பது அகத்தையும், அகம் இயற்கையின் வழி தன்னைத் தானே பொருளாகப் பார்த்துக்கொள்வதையும் குறிக்கட்டும். ஸே என்பது இப்பிரபஞ்சத்தில் இயக்கத்திலிருக்கும் சக்தியைக் குறிக்கட்டும். இரண்டின் இணைவான ஹம்ஸே மனிதப் பிரக்ஞையின் உச்சபட்ச சாத்தியப்பாடான ஹம்ஸாத்மனைக் காணட்டும். ஹம்ஸாத்மன் அகமும் புறமும் இணைந்த தன்னிலையாக எட்டு இதழ்களையுடைய தாமரையாய் மலரட்டும். ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே
காற்றின் கீர்த்தனையில் சொக்கிக்கிடந்த ஜெயராஜை நினைத்துக் கதையை எழுதிக்கொண்டிருந்த சந்திரனுக்கே பொறாமையாக இருந்தது. பொறாமையை மறைத்துக் கொண்டு சந்திரன் தொடர்ந்து எழுதலானான்.
காற்றின் கீர்த்தனையில் சிக்கிய ஜெயராஜ் சாமியாரென்றும் சித்தரென்றும் வைத்தியரென்றும் பழங்குடிகளால் அழைக்கப்பெற்று மரியாதையுடன் நடத்தப்பட்டான். மத்திய அரசாங்கத்தால் பழங்குடியினரின் மருத்துவராக நியமிக்கப்பட்ட நான் என்னிடம் சிகிக்சைக்கு ஆட்களே வராத நிலையில் காரணமென்னவென்று அறிய முற்பட்டேன். அரசாங்க சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலையேயில்லாமல் மலைப்பகுதியில் ஜாலியாக சுற்றி வருவது எனக்கு உகந்ததாக இருந்தாலும் மருத்துவக் கல்லூரியில் படித்ததெல்லாம் மறந்துவிடும் நிலை ஏற்பட்டதால் மக்கள் என்னிடம் ஏன் வரவில்லை என அறிவதில் ஆர்வம் அதிகமாகியது. வைத்தியராகக் கருதப்பட்ட ஜெயராஜிடம் மக்கள் செல்வதைக் கண்டு நான் பேசாமல் கதை கவிதை எழுதி பொழுதைக் கழித்தேன். ஆனால் ஜெயராஜே கடுமையான ஜுரத்தில் பாதிக்கப்பட்டபோது வேறு வழியில்லாமல் பழங்குடியினர் அவனை என்னிடத்தில் கொண்டு வந்தனர். காற்றின் கீர்த்தனையிலிருந்து விடுபட இயலாதவாறு சிக்கியிருந்த ஜெயராஜ் அப்போதும் ஹம்ஸே ஹம்ஸே என்று அரற்றிகொண்டிருந்தான். பௌர்ணமிக்குள் குணமாகிவிடவேண்டும் என்றும் பிதற்றினான். அவனை குணமாக்கிவிடுவதாக ஆசுவாசப்படுத்திய நான் அவனுடைய முழுக்கதையும் கேட்டேன்.
அப்போதுதான் அவன் தன்னுடைய அரசியல் ஈடுபாடு, தலைமறைவு வாழ்க்கை, ஹம்ஸேஸ்வரியை சந்தித்தது, போக தந்திரங்களின் இரண்டாம் நிலையில் இருப்பது ஆகியவற்றை என்னிடம் கூறினான். ஹம்ஸேஸ்வரியினால் மிகவும் ஈர்க்கப்பட்ட நான் அவள் யார் என்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினேன். ஆனால் எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்துகொண்ட ஜெயராஜோ அவள் யார் என்று மட்டும் எனக்குச் சொல்லவேயில்லை. ஹம்ஸேஸ்வரி என்ற பெயரில் பழங்குடிப்பெண் யாருமில்லை என்பதைக் கண்டறிந்தேன். இருந்தபோதிலும் எனக்கு எல்லா பழங்குடிப் பெண்களுமே ஹம்ஸேஸ்வரியாகத் தோன்றினர். விடுமுறை நாட்களில் சமவெளிக்கும் நகரங்களுக்கும் சென்று வந்தபோது அங்கேயுள்ள பெண்களும் ஹம்ஸேஸ்வரிகளாகத் தோன்றினர். மொத்தத்தில் உலகிலுள்ள அத்தனைப் பெண்களின் மேலும் மோகங்கொண்டவனானேன்.
ஹம்ஸே ஹம்ஸே என்று ஜெயராஜோடு சேர்ந்து நானும் மனத்திற்குள் பிதற்றலானேன். எங்கே ஜெயராஜைக் குணப்படுத்திவிட்டால் ஹம்ஸேஸ்வரியை எனக்கு அடையாளம் காட்டாமல் போய்விடுவானோ என்ற எண்ணத்தில் அவனைக் குணப்படுத்துவதைத் தொடர்ந்து தள்ளிப் போட்டு வந்தேன். அவனோ இதையெல்லாம் பொருட்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. தொடர்ந்து நனவுக்கும் நனவற்ற நிலைக்குமிடையே பயணம் செய்தபடி, பிதற்றியபடி கிடந்தான்.
பௌர்ணமியும் நெருங்கிக்கொண்டிருந்தது. போக தந்திரத்தின் மூன்றாம் நிலை அன்று வெளிப்படுமென்று உறுதியாக நான் நம்பினேன்.
ஜெயராஜிடம் தொடர்ந்து மூன்றாம் நிலை என்னவென்று கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தேன். போக தந்திரங்களை எந்தக் காலத்திலும் எந்த ரூபத்திலும் வெளிச் சொல்ல மாட்டேனென்று சத்தியம் செயது கொடுத்தபின் மூன்றாம் நிலை கேளிக்கை, கேலி, லீலை, விளையாட்டு, நடனம், கொண்டாட்டம் என்றுரைத்தான். உதய காலத்தில் கிழக்கு நோக்கிச் செல்லவேண்டுமென்றும் அவன் சொன்னான். சூரியோதயமா, சந்திரோதயமா என்று அவன் குறிப்பிடவில்லையெனினும் சூரியோதயம் என்று நான் புரிந்துகொண்டேன். உதயகால கிழக்கில் இருக்கிறது என் லட்சிய நாடு என்றும் அவன் குறிப்பிட்டான். தன் அரசியல் கொள்கைகளையும் esoteric தாந்தரீகத்தையும் அவன் இணைப்பது பொருத்தமானதாகவோ அர்த்தமுள்ளதாகவோ எனக்குப்படவில்லை என்றாலும் காம வேட்கையால் உந்தப்பட்ட நான் அதைப் பற்றி அதிகம் கவலைப்படாதிருந்தேன்.
பௌர்ணமியன்று அதிகாலை மூன்று மணிக்கு அலாரம் வைத்து முழித்தேன். ஜெயராஜ் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பாமல் மெதுவாகக் கிளம்பி கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கும்மிருட்டு. அன்று பகல் கழிந்தால் இரவில் பௌர்ணமி என்றாலும் கருமேகங்கள் பல வானில் அடர்ந்திருந்தபடியால் நிலவொளி தரையிறங்கவில்லை. காரிருளில் நடக்க மனம் சம்மதிக்கவில்லை. மீண்டும் அறைக்குத் திரும்பி உதயத்தின் பட்சி ஜாலங்களுக்காகக் காத்திருந்தேன். ஜெயராஜ் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். என் மனதை ஏதோ இனம் தெரியாத பயம் பீடித்துக்கொண்டது. நான்கு விஷயங்களை நான் அடியோடு அழித்தால்தான் என்னால் ஹம்ஸேஸ்வரியை காண இயலும் என ஜெயராஜ் காய்ச்சலில் உளறியது எனக்கு நினைவுக்கு வந்தது. நான்கு விஷயங்களையும் பேப்பரில் எழுதினேன்: 1 பயம் 2 தெளிவு 3 அதிகாரம் 4 சோம்பல்
பயமிருந்தால் எதையுமே அறிய முடியாது. பயம் ஒழித்து அறிந்தபின் கிடைக்கும் தெளிவோ அறிவு முழுமையடைந்துவிட்டது என்ற மாயையைத் தோற்றுவிக்கக்கூடியது. முழுமையடையாத அறிவினால் கிடைக்கும் அதிகாரம் என்றுமே என்னுடையதல்ல. முழுமையான அறிவினைப் பெற ஒரு கணம் நான் சோம்பினாலும் நான் என்றுமே வெற்றி பெற மாட்டேன். ஜெயராஜின் வார்த்தைகளுக்கு ஏற்ற தர்க்கத்தை நான் எப்படியாவது உருவாக்கிவிடுகிறேன். உதாரணமாக தெளிவு என்பதை அறிவுக்குத் தடையாக யாரும் கருத மாட்டார்கள் ஆனால் என்னால் அதற்கேற்ற தர்க்கத்தை உண்டாக்க முடிந்திருக்கிறது. இவ்வாறு யோசித்து யோசித்தே பொழுதைக் கழித்தேன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இப்படி தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் கழித்தபின் சிந்தனையற்ற ஒரு கணத்தில் கிழக்கு நோக்கி ஓடினேன். ஹம்ஸே எங்கிருக்கிறாய் நீ?
பட்சிகள் விழித்துக்கொண்டிருந்தன. அவைகளின் பலவித ஒலிகள் என் கண் முன்னே அலை அலைகளாய் எழும்ப அவற்றின் திடத்தன்மையைக் கிழித்துக்கொண்டு ஓடினேன்.
எப்படி அந்த உயரமான மலைமேட்டினை அடைந்தேன் என்று நினைவில்லை. மூச்சு வாங்கியது. அந்த முகட்டிலிருந்து சடாரென்று கீழிறங்கியது அதலபாதாளம். மலைசசரிவு கடற்கரையைத் தொட மலையிலிருந்து வீழ்ந்த அருவி கடலைத் தொட என விநோத உறவில் சமைந்திருந்தது அந்தக் காட்சி.
நான் ஓடி வந்த வேகத்தில் மலைச்சரிவில் விழுந்திருக்கக்கூடுமென்ற சாத்தியம் சட்டென்று உறைத்ததில் அறிவு சூன்யமாக திகைத்த அக்கணத்தில் சூர்யா கடலிலிருந்து உதயமானாள்.
பளபளத்து ஜொலிக்கும் செந்நிற முகம் மோகமே உருவாக கடலில் எழ அவளின் கூந்தல் ஆகாய வீதியாய் விரிந்து கிடந்தது. உதயரேகைகளை மின் வெட்டிய கடலே முலைகளாக காடு அவளின் இடுப்பாயிருந்தது. அவள் முலையிலிருந்து பீறிட்டு மலைமேல் பாயும் பாலேயென தோற்றம் கொண்டது அருவி. அகண்டு விரிந்த அவள் கால்களின் திரிகோண வடிவே மலை முகடாகவும் சரிவாகவும் விகசிக்க அவளுடைய முழங்கால் முட்டியில் நிற்பதேயான பிரேமையை நானடைந்தேன். கலகலவென நகைத்தபடி சூர்யா சிந்திய ரச்மிகளும் ஒளிக்கிரணங்களும் என் வல மூச்சினை கட்டி இழுத்து ஆகர்ஷிக்க அதை யோனியின் ஆகர்ஷணமாய் உணர்ந்த நான் ஹம்ஸே என்று கதறியபடி மலைச்சரிவேயென விரிந்த அவள் தொடையிடுக்கில் வீழ்ந்தேன்.
எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன் என்று நினைவில்லை. ஆனால் நினைவு திரும்பியபோது கடைசியாக நிகழ்ந்ததனைத்தும் துல்லியமாகக் கண் முன்னே காட்சியாயிற்று. கை, கால், தலை எல்லாம் மாவுக் கட்டு போட்டிருந்தது. பெரும் உயரத்திலிருந்தல்லவா விழுந்திருக்கிறேன்! உயிர் பிழைத்ததே அதிசயமாகத்தானிருக்க வேண்டும். டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு எலும்பு முறிவு ஏதுமில்லை என்றாலும் உள்காயங்களைத் தவிர்ப்பதற்காகக் கட்டு போட்டிருப்பதாகச் சொன்னார். ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவிற்கு செய்தி அனுப்பியிருப்பதாகவும் சொன்னார்.
“ஒரே நாளில் இப்படி டாக்டரும் பேஷண்டும் ஓடிப்போய் மலை முகட்டிலிருந்து கீழே குதிப்பார்களா? நல்ல வேடிக்கை” டாக்டர் என்னுடைய விபத்து பற்றி விசாரிக்க வந்திருந்த போலீஸ்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் எனக்கு ஜெயராஜுக்கும் நேர்ந்த விபத்து தெரிய வந்தது.
எனக்கு பக்கத்து கட்டிலிலேதான் அவனும் உடல் முழுக்க கட்டோடு கிடந்திருக்கிறான். எனக்கு நினைவு வந்தபோதுதான் அவனுக்கும் நினைவு வந்திருக்க வேண்டும்.
எனக்கு அவனைப் பார்த்தும் அவனுக்கு என்னைப் பார்த்தும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“பௌர்ணமியன்று சூரியோதயம் காணப் புறப்பட்ட முட்டாள் நீ” என்றான் அவன்.
“பௌர்ணமியன்று சந்திரோதயம் கண்டதன் விளைவு ஒன்றும் என் அனுபவத்திலிருந்து மாறுபடவில்லையே” என்றேன் நான். இருவருக்கும் சிரிப்பு தாளவில்லை. பக்கத்து பக்கத்து கட்டில்களில் மாவுக்கட்டுகளோடு படுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த போலீஸ்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்களிருவருக்குமிடையில் சண்டையையும் சதியையும் எதிர்பார்த்து வந்த அவருக்கு நிலவின் முகத்தோடு கூடிய ஹம்ஸேயைப் பற்றி அவனும், சூரிய முகத்தோடு கூடிய ஹம்ஸேயைப் பற்றி நானும் பேசிக்கொண்டிருந்தது அபத்தமாயிருந்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரி வராந்தாவில் தொப்பியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வழுக்கைத் தலையை தடவியபடி அவர் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியை நானும் ஜெயராஜும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம்.
“புரட்சியாளர்களுக்கு மட்டும் இப்படி ஒரு ரகசிய பரிபாஷை கிடைத்திருக்குமானால் …” என்று பெருமூச்சுவிட்டான் ஜெயராஜ். நான் அதை ரசிக்கவில்லையென்றாலும் ரகசிய பரிபாஷை எனபதே போகதந்திரத்தின் அடுத்த நிலை என்பதை உணர்ந்து கொண்டேன்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நாங்கள் ஆஸ்பத்திரியில் கழித்தோம். என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஆனந்த நாட்கள் அவைதாம். எங்களிருவருக்கும் நினைவு தப்பி தப்பி மீண்டு வந்துகொண்டிருந்தது. நினைவு வந்தபோதெல்லாம் நாங்கள் நடந்ததை நினைத்து நினைத்து சிரித்தோம். ஒரே பெண்ணைக் காதலித்து ஏமாந்த இரு நண்பர்களின் அரட்டை போல எங்களின் பேச்சு மற்றவர்களுக்கு அர்த்தமாகியிருக்கக்கூடும். சில நாட்கள் கழிந்தபின் ஜெயராஜுக்கு நினைவு தப்பும்போது நான் நனவுடனிருப்பதும் அவன் நனவுடனிருக்கும்போது எனக்கு நினைவு தப்புவதும் நிகழ ஆரம்பித்தது. இருவரும் நனவுடன் இருக்கும் அபூர்வ தருணங்களில் மயக்கமாக இருக்கும்போது கூட இருவர் முகத்திலும் புன்முறுவல் மாறவில்லை என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டோம்.
இன்னும் கேளிக்கை நிலையிலேயே இருக்கிறோம் என்பதும் அறிவு வழி கேளிக்கையை அணுகியதாலேயே கேலிக்குள்ளானோம் என்றும் எங்களுக்குத் தெரியவந்தது.
ஊரிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்த என் இலக்கிய நண்பன் மூலமாக ஹம்ஸேஸ்வரிக்கென்று வங்காளத்தில் கோயிலொன்று இருப்பதாக அறிந்தேன். அந்தக் கோயில் தாந்தரீக முறைகளின்படி சுழற்பாதைகளால் அமைக்கப்பட்டதென்றும் அபூர்வமான கட்டிடக்கலை என்றும் என் நண்பன் தெரிவித்தான். ஜெயராஜிடம் இதைக்கூறியபோது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் ஆந்திராவிலும் கூட மனித மனங்களின் உள் அறைகளில் ஹம்ஸேஸ்வரியின் கோவில்கள் உள்ளன என்றான்.
எனக்கு அவன் சொன்னது உடனடியாகப் புரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து புரிந்தபோது “ நீ ஏன் போக தந்திரங்களும் புரட்சியும், Marxism and Mysticism என்றெல்லாம் புத்தகங்கள் எழுதக்கூடாது?” என்றேன்.
என் கேலியை அவன் சுத்தமாக ரசிக்கவில்லை என்பதை அவன் முகமே வெளிக்காட்டியது. அந்த தருணத்தோடு அவன் என்னிடம் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டான். ஆரம்பத்தில் இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தாலும் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனபோது சரிதான் போடா என்று இருந்துவிட்டேன்.
இனிய போதை நிரம்பிய ஆஸ்பத்திரி நாட்கள் இப்படித் திரும்பும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனாலும் எனக்கு போகதந்திரங்களின் மூலம் அடையக்கூடிய ஹம்ஸேஸ்வரியின் மேல் மோகம் தீர்ந்தபாடில்லை. ஜெயராஜோ என்னிடம் பேசுவதில்லை. அவனுக்குத்தான் போக தந்திரத்தின் நிலைகள் தெரியும் என்ன செய்வது?
ஒரு நாள் ஜெயராஜ் நினைவு தப்பி தூங்கிக் கிடந்தபோது அவன் டைரியை எடுத்து ஆராய்ந்தேன். அதில் போக தந்திர நிலைகள் அனைத்தும் தேதிவாரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. தந்திர நிலைகளோடு அந்தந்த தேதிகளில் நடந்த சம்பவங்களைப் பின் வருமாறு தொடர்புபடுத்தினேன்.
போக தந்திரங்கள்:
- பூமி ஸ்பர்ஸம்/ஸ்மரணை பெறுதல்/ உள்ளார்ந்த அழைப்பு: ஜெயராஜ் பூமியின் இதயத் துடிப்பைக் கேட்டது
- கீர்த்தனை- பெண்மையின் புகழ்பாடுதல் - காற்றின் கீர்த்தனையில் ஜெயராஜ் சொக்கிக் கிடந்தது
- கேளிக்கை- நான் சூரியோதயத்தையும், ஜெயராஜ் சந்திரோதயத்தையும் கண்டது- ஆஸ்பத்திரி வாசம்
- விசேஷ அலங்காரம்- ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டுகளுடன் கிடந்த காட்சி
- ரகசிய பரிபாஷை- ஜெயராஜ் புரட்சி பற்றி பேசியதை நான் போகமெனவும் நான் போகம் பற்றி பேசியதை ஜெயராஜ் புரட்சியெனவும் புரிந்துகொண்டது
- சங்கல்பம்- எங்களுடைய குறிக்கோளை அடைவதில் இருவருமே தீவிரமாக இருப்பது
- பொறுமையும், கடின உழைப்பும்- காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
- சங்கமம்- எப்போது? எங்கே? எப்படி? யாரே அறிவர்?
ஜெயராஜுக்கு நான் அவனுடைய டைரியைத் திருடியது தெரிந்திருக்காது என்றே நம்பினேன். இதற்கிடையில் நாங்கள் முற்றாக குணமாகிவிட்டோம். இரொண்டொரு நாளில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குப் போகலாம் என்ற நிலையில் ஜெயராஜ் காணாமல் போனான். எங்களுடைய விபத்தைப் பற்றி விசாரிக்க வந்த போலீஸ்காரர் ஜெயராஜின் கடந்த காலத்தை கண்டுபிடித்துவிட்டதால் மீண்டும் அவன் தலைமறைவாகிவிட்டான் என்று நம்ப அல்லது யூகிக்க இடமிருக்கிறது. நல்ல வேளையாக போலீஸ்காரர் என்னை ஏதும் கேட்கவில்லை. கேட்டாலும் எனக்கு என்ன தெரியும்?
ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பின் ஏதாவது நிலையை செயல்படுத்த வேண்டி ஏராளமாகப் படித்தேன். அல்டோஸ் ஹக்ஸ்லி, தாமஸ் டிக்வென்ஸி, டோல்கியென், கார்லோஸ் கேஸ்டனெடா, டிமோதி லியரி, ஜான் லில்லி, ஆலென் கின்ஸ்பெர்க், வில்லியம் பர்ரோஸ், உம்பர்டோ ஈக்கோ என்று படித்துத் தள்ளினேன். என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எதைத் தேடுகிறேன் என்றும் புரியவில்லை. பெண் வேடமிட்ட பெண்; புரியாத சங்கேதம். ஜெயராஜ் இந்நேரம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ என்று படித்துக்கொண்டிருக்கக்கூடும் என்றும் நினைத்தேன். எல்லாமே வீண் என்று தோன்ற ஆரம்பித்தது. இரவு நீண்ட நேரம் படித்துவிட்டு அன்று படித்துக்கொண்டிருந்த “The Tibetan book of the dead” என்ற புத்தகத்தைத் தலைக்கடியில் வைத்து தூங்கியபோது அந்த தெளிவற்ற கனவைக் கண்டேன்.
உடல் வெளியையே கோவிலாய் சமைத்த ஹம்ஸேஸ்வரி கோவிலினுள் நின்று கொண்டிருக்கிறேன். ஆறு சக்கரங்களீன் வழி வேப்பமரத்தாலான மூலஸ்தானம் நோக்கி ஏணிகள் இடப்பட்டுள்ளன. குழப்பமான சுழற்பாதைகளில் திகைத்து திகைத்து நகர்கிறேன். சந்திர ஒளி இடது நாடியாகவும் சூரிய ஒளி வலது நாடியாகவும் என்னுள் துடிக்கிறது. இடா, பிங்களா, சூஷும்னா, வஜ்ரக்ஷா, சித்ரீனீ என்று வழிகள் பெயரிடப்பட்டிருக்கின்றன. அகஸ்மாத்தாய் சுழலும் என் வழியில் திடீரென ஹம்ஸேஸ்வரி நிற்கிறாள். பழங்குடி பெண்ணே போல. மின்னும் கறுப்பு உடலுடன். காந்த சக்தி மிக்க கண்களூடன். வலது கை அபயம் அபயம் என. இடது கையில் சங்குடன், மூன்றாவது கையில் வெள்ளை மனிதத் தலையை பிடித்தபடி. நான்காவது கையில் வாளினை ஏந்தியபடி ஹம்ஸேஸ்வரி நிற்கிறாள். ஹம்ஸே ஹம்ஸே என்று நான் அரற்ற முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்து இக்கதையை எழுத ஆரம்பித்தேன். இக்கதையை ஜெயராஜ் சொல்லியிருந்தால் பாரததேவிதான் ஹம்ஸேஸ்வரி என முற்றிலும் வேறு கோணத்திலிருந்து சொல்லியிருப்பான் என்று பட்டது. ஆனால் அவன் கதையையும் இதற்குள் வாசிக்க முடியும் என்றே நம்புகிறேன். நீங்கள் ஆணாயிருந்து இக்கதையை வாசித்தால் இக்கதைப் பனுவலே ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதை சொல்லியாகவும் நீங்கள் ஜெயராஜாகவும் உணர்வீர்கள்.
நீங்கள் பெண்ணாயிருந்து இக்கதையை வாசித்தால் இக்கதைப் பனுவலே ஜெயராஜாகவும் நீங்கள் ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதை சொல்லியாகவும் உணர்வீர்கள்.
வேறு சிலர் வேறு விதமாக உணர்ந்தால் கதையின் ஆரம்பப் பீடிகையை தயவு செய்து மீண்டும் வாசிக்கவும். தயவுசெய்து.
-----------------------------------------------------------------------
குறிப்பு: 1991இல் நான் ஸில்வியா என்ற புனைபெயரில் எழுதிய இக்கதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் ஆசிரியராகச் செயல்பட்டு பதிப்பித்த “உன்னதம்” இலக்கிய சிற்றிதழில் 1994இல் பிரசுரமாகியது. இக்கதையை, இங்கே மீள் பிரசுரம் செய்யும் பொருட்டு, எனக்கு அனுப்பித் தந்த நண்பர் கௌதம சித்தார்த்தனுக்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment