Wednesday, May 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-38

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-38

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 39

திணை: பாலை

————-

வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை அருஞ்சுரம் என்ப, 

நம்முலை இடை முனிநர் சென்ற ஆறே.

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, நம் முலையிடைத் துயிலை வெறுத்தவர், பிரிந்து சென்ற  வழியானது கடத்தற்கரிய மலைகளையும் பாலையின் வாகை மரத்தின் வற்றிய நெற்றுகளை வெம்மையான வலிமையான காற்று மோதி சிதறடிக்கும் ஒலிகளையும் கொண்டது.  

———-

மலையுடை அருஞ்சுரம்

——

மீண்டுமொருமுறை நிலக்காட்சியே உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் கூறப்படுவதை இப்பாடலிலும் நாம் வாசிக்கிறோம். ‘மலையுடை அருஞ்சுரம்’ என்பது குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தைக் குறிக்கும். மலைகளையுடைய கடப்பதற்குக் கடினமான பாலை நிலம் வாகை மரங்கள் நிறைந்ததாகவும் அவற்றின் நெற்றுகள் முற்றி வலுவாக வீசுகின்ற வெம்மை நிறைந்த காற்றினால் சிதறடிகப்படும் ஒலிகள் நிரம்பியதாகவும் இருக்கிறது.   “நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்” என்ற வரியில் உழிஞ்சில் என்பது வாகை மரத்தைக் குறிக்கும்; அதனுடைய நெற்றுகள் ஒலியிடன் சிதறடிக்கப்படுவது ஒரு வன்முறையான படிமம் என்றால் அவை வற்றி அதனுடைய உள்ளார்ந்த ஆற்றல் பயனற்று வீணாய்ப் போவதும் அதன் உள்கிடக்கையாகும். 

——-----

வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென

—--------

வெந்திறல்- வெம்மையான, சக்தி வாய்ந்த, கடு வளி- கடுமையான காற்று, பொங்கர்- மரக்கிளைகள், போந்தென- வீசும்போது வாகை மரத்தின் நெற்றுக்கள் சிதறும் ஒலியால் பாலையும் மலைகளுமான நிலம் நிறைந்தது. பாழடைந்த பாலை நிலப்பரப்பும் அதிலுள்ள வெப்பமான காற்றும் வாகை நெற்றுக்கள் உடைந்து ஒலியெழுப்பி சிதறி வீணாவதும் தலைவியின் பிரிவின் மனக்குமுறலைப் படம்பிடிக்கின்றன. “முல்லையுங் குறிஞ்சியும் திரிந்து நல்லியல் பிறழ்ந்து நடுங்கு துயருறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்” எனும் சிலப்பதிகார வரி தலைவியின் மனக்குமுறல் காட்சிக்குப் பொருத்தமாய் இருக்கிறது. இக்காட்சிகளைத் தலைவி நேரில் பார்த்ததில்லை என்பதால் ‘என்ப’ எனக் குறிக்கிறாள். 

——-----

முலை இடை முனிநர்

——-

‘முலை இடை முனிநர்’ என்பதை உ.வே.சாவின் உரையைப் பின்பற்றி தமிழண்ணல் மரபுத் தொடர் என்று குறிப்பிடுகிறார்.  தலைவியின் முலைகளிடையே இன்புற்றிருப்பதை வேண்டாமெனச் சென்ற தலைவன் என்பது பொருள். முலை இடை முனிநர் எப்படி மரபுத் தொடராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அகராதி விளக்கங்கள் இல்லை. தன் முலைகளுக்கிடையே இன்பம் துய்த்து கிடக்கவேண்டிய தலைவன் இப்படி பாலையின் கடுந்துன்பங்களுக்கு ஆளாகிறானே என்று தலைவி மனம் இரங்கியதால் கூறினாள் என்று பொருள் கொள்ளவும் இடமிருக்கிறது. வீணாய்ப்போன நெற்றுக்களும் அதனால் காமக்குறிப்புகளை உள்ளடக்கியதாய்  மாறுகின்றன. ‘முலை இடை முனிநர்’ என்பதை ‘நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா’ என்ற திருப்பாவை 19 ஆவது பாடலில் வரும் வரியோடும் ஒப்பிடலாம். ‘சென்ற ஆறே’ என்பதில் ஏகாரம் அசை நிலை; அது தலைவன் சென்ற வழி இப்படிப்பட்டதே என்பதை உறுதிப்படுத்துகிறது. 

——-

No comments: