Thursday, May 9, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-25

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-25

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி செவிலித்தாயிடம் சொன்னது, கட்டுவிச்சியை அவள் வினவிய வேளையில்

—-

இயற்றியவர்: கொல்லன் அழிசியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 26

திணை:  குறிஞ்சி

————-

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை

பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்

தகாஅன் போலத் தான்றிது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே

தேக்கோக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்

வரையாடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனு மறியுமக் கொடியோ னையே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அரும்புத்தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றுதற்கு இடமாகிய நாட்டையுடைய தலைவன், இவளுக்கு உரியனாகுந்த தகுதியிலானென்பது போல கட்டுவிச்சி, தெய்வத்தால் வந்ததென்று தீங்கானதைக் கூறினாலும், தேமாவின் கனியை உண்ணுகின்ற முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையுமுடைய மலைகளில் விளையாடும்,வலிய குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கும் அந்தக் கொடியவனாகியத் தலைவனை அறியும்; ஆதலின் அது தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை காணேனென்று பொய் சொல்லாதது.

————

வாசிப்பு

———

கவிதை எனும் எதிர்க்குரல்

———

தோழி இக்கவிதையில் குறி கூறும் கட்டுவச்சியின் தெய்வ வாக்குக்கு எதிராகப் பேசுகிறாள். ஆகையால் ஒரு எதிர்க்குரலாக இக்கவிதை மிளிர்கிறது. தெய்வவாக்கின் அதிகாரத்திற்கு எதிராக தோழி இரண்டு இயற்கைக் காட்சிளை இணைத்து சொல்கிறாள்; மனித உடல்கள் அந்த இரண்டு இயற்கைக் காட்சிகளின் பகுதிகளாக இருக்கின்றன. ஒன்று  அரும்புத்தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றுவது; இரண்டு தேமாவின் கனியை உண்ணுகின்ற முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையுமுடைய மலைகளில் விளையாடும்,வலிய குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கும் அந்தக் கொடியவனாகியத் தலைவனை அறியும் எனச் சொல்வது. அரும்பு முழுவதும் மலர்வதற்கு முன்பே பறித்து அணிந்துகொள்ளுதல் என்பது கவனிக்கத்தக்கது. தோழி முழு உண்மையும் (இன்னும் முழுமையாக மலராத) அறிவதற்கு முன்பாகவே தலைவியின் நோய் தெய்வத்தினால் ஏற்பட்டது எனக்கூறுவது தவறு என்பது அரும்பால் சுட்டப்பட்டது; அரும்பைக் கொய்யும் பெண்டிர் கிளையில் இருக்கும் மயிலைப் போல அழகாகவும் இருக்கலாம் ஆனால் உண்மையோ வேங்கை மரத்தின் கரிய், பெரிய கீழ்ப்பகுதியைப் போன்றது. 

உ.வே.சா வேங்கையின் பூவைக் கொய்து அதன் அழகைக் கெடுக்கும்  மகளிரைப் போல மயில் தோற்றினும் உண்மையில் அம்மரத்திற்கு  மேலும் அழகைத் தந்து அமைவது போல தலைவன் இப்போது இவளது நலமழியச் செய்தவனாக இருப்பினும் அவளை மணப்பான் என்பது குறிப்பு என்று எழுதுகிறார். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கனும் பொ. வே. சோமசுந்தரனாரும் தங்கள் உரைகளில் இதை உள்ளுறை எனக் குறிப்பிடுகின்றனர்.

———-

குரங்கின் சாட்சி

———

குறி சொல்லும் கட்டுவச்சிக்கு எதிராக தோழி குரங்கு பார்த்ததை சொல்கிறாள். அது எப்படிப்பட்ட குரங்கு என்றால் கொக்கு மாமரத்தின் ( தேன் கொக்கு, தேமா, கொக்குக்காலி ஆகிய சொற்களால் குறிக்கப்படுவது) பழத்தை தன் கூரிய பற்களால் தின்கின்ற துவர் வாயை உடைய குட்டிகளுக்குத் தந்தையாகிய வலிய குரங்கு. அந்த தந்தைக் குரங்கு கொடியோனாகிய தலைவனை அறியும், அந்தக் கடுவன் குரங்கு பொய் சொல்லாதது. தலைவன் தகான் போல தீதுமொழிபவனாக இருந்தாலும், அக்கொடியோனைக் கடுவனும் அறியும்; ஆதலால் கடுவன் கண்டது பொய்க்காது என்பது இதனால் பெறப்படுகிறது. இந்த கவித்துவ தர்க்கம் பல சங்கக் கவிதைகளில் காணப்படுகிறது. இவற்றை வாசிக்கும்போது இயற்கையின் பகுதியாக இருப்பவற்றை கருத்துக்களை, உணர்வுகளைப் புலப்படுத்தும் குறிகளாக (communicative signs) வாசித்தார்கள் எனக் கருத இடமிருக்கிறது. மனிதர்களும் இய்றகையின் பகுதிகளாகவே கருத்தப்பட்டனர் என்ற உலக நோக்கும் (world view) இதனால் பெறப்படுவதாகிறது.

———

பொய்க்குவதன்றே எனும் அறுதியிடல்

——

தோழியின் ‘பொய்க்குவதன்றே’ எனும் அறுதியிடல் இந்தக் கவிதையின் உள்தர்க்கத்தின்படி எது உண்மை எது பொய் என கேட்போரை, இந்தக் கவிதையில் செவிலித்தாயை முடிவெடுக்கும்படி கோருகிறது. வாசகர்களாகிய நாமும் செவிலித்தாயின் இடத்தில் நின்று இக்கவிதையின் தர்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை வைக்கப்படுகிறோம்.  இவ்வாறாக வாசக வெளியை இக்கவிதை வைத்திருப்பதால்தான் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கனால் மலர்ந்த வேங்கையின் மேலோங்கிய சினையிலிருந்த தோகை, பூக்கொய் மகளிரைப்போன்று தோன்றினாற்போல, தலைவன் தன் நெஞ்சத்திடத்துப் பிறிது நினைத்திருக்கும் வெளித்தோற்றத்து வேண்டியன செய்வான்போற் காணப்பட்டான் என விரித்து உரை எழுத முடிகிறது.

———

பறள் என்றது குரங்கின் இளமைப் பெயர்

——-

அரும்பற மலர்தல், கருங்கால் வேங்கை, பூக்கொய்யும் பெண்டிர், பெருஞ்சினை யிருந்த தோகை மயில், தேக்கொக்கு, ஆகிய அழகிய காட்சிப்படிமங்களுக்கு இடையே  கூரிய பற்களும் செவ்வாயும் உடைய ஒரு குரங்குக் குட்டியும் ஒளிந்திருக்கிறது; அது அதன் தந்தையாகிய கடுவன் குரங்கைச் சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வரையாடு வன்பறழ்த் தந்தை’ என்ற வரியில் வரும் பறள் என்ற சொல் குரங்கின் இளமைப் பெயரைக் குறிப்பதாகும். இது தொல்காப்பியம் மரபியல் சூத்திரம் ஒன்று, “பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே” என்பதால் அறியப்பட்டது. 

———————-

No comments: